புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் இன்று 18.03.2024 ”பார்ப்பன இந்து மதவெறி இன ஒடுக்குமுறை கலவரங்கள் கார்ப்பரேட்டுகளுடன் இணைந்து ஊழல் தேர்தல் பத்திர மோசடி! ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைக்கும் பாசிச பாஜகவின் தேர்தல் அங்கீகாரத்தை ரத்து செய்!!” என்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து இன்று நடத்த முயலும் போது காவல்துறையின் அத்துமீறலால் தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

உழைப்பாளர் சிலை அருகே பேரணி தொடங்க திட்டமிட்டபோது காவல்துறை தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 200 பேருடன் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு பிறகு அங்கும் போராட அனுமதி மறுத்தது.

இது குறித்து காவல்துறை துணை ஆணையரிடம் பேசிக் கொண்டிருந்த போது அங்கு கூடியிருந்த திருச்சி மகஇக, புஜதொமு தோழர்களை கைது செய்து போராடும் ஜனநாயக உரிமையை பறித்து அடக்குமுறையை கையாண்டது காவல்துறை. கைது செய்த அனைவரையும் பேருந்தில் ஏற்றியது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் இல.பழனி, பொதுச்செயலாளர் தோழர் லோகநாதன், பொருளாளர் தோழர் ஜெயராமன், இணைச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது காவல்துறை.

பேருந்து செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததும் தோழர்கள் பேருந்தில் இருந்து இறங்காமல் 1/2 மணி நேரத்திற்க்கும் மேலாக போராட்டம் நடத்தினார்கள். முழக்கங்களை எழுப்பினார்கள்.

பாண்டிச்சேரியில் இருந்த வந்த தோழர்கள் சென்னை மெரீனா உழைப்பாளர் சிலையில் இருந்து முழக்கங்களை எழுப்பி பேரணியாக சென்றுக் கொண்டிருந்த போது காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.

புஜதொமுவின் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் சேப்பாக்கம் இரயில் நிலையத்திலிருந்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டு விருந்தினர் மாளிகை வரை பேரணியாக சென்றார்கள். அவர்களை மறித்த போலீசு கைது செய்தது.

தோழர்கள் ஆங்காங்கு பேரணியிலும், சாலை மறியலிலும் செய்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அனைவரையும் கைது செய்த போலீசு சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்துள்ளது.

தேர்தல் ஆணையமே பாஜகவின் கைக்கூலியாக செயல்பட்டு வரும் நிலையில் அவர்களிடம் அனுமதி வாங்கி போராட்டம் நடத்துங்கள் என்று போலீசு கூறுவது நகைப்புக்குரியது. எங்களது அமைப்பு தேர்தல் புறக்கணிப்பு செய்த காலத்தில் தேர்தல் ஆணையத்தில் அனுமதி வாங்கி தேர்தல் பிரச்சாரம் செய்த காலமும் உண்டு. அன்றிருந்த குறைந்த பட்ச ஜனநாயகம் கூட இன்று பாசிஸ்டுகளின் ஆட்சியில் கிடையாது என்பது காவல்துறைக்கு தெரியாதா என்ன?

மிகப்பெரிய ஊழலை நடத்திவிட்டு தைரியமாக கோவையில் ரோடு ஷோ நடத்த வந்திருக்கும் மோடிக்கு இது போன்ற அனுமதிகளெல்லாம் தேவையில்லாத போது மக்களுக்கு போராடும் எங்களது அமைப்பிற்கு இது போன்ற அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை என்பதையே பாசிஸ்டுகள் பத்தாண்டு ஆட்சி காலத்தில் உணர்த்தியுள்ளார்கள்.

போராட்டத்தில் கைது செய்யப்பட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநிலத் தலைவர் இல.பழனி, பொதுச்செயலாளர் லோகநாதன், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் தோழர் கோவன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநிலப்பொதுச்செயலாளர் தோழர் அன்பு, விவசாயிகள் விடுதலை முன்னணியின் நிர்வாகிகள் தோழர் ராமலிங்கம், தோழர் செல்வராஜு உள்ளிட்ட தோழமை அமைப்புத் தோழர்கள் மண்டபத்தில் அடைக்கப்படுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here