வாட்ஸ் அப்பில் ஒரு செய்தியை நண்பர் அனுப்பி இருந்தார் அதில் காவிரி பிரச்சினையை தீர்க்க மிக எளிமையான ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டிருந்தது. நாம் மேகதாதுவை தடுக்க வேண்டாம்; ஊட்டி மோயாரில் அணை கட்டி ஆற்றை திருப்பினாலே போதுமாம். இந்த உண்மையை தமிழக முதலமைச்சருக்கு எட்டும் வரை ஒவ்வொருவரும் ஆயிரம் பேருக்கு பகிர வேண்டும் இதை செய்யச் சொல்லி நம் காலில் விழுவதாக பதிவிடப்பட்டுள்ளது.

தமிழகம் தான் காவிரிக்கு தண்ணீர் தருகிறதாம் !

தமிழகம் காவிரியில் தண்ணீர் திறந்து விடும் படியும் புதிதாக அணையை கட்ட வேண்டாம் என்றும், கர்நாடகத்தை கெஞ்சிக் கொண்டு இருக்கத் தேவையில்லை என்கிறது அந்தப் பதிவு. கர்நாடகத்தில் உள்ள கபினி, நூகு உள்ளிட்ட அணைக்கான தண்ணீர் தமிழகத்தில் உதகை பகுதியில் மோயாரில் இருந்துதான் செல்கிறது. நாம் அங்கு ஆற்றைத் திருப்பினாலே மோயாரின் வழியாக பவானிசாகருக்கு மொத்த தண்ணீரையும் கொண்டு வந்து விடலாம். அதாவது கர்நாடகத்திற்கே காவிரி தண்ணீரை  தமிழகத்தில் இருந்து தான் தருகிறோம்.நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே திருப்பிக் கொடுக்காமல் தான் கர்நாடகா நம்மை வஞ்சித்து வருகிறது எனவும் வாட்ஸ் அப்பில் செய்தி பகிரப்படுகிறது. இது உண்மையா என்பதை பரிசீலிப்போம்.

இதையும் படியுங்கள்: ஆயிரம் கோடியில் மேகேதாட்டு அணை! தமிழினத்தின் மீது பாஜகவின் ஏவுகணை!

புவியியல் அறிவற்ற வாதம்!

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் கேரளா எல்லையிலும் , கர்நாடக எல்லைக்குள்ளும் தான் அமைந்துள்ளது. இந்த மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் அமைப்பை எத்தனை பேர் புரிந்து வைத்திருக்கப் போகிறார்கள் என்ற அசட்டு துணிச்சலில் சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்புகிறார்கள். அதாவது ”தமிழகத்திற்கு விடிவுகான ஊட்டியில் அணை கட்ட வேண்டும்; தமிழகத்தில் வலுக்கும் கோரிக்கை: அதிர்ச்சியில் உறைந்த கர்நாடகா!” என்று தலைப்பிட்டு வதந்தியை பரப்புகிறார்கள்.

காவிரியின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிக்கும் தமிழக நிலப்பரப்புக்கும் தொடர்பே இல்லை. தமிழக – கேரள – கர்நாடக எல்லைகள் சந்திக்கும் புள்ளியில் இருந்து செல்லும் நீரானது  நூகு அணையில்தான் போய் சேருகிறது. ஆனால் அந்த ஆற்றில் செல்லும் தண்ணீரின் அளவு மிகவும் குறைவானது.

மோயார் ஆறானது இந்த மூன்று மாநில எல்லைக்கோடுகள் சந்திக்கும் புள்ளியிலிருந்து கிழக்கு திசையில் முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் பிறப்பெடுக்கிறது. தெப்பக்காடு மசினகுடி உள்ளிட்ட இந்தப் பகுதியில் இருந்து உருவாகி கிழக்கு நோக்கி பயணித்து பவானிசாகர் அணையை சென்றடைகிறது. மோயார் ஆறானது தமிழகத்தில் உருவாகி தமிழகத்திற்கு உள்ளேயே சென்று காவிரியில் சங்கமிக்கிறது. இந்த ஆற்றுக்கு கபினி அணைக்குச் செல்லும் காவிரி நீரை கொண்டு வந்து சேர்ப்பதற்கு வழியே இல்லை.

வரைபடத்தில் கபினி, நூகு அணைக்குச் செல்லும் வழித்தடங்களும் நீர்ப்பிடிப்பு பகுதிகளும் மங்கலாக்கி காட்டப்பட்டுள்ளது. அதேபோல் கிழக்கு புறத்தில் பவானி சாகர் அணைக்கு வந்து சேரும் மோயாரின் நீர் பிடிப்பு பகுதிகளும் மங்கலாக்கி காட்டப்பட்டுள்ளது. மூன்று மாநில எல்லை கோடுகளும் சிவப்பு கோட்டால் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தை உற்றுப் பார்த்து விட்டு தொடர்ந்து படிக்கவும்.

இந்த வாட்ஸ் அப் வதந்தியை நம்பி ஒருவேளை தமிழகப் பகுதியில் நாம் அணையை கட்டினால், மோயாரின் தண்ணீரை மட்டும்தான் அதில் தேக்கி கொள்ள முடியுமே தவிர காவிரி நீரை அல்ல.

தேவை புவியியல் அறிவு !

மோயார் ஆறும், பாவனிசாகர் அணையும்

இந்த அடிப்படை புவியியல் அறிவை பெரும்பான்மையான மக்களுக்கு நமது கல்விமுறை தரவில்லை. எனவே படித்தவர்களும் கூட எளிதாக இந்த வதந்திக்கு மயங்குகின்றனர். இந்த எதார்த்தத்தை புரிந்து கொண்ட சிலர் திட்டமிட்டே திசை திருப்புகிறார்கள்.  நாம் ஏன் கர்நாடகத்திடம் தண்ணீர் திறக்கச் சொல்லி கெஞ்ச வேண்டும்? ஊட்டியில் அணையைக் கட்டி தண்ணீரை திருப்பி, நமது உரிமையை நாமே ஏன் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது? என்று அனாமதேயமாக பதிவிட்டு கருத்து பிரச்சாரம் செய்கின்றனர். இதை வைரல் ஆக்கும்படியும், ஆயிரம் பேருக்கும் பகிரும்படியும் நம் காலிலும் விழுந்து (watsapp இல் தான்) கெஞ்சுகிறார்கள்.

உண்மையிலேயே தமிழக பரப்பிலிருந்து  தண்ணீர் ஊற்றெடுத்தோ அல்லது மழைப் பொழிவின் மூலமாகவோ ஆறாக உருவெடுத்து கபினிக்கு செல்கிறது என்றால், அதை நாமே திசை திருப்பி பயன்படுத்திக் கொள்வது என்பது சரியான ஆலோசனை தான். ஆனால் இல்லாத ஒன்றை கற்பனையாக உருவாக்கி, அந்த கற்பனை தீர்வையே மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்பவர்களை என்னவென்று சொல்வது? இந்த உண்மை புரியாமல் வாட்ஸ் அப்பில் இதை பகிர்ந்து பரவசமடைபவர்களை எப்படி திருத்துவது? ஆறு, குளம், அணைகள், ஏரிகள் அனைத்தையும் வளைக்கும் கார்ப்பரேட்டுகளின் சதியை புரிய வைப்பது எப்படி? நாம் தான் விடை தேட வேண்டும்.

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here