கல்வியைக் கடைச் சரக்காக்கி, ஆசிரியர்களை செல்லாக் காசாக்கும் தேசியக் கல்விக் கொள்கை!

ஆசிரியர் தினம் சென்ற வாரம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப்படும் தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) வழிகாட்டலின் கீழ் பெரும்பாலான மாநிலங்கள் தங்கள் பொதுக் கல்வி முறைகளை அனைத்து வழிகளிலும் தீவிரமாக தனியார் மயமாக்கி வருகின்றன. இந்தச் சூழலில் அனைவருக்கும் சமத்துவத்தையும், தரமான கல்வியையும் வழங்குவதற்கான கடமைகளை கைவிட்ட பிறகு, ஆழ்ந்த குழப்பமான ஆசிரியர் தினத்தைதான் எங்கும் காண முடிகிறது.

மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்கள் டாவோஸில் உள்ள உலகப் பொருளாதார மன்றத்துக்குச் (World Economic Forum) சென்று, அங்குள்ள டிஜிட்டல் பயிற்சி வழங்கும் நிறுவனமான பைஜூஸ் (Byju’s) உடன் தங்களது இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. ஏற்கனவே குழந்தைகளின் திறன்கள் மற்றும் இந்தப் பயிற்சியின் அவசியம் குறித்து பெற்றோரை ஏமாற்றும் வகையில் தவறான தகவல்களை அளித்ததற்காக பைஜூஸின் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அரசாங்கம் அதன் சில சிறப்புப் பள்ளிகளை மிகவும் செலவு பிடிக்கும் சர்வதேசப் படிப்புடன் இணைப்பதற்காக முதல் தவணையாக ஒரு கோடியை (தள்ளுபடி விலையாம்!) செலுத்தியுள்ளதாக அறிவித்தது. பிஹார் அரசு இப்போது உயர் வகுப்புகளுக்கு கற்பிக்கும் பயிற்சித் தொழிலை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஒரு வினோதமான திட்டத்தை வகுத்துள்ளது. அதாவது ஆசிரியர்களாக இருப்பதற்கான எந்தத் தகுதியும் பெற்றிடாத வேலையில்லாதவர்களை இந்தத் தொழிலில் இறங்குமாறு கூறுகிறது. சங்கிகளின் அஜெண்டாவை நிறைவேற்றவே இது உதவும்.

மேலும் தொழில்முறை ஆசிரியர் பயிற்சியையும் அதற்கான நீண்டகால முதலீட்டுக்கான முக்கியமான தேவையையும் அநீதியான முறையில் நீக்குகிறது. அடுத்து, கல்விச் செலவைக் குறைத்தல் எனும் அற்ப நோக்கில், யார் குறைந்த செலவில் கல்வி கொடுக்க முன் வருகிறார்களோ, (டெண்டர் அல்லது ஏலம் விடுவது போல) ஒரு குறிப்பிட்டப் பகுதியை அவர்களிடம் ஒப்படைக்கும் அவலம் அரங்கேறுகிறது. மொத்தத்தில் கற்பிக்கும் தொழிலே கேலிக்கூத்தாக மாறி உள்ளது.

ஆசிரியர் பயிற்சி நிலையங்களின் இன்றைய நிலை!

நமது நாடு மிகவும் மோசமான ஆசிரியர் பயிற்சிக் கல்வியை கொண்டுள்ளது. காரணம் 90% ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தனியாரால் நடத்தப்படுகின்றன. அவற்றின் வணிக நோக்கம் கல்வியைப் புறந்தள்ளுகிறது. அங்கு தகுதியற்ற மற்றும் குறைந்த ஊதியம் பெறும் ஒப்பந்த ஆசிரியர்களை நியமிப்பதால், கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் நோக்கமானது சரிவர நிறைவேறாமல் உள்ளது. காரணம் அரசாங்கங்கள் கல்வியின் தரத்தில் சமரசம் செய்து கொள்வதுதான்!

இப்போது ஆட்சியாளர்கள் நமது பாரம்பரிய குருமார்களின் பண்புகளைப் பெருமையாகக் கருதி இந்தியாவை விஸ்வகுருவாக உருவாக்க விரும்பினாலும், NEP 2020 மற்றும் NCF 2023 ஆகியவை RTE எனும் கல்வி உரிமைச் சட்டத்தை, அதன் முக்கியமான வழிகளில் மீறுகின்றன. ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூடுவது மற்றும் ஒன்றிணைப்பது, 14 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு “மாற்றுப்பாதை” என்ற பெயரில் தொலைதூரக் கற்றல் அல்லது குறைந்த மதிப்புள்ள தொழிற்கல்விப் படிப்புகளே போதும் என்ற நிலையை உருவாக்குகிறது. இப்போது விலைமதிப்பற்ற மக்களின் பொது நிதியை வணிகப் பயிற்சி நிறுவனங்களுக்கு திருப்புவது என்பது சமூகப் பொறுப்பு மிக்க கல்வி அமைப்புக்கு சாவு மணி அடிப்பது போன்றதாகும்.

இதையும் படியுங்கள்: சந்திராயன் வெற்றியில் சொந்தம் கொண்டாடும் மோடி! வெட்கமில்லையா மோடி?

சென்ற மாதம் சந்திராயனை  புத்திசாலித்தனமாக, நேர்த்தியாக நிலவில் தரை இறக்கிய விஞ்ஞானிகள் அரசுப் பள்ளிகளில் மற்றும் சாதாரணப் பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள்தானே! அவர்கள் யாரும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் படிக்கவில்லையே! நிலவில் தடம் பதித்த சந்திராயனைக் கண்ட இளம் மாணவர்கள், அதன் முன்னோடிகளின் அரிச்சுவடிகளை பின்பற்றத் தூண்டுதல் ஏற்பட்டிருக்கும் அல்லவா?

ஆனால் அதே நாளில்தான் தேசியப் பாடத்திட்ட கட்டமைப்பின் வரைவான NCF 2023, அறிவியலை அச்சுறுத்தும் வகையில் ஆரம்பப் பள்ளிகளில் விநியோகிக்கப்பட்டது. அதில் சுற்றுச்சூழல் அறிவியல்(EVS) என்பது கற்றலின் மூன்று முக்கிய பகுதிகளில் ஒன்றாக தொடக்கக் கல்வியில் புகுத்தப்படுகிறது. இதை முறைசாரா செயல்பாடுகள் மற்றும் புத்தகம் தேவையில்லாத சுற்றுலா என வர்ணிக்கிறது. அதே நேரத்தில் இதை ஆசிரியர்கள் கற்பிக்க முடியாது எனவும் தெரிவிக்கிறது.

சிறப்புப் பயிற்சி மையங்கள் எனும் கொலைக்களம்!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா(Kota)வில் உள்ள சிறப்புப் பயிற்சி நிறுவனங்களில் இருந்து வரும் உறைய வைக்கும் தற்கொலை செய்திகளை அடிக்கடி நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். கடந்த வாரம் தற்கொலைகளை தடுக்கும் விதமாக பயிற்சி நிலையங்கள் பாதுகாப்பு வலைகளால் மூடப்பட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்தோம். இவை அவற்றின் மனித நேயமற்றத் தன்மையை நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.

குற்றம் (தற்கொலை) நிகழ்வதைத் தடுக்க காவல்துறையின் தலையீடும் அதிகமாக அங்கு உள்ளது. அது மட்டுமின்றி உளவியல் ஆலோசனைகளும் மாணவர்களின் மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நடத்தப்படுகின்றன. இப்படி வளர்ந்து வரும் பயிற்சி மையத் தொழில்  எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்பது குறித்த நுணுக்கமான தகவல்கள் நமக்கு கிடைப்பதில்லை. பயிற்சி மையங்களில் மாணவர்கள் நாள்தோறும் செலவிடும் வகுப்பறைகள், இரவில் தங்கி இருக்கும் அறைகள், அங்குள்ள பயிற்றுனர்கள் போன்றவை குறித்து சில தகவல்கள் ஊடகங்களில் வந்துள்ளன. ஆனால் இதற்கு மாணவர்கள் எவ்வளவு தொகை செலுத்துகிறார்கள் என்பது வெளியே தெரிவதில்லை.

பெற்றோர்கள் தங்களது சிறிய நிலத்தை விற்றோ அல்லது அதிக வட்டிக்கு கடன் வாங்கியோ செலவழிக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட முடிகிறது. பொறியியல் அல்லது மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு உள்ள மிகக் குறைந்த வாய்ப்புக்காக பயிற்சி நிலையங்களில் நிகழும் மாபெரும் கொள்ளையை எப்படித் தடுப்பது? வளர்ந்து வரும் இந்த பயிற்சி மைய சந்தையானது நேர்மையற்ற முறையில் சிறிய நகரங்களிலும் மற்றும் நடுத்தர குடும்பங்களிலும் கூட தனது கோரவலையை விரிக்கிறது. இது மிகவும் ஆபத்தான விஷயமாக உள்ளது.

பெற்றோர்களும் மாணவர்களும் இந்த மாய வலையில் சிக்க வைக்கப்படுகிறார்கள். இந்த நுழைவுத் தேர்வுகளின் மிகவும் கடினமான, சவாலானத் தன்மையை வெளிப்படுத்தாமல், பெரும்பாலானோரை வடிகட்டி வெளியில் தள்ளும் வகையில் மிகக் குறைவான இடங்களுக்கு NEET, JEE மற்றும் GATE போன்ற போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கெடுக்க தவறான வகையில் கவர்ச்சியூட்டியும், நம்பிக்கையூட்டும் வகையில் பிரச்சாரம் செய்தும் குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்பான சொத்துக்களையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதையும் படியுங்கள்: கல்வி உரிமை மறுக்கப்பட்ட நாட்டில் நீட் எதற்கு? அடியோடு தூக்கி எறி!

குழந்தைகளின் ஆர்வங்களைப் பொருட்படுத்தாமல் இத்தகைய பயிற்சி மையங்கள் பைஜூஸ் போல குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்குவதாக உள்ளன. பெற்றோரிடம் ஆசை காட்டி, தோற்கப் போகும் ஒரு சூதாட்டத்தில் ஆழ்த்தும் சதியாகவே இதை நாம் பார்க்க வேண்டும். மாணவர்கள் எந்த ஒரு சூழலிலும் தனது சக மாணவர்களிடம் (போட்டியாளன்) நட்பு பாராட்டி தனது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள்.

மேலும், தங்கள் பெற்றோரின் முதலீட்டை வீணாக்க கூடாது என்ற மனநிலையானது ஊட்டப்படுகிறது. ஒரு முறை தவறினாலும் அடுத்த முறை இன்னும் அதிகமாக செலவழித்து கடினமாக உழைக்க கடமைப்பட்டவர்கள் ஆகின்றனர் அவர்கள். அதிலும் தோற்றால் விரக்தியில் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இத்தகைய மனிதாபிமானமற்ற தொழில் முறை பயிற்சி மையங்களை நமது பள்ளிக்கல்வி மற்றும் அரசால் எப்படி ஊக்குவிக்க முடிகிறது?

டெல்லி பல்கலைக் கழகத்தில் நீண்ட காலமாக இருந்த ஆசிரியர் பயிற்சிக்கான ஒருங்கிணைந்த நான்காண்டு இளங்கலை தொடக்கக் கல்வித் திட்டம் திட்டமிட்ட வகையில் மூடப்படுவதை அதிர்ச்சியோடு காண்கிறோம். கடந்த 30 ஆண்டுகளாக மனிதநேய தொழில் வளர்ச்சியில் முதலீடு செய்வதன் மூலம் கல்வியில் உறுதியான, உணர்வுள்ள நல்லத் தரமான ஆசிரியர்கள், பாடத்திட்டத்தை உருவாக்குபவர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சியாளர்களை தயார் செய்ய முடிந்தது.

ஆனால் இப்போது அந்த முறைக்குப் பதிலாக இரட்டைப் பட்டப்படிப்பு என ஒன்று புகுத்தப்படுகிறது. இந்த மாற்றத்தை கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். ஆனால் ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் கல்விக்கான அரசியலமைப்பு உறுதிப்பாட்டை நிலை நிறுத்தும் ஒரு முற்போக்கான திட்டத்தை இழுத்து மூடுவதில் ஒன்றிய அரசாங்கம் உறுதியாக உள்ளது. இங்கும் கல்வி உரிமைச் சட்டம் கேள்விக்குள்ளாகிறது.

அதிர்ச்சியூட்டும் வகையிலான ஆசிரியர்களின் மனநிலை!

உ.பி-யின் முசாபர் நகரில் ஒரு தனியார் பள்ளியின் முதல்வரும் ஆசிரியருமான  டிரிப்டா தியாகி, ஒரு முஸ்லிம் மாணவனை சக வகுப்பு மாணவர்களைக் கொண்டு கன்னத்தில் அறையச் சொன்னதை பார்த்தோம். அதையடுத்து டெல்லியின் அரசுப் பள்ளி ஒன்றில் முஸ்லிம் குழந்தைகளுக்கு எதிராக வசை பாடுவதையும் கண்டோம். கடந்த ஆண்டு ஜலோர் மாவட்டத்தின் சுரானா கிராமத்தில் தலித் சிறுவன் ஒருவன் பானையில் தண்ணீர் குடித்ததற்காக ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்டு மரணித்ததையும் இன்னும் நாம் மறக்கவில்லை. இவற்றைத் தடுக்க ஆசிரியர்களுக்கு மனிதநேயக் கல்வி  கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்களை சாதிய உணர்வுகளுக்குள் ஆழ்த்தும் சமூக சிந்தனைகளையும், அதை ஏற்படுத்தும் சமூக ஊடகங்களையும் புறக்கணிக்க வேண்டும்.

சனாதனத்தை எதிர்த்து, சமூகநீதி பேசும் ஆசிரியர்களின் நிலை!

ஆசிரியர்களில் சிலர் சுதந்திர சிந்தனையோடு இருந்து அந்த சுதந்திரத்தை மாணவர்களுக்கு போதித்ததற்காக இடை நீக்கம், கைது – சிறை அல்லது பணியிலிருந்து வெளியேற நிர்பந்தம் போன்ற தொந்தரவுகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் ஆசிரியர் தொழிலும் ஆசிரியர்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கடியில் உள்ளனர்.

பாசிச பாஜக அரசின் கொடுங்கோன்மையின் கீழ் ஆசிரியர்கள்!

இந்தியப் பாரம்பரிய ‘புனித’ மரபின்படி (குரு- சிஷ்யன் எனும்) அரசாங்கத்தைத் தங்கள் குருவாக ஏற்றுக் கொள்ளவும், அதன் வார்த்தைகளைப் புனிதமாகக் கருதவும் ஆசிரியர்கள் நிர்பந்திக்கப் படுகிறார்கள். அதை ஏற்க மறுக்கும் (இந்துத்துவா கருத்தாக்கத்துக்கு எதிராக) சமத்துவ சிந்தனையுடையோர் ஒடுக்கப்படுகிறார்கள்.

சில உதாரணங்களை மட்டும் பார்ப்போம். ஜம்மு காஷ்மீரில் மேல்நிலைப்பள்ளி ஒன்றின் ஆசிரியராக இருந்த ஜகுர் அகமது பட், காஷ்மீருக்கான சிறப்புப் பிரிவான 370-ஐ நீக்கிய மதவாத அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தனது 6 நிமிட வாதத்தில், ஆகஸ்ட் 2019 க்குப் பிறகு இந்திய அரசியலமைப்பை ஒரு ஆசிரியராக எப்படி  கற்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினார். அடுத்த நாளே அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் 48 பேராசிரியர்கள் நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளனர்.  மேலும் பொதுத் தளத்தில் எழுதினால் கூட சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது. அசோகா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரே, அவர் தனது எழுத்துக்களால் அரசை விமர்சித்ததாகக் கூறி பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இப்படி ஆய்வுக் கட்டுரை எழுதுவது, மாணவர்களின் போராட்டத்தை கருணையோடு அணுகுமாறு நிர்வாகத்திற்கு கடிதம் எழுதுவது, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமேயல்ல, எந்த மதத்தை எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம் என மாணவர்களிடம் போதித்தது; கல்லூரி நூலகத்தில் ‘ஆட்சேபனைக்குரிய’ புத்தகம் வைத்திருந்தது ; வகுப்பில் பாசிசம் குறித்து பேசியது, கல்வி குறித்தான கருத்தரங்கு நடத்தியது – இப்படிப் பல்வேறு வகைகளில் ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை நாம் பார்க்கிறோம்.

இப்படி ஆசிரியர்கள் தண்டிக்கப்படுவது ஒரு புறம் என்றால் மறுபுறம் அரசாங்கத்தின் பிரச்சாரகர்களாக கருதப்படுவதில் பெருமை கொள்ளும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் (RSS) பிரச்சாரக்காக இருப்பதால் கவுரமும், தட்சணையும் கிடைக்கிறது. RSS – ன் கொடியை அவர்கள் தங்களது குருவாகக் கருதுகிறார்கள். இத்தகைய ஆசிரியர்கள் அதிகாரம் பொருந்தியவர்களாகவும் வலம் வருகின்றனர்.

மாணவர்களிடையே வேற்றுமை பார்க்காததே  ஆசிரியரின் உன்னதமானத் தன்மையாக சமூகத்தில் மதிக்கப்பட்டது. ஆசிரியரின் உருவத்துடன் சுதந்திர உணர்வை மக்கள் தொடர்பு படுத்திப் பார்ப்பார்கள். ஆசிரியர்கள் தங்களது சுதந்திர மற்றும் சுயமரியாதை உணர்வுக்காகத்தான் மதிக்கப்பட்டார்களே அன்றி கீழ்ப்படியும் குணத்துக்காக அல்ல. அறிவின் மரபுகள் மற்றும் முறைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது தான் ஆசிரியரின் பொறுப்பாகும்.

அதற்கும் மேலாக சுயமாக சிந்தித்து, துணிவுடன் முடிவெடுக்கும் ஆற்றலை மாணவர்களுக்கு வழங்குவதும் அவர்களது கடமைதான். மாணவர்கள் ஒரு பரவலான கருத்தை அப்படியே ஏற்காமல், அதை ஆராய்ந்து கேள்வி கேட்க வேண்டும் எனவும், ஆசிரியரின் கருத்துடன் மாறுபாடு இருந்தால் கூட மாணவர்கள் அது குறித்து விவாதிக்கும் சூழலையும் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். மாணவர்கள் தங்களது பாதுகாப்பான எல்லையில் இருந்து வெளியேறி அறிமுகம் இல்லாத அல்லது எதிர்பாராத ஒன்றை எதிர்கொள்ளப் பயிற்றுவிப்பதும் ஆசிரியரின் மற்றுமொரு பொறுப்பாகும்.

இன்றைய இந்தியாவில் ஒரு ஆசிரியர் தன்னை ஆபத்தில் ஆழ்த்தாமல் இத்தகைய பொறுப்புகளில் எதையுமே செய்ய முடியாது என்ற நிலையை பாசிச ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே மற்றும் ஹனிபாபு போன்ற சிலர் முழுச் சூழலையும் நன்கு அறிந்தே இத்தகைய அபாயத்தை எதிர்கொள்கின்றனர். அவர்களைப் போல சிறைக்கு செல்லாத பல ஆசிரியர்கள் பல்வேறு வகையான இன்னல்களை அனுபவித்துக் கொண்டுதான் உள்ளனர். சிறப்பு வாய்ந்த இத்தகைய ஆசிரியர்களுக்குத்தான் ஆசிரியர் தினத்தை அர்ப்பணிக்க வேண்டும்.

செய்தி ஆதாரம் : thewire.in

ஆக்கம்: குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here