பார்ப்பன (இந்து) மதம் சூத்திரர்களையும், பஞ்சமர்களையும் தொட்டாலே தீட்டு! பார்த்தாலே பாவம்! என்கிற தீண்டாமை கொடூரத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்ற, சக மனிதர்களை இழிவாக கருதுகின்ற கொடூரமான மனிதர்களை உள்ளடக்கிய மதமாகும்.

இந்தியாவில் நூற்றாண்டுகளாக நிலவிவரும் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளில் சிக்குண்டு வீட்டை விட்டு வெளியேறாத வாழ்க்கை முறை காரணமாக குறிப்பிட்ட சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வது, ஆணாதிக்க அடக்குமுறைகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு கட்டுப்பட்டு வாழ்கின்ற வாழ்க்கையை கற்றுக் கொடுத்துள்ளது இந்து மதம்.

உற்பத்தியில் முதலாளித்துவ முறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டவுடன் தனது கிராமத்தில் இருந்து வெளியேறி நகரங்களுக்கு குடி பெயர்ந்த மக்கள் சாதிய கட்டுப்பாடுகளை தகர்க்க ஆரம்பித்தனர்.

வேதத்தை படித்தாலும் காதால் கேட்டாலும் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று வேதம் மட்டுமல்ல கல்வியையே தனது சொத்தாக வைத்துக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தில் மட்டுமின்றி அதன் பிறகு அமைந்த அரசு கட்டமைப்பில் அதிகாரிகளாகவும், நீதிபதிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், மருத்துவர்கள் ஆகவும், கல்வியாளர்களாகவும் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர்.

இந்தியாவில் இத்தகைய சாதி- தீண்டாமை கொடுமைகளை உள்ளடக்கிய வருண, சாதி கட்டமைப்பை ஓரளவுக்கு கேள்விக்கு உள்ளாக்கிய இட ஒதுக்கீடு முறையில் பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கச் சென்ற சென்ற சூத்திர, பஞ்சம சாதிகளை சார்ந்த மாணவர்கள் கிராமப்புறத்திற்கு மீண்டும் செல்லும்போது சாதி ரீதியிலான உறவுகளில் கட்டுண்டு கிடக்காமல் உள்ளூர் சாதி அமைப்பை காதல் திருமணங்களால் உடைக்க தொடங்கினர்.

பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டு கிடந்த மக்கள் தலை நிமிர்ந்து நிற்பதை சகித்துக் கொள்ள முடியாத ஆதிக்க சாதிகள், உள்ளூரில் இத்தகைய சாதி மறுப்பு திருமணங்களை காரணமாக இருக்கும் காதல் பற்றி பல்வேறு இழிவான அபிப்பிராயங்களையும், சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களை உயிரோடு வாழ அனுமதிக்காமல் சுயசாதி கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு படுகொலை செய்வதிலும் ஈடுபட்டனர்.


இதையும் படியுங்கள்: சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராஜ் அவர்களின் புலனப் பதிவில் இருந்து:


இத்தகைய கொடூரத்தை எதிர்த்து ஒரு புதிய ஜனநாயக புரட்சி நடத்தாமல் முழுமையான மாற்றத்தை கொண்டு வர முடியாது என்றாலும் அதற்கு இடையில் சாதி மறுப்பு திருமணங்களை ஆதரிப்பதும் சாதி தீண்டாமை உள்ளிட்ட அழுகி நாறி வரும் அரை நிலப்பிரபுத்துவ கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்குவதற்கு காதல் திருமணங்களை ஆதரிக்க வேண்டும்.

ஆனால் மீண்டும் ஒரு காட்டுமிராண்டி சமூகத்தை உருவாக்க துடிக்கின்ற பார்ப்பன இந்து மதவெறியர்கள் காதல் திருமணத்தை கொச்சைப்படுத்துவது, அவமானப்படுத்துவது மட்டுமின்றி மாடுகளின் மீது காதல் கொள்ளுங்கள் என்ற அர்த்தத்தில் ஏப்ரல் 14ஆம் நாள் cow hug day கொண்டாடுவதற்கு அறை கூவல் விடுத்தனர்.

இந்தக் கோமாளித்தனமான நடைமுறையை ட்ரையல் பார்த்த ஆர்எஸ்எஸ்- பாஜக உள்ளிட்ட சங்பரிவார கும்பலுக்கு மாடுகள் நல்ல பாடத்தை புகட்டின.

அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை மத நம்பிக்கை என்ற முறையில் நமது தலையில் கட்டுவதற்கு முயற்சிக்கின்ற ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு பல்வேறு வகைகளில் செருப்படி கொடுத்தாலும் மீண்டும், மீண்டும் ஏதாவது ஒரு வகையில் அறிவியலற்ற முட்டாள்தனங்களையும், அருவருக்கத்தக்க சாதி கட்டுமானத்தையும் நம் தலையில் சுமத்துவதற்கு முயற்சிக்கிறார்கள்.

பார்ப்பன (இந்து) மத வெறி சாமியார்கள் பலர் மாதா அமிர்தானந்தமயி துவங்கி பாபா ராம்தேவ், ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர், நித்தியானந்தா உள்ளிட்ட பலரும் கட்டிப்புடி வைத்தியத்தை முன்வைத்து ‘ஆன்மீக சேவையாற்றி’ வருகின்றனர். இது போதாது என்று மாடுகளையும் கட்டிப்பிடிக்க சொல்லி ‘பாவப்பட்ட இந்துக்களுக்கு’ ஆத்ம சரீர சுகமளிக்க கிளம்பிவிட்டனர். இத்தகைய கேடுகெட்ட நடைமுறைக்கு எதிராக எதிர் தாக்குதல் தொடுக்காமல் இவர்களுக்கு அண்டியுள்ள கொழுப்பை குறைக்க முடியாது.

மற்றொருபுறம் சாதி-தீண்டாமைக்கு எதிராக கலக சிந்தனையுடன் காதல் புரிவதற்கு தயாராக உள்ள அனைவரையும் ஆதரிப்போம். கவ் பாய்ஸ் சேட்டைகளுக்கு பதிலடி கொடுக்கின்ற வகையில் லவ் பாய்ஸ் ஆக செயல்படுவோம்.

  • சண்.வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here