சம்யுக்தா கிசான் மோர்ச்சா
பத்திரிகைச் செய்தி
9 மே, 2022
லக்கிம்பூர் ககேரி கொலை வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா மோனுவின் கூட்டாளிகளின் ஜாமீனும் நிராகரிக்கப்பட்டது !
ஆஷிஷ் மிஸ்ராவின் கூட்டாளிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது !
அமைச்சர் டேனியின் நடத்தைக் குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவித்த பிறகு, அவர் அமைச்சராகத் தொடர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை
லக்கிம்பூர் கேரி படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளியும், மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகனுமான ஆஷிஷ் மிஸ்ராவின் கூட்டாளிகளின் ஜாமீன் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைச் சம்யுக்தா கிசான் மோர்ச்சா வரவேற்கிறது. நீதிமன்ற உத்தரவில், உள்துறை இணை அமைச்சரின் நடத்தைக் குறித்து கூறிய குறிப்புகளுக்குப் பிறகு, அஜய் மிஸ்ரா டேனி அமைச்சர் பதவியில் நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை. ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்த பிறகு, நீதியின் சக்கரம் சரியான திசையில் திரும்பியிருக்கிறது என்ற நம்பிக்கையை இந்த உத்தரவு அளிக்கிறது.
இன்று, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ டிவிஷன் பெஞ்சில் நீதிபதி தினேஷ் குமார் சிங் அவர்கள், அங்கித் தாஸ், சிஷுபால், சுமித் ஜெய்ஸ்வால் மற்றும் லவ்குஷ் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அனைத்து வாதங்களையும் நிராகரித்த உயர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் அரசியல் செல்வாக்கைக் கோடிட்டுக் காட்டி, இவர்களுக்கு ஜாமீன் கிடைத்தால் இவர்கள் தடயங்களை அழிக்க வாய்ப்புள்ளதாகவும், அது சாட்சிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
இதுமட்டுமின்றி, நீதிபதி தினேஷ் குமார் சிங், தனது உத்தரவில், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் நடத்தைக் குறித்துக் கடுமையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். அதாவது, புலனாய்வு முகமை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட எதிர் பிரமாணப் பத்திரம் மற்றும்
குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆதரமற்ற கூற்றுகளைச் சொல்லாமல் இருந்திருந்தால், இந்தச் சம்பவம் நடக்காமல் போயிருக்கலாம்.
மிகவும் துன்பகரமான, கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான, பயங்கரமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் பல அப்பாவி உயிர்களை இழந்திருக்க மாட்டோம். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் அமைக்கப்பட்ட புலனாய்வு குழுவும், இந்த வழக்கில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதாக அதே வழியில் சுட்டிக்காட்டியிருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது. சம்யுக்தா கிசான் மோர்ச்சா இந்தப் படுகொலையின் மூளையாக அஜய் மிஸ்ரா டேனியை முதல் நாளிலிருந்தே கூறி வருகிறது. இப்போது மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் இந்தக் கருத்துக்களுக்குப் பிறகும், அமைச்சர் டேனி, அமைச்சர்கள் குழுவில் நீடிக்க எந்த காரணமும் இல்லை.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா, அதன் சட்டக் குழுவின் வழக்கறிஞர்கள் ஷஷாங்க் சிங் மற்றும் அமன் கவாஜா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கின்ற அதே நேரத்தில், நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனுவை மறுபரிசீலனை செய்யும் போது, இந்த அனைத்து உண்மைகளையும் கவனத்தில் கொள்ளும் என்று நம்புவதாக கூறியுள்ளது. இந்த வழக்கை மே 25 விசாரிப்பதாக இன்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அறிக்கையை வழங்கியவர்கள்
டாக்டர். தர்ஷன் பால், ஹன்னன் மொல்லா, ஜக்ஜித் சிங் தலேவால், ஜோகிந்தர் சிங் உக்ரஹான், ஷிவ்குமார் சர்மா (காக்கா ஜி), யுத்வீர் சிங், யோகேந்திர யாதவ்
சம்யுக்த கிசான் மோர்ச்சா
மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com
வெளியீடு : ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தமிழ்நாடு,