பத்திரிக்கைச் செய்தி

தில்லை கோவில் சிற்றம்பலத்தில் பக்தர்களின் வழிபாட்டுரிமை, தமிழ்பாடும் உரிமைக்கு தீட்சிதர்களின் தடை!

தருமபுரம் ஆதீன பல்லக்கு பிரச்சினையில் ஆளுநர், அண்ணாமலை கூட்டு தலையீடு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் எச்.ராஜா, அர்ஜுன் சம்பத்தின் ஆங்கில வடிவம். அதாவது நாதாரிதனத்தை நாசுக்காக செய்வது. சிதம்பரம் நடராசர் கோவிலில் சிற்றம்பலத்தில் வழிபடும் உரிமைக்காக, அனைவரும் தேவார திருமுறைகளை பாடி வழிபடலாம் என்ற அரசாணையை தடுத்த தீட்சிதர்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

தமிழக அரசு பரிசீலித்து வரும் நிலையில், ஆளுநர் சமீபத்தில் சிதம்பரம் சென்று சிற்றம்பல மேடைக்கு கீழே நின்று வழிபட்டதன் மூலம் தீட்சிதர்கள் தடையை உறுதிபடுத்தி விட்டார். ஏற்கனவே பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் தீட்சிதர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

அடுத்து தருமபுரம் ஆதினத்திற்கு ஆளுநர் சென்றார். தற்போது பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தருமை ஆதீனத்தை நானே பல்லக்கில் சுமப்பேன் என கூறி உள்ளார். இரண்டும் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஆளுநர் இறங்கி உள்ளார். இதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள தருமபுர ஆதீனத்தின் இருபத்தி ஏழாவது குருமகாசன்னிதானம் பல்லக்கில் அமர்ந்து வீதி உலா செல்வது தொடர்பாக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி பல்லக்கில் தூக்கும் நிகழ்விற்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். உடனே ஆதீனங்கள் ஒன்று சேர்ந்து கொண்டு, அதிலும் குறிப்பாக மதுரை ஆதீனம் “உயிரைக் கொடுத்தாவது பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம்! ஆங்கிலேயர்களே ஆதரவு தெரிவித்த இந்த நிகழ்வுக்கு அரசியல் காரணமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.

எங்கள் உயிரைக் கொடுத்தாவது ஆதீனங்களின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு பல்லக்குத் தூக்கி செல்வோம் என்று பாஜக ஆர் எஸ் எஸ் கும்பல் கொந்தளித்தனர். பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்தால் ஒரு அமைச்சரும் தெருவில் நடமாட முடியாது என்று மன்னார்குடி ஜீயர் முதல் சோடாபாட்டில் ஜீயர் வரை தமது திரண்ட புஜத்தை தட்டுகின்றனர்.

மனித சமூகம் தோன்றிய காலம் முதல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பல்வேறு காட்டுமிராண்டித்தனமான நிகழ்வுகள், அடிமை மற்றும் கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் மட்டும் மரபு, பழக்கவழக்கம் என்ற பெயரில் பல்வேறு பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள் ஆன்மீகத்தின் பெயரால் தொடர்கிறது. அதில் ஒன்றுதான் மனிதனை மனிதன் பல்லக்கில் தூக்கி வைத்துக்கொண்டு சுமந்து செல்லும் பட்டினப்பிரவேசம் என்ற நிகழ்ச்சி.

பழக்கத்தை மாற்ற முடியாது என சொல்லும் ஆதீனங்களின் புதிய வரவு அண்ணாமலை பதில் சொல்லட்டும். ஆதீனங்கள் கார்ல போக கூடாது. செல்போன் பயன்படுத்த கூடாது. ஏசியில தூங்க கூடாது. அதை மட்டும் ஏன் மாற்றிக்கொண்டார்கள்.
ஆதீனங்களுக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவ்வளவு திரண்ட சொத்துகள் எதற்கென்றால் அவர்கள் சைவத்தையும், தமிழையும் அரும்பாடுபட்டு வளர்ப்பதற்கு இவை தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

சைவ கோவில்களில் முக்கியமான சிதம்பரம் நடராசர் கோவிலில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடுவதற்கு அதுவும் சிற்றம்பல மேடையில் ஏறி பாடுவதற்கு தீட்சிதர்கள் தடை விதித்துள்ளனர் இதை எதிர்த்து எந்த ஆதீனமும் பொங்கவில்லை.
ஆனால் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு, பல்லக்கு பவனிக்கு தடை செய்தால் மட்டும் ஆதீனங்கள் பதிலளிக்கின்றனர்.

சமீபத்தில் திருப்பனந்தாள் ஆதீனத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ் கைக்கூலி ஆர் என் ரவி விஜயம் செய்தது முதல் ஆதீனங்கள் புதிய தெம்புடன் கிளம்பியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் அமைப்புகள் தனது ஆன்மீக மதவெறி அரசியலை தற்போது ஆதீனங்களில் நடத்த பார்க்கிறது. அதற்கு ஆளுநர் வழி அமைத்து கொடுக்கிறார்.

ஆதீனங்கள், மடாலயங்களுக்கு சொந்தமான நிலங்களை நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு குத்தகை விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். பா.ஜ.க இந்துத்வா மதவெறி அரசியல் செயல்பாடுகளுக்கு ஆளுநர் துணை போவதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நிரந்தரமாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

மதத்தின் பெயரால் ஆன்மீகத்தின் பெயரால் மனிதனை மனிதன் சுமப்பது சட்டப்படி தடுக்கபட வேண்டும்.

இந்து மதத்தில் நிலவிய காட்டுமிராண்டிதனமான பழக்கவழக்கங்களான உடன்கட்டை ஏற்றுவது, குழந்தை திருமணம், தேவதாசி முறை, பலதாரமணம், விதவை மறுமணம் தடை, கோவில் வழிபாட்டில் தீண்டாமை, கருவறை தீண்டாமை என பிறப்பால் இழிவை சுமத்தும் அனைத்திற்கும் எதிராக போராடி ஒழித்துள்ளோம்.

அது போல் மனிதனை மனிதன் சுமக்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கு எந்தவகையிலும் அனுமதிக்கக்கூடாது. தமிழக அரசு உறுதியாக முடிவு எடுக்க வேண்டும். அதற்கு மக்கள் போராட வேண்டும்.

தோழமையுடன்,

வழக்கறிஞர் சி.ராஜு.
மாநிலப் பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுச்சேரி.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here