ஆய்வுப்படிப்புகள் ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட நிலங்களாக இருக்கின்றனவே ஏன்? பகுதி -2


ம்ரிதா முனைவர் பட்ட ஆய்வு படிப்பில் சேர்ந்த சமயத்தில் வழிகாட்டும் பேராசிரியர்களாக விருப்பத்தின் அடிப்படையில் முதல், இரண்டாவது, மூன்றாவது என்று மூன்று பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. கடைசியில் மூன்றாவது விருப்பமாக அம்ரிதா தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் அவருக்கு வழிகாட்டியாக வாய்த்தார்.  விரைவிலேயே அவர் பொருத்தமானவர் அல்ல என்று கண்டுபிடித்தார் அம்ரிதா. அவர் கல்வி இயலில் மிக உயர்ந்தவர் அற்புதமான படிப்பாளி இதில் எந்த விவாதத்திற்கும் இடமில்லை. ஆனால் “அவர் என்னை நடத்திய விதம் அவர் சரியான ஆள் இல்லை என்பதை உணர்த்தி விட்டது” என்றார் அம்ரிதா. “எனக்கு எது முக்கியமாக படுகிறதோ அதைப்பற்றி ஆய்வில் இறங்க வேண்டும் என்று இருந்தேன். என்னை விட வேறு யாருக்கு அதன் முக்கியத்துவம் தெரியும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட பிரிவினர் பற்றிய ஆய்வு தனிப்பட்ட சொந்த ஆர்வமும் கூட என்பதை அந்த வழிகாட்டும் பேராசிரியர் புரிந்துகொள்ளவில்லை” என்றார் அம்ரிதா.

ஆராய்ச்சி மாணவரும் சமூக செயற்பாட்டாளருமான ரவிகாந்த் கிஸானா, “முனைவர் பட்ட ஆய்வு நிலப்பிரபுத்துவ கட்டமைப்பை பிரதிபலிப்பதாக உள்ளது. மாணவர்கள், குறிப்பாக பழங்குடி, தலித் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான தலைப்பை இங்கு தேர்ந்தெடுக்க முடியாது.” சாதி பற்றிய ஆய்வு என்றாலே பழைய முறைப்படி மலம் அள்ளும் பிரச்சினை பற்றியோ அல்லது சாதி கலவரங்கள் பற்றியோதான் இருக்க வேண்டும் என்று என்ன காரணத்தாலோ பேராசிரியர்கள் தீர்மானித்து இருந்தனர். “ஆதிக்க சாதிகள் பற்றி ஆய்வு செய்யவோ, அப்படிப்பட்ட சாதியில் பிறந்த ஒரு ஆளுமை பற்றி விமர்சனம் செய்யவோ ஒருவர் விரும்பினால் அவர் ஆய்விலிருந்து உடனே நீக்கப்பட்டு விடுவார்” என்கிறார் கிசானா.

ஆய்வுத் திட்டம் முழுவதும் அம்ரிதாவுக்கு வழிகாட்டியின் ஆதரவு வரவே இல்லை. “பேராசிரியர் பெயரிலேயே வழிகாட்டி என்ற சொல் இருக்கிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் என்ன திட்டம் இடுகிறேன் என்றோ எப்படி படிக்கிறேன் என்றோ அவர் கேட்டதே இல்லை.” ஐந்து மாதங்களில் (சுமார் 150 நாட்களில்) மூன்று முறை மட்டுமே பேராசிரியர் அம்ரிதாவை சந்தித்துள்ளார். வசதிமிக்க பின்னணியில் இருந்து வருபவர்களை போல தகுந்த பயிற்சியும், திறனும் பெற்றவர்களாக இவரைப்போன்ற மாணவர்கள் படிப்பை ஆரம்பிக்கவில்லை. “சாதிப் படிநிலையில்  மேல்மட்ட மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை ஏராளமாக பெற்றுள்ளார்கள், அந்த வசதி எனக்கு இல்லை” என்கிறார் அம்ரிதா.

இந்தக் காரணங்களால் ஆய்வுப் படிப்பு அம்ரிதாவுக்கு மோசமானதாகவே இருந்தது. சரியாக தயாரித்து இருந்தாலும் தேர்வுகளில்  அவரால் சரியான விடை அளிக்க முடியாமல்  திணறினார். காரணம் அவர் என்ன எழுதினார் என்பது அல்ல அவருடைய  வழிகாட்டும் பேராசிரியர் அம்ரிதாவை வெறுப்புடனும், அவநம்பிக்கையுடனுமே அணுகினார். இத்தகைய மனஉளைச்சலால் தன் வாழ்நாளிலேயே எந்த ஒரு தேர்விலும் பெறாத தோல்வியை அமிர்தா சந்திக்கவேண்டியிருந்தது.

எப்போதுமே உதவி செய்ய முன்வராத பேராசிரியர் அமிர்தாவின்  போராட்டங்களை சிறுமைப்படுத்தினார். ஒரு கட்டத்தில் “இந்த மாதிரி ஆய்வு படிப்புக்கு நீ தகுதி உள்ளவள் தானா” என்று நேரடியாகவே கேட்டார். ஏற்கனவே தளர்ந்துபோயிருந்த நம்பிக்கையை அவரது கேள்வி முற்றிலுமாக நொறுக்கி விட்டது. “அடிமையாக கிடந்து கஷ்டப்படும் ஆளாக நான் இருக்கமாட்டேன்” என்று தான் அப்போது எண்ணியதாக அமிர்தா கூறுகிறார்.அம்ரிதா போன்றவர்களை சகமாணவர்கள் வேறு மாதிரி அணுகினார்கள் அந்த மாணவர்கள் அம்ரிதா இடஒதுக்கீட்டின் மூலம் வந்தவள் தானே என்று நக்கலாக பார்த்தார்கள். “இதையே அந்த பேராசிரியரும் கேட்டதுதான் மிக மோசமாக நிலைகுலையச் செய்துவிட்டது” என்றார் அம்ரிதா.

Prof. Ravikant Kisana

“முதல் தலைமுறை மாணவர்களுக்கு அவர்களுக்கான பேராசிரியரின் அறைக்குள் நுழைவதே ஒரு வலிமிகுந்த அனுபவம். யார் உன்னை உட்காரச் சொன்னது என்று மாணவர்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வியே மாணவர்களின் நம்பிக்கையை தகர்த்துவிடும்” என்கிறார்  கிசானா.”உயர்சாதி மாணவர்களுக்கு இருக்கும் இன்டர்நெட் போன்ற வசதிகள் எங்களுக்கு இல்லை. வரப்போகும்  பேராசிரியர் பற்றி நெட்வொர்க் மூலமோ அல்லது வேறு தொடர்புகள் மூலமோ அறிந்து கொள்வதற்கும் எங்களுக்கு வாய்ப்பு இல்லை” ஆதித்யா.வழிகாட்டும் பேராசிரியர் பற்றி எதுவுமே தெரியாததால் தனக்கு முன்னால் வரிசையில் நின்ற மாணவர் யாரை குறிப்பிட்டாரோ அவர் பெயரையே நேர்முகத்தேர்வில் முன்மொழிகின்ற அளவுதான் ஆதித்யாவுக்கு தெரியும்.

மனவியல் மருத்துவரும் பூனாவில் உள்ள மனநலம் மற்றும் சட்ட கொள்கை பற்றிய ஆய்வு மையத்தின் இயக்குனருமான மருத்துவர் சௌமித்ரா பத்தாரே “வழிகாட்டும் பேராசிரியர்கள் அந்த வேலையை ஏற்றுக்கொள்ளும் முன்னால்  போதிய பயிற்சி எடுப்பது இல்லை” என்கிறார். “வழிகாட்டலுக்கோ, மேற்பார்வைக்கோ தேர்ந்தெடுக்கப்படுவது அவர்களின் அனுபவத்தை அடிப்படையாக மட்டுமேயன்றி அவர்  சிறப்பு பயிற்சி எடுத்திருக்கிறாரா என்று பார்க்கப்படுவதில்லை. வழிகாட்டும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் கல்விச் சூழலை உருவாக்க வேண்டும் . அதற்காக அவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் ” என்கிறார்.

“மாணவர்களுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் இடையே இருக்கவேண்டிய உறவுகள், அதன் வரம்புகள் பற்றி போதுமான அளவு விவாதிக்க படுவதும் இல்லை ” என்கிறார் பெங்களூரு IIM பேராசிரியர் தீபக் மல்கான். 2021-ல் தீபா பி மோகனன் என்ற தலித் முனைவர் பட்ட ஆய்வாளர் சாதி வெறுப்புடன் நடந்துகொண்ட மகாத்மா காந்தி பல்கலைக்கழக சர்வதேச மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான நேனோ தொழில்நுட்ப மையத்தின்  இயக்குனரான பேராசிரியர் நந்தகுமார் களரிக்கல் என்பவரைக் கண்டித்து 11 நாட்களுக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார். அது நாடு முழுவதும் மிகப்பெரும் கவன ஈர்ப்பாக அமைந்தது. அப்பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் விசாரணைக்குழு உறுதி செய்தது. இயக்குனர் பதவியிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டு பிறகு சில நாட்களுக்குள்ளாகவே கேடான முறையில் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார்.

2021-ல் தீபா மறுபடி எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினார். பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து அந்தப் பேராசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.தீபா தனது ஆய்வுக்கு தேவையான எந்த தரவுகளின் தொகுப்பும்  கொடுக்கப்படவில்லை, பல்கலைக்கழகத்தின் வசதிகள் மறுக்கப்பட்டன, மற்ற ஆதிக்க சாதி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் எல்லாம் தமக்கு மறுக்கப்பட்டன என்று குற்றம் சாட்டினார்.

ஆதித்யா “இந்தியாவில் இந்து தேசியம்” என்ற தலைப்பில் தனது ஆராய்ச்சி படிப்பை படித்தார். மேற்பார்வைப்  பேராசிரியரின் கருத்துகளும் ஆதித்யாவின்  கருத்துக்களோடு ஒத்துப்போயிருந்தது. இதையே ‘சாதி எதிர்ப்பு/ஒழிப்புக் கண்ணோட்டத்தின் வழியாக ஆராயப்போவதாக” தன் ஆர்வத்தை அவரோடு பகிர்ந்த போது அலட்சியமாக இருந்தார். குறிப்பிட்ட கட்டத்தில், ஆதித்யா அம்பேத்கர் மாணவர் கழகத்தில் செயல்படுவதாகக் குறிப்பிட்டு, ” உன் சாதி என்ன ? ”  என்று நேரடியாகக் கேட்டார். “கேள்வி கேட்டுவிட்டார்கள் என்பதற்காகவே சில மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள் வெட்டப்பட்ட சம்பவங்கள் நிறைய. ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களை இப்படியாக பழி தீர்த்துக்கொண்டார்கள்”, என்றார் ஆதித்யா.

முனைவர் பட்ட ஆய்வில் மூன்றே ஆண்டுகள் நகர்வதற்குள் ஆசிரியர்-மாணவர் உறவு  புளித்து போனது. ” நான் எழுதிய ஆய்வுக் கட்டுரையை அவர் பெயரில் போடப்போவதாகச் சொன்னார். அது சரியல்ல, முடியாது என்றேன்.” அதன் பிறகு உறவுகள் மோசமான நிலைக்குப் போயிற்று ” என்றார். முனைவர் பட்டம் கிடைத்தபிறகும் கூட , பேராசிரியரின் மனசைப் புண்படுத்திவிடுவோமோ என்ற மன அவஸ்தையில் விடுபட்டுப் முடியாது என்கிறார் ஆதித்யா.” தொடர்ந்து அவரைச்சார்ந்து இயங்க வேண்டியிருக்கிறது. வேலை தேடுவதற்கு எதிர்கால ஆய்வுகளுக்கும்கூட  அவரிடமிருந்து சிபாரிசும் கடிதங்கள் பெற வேண்டியிருக்கும்.”விபின் வீட்டில் என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பேராசிரியர் “இப்படிப்பட்ட அதிகாரத்துவக் கட்டமைப்புகள் மேலை நாடுகளில் இல்லை. அங்கெல்லாம் விவாதங்கள் அப்படியே ஏற்றப்படுகிறது என்பது மட்டுமல்ல, மாணவர்கள் விவாதிக்க வேண்டும் என்பதே ஒரு முக்கிய வழிமுறை. ஆனால் இங்கே பேராசிரியர்கள் அவற்றை  தங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்கிறார்கள்” என்கிறார்.

ஆதித்யா ஆய்வுமாணவராக இருந்தபோது, வேறுதுறைகள் சார்ந்த இரண்டு தலித் ஆசிரியர்களிடமிருந்து மட்டுமே  அவருக்கு ஆதரவு கிடைத்தது. “அவர்கள் பக்கத்துணையாக இருக்கவில்லையானால் என் ஆய்வு பற்றி துணிச்சலாகப் பேசியிருக்கவே மாட்டேன். ஒடுக்கப்பட்ட பிரிவினரைச் சேர்ந்த தனி அதிகாரிகள் இல்லை என்றால் , உங்கள் ஆய்வில் சாதிபற்றியோ சமூக அறிவியலில் இந்தியச் சமூகத்தின் வரலாற்றுப்பங்கு பற்றியோ விமரிசனம் செய்யமுடியாது,” என்கிறார் ஆதித்யா.இருக்கின்ற இலக்கியங்களிலும் ஒடுக்கப்பட்ட பிரிவினரைப்பற்றி மோசமான வசைச் சொற்றொடர்களும்  விவரணைகளும்தான் நிரம்பியுள்ளன. மற்றொரு மத்தியப் பல்கலைக்கழக ஆய்வுமாணவர்களில் ஒருவரான ஸ்மிதா பிரகாஷ்என்பவர், ஜார்ஜ் வெஸ்டன் என்பவர் எழுதிய “கோரக்நாத்தும்  கண்பத யோகிகளும்” என்ற நூலை எடுத்துக்காட்டாகச்  சொன்னார்.அதில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினராக வகைப்படுத்தப்படும் ‘ஜோகிகள் ‘ என்ற சாதியினர்பற்றி ” கயவாளிப் பிச்சைக்காரன்”என்று குறிப்பிட்டுவிட்டு ” எந்தக் கோவிலில் சோறுபோட்டாலும் பொறுக்கித்  தின்னும் அளவு தரங்கெட்டவன்” என்று விவரிப்பதையும் சொல்கிறார்.

பேராசிரியர்கள் சாதிப் பாரபட்சம் காட்டவில்லை என்று  ஒரு எடுத்துக்காட்டை நீங்கள் முன்வைத்தாலும், ஆய்வை முன்நோக்கி வளர்ப்பது சிரமம்தான். ஏனென்றால், சாதி போன்ற விசயங்களில் ஆய்வு செய்யும் ஆய்வாளருக்கு தரவுகள் புதிய அளவு இல்லை. ” சாதி எதிர்ப்பு இலக்கியங்கள் போதிய அளவு இல்லை. நூல்களை ஆக்கியவர்கள் எல்லோரும் ஆதிக்கச்சாதி நபர்களாகவே இருக்கிறார்கள். அயல்நாட்டு ஆய்வாளர்கள், ஒடுக்கப்பட்ட ( பகுஜன் ) பிரிவினரான எழுத்தாளர்களை மட்டுமே நான் தேடிப்பிடித்துப் படிக்கவேண்டும்,” என்றார் ஆதித்யா.

இலக்கியவகையிலும் இந்த மக்கள் அவதூறு செய்யப்பட்டார்கள். ஒரு எழுத்தாளர் லோதி, குர்ஜார் பெண்களை  ‘தலித்’என்று வகைப்படுத்தியிருந்ததை ஆய்வாளர் ஸ்மிதா  சுட்டிக்காட்டுகிறார். “உண்மையில் அவர்கள் விமுக்தி என்று அழைக்கப்படும் நாடோடிப் பழங்குடிகள்” என்று ஸ்மிதா சொன்னார். ” இப்படி வரலாற்று உண்மையை அழிக்கிறார்கள்,” என்றும் ” நான் உண்மையைச் சந்திக்கிறேன், என்னைக் குற்றப் பரம்பரை என்று சொன்னால் அதை ஏற்கமாட்டேன்.” என்றும் அழுத்தமாகக் கூறினார்.

படிக்க:

 பறிக்கப்படும் கல்வி உரிமை!நெஞ்சம் பதறுகிறது!ரத்தம் கொதிக்கிறது!

ஆதிக்கசாதி திமிருக்கு முடிவுக் கட்டு!

” இப்படிப் பழிதூற்றப் படுவதை  எதிர்த்து ஓ வென்று கதறிச் சண்டை போடத் தோன்றுகிறது. அப்படி ஆய்வைச் செய்வதற்கு  இங்கே கல்லூரியில் இடமில்லாதது என்மீது பெரிய சுமையாகி, வளர்ந்து என்னைச்சூழ்ந்து பித்துப் பிடிக்கவைக்கிறது……..”என்றார் ஸ்மிதா.போராடி எதிர்க்க வெளியே இடமே இல்லாமல், அமுக்கிவைக்கப்பட்ட, சமூகத்தின்மீதானகோபம் இது என்பதை நீங்கள் உணருகிறீர்களா?

( பின்குறிப்பு : சாதி, தீண்டாமை, பாரபட்சம், தொல்லைகளில் அலைக்கழிக்கப்பட்டு வதைபடும்  ஆய்வு மாணவர்கள் பொருளாதார ரீதியாகவும் பாதிப்படைவது பற்றியும் , IIT போன்ற அரசு ஆய்வு நிறுவனங்களில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடுவது பற்றியும், மனஅழுத்தம் முற்றி மாணவர்கள் தற்கொலை தள்ளப்படுவது பற்றியும் சாட்சியங்களை அடுத்த சுருக்கமான மூன்றாம் பகுதியில் நீங்கள் சந்திப்பீர்கள். )

(தொடரும்)

முந்தைய பதிவு:

ஆய்வுப்படிப்புகள் ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட நிலங்களாக இருக்கின்றனவே ஏன்? 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here