கடந்த 6 நிதியாண்டுகளிலும், நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களிலும், வங்கிகள் மொத்தமாக ரூ.7,34,542 கோடியை வசூலித்துள்ளன (செயல்படாத சொத்துக்கள் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் கணக்குகள், மோசடி எனப் புகாரளிக்கப்பட்டவை உட்பட). என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்ரா கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் இந்திய மாநிலங்கள் பெறும் கடனுக்கான வட்டிவிகிதம் 7.34 விழுக்காடாக 0.18% உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது மாநிலங்களின் நிதிநிலையை பாதிக்கக்கூடும்.

கிரிப்டோ நாணயங்கள் மீதான வரிவிதிப்பு ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கிரிப்டோ நாணய பரிவர்த்தனைகளின் மூலம் பெறப்படும் ஆதாயங்கள் மீது 30% வரி விதிக்கப்படும். அதாவது நீங்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு கிரிப்டோ நாணயங்களை வாங்கி 3 லட்ச ரூபாய்க்கு விற்றீர்களென்றால் 2 லட்ச ரூபாய் ஆதாயத்தின் மீது 30% வரி விதிக்கப்படும். 50,000 ரூபாய்க்கு மேலான கிரிப்டோ பரிவர்த்தனைகளில் 1% வரி பிடித்தம் செய்யப்படும். 1% வரிப் பிடித்தம் ஜூலையிலிருந்து செய்யப்படும்.

ஜனவரியில் தொழில்துறை வளர்ச்சி:
புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி ஜனவரியில் உற்பத்தி 1.3 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மைத் துறைகளில் சுரங்கத் துறை, செய்பொருளாக்கத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றில் உற்பத்தி முறையே 2.8, 1.1, 0.9 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மை பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி அளவுகள் முறையே 1.6, 0.9, 5.4 விழுக்காடு உயர்ந்துள்ளன. மூலதனப் பொருட்களின் உற்பத்தி 1.4 விழுக்காடு குறைந்துள்ளது. உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 2.1 விழுக்காடு உயர்ந்துள்ளது. நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 3.3 விழுக்காடு குறைந்துள்ளது.

ஃபிப்ரவரியில் தொழில்துறை வளர்ச்சி:
இந்தியாவின் தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த உற்பத்திக்குறியீடு ஃபிப்ரவரியில் 5.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு ஃபிப்ரவரி மாத உற்பத்தி அளவோடு ஒப்பிடும் போது நிலக்கரி உற்பத்தி 6.6 விழுக்காடும், சிமெண்ட் உற்பத்தி 5 விழுக்காடும், உருக்கு உற்பத்தி 5.7 விழுக்காடும் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 2.2 விழுக்காடு குறைந்துள்ளது. பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 8.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. உர உற்பத்தி 1.4 விழுக்காடு குறைந்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 12.5 விழுக்காடும், மின்சார உற்பத்தி 4 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

பருப்பு வகைகளின் அளிப்பை உள்நாட்டில் அதிகரிக்கவும் விலையை நிலைப்படுத்தவும் அரசு அவற்றின் திறந்த நிலை இறக்குமதியை அரசு மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்துள்ளது.இதன் மூலம் பருப்பு வகைகளை எந்த அளவுக் கட்டுப்பாடின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய பருப்பு நுகர்வில் 10%க்கும் மேல் இறக்குமதியை சார்ந்தே உள்ளது. பருப்பு வகைகள் போதுமான அளவு உள்நாட்டில் கிடைப்பதை உறுதிசெய்யும் முயற்சியில், அரசாங்கம் ஒரு விரிவான நீண்ட காலக் கொள்கையை உருவாக்கி வருகிறது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான ஒழுங்குமுறைகளிலிருந்து ஜீனோம் எடிட்டிங் செய்யப்பட்ட பயிர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இது சார்ந்த ஆய்வுகளை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது. இது இந்திய சூழலில் மரபணு மாசு உருவாவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி, 2022ல் 620 மில்லியன் டன்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் 90% ஏற்றுமதி இலக்கை அடைந்துள்ளது. 21.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள விவசாய, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
நீர் மேலாண்மையில் தேசிய அளவில் தமிழ்நாடு 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய நீர் விருது வழங்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு முதல் இடத்திற்கான விருதும், ராஜஸ்தான் மாநிலத்திற்கு இரண்டாவது இடத்திற்கான விருதும், தமிழகத்திற்கு 3-வது இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டது.

சரக்கு சேவை வரி:
மத்திய அரசு வரி வருவாயை உயர்த்தும் விதத்தில் தற்போது 5% உள்ள குறைந்தபட்ச சரக்கு சேவை வரியை 8% ஆக மாற்றவுள்ளதாக கூறப்பட்டது. சரக்கு சேவை வரிக் கட்டமைப்பில் மாற்றங்களைப் பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட மாநில அமைச்சர்கள் குழு, 12% மற்றும் 18% வரிவிகிதங்களை ஒன்றிணைத்து 15% வரிவிகிதத்தை செயல்படுத்த முன்மொழியலாம், ஆனால் பணவீக்கம் உயர்ந்துள்ளதால் வரி விகிதத்தை 5%லிருந்து 8% ஆக உயர்த்துவது குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளது.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு ஏன் அதிக ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர், கவுன்சிலால் கூட்டாக உருவாக்கப்பட்ட சூத்திரத்தின்படி நிலுவைத் தொகைகள் செலுத்தப்படுவதாகவும், எந்தவொரு தனிநபருக்கும் அந்த சூத்திரத்தை மாற்றியமைக்க உரிமை இல்லை என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகளை அரசியலாக்குவது கூட்டாட்சி அமைப்பை அவமதிக்கும் செயல் என்று கூறியுள்ளார்.

நிதியாண்டு 2023 முதல் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்படுவதால், மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும், இதனால் அவர்களின் கடன் தேவைகள் உயரும் அபாயம் உள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்துறை:
2070 ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வை சுழியமாக குறைக்கவேண்டும் என்று பாஜக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனபோதும் 2020-21இல், 12,880 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கிற்கு எதிராக 7,549.64 மெகாவாட்களை மட்டுமே எட்டியுள்ளது. ஜனவரி 31, 2022 நிலவரப்படி நாட்டில் 105.85 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் நிறுவப்பட்டுள்ளது, இது ஒட்டுமொத்த இலக்கான 175 ஜிகாவாட்டில் சுமார் 60% மட்டுமே.

சர்க்கரை உற்பத்தியிலிருந்து, எத்தனால் உற்பத்திக்கு சர்க்கரை ஆலைகள் மாற வேண்டியது அவசியம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். வாகன மாசைக் கட்டுப்படுத்த வாகனங்களில் எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதத்தில் சர்க்கரை வேண்டாம் எத்தனால் உற்பத்தி செய்யுங்கள் என்ற இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) முடிவெடுப்பதை எளிதாக்கும் மற்றும் விரைவான பாதையில் செயல்படுத்தும் விதமாக சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்படும். கூடுதலாக சுங்கச்சாவடிகள் இருந்தால் அடுத்த 3 மாதங்களில் மூடப்படும் என்று நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது என்ற போதிலும் இதை முன்பே செயல்படுத்தியிருக்கவேண்டும். பொதுத்துறையும், தனியார்துறையும் இணைந்து செயல்படுத்தும் சாலைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதியை பொதுத்துறை வழங்குகிறது, சுங்கச் சாவடிகளின் மூலம் சாலைக் கட்டுமான, பராமரிப்பு செலவுகளைக் காட்டிலும் பல மடங்கு தொகையை காலவரையறை இல்லாது பொதுப்பிரதினிதித்துவ கண்காணிப்பு இல்லாது தனியார் துறை முதலாளிகள் கொள்ளையடிக்க அரசே துணைபோகிறது. சுங்கச் சாவடிகளை மூடப்போகிறோம் என அறிவித்துவிட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கவரியை 10ரூபாயிலிருந்து 65 ரூபாயாக உயர்த்தியுள்ளது பாஜக அரசு. இதனால் போக்குவரத்து செலவுகள் கடுமையாக அதிகரிக்கும்.

நடப்பு நிதியாண்டில் சொத்துப் பணமாக்குதல் மூலம் பெறப்படும் தொகை ரூ.88,000 கோடி இலக்கைத் தாண்டும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நில பணமாக்கல் கழகத்தை (NLMC) அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (CPSEs) உபரி நிலம் மற்றும் கட்டிடங்களின் சொத்துக்களை நிர்வகித்து, பணமாக்கும் செயலில் ஈடுபடும்.

பொது சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு சுமார் 5,400 ஏக்கர் நிலங்களை தேர்ந்தெடுத்துள்ளது. இவற்றை புதிய தேசிய நில பணமாக்கல் கழகம் (NLMC) மூலம் பணமாக்க முன்மொழியப்பட்டுள்ளன.
இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் பாதியை உற்பத்தி செய்யும் ஓஎன்ஜிசியில் 60.41 சதவீத பங்குகள் அரசிற்கு சொந்தமானது அதில் 1.5% பங்குகளை விற்று 3,000 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. முதலீடு, பொதுச்சொத்து மேலாண்மை நிறுவனம் பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்களின் 17 சொத்துக்களை விற்று 23,358 கோடி ரூபாய் திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது.

நிறுவன இணைப்பு:
பாரத் பிராட்பேண்ட் நிகாம் லிமிடெட் (பிபிஎன்எல்) நிறுவனத்தை நஷ்டத்தில் இயங்கும் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) உடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தனியார்மயம்:
கேரளாவில் செயல்படும் ஹிந்துஸ்தான் லைஃப்கேர் (HLL) என்ற மத்திய பொதுத்துறை நிறுவனத்தை மத்திய அரசு தனியார்மயப்படுத்தவுள்ளது. பினராயி விஜயன், எச்எல்எல்லை தனியார்மயமாக்குவதைத் தொடர வேண்டாம் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை அளித்து வருகிறார். மத்திய அரசு பங்குவிலக்கல் செய்தலில் உறுதியாய் இருப்பதால் வெளிப்படையான ஏலத்தில் மாநில அரசு பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளது.

தொடரும்…

SAMANATHA.K.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here