ண்ணனையும் அம்மாவையும் இழந்தவர் ஒரு பெண், கிம். அவரது அண்ணி, அதாவது கணவரையும் மாமியாரையும் இழந்தவர் இன்னொருவர், நான்சி.

இருவரும் ஒயருக்கு அளித்த பேட்டியைக் காண்பதும் கேட்பதும் சொல்ல முடியாத வேதனையைக் கொடுக்கிறது. இயன்றவரை பதிவு செய்திருக்கிறேன்.

Villavan Ramadoss நேற்று பகிர்ந்த காணொளி இணைப்பு முதல் கமெண்டில்.

என் பெயர் நான்சி. 29 வயது மே 4 அன்று என் கணவரும் மாமியாரும் கொல்லப்பட்டார்கள். திருமணமாகி ஐந்து மாதங்களே ஆகி இருந்தன.

என் பெயர் கிம் 20 வயது. மணிப்பூர் இன அழிப்பில் தப்பியவர். என் அம்மா மற்றும் சகோதரர் பட்டப்பகலில் நடந்த படுகொலையை நேரில் கண்டவர்.

பெற்றோர் இருவரும் அரசுப்பணியில். தந்தை காவல்துறையில் பொறுப்பில் இருக்கிறார். ஆனால் இது நடந்த போது அவர் உடனில்லை. இன்று வரை அப்பாவைச் சந்திக்கவும் முடியவில்லை.

கலவரம் தொடங்கியது முதலே உறவினர்கள் எல்லாரும் ஒரே வீட்டில் கூடிக் கூடியே இருந்தோம். பின்பு நிலைமை மிகவும் மோசமடைந்தது, குக்கி வீடுகளையும் சர்ச்சுகளையும் தீயிட்டுக் கொளுத்தத் தொடங்கியதால் இம்ஃபாலை விட்டு வெளியேறத் தீர்மானித்தோம்.

மே 4 அன்று எங்கள் இம்ஃபால் வீட்டிலிருந்து எங்கள் சொந்த ஊருக்குப் போவதற்குப் பாதுகாப்பு கிடைப்பதாகக் கேள்விப்பட்டு துணிமணிகள் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பிய போது கும்பல் ஒன்று எங்களை நோக்கி வந்தது. நீங்கள் குக்கிகளா என்று கத்தியது. நாங்கள் மிஜோக்கள் என்றோம். குக்கி மிஜோ எல்லாம் ஒன்று தான் என்று கூறி எங்களைக் காரில் இருந்து வெளியே இழுத்தனர். காரை அடித்து நொறுக்கிய பின்பு கெரசின் ஊற்றிக் கொளுத்தினார்கள்.

என் அண்ணனை அடிக்கத் தொடங்கினர். நாங்கள் தடுக்க முயன்றோம் எங்கள் மீதும் அடி விழுந்தது. அந்தக் கும்பலில் ஒருவர் எங்களுக்கு உதவுவதாகச் சொல்லொ ரோட்டோரமாய்ப் பெஞ்சில் அமர வைத்தார்.

பின்பு அண்ணனை அடித்துக் கொண்டிருக்கும் போதே எங்களை அங்கிருந்த கடைக்குப் பின்னால் ஒரு வீட்டில் ஒளிந்து கொள்ளச் சொன்னார். நானும் அண்ணியும் அங்கு சென்று ஒளிந்து கொண்டு 112 எண்ணை அழைத்த போது அதனை யாரும் எடுக்கவில்லை.

சற்று நேரத்துக்கெல்லாம் நாங்கள் அங்கு இருப்பதை அறிந்து வந்த கும்பல் கல்லால் வீட்டை அடிக்கத் தொடங்கியது. கதவை இரும்புக் கம்பிகள் கொண்டு அடித்து உடைக்கப் பார்த்தது. நாங்கள் கதவை அடைத்துத் தடுத்து நின்றோம். இரும்புக்கழிகளின் அடி எங்கள் மீது விழுந்து இரத்தம் வழியத் தொடங்கியது.

பின்பு எங்களை ஒருவரிடமிருந்து ஒருவர் பிரித்துவிட்டார்கள். என் முடியைப் பிடித்து இழுத்து மெயின் ரோட்டுக்கு அழைத்து வந்தார்கள். மொத்த நேரமும் கம்புகளால் அடித்தபடி. ரோட்டில் அண்ணன் குருதி வழிய அமர்ந்திருந்தான். அவனிடம் ஓடிய போது அருகில் எனது அத்தை தனது ஒரு வயதுக் குழந்தையுடன் இருந்தார்.

மெய்ரா பெய்பிக்கள் குழந்தையை அடித்தும் தலையைப் பிடித்தும் தள்ளினார்கள். குழந்தை அழுது கொண்டே இருந்தான்.

ஒரு வயதுக் குழந்தையை அடித்தார்களா?

ஆம்.

அண்ணன் அடி தாங்க முடியாமல் ஓடிக் கீழே விழுந்தான். அவன் மீது விழுந்து அவனை அடிகளிலிருந்து காக்க முயன்றான். என்னைப் பலவந்தமாக அகற்றி உயிருடன் இருக்கவேண்டுமானால் எங்களை ஓடி விடச் சொன்னார்கள்.

இதையும் படியுங்கள்: மணிப்பூர் போராட்ட வரலாறு உணர்த்தும் உண்மைகள்!

அத்தை, அவரது குழந்தை, எனது ஒன்று விட்ட சகோதரி, எல்லாரும் ஒருவரை ஒருவர் இழுத்துக் கொண்டு எதிர்த்திசையில் ஓடினோம். திரும்பிப் பார்த்த போது அண்னன் நினைவிழந்து கிடந்தான். அம்மா அவன் மீது கிடந்தார், அவனை அடியிலிருந்து காப்பதற்கு. கும்பல் கை கொட்டி இக்காட்சியினைக் கொண்டாடியது.

என் கணவர் அடிபட்டுக் கிடந்த போது வலிக்கிறதா என்று கேட்டேன். ஆனால் இல்லை என்றார். நான் பயப்படக்கூடாது என்று அப்படி சொன்னார். அது தான் அவரிடம் நான் கடைசியாகப் பேசியது. மெய்ரா பெய்பிக்கள் எவ்வளவு கெஞ்சினாலும் விடாமல் என்னை அடித்து, வயிற்றில் குத்தி, என் ஆடைகளையும் கிழித்தனர். சாலை ஓரத்தில் அமர வைத்து என்னை நோக்கிக் கத்தினார்கள். குக்கி ஆண்கள் மெய்தி பெண்களை வன்புணர்வு செய்ததைக் குறித்துக் கோபத்துடன் கத்தினார்கள்.

பின்பு மெய்த்தி ஆண்களை நோக்கி, நான் உரிமை கொடுக்கிறேன் இவளை வன்புணர்வு செய்யுங்கள் என்று என்னைக் காண்பித்துச் சொன்னார். நான் அதிர்ச்சியடைந்து அழத்தொடங்கினேன். எப்படி ஒரு பெண் இன்னொரு பெண்ணை இந்தக் கதிக்கு ஆளாக்க முடியும்?

பிறகு அங்கிருந்த மெய்தி சமூகக்கூடத்துக்கு நடந்து போகச் சொன்னார்கள். நான் மெதுவாக நடந்து போனேன். உடல் முழுவதும் காயங்களின் வலி, நடக்கவே முடியவில்லை. அங்கு நுழையும் முன்பு என் ஆடைகளைக் கழற்றினார்கள். விடியோவில் பார்த்திருப்பீர்கள்.

வயதான ஆண், பெண், எல்லாரும் இருந்தார்கள். அவர்கள் என்னை வசைபாடினார்கள்.

கும்பலில் இருந்தவர்கள் என்னைத் தொடர்ந்து அடித்தார்கள், உதைத்தார்கள்.

மண்டையில் ஆழமான வெட்டு உள்ளதே? அது எப்படி வந்தது?

சமூகக் கூடத்துக்கு வந்த பிறகு திரும்பியும் புறப்பட்ட இடத்துக்கே நடந்து போகச் சொன்னார்கள். நான் திரும்பி மெதுவாக நடக்கத் தொடங்கினேன். அப்போது டிசி அலுவலகம் வழியில் இருந்தது. அங்கே செக்யூரிட்டி காவலர்கள் இருந்ததைப் பார்த்து அவர்களிடம் என்னைக் காப்பாற்றச் சொல்லிக் கேட்கலாம் என்று நின்றேன். ஆனால் கும்பல் அவர்களை மிரட்டியது, எனக்கு உதவி செய்தால் கொன்று விடுவோம் என்று. ஆகவே அவர்களும் உதவிக்கு வரவில்லை. அப்போது கும்பலில் இருந்த ஆண்களும் மெய்ராபெய்பிக்களும் தடி கொண்டு தலையிலடித்தனர். எனக்கு மயக்கம் வந்து கீழே விழுந்தேன். இரண்டாவது முறை அடித்த போது நினைவிழந்து விட்டேன்.

யார் உங்கள் அண்ணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது? இம்ஃபால் மருத்துவமனை ஐசியுவில் 9 நாட்கள் இருந்திருக்கிறார்.மருத்துவமனை ரிபோர்டுகளில் காவல்துறை அவரைக் கொண்டு வந்து சேர்த்ததாக எழுதப்பட்டிருக்கிறது. ஆகக் காவல்துறை வந்து சேர்ந்தது ஆனால் தாமதமாக.

ஆம். அவர்கள் வரும் முன் என் அம்மாவும் அண்ணனும் இறந்தே போய் விட்டார்கள்.

என்ன சிகிச்சை தேவைப்பட்டது.

தையல்கள் போடப்பட்டன. பின்பு நிறைய இரத்தம் கட்டி இருந்ததால் மூளையில் அறுவை சிகிச்சையும் செய்து அவற்றை அகற்ற வேண்டி இருந்தது.

பின்பு நான்சியின் சகோதரிகளின் உதவியுடன் இம்ஃபாலிலிருந்து டில்லிக்கு வந்து அங்கே எய்ம்ஸ் மருத்துவமனையின் ட்ராமா பிரிவில் பதினோரு நாட்கள் இருந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: இனி… மணிப்பூர் மக்களிடம் கற்போம்!

அங்கு அவரைப் போலவே பாதிக்கப்பட்ட பல குக்கி மக்களுக்கு நேர்ந்த கொடூரங்களை அறிகிறார். டெம்ன்சி என்கிற இளைஞன் இரவெல்லாம் தூங்க முடியாமல் விழித்து அலறி இருக்கிறான்.

எல்லாம் மரத்துப் போனதொரு மனநிலையில் இருக்கிறோம். இரவில் தூங்கவே முடியவில்லை. கண்ணை மூடினால் கொலைவெறிக் கும்பல் துரத்துவது போலக் கனவுகள் வருகின்றன. என்னால் நினைக்கக் கூட முடியவில்லை. கணவரையும் மாமியாரையும் நினைத்தாலே உடல் நடுங்குகிறது.

ஏன் ஊரில் இருக்கும் உங்கள் தந்தை உங்களைச் சந்திக்க வரவில்லை.

அவர் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. மனைவியும் மகனும் இறந்துவிட்டதை அறிந்து அவர்களின் இறுதிக்கடமைகளை முடிக்க வேண்டும் என்று வீட்டிலேயே இருக்கிறார். என் அம்மா, அண்ணனின் உடல்கள் இம்ஃபால் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருக்கின்றன. எந்த நிலையில் உள்ளன என்று தெரியாது.

அதிகாரிகள் உடல்களை உங்களிடம் சேர்ப்பிக்க உதவவில்லையா ஏன்?

எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் இனி இம்ஃபாலுக்குத் திரும்பிச் செல்ல வழியே இல்லை. எங்களிடமிருந்ததை எல்லாம் பிடுங்கிக் கொண்டார்கள். என் அம்மா, அண்ணன் இறந்து கிடந்த உடல்களைப் பார்த்துச் சிரித்தார்கள்.  எங்களால் இனி இம்ஃபாலுக்குத் திரும்பவே முடியாது. 30 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வந்தோம். அது தான் எங்கள் வீடாக இருந்தது. இனி இல்லை.

மெய்த்தி நண்பர்கள் உண்டா உங்களுக்கு?

நிறைய மெய்த்தி நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள்.

அவர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்களா?

சிலர் நான் முகாமில் இருந்த போது என்னைத் தொடர்பு கொள்ள முயன்றார்கள்.

மெய்த்திக்களைக் குறித்து இப்போது உங்கள் எண்ணம் என்ன?

இனி எப்போதுமே அவர்களை நண்பர்களாகக் கருத முடியாது. அவர்களுடன் இயைந்து வாழ முடியாது.

மணிப்பூருக்குத் திரும்பிச் செல்வீர்களா டில்லியிலேயே இருப்பீர்களா?

மணிப்பூருக்குத் திரும்பி லங்காவுக்குப் போய் எங்கள் தந்தையுடன் இருப்போம். என் அண்ணியின் சிகிச்சை முடிந்தவுடன்; இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் தேவைப்படும்.

இன்னும் என்ன மாதிரி உடல் தொந்தரவுகள் உள்ளன?

மயக்கம், தலைவலி, கைகளில் எதையும் எளிதில் பிடிக்க முடியாமல் இருத்தல் போன்ற உபத்திரவங்களும் வலியும் இருக்கின்றன.  எங்கள் தந்தை பெருந்துயரத்தைத் தாங்கிக் கொண்டு எங்களுக்காக உயிருடன் இருக்கிறார். ஆனால் ஃபோனில் பேசக் கூட முடியாமல் பலவீனமாக இருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

நான்சி, ஐந்து மாதத்தில் கணவனை இழந்த நீங்கள் எதிர்காலத்தைக் குறித்து என்ன எண்ணி இருக்கிறீர்கள்.

இப்போது நான் எதைக் குறித்தும் எண்ணும் நிலையிலில்லை. அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை.

இந்நேரத்தில் உங்கள் மதமும் கடவுளும் எவ்வளவு தூரம் உங்களுக்கு ஆறுதலைத் தருகின்றன?

பிரார்த்தனை ஒன்று தான் ஆறுதல் அளிக்கிறது. இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும், கடவுளின் கிருபையால் சிகிச்சை கிடைத்து உயிருடன் இருக்கிறோம் என்று நன்றியுடன் இருக்கிறோம்.

பி.கு.  இதெல்லாம் சர்வ சாதாரணம் என்று நெஞ்சை நிமிர்த்தி ஒருவன் சொல்கிறான். அது கருத்துரிமையா? இப்போதே வெறி பிடித்து விட்டது, மனநலம் சரியில்லை என்று கட்டிப் போட்டு வைக்கலாம்.

துப்பாக்கி எடுத்து ஆள் பார்த்துச் சுடும் வரை காத்திருக்க வேண்டாமே.

தீபா லட்சுமி

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here