வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) வருங்கால அராஜகத்தை தவிர்க்கும்! பாகம் 2

தொடர்ச்சி… 

கேள்வி 15: இலக்கு உள்ள கொள்முதல் என்றால் என்ன?

பதில்: எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட பயிர் 25 டன்கள் தேவை என்று அரசாங்கம் அறிவிப்பதாக எடுத்துக் கொள்வோம். சந்தையில் அந்த இலக்கு முடிந்ததும் அரசாங்கம் கொள்முதலை நிறுத்திக் கொண்டு விடும்.. ஆனால் இது கூட ஒரு வகையில் விவசாயிகளுக்கு உதவும் என்று நாம் கருதலாம். விவசாயிகளுக்கு சந்தை விலை என்றால் என்ன என்று புரிந்துகொள்ள, கண்டுபிடிக்க உதவும் அல்லவா என்று கேட்கலாம்.

கேள்வி 16: ’கண்டுபிடிக்க’ என்று ஏன் சொல்கிறீர்கள்?

பதில்: சந்தைக்கு ஒரு விவசாயி போகிறார் என்று வைத்துக் கொள்வோம்.. அவர் விளைவித்த தனது நெல்லை, தனது கோதுமையை என்ன விலைக்கு விற்பது என்று தெரியாமல் திகைப்பார்கள். ஆனால் அரசாங்கமே சந்தையில் நுழையும்போது அதன்மூலம் அடிப்படை விலை என்ன என்று விவசாயி தெரிந்துகொள்ள முடியும் அல்லவா? கோதுமைக்கு MSP 2000 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் கோதுமை கொள்முதல் இல்லை என்றாலும் கூட 2000 ரூபாய் என்கிற MSPஐ வைத்து விலையை நிச்சயித்துக் கொள்ள முடியும்..

மோசமான அடிமாட்டு விலையாக வைத்துக்கொண்டாலும் வியாபாரிகள் 100, 200 என்று ஓரளவுக்கே குறைத்து வாங்க முடியும். அதனால் தான் ஊடகங்கள் பெரும்பான்மை விவசாயிகளுக்கு MSP உதவுவதில்லை என்று சாதிப்பது முழுக்க தவறு என்கிறேன்.. பெரும்பான்மை விவசாயிகளுக்கு இந்த கண்டுபிடிப்பு இந்த வகையில் விற்பதற்கும் எதிர்பார்க்கும் விலையை பெறவும் உதவியாகவே இருக்கிறது

கேள்வி 17: விவசாயிகள் கோருவது போல MSP சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகும் பட்சத்தில் அந்த குறைந்தபட்ச விலைக்கு அரசாங்கம் எல்லா விளைச்சலையுமே வாங்க வேண்டி இருக்குமா?

பதில்: ஆமாம், அது அப்படித்தான். ஆனால் உணவு தானியங்களை தனியாரும் வாங்குவதற்கு அதேநேரம் அனுமதிக்கப்படுவார்கள்.

கேள்வி 18: சட்டபூர்வ உத்தரவாதம் வருமானால் MSP அளவுக்கே தனியாரும் அதாவது வியாபாரிகளும் வாங்க வேண்டி இருக்கும் அல்லவா?

பதில்: ஆமாம். அப்போது MSP விலைக்கு கீழே வாங்க முடியாது.

கேள்வி 19: விவசாயிகள் எல்லா பயிர்களுக்குமே MSP  வேண்டும் என்று கேட்கிறார்களே அந்த எல்லா என்பது என்ன?

பதில்: இதில் இரண்டு கருத்துகள் இருக்கின்றன. மேலே நான் சொன்ன இருபத்தி மூன்று பயிர்களுக்குமே அது பொருந்தும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் டெல்லி போராட்டத்திற்கு வருவதால்தான் இப்படி கேட்கிறார்கள். இப்படி இருபத்தி மூன்று வகைகள் மட்டுமல்லாமல், தோட்டப்பயிர்கள்; அதாவது காய்கறிகள், பழங்கள் மற்றும் விலங்குகளின் இறைச்சி வகைகள்; அதாவது இறைச்சி, மீன், முட்டை இது தவிர பால் பொருள்கள் உள்ளன. காய்கறி, பழங்கள் இறைச்சி இன்னபிற விரைவில் அழுகி அழியக் கூடியவை. இவற்றையே பதப்படுத்தி பாதுகாக்கும் கிடங்கிகள் நம்மிடம் இல்லை.

ஆனால் கேரளா அரசாங்கம் அண்மையில் காய்கறிகளுக்கு சேர்த்து MSP விலையாக C2 பிளஸ் 20% என்பதை அறிவித்துவிட்டது. விளைவு என்ன என்று உடனே நம்மிடம் ஆய்வுத் தரவுகள் இல்லை என்றாலும் காய்கறிகளுக்கும் MSP தரமுடியும் என்று தெரிகிறது. தற்சமயம் 8 கோடி 80 லட்சம் டன்கள் உணவு தானியம் சேமித்து வைக்கும் வசதி நாட்டில் இருக்கிறது. கூடுதலாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் டன்கள் தார்ப்பாய் பொத்தி வெட்டவெளியில் சேமிக்கப்படுகின்றன.

2006-இல் விவசாயிகளுக்கான தேசிய கமிஷன் ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டர் ஆரத்தின்  சுற்று எல்லைக்குள்ளும் APMC மண்டி ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அதாவது, மொத்தமாக இந்தியாவில் 42,000 மண்டிகள் இருக்க வேண்டும்.

கேள்வி 20: தற்போது எத்தனை மண்டிகள் உள்ளன?

பதில்: அற்பமாக 7000 மட்டுமே உள்ளன அதாவது எவ்வளவு பரிந்துரை செய்யப் பட்டதோ அதில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது. இதற்கு அரசாங்கத்தை மட்டுமே நாம் குற்றம் சாட்ட வேண்டும்.

கேள்வி 21: ஆனால் இதற்கு ஏராளமான முதலீடு போட வேண்டுமே அதற்கு எங்களிடம் நிதி இல்லை என்று அரசாங்கம்  சொல்கிறதே?

பதில்: இரண்டு போர்களுக்கு இடையே அதாவது 1962 இல் சீனாவோடும் 1965 இல் பாகிஸ்தானோடும் நடந்த இரண்டு போர்களுக்கு இடையே பசுமைப் புரட்சியை கட்டியம் கூறி வரவேற்பதற்கான உள்கட்டுமானங்களை நாம் உருவாக்கி இருக்கிறோம். வேளாண் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன கூட்டி கழித்து பார்த்தால் அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது தான் முக்கியம். இன்று தனியார் துறைக்கு அதுவே எல்லா நோய்களுக்கும் ஆன அருமருந்து என்பதுபோல அதிக அழுத்தம் கொடுக்கிறதே, அதைப்போல என்று பாருங்கள்.

ஆனால் இந்த தனியார் துறை என்பதில் கார்ப்பரேட்டுகள் எல்லா இடங்களிலும் தங்கள் சொந்தப் பணத்தையா முதலீடு செய்கிறார்கள் இல்லையே! அவர்கள் பெரும்பாலும் வங்கிகளிடமிருந்து தான் கடன் வாங்குகிறார்கள். இது அனைத்துமே மக்களுடைய பணம்தானே, ஒரு சில அம்பானி, அதானிகள் விவசாயத்தில் முதலீடு செய்ய முடியும் என்றால் அரசாங்கம் ஏன் செய்ய முடியாது. பொதுத்துறை முதலீடு வெறும் செலவினம் என்று மட்டும் பார்க்கக்கூடாது. அது மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. நாட்டின் வருவாயை கூட்டி பொருளாதாரத்தை முன்னே நகர்த்துகிறது.

கிராமப்புறங்களில் இருந்து வேர் அறுத்து தூக்கி எறியப்படும் மக்களை உள்வாங்க முடியாத அளவுக்கு நமது தொழில்துறை இயந்திரமயமாகி விட்டது. எனவே விவசாயத்திலிருந்து மேலும் மேலும் விவசாயிகள் இடம் பெயர்கப்படக் கூடாது என்பது மிக ஆதாரமானது. MSP என்பது அரசாங்கம் ஏதோ நிலைமையை சமாளிக்க (விலங்குகளை அமைதிப்படுத்த காய்கறி இறைச்சி கலவையில் தோய்த்து வீசுவார்களே) அதுபோல வீசப்படும் அப்பத் துண்டுகள் அல்ல.

எனவே இந்த MSP என்பது விவசாயிகள் அழிக்கப்படுவதிலிருந்து காப்பாற்ற எடுக்கப்படும் மிகக் குறைந்த பட்ச நடவடிக்கையாகும். வருங்காலத்தில் நாடு நழுவி ஒரு சர்வ நாசத்தில் (அதாவது அராஜக நடவடிக்கையில்) விழுந்து விடாதிருக்க ஏற்படுத்தப்பட வேண்டிய காப்பீடு என்று சொல்கிறேன்

கேள்வி 22: இந்தக் கோரிக்கைகளின் பின்னால் வைக்கப்படுகின்ற வாதமே நாட்டின் பொருளாதாரத்தை அரசு ஓட்டிச் செல்ல வேண்டுமா அல்லது கார்ப்பரேட்டுகள் ஓட்டிச் செல்ல வேண்டுமா என்பதுதானே?

 பதில்: ஆமாம். அதுதான் அரசு பொருளாதாரத்தை இயக்குவதற்கு தன் பொறுப்பை ஏற்பதும் மக்களுக்கான பொறுப்பை குறிப்பாக நாட்டுப்புற ஏழைகளின் நலனை காப்பாற்றும் பொறுப்பை ஏற்பதும் தானே.

கேள்வி 23: பொது நீரோட்ட பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக ஜனரஞ்சகமாக இருக்கக்கூடிய  ஊடகங்கள் ஏன் MSP ஐ எதிர்க்கின்றன?

பதில்: ஏனென்றால் இந்தியாவில் இயங்கும் பொது நீரோட்ட, பிரபல கார்ப்பரேட் மீடியாக்கள் அனைத்தும்  உலக முதலாளிகளின் (Global Capitalist) கால் அடிகளாகவே இருக்கின்றன. அவர்களே  இன்று மிக வேகமாக இந்திய விவசாயத்துறையில், வேளாண் துறைக்குள் ஊடுருவ துடிக்கிறார்கள் என்பதில் இருந்து அவர்களின் யோக்கியதையை புரிந்துக் கொள்ள முடியும்.

பொருளாதார நிபுணர் சுக் பால் சிங்,
பேட்டியின் எழுத்தாக்கம்: அஜாஸ் அஸ்ரப்,
நன்றி: NEWS CLICK
தமிழில்: இராசவேல்.

முந்தைய பதிவு:


வேளாண் விளை பொருட்களுக்குகுறைந்தபட்ச ஆதரவு விலை (MSP)வருங்கால அராஜகத்தை தவிர்க்கும்! 

வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) வருங்கால அராஜகத்தை தவிர்க்கும்! பாகம் 2 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here