விளைநிலங்கள் கார்ப்பரேட்டுக்கு!
சுடுகாடு விவசாயிகளுக்கு!

இந்தியாவில் விவசாயத்திற்கு உகந்த நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவது அல்லது அந்த விவசாய நிலங்களில் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஒப்பந்த விவசாயத்தை நடத்துவது இவை இரண்டின் மூலமாக விவசாயத்தில் தனியார் பங்குகளை ஊக்குவிப்பது என்பது அரசியல் கொள்கையாக மாறியது.

இதனை அமுல்படுத்தும் வகையில்  1) பெருகிவரும் நகரமயமாக்கலின் விளைவாக விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு விற்கப்படுவது, இவ்வாறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் ஏகபோகமாக செயல்படும் டிஎல்எஃப், ரமணியம், காசா கிராண்ட் போன்ற தமிழகத்தில் உள்ள நிறுவனங்களை போல, அகில இந்திய அளவில் ரியல் எஸ்டேட் முதலாளிகள் புகுந்து விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி வீடு கட்டுவதற்கான நிலங்களாக பிளாட்டுகளாக மாற்ற வேண்டும் என்பது ஒருவகை 2) விவசாய விளை நிலங்களில் பாரம்பரியமான உணவு பயிர்களை உற்பத்தி செய்வதை தவிர்த்து விட்டு, லாபம் கொழிக்கும் பணப் பயிர்களான சவுக்கு, தேக்கு, எண்ணைப்பனை போன்ற பயிர்களை தோட்டக்கலை பயிர்களை பயிரிடுவதன் மூலம் விவசாயத்தை விவசாய நிலப்பரப்பை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பது என்பதுமற்றொரு வகை. 3)  விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு அந்த குத்தகை நிலத்தில் தனக்கு தேவையான பயிர்களை விளைவிக்க சொல்லி விவசாயிகளை நிர்ப்பந்தப்படுத்தி விவசாயம் செய்வது. 4) விவசாயிகளுடன் ஒப்பந்த விவசாயம் போட்டுக்கொண்டு விதை முதல் விற்பனை வரை அனைத்தையும் தானே ஏற்பாடு செய்து கொடுப்பதாக விவசாயிகளுக்கு ஆசை வார்த்தைகளைக் காட்டி விவசாய நிலங்களை கையகப்படுத்துவது ஆகிய வழிமுறைகளின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தனது சொந்த நிலங்களில் வேலை செய்வதற்கு பதிலாக சிறிது சிறிதாக விவசாய நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

விவசாயத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி விவசாய நிலங்களை கையகப்படுத்துவது இப்போது சர்வ சாதாரணமாக துரிதமாக நடந்து வருகிறது விளை நிலங்களை பிடுங்கி அதன் மீது கட்டப்படும் விரைவுச் சாலைகள் எட்டு வழி, 12 வழி விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்,கல்வி வியாபாரிகளின் பல்கலைகள்,புதிய வேலியிடப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும்சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சுரங்கங்கள் போன்றவற்றால் நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு எந்த பலனும் கிட்டவில்லை என்பது மட்டுமல்ல!

இந்த திட்டங்கள் பெரும்பான்மையான மக்களின் நலனில் இருந்தும் போடப்படுவதில்லை. இவ்வாறு விவசாயிகளின் நிலங்களை பிடுங்குவதற்கு எதிர்த்துப் போராடும் விவசாயிகள் போராட்டங்களின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நடைமுறைப்படுத்த முடியாமல் போகிறது என்று ஆளும் கும்பல் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.நிலங்களை கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களில் ஒப்புதலை தாண்டி அந்த நிலத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்களின் உதவி பெற வேண்டியதில்லை என்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரிக்கை மோடியின் இந்த மசோதாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகப் பெரும் முதலீட்டில் தொழிற்சாலைகளை தொடங்குவதையும் பொது நோக்கம் என்றே புதிய சட்டம் வரையறுத்துள்ளது. அரசின் திட்டங்களுக்கு மட்டுமல்ல கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களுக்கும் நிலம் தர முடியாது என்று கூறும் உரிமை விவசாயிக்கு மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் முப்போகம் விளையும் நிலங்களை கையகப்படுத்துவதை கடைசி வாய்ப்பாக கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளை தவிர, விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு வேறு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தில் குறிப்பாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக உருவாக்குவதில் மத்திய அரசின் வர்த்தக அமைச்சகம், நகர மேம்பாட்டு அமைச்சகம், சாலை போக்குவரத்து துறை அமைச்சகம்,மின்சாரத் துறை அமைச்சகம், தொழில்துறை அமைச்சகம் ஆகிய ஐந்து துறைகளை சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் காட்டிய முனைப்பு அளப்பரியதாகும்.

இன்று நாடு முழுவதும் ஒப்பந்த விவசாயத்தின் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாயத்தை கட்டுப்படுத்துகிறார்கள். நவீன சாகுபடி முறைகளிலும், ஏற்கனவே நாம் மேலே கண்டவாறு புதிய புதிய வழிமுறைகளிலும், சுற்றுச்சூழலை பாதிக்கின்ற வகையிலும், விவசாயம் செய்யும்போது நிலத்தின் வளமும், நீர் வளமும் அழிந்து போவதுடன் அவற்றுடைய தன்மையே மாறி நிலங்கள் மலடாகி, நஞ்சாகிவிடுவதற்கான வாய்ப்பு உருவாகிக் கொண்டுள்ளது. ஒரு நாட்டில் புகுந்து இதையெல்லாம் செய்து முடித்த பிறகு வெட்டுக்கிளிகள் கூட்டத்தைப் போல வேறு ஒரு நாட்டிற்கு ஏகாதிபத்திய முதலாளித்துவ கார்ப்பரேட் நிறுவனங்கள் சென்று விடுகிறது. இப்படி வேறொரு நாட்டிற்கு சென்று விடுவதன் மூலம் தனது பொறுப்பில் இருந்து நழுவி விடுகிறது.

அதேபோல வெள்ளம், வறட்சி ஏற்பட்டாலும் அதை விவசாயிகள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தனது கடமையை அடாவடியாக மறுக்கிறது. அதற்கு உரிய நட்ட ஈட்டை கொடுப்பதற்கு வேளாண் வர்த்தக கழகங்கள் மறுக்கின்றது. இன்பத்தை தான் அனுபவித்துக் கொண்டு, துன்பத்தை விவசாயிகளின் மீது சுமத்துவதும் வேளாண் வர்த்தகர்களின் பண்பாக உள்ளது. அடுத்தபடியாக ஒப்பந்த விவசாயம் ஆனது அடிப்படை உணவு தானியங்களை உற்பத்தி செய்வதை கைவிட்டுவிட்டு ஏற்றுமதிக்கான பொருள்களை உற்பத்தி செய்யவும், உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு (ஃபுட்பிராசசிங் என்று சொல்லக்கூடிய) தேவையானவற்றை உற்பத்தி செய்யவும் திருப்பி விடப்படுகிறது. இதனால் மக்களுக்கு தேவையான உணவு உற்பத்தி குறைந்து கொண்டே போகிறது. இது தேவையற்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் பல நிலை குலைவுகளை உருவாக்கிவிடுகிறது.

குறுகிய காலத்திற்கு நிலத்தை ஒப்பந்தத்திற்கு கொடுத்த விவசாயி ஏற்கனவே இருந்த நிலையையும் இழந்து குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஒன்றுமில்லாமல் போண்டியாக்கப்படுகின்றனர் என்பது ஒப்பந்த விவசாயத்தின் புதிய நிலைமையாகும்.

விவசாயிகளை கிராமங்களிலிருந்து அப்புறப்படுத்துவது மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமாட்டு விலைக்கு நிலம் கிடைப்பது மட்டும் உறுதி செய்யப்படவில்லை. இதன் மூலம் வேலை தேடி நகரங்களுக்கு செல்கின்ற அதாவது தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற வளர்ந்துவரும் மாநிலங்களில் நகரத்தை நோக்கி ஓடி வரும் விவசாயிகள் கொண்டு ஒரு பெரும் ரிசர்வ் பட்டாளம் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் ரிசர்வ் பட்டாளத்தைமிகக்குறைந்த கூலிக்கு கார்ப்பரேட் முதலாளிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு புறத்தில் நில அபகரிப்பும், மறுபுறத்தில் உழைப்புச் சுரண்டலும் இந்திய தரகு முதலாளிகளை உலகளாவிய கார்ப்பரேட் முதலாளிகளின் பங்குதாரர்களாக, பங்காளிகளாக மாறியுள்ளது. அம்பானி, அதானி போன்ற தேசங்கடந்த தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு பல கோடி ரூபாய் உயர்ந்து இருப்பதற்கு இது ஒரு அடிப்படை காரணமாகும். சமீபத்திய அறிக்கையின்படி உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி பத்தாவது இடத்திற்கு சென்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐவகை நிலங்களும் அடையாளம் மாறின!
தொழிற்துறை வளர்சிக்கு விவசாயம் அழிந்தது!

இந்திய தொழில் கூட்டமைப்பு என்ற தரகு முதலாளிகளின் சங்கம் வெளியிட்டுள்ள 2025-ல் தமிழகம் என்ற அறிக்கையில், தற்போது 50 சதவீதமாக உள்ள தமிழகத்தின் நகரமயமாக்கல் 2025-ல் 75 சதவீதமாக மாற்றப்பட வேண்டும். அதற்கு பொருத்தமாக நகரங்களை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும். அங்கு அடுக்குமாடி குடியிருப்புகளும், தொலை தூரங்களில் நகர்ப்புற சேரிகளை உருவாக்கவேண்டும். கிராமங்களிலிருந்து மக்கள் தொகையை வெளியேற்றி கிராம மக்கள் தொகையை வெறும் 25 சதவீதமாக குறைக்க வேண்டும். இவ்வாறு நகரமயமாக்கல் கொள்கையை அமுல்படுத்துவதற்கு தற்போது உள்ள வேகம் போதாது 15 மடங்கு வேகமாக தீவிரமாக நகரமயமாக்கல் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் விஷன் தமிழ்நாடு 2015 என்ற அந்தத் திட்டம் முன்வைக்கிறது.

தமிழகத்தின் விவசாய விளைச்சல் பரப்பு தொடர்ந்து குறைந்து வருவதுடன் தமிழ்நாடு, தொழில்நாடாக மாறிக் கொண்டுள்ளது என்கிறது 15 வது பொருளாதார கமிசன். ”2010-13 முதல் 2016-17 களில் நிகர உள் மாநில உற்பத்தியில் (GSDP) விவசாயத்தின் மூலம் வருவாய் 10.9 சதவீதமும், சேவைத் துறைகளின் மூலம் 54.6 சதவீதமும், தொழிற்துறையின் மூலம் 34.5 சதவீதமும் என உற்பத்தியின் மதிப்பு மாறத் துவங்கியுள்ளது.” என்கிறது அதன் அறிக்கை. இதன் மூலம் திட்டமிட்டே விவசாயத்தை தமிழக அரசு கைவிட்டு வருவது தெளிவாகிறது. தமிழக விவசாய நிலங்கள் கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. கனிம வளங்களை சூறையாடும் கார்ப்பரேட்டுகள், மீத்தேன், நிலக்கரி, ஷேல் கேஸ், கிரானைட், இரும்பு, சுண்ணாம்பு, தாதுமணல், ஆற்றுமணல், கச்சா எண்ணெய்என பல துறைகளிலும் புகுந்து நிலங்களை அபகரிக்கிறது. போதாக்குறைக்கு ஸ்மார்ட் சிட்டி, எட்டு வழி சாலைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என அனைத்தும் விவசாய விளை நிலங்களை குறிவைத்தே ஏவப்படுகிறது.

தமிழகத்தின் சங்க இலக்கியங்களில் வரும் ஐவகை நிலங்கள் அனைத்தும் அடையாளம் மாறி கார்ப்பரேட் பின் நிலமாக, மரபு அடையாளம் இழந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நிலம், அதிகாரம், விடுதலை வேண்டும்!
புதிய ஜனநாயகப் புரட்சி விரைந்து வேண்டும்

மொத்தத்தில் நம் தேவைக்கானதை விளைவிக்கும் விவசாயம் என்பதையே மாற்றிவிட்ட வேளாண் வர்த்தக பன்னாட்டு நிறுவனங்களும், தேசங்கடந்த இந்திய தரகு அதிகாரவர்க்க முதலாளிகளும் சர்வதேச சந்தைக்கான பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற அதிக பண மதிப்பு உள்ள பயிர்களையே பயிரிட வைக்கின்றனர். உணவு தானியங்களை விட இவற்றிற்கு முன்னுரிமை கொடுத்தால் அது நமது நாட்டின் உணவு பாதுகாப்புக்கு உலை வைத்துவிடும். ஏற்கனவே தனி மனிதனின் உணவு நுகரும் தன்மை குறைந்து கொண்டே செல்கிறது. உணவு தானிய உற்பத்தியில் ஏகபோக அன்னிய நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது பன்னாட்டு கம்பெனிகள் விதை தொழில்நுட்பம், நிதி, விவசாய விளைபொருட்களின் சில்லறை விற்பனை உட்பட விவசாயம் மற்றும் உணவு சங்கிலி ஆகியவற்றின் எல்லா கூறுகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு சென்று விடும் என்பதையும் இங்கு நாம் மறந்துவிடக்கூடாது. தனக்கு சொந்தமான நிலத்தில் எந்த வகையான பயிரை வைக்க வேண்டும்: எப்போது பயிரிட வேண்டும்: எவ்வளவு பயிரிட வேண்டும் என்பதையெல்லாம் விவசாயி தீர்மானிக்கும் உரிமையை இழந்து பல ஆண்டுகளாகி விட்டது.

இந்த சூழலில் விவசாயிகள் வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறு! என்ற போராட்டத்துடன், விவசாயத்துறையை நடத்துவதற்கு தனக்கு தேவையான கட்டுப்படியாகும் விலை, நல்ல கூலி, உரம், பூச்சி மருந்து, மின்சாரம்ஆகியவைகளை மானிய விலையில் தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் வரம்பிடக்கூடாது. விவசாயிகளிடமிருந்து விவசாயத்தை விலக்கி அதை பறிக்காதே! ஏனென்றால் இந்த மண் எங்களுடையது! இந்த நாடு எங்களுடையது! இந்த சுற்றுச்சூழல் எங்களுடையது! எங்களது விவசாயம் இந்த நாட்டு மக்களின் உணவுத் தேவைகளுக்காக மட்டுமே! ஒருபோதும் ஏற்றுமதிக்கான விவசாயத்தை நாங்கள் செய்ய மாட்டோம்! அடிப்படையில் விவசாய நாடாகிய நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவது, அனைவருக்கும் உணவு கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் வகையில் எங்களது விவசாயத்தை நடத்த நாங்கள் தயார்! இவையெல்லாம் சாதிக்க விலை நிர்ணயிக்கின்ற அதிகாரம்! விளைச்சலை தீர்மானிக்கின்ற அதிகாரம்! மக்களுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்வதை தீர்மானிக்கின்ற அதிகாரம்! ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விவசாயக் கொள்கை தான் தற்போதைய தேவை.

உணவு உற்பத்தியில் தன்னிறைவை ஒழித்துக் கட்டி, அன்றாட உணவு தேவைகளுக்கு ஏகாதிபத்தியங்களிடம் கையேந்தி நிற்க செய்யும் நோக்கத்தில் உலகை சூறையாட கிளம்பியுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை விரட்டி அடிப்பதும், ஏற்கனவே நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளயடித்துக் கொண்டுள்ள ஏகாதிபத்திய நிறுவனங்களின் சொத்துக்களை நட்ட ஈடின்றி பறிமுதல் செய்வதும் தான் ஒரே வழியாகும். இந்த வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு அங்கமாக வேளாண் சட்ட திருத்த எதிர்ப்பு போராட்டங்களை ஒன்றிணைப்போம். ஏகாதிபத்திய, உள்நாட்டு, தேசங்கடந்த தரகு முதலாளிகளின் பொருட் களை புறக்கணிப்போம். போர்க்குணமிக்க போராட்டங்களை கட்டியமைப்போம்.

கோடிக்கணக்கான நிலமற்ற கூலி விவசாயிகளைக் கொண்ட இந்த நாட்டில் உழுபவனுக்கே நிலம் சொந்தம்! என்ற முழக்கத்தின் அடிப்படையில் இவற்றையெல்லாம் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்படும் விவசாயிகள்கமிட்டிகளுக்கே! விவசாயிகள் அதிகாரத்தை முன்வைக்கும் ’உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற கோரிக்கையை தனது கொள்கை முழக்கமாக கொண்டுள்ள விவசாய சங்கங்களுடன் இணைந்து போராடுவோம்! நாட்டை பாதுகாக்கும், ஆட்சியாளும் அதிகாரம் அனைத்தும் விவசாயிகள்- தொழிலாளர்கள் உள்ளிட்ட பெரும்பான்மை மக்களுக்கே! என்ற முழக்கத்தை முன்வைத்து போராடுவோம்! நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்ற  புதிய ஜனநாயகப் புரட்சிக்கு தயாராவோம்.

ஆசிரியர்குழு,
மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here