வேலை நிறுத்தங்களை நீர்த்துப் போகச் செய்யும் தொழிலாளர் நலத்துறை!

BHEL – ஓர் சான்று!

பொதுவேலை நிறுத்தத்தை முழுமையாக செய்யாத BHEL தொழிற்சங்கங்கள்!

புதிய 4 சட்டத்தொகுப்பு அமுலுக்குவரும் முன்னரே அச்சுறுத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை!

ந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த பொது வேலைநிறுத்தத்தை அச்சுறுத்தி நசுக்கியதன்மூலம்  பொதுத்துறை நிறுவனமான பெல்லின் நிர்வாகமும், அரசின் தொழிலாளர் நலத்துறையும் தொழிலாளி வர்க்கத்தின்மீது எத்தகைய தாக்குதலுக்கு தயாராகின்றன என்பதை முன்னறிவித்துள்ளது.

பரப்பப்படும் சுயநல சிந்தனை!

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படும் போதெல்லாம், சம்பிரதாயத்திற்காகவோ சடங்குக்காகவோ வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது என ஆங்காங்கே சில தொழிலாளர்கள் பேசுவார்கள். மத்திய தொழிற்சங்கங்களுடன் இணைப்பில் உள்ள சங்கம் அல்லது நிறுவனத்திற்குள் உள்ள பெரிய சங்கம், பிற சங்கங்களை அழைத்து பேசி வேலைநிறுத்த போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்யும். கூட்டுக் குழுவில் இருந்தாலும்  தான் சார்ந்த சங்கத்தின் தலைமையில் வேலை நிறுத்தம் நடைபெறவில்லை என்றும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் பதவி உயர்வு கிடைக்காது என்றும், ஒரு நாள் ஊதிய இழப்பு கூட ஏற்படக் கூடாது என்றும் , யாரோ ஒருவருடைய நலன் சார்ந்த கோரிக்கைக்காக நாம ஏன் போராட வேண்டும் என்றும் ஏதாவது ஒரு காரணத்தை கூறிக்கொண்டு வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டார்கள்.

இத்தகைய தொழிலாளர்களை தொழிற்சங்கங்களும் கேள்வி கேட்க தயங்குகின்றன. அவ்வாறு கேள்வி எழுப்பினால் கேள்வி கேட்காத சங்கத்திலோ BMS போன்ற வேலை நிறுத்த போராட்டங்களில் பங்கேற்காத சங்கங்களில் சேர்ந்து விடுகின்றனர். இதனால் தீவிரமாக போராடும் சங்கங்களில் உறுப்பினர் எண்ணிக்கையும் குறைந்து விடுகிறது.

நிர்வாகத்தின் புதிய அணுகுமுறை!

தனிப்பட்ட நிறுவனம் சார்ந்த கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் வேலை நிறுத்தங்களை முடக்குவதற்கு நிர்வாகம் ஏகப்பட்ட நெருக்கடிகளை தருவது வழக்கம். இதுபோன்ற நேரங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும், சட்டப்படியான தொழிலாளர் தரப்பு நியாயங்களை பேசுவதை விட, போராட்டத்தை முடக்குவதற்கு என்னென்ன சட்ட வழிமுறைகள் இருக்கிறதோ அவற்றையெல்லாம் முழுமையாக பயன்படுத்தி நிர்வாகத்திற்கு ஆதரவாகவே செயல்படுவார்கள். ஆனால் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தங்கள் மத்திய தொழிற்சங்கங்கள் தலைமையில் நடைபெறுவதாலும், நிறுவனங்களால் தீர்வு தர முடியாத பொது கோரிக்கைகளாக இருப்பதாலும் நிறுவனத்தின் தரப்பிலும் தொழிலாளர் நலத்துறையின் தரப்பிலும் தரப்படும் நெருக்கடிகள் அவ்வளவாக இருக்காது.

ஆனால் 27.02.26 அகில இந்திய வேலை நிறுத்தம் புதிய வகை மாதிரியாக இருந்தது. தொழிற்சங்கத்தின் இருப்பே கேள்விக்குறியாகும் வகையில் தொழிலாளர் நல சட்ட திருத்தம் நடைமுறைப்படுத்துவதாக 26.11.25-ல் ஒன்றிய அரசு அறிவித்த பிறகு நடைபெற்ற நாடு தழுவிய போராட்டம், வழக்கம்போல மத்திய தொழிற்சங்கங்களால் அறைகூவல் விடுக்கப்பட்டு, மாநிலங்கள் வாரியாக  துறைவாரியாக ஒருங்கிணைப்பதற்கான சங்கங்கள் யார் என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பெல் நிறுவனத்திலும் பெரும்பாலான தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை நிர்வாகத்திற்கு வழங்கின.

மிரட்டிய தொழிலாளர் நலத்துறை!

போராட்ட நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டு வேலை நிறுத்த விளக்க துண்டறிக்கைகள் வழங்குதல், கோரிக்கை அட்டை அணிதல், ஆலைப்பகுதி வாயிற் கூட்டங்கள், FLEX BANNER வைத்தல் போன்ற போராட்டங்கள் நடைபெற்றன. வேலை நிறுத்த சங்கங்களுடன் நிர்வாகம் பல சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தியது. தொழிலாளர் நல(விரோத) சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தும் போராட்டம் என்பதால் தீவிரமாக நடத்த வேண்டிய கட்டாயம் தொழிற்சங்கங்களுக்கு உள்ளது என சங்கங்கள் கூறின. அடுத்த கட்டமாக தொழிலாளர் நலத்துறையுடன் சமரச பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. அத்தியாவசிய பணியில் இருக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

டெல்லி தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் இருந்தும், துணைத் தலைமை ஆணையரும், பிரதமர் அலுவலகம், உள்துறை அலுவலகம், துறைச் செயலாளர் அலுவலகங்கள் என வழக்கத்திற்கு மாறாக பல்வேறு அரசு தரப்பில் இருந்தும் வேலை நிறுத்தங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து அறிக்கை கேட்பதாக கூறினார். வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என நிர்வாகத் தரப்பை போல தொழிற்சங்கங்களுக்கு அறிவுறுத்தினர்.

மத்திய தொழிற்சங்கங்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறியதற்கு, அதெல்லாம் தனது கட்டுப்பாட்டில் இல்லை என கூறினார். ஆனால் சட்டப்படி சமரச பேச்சுவார்த்தை முறியாமல் நிலுவையில் இருக்கும் போது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதம் என்றும் , நிர்வாக தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் என்னிடம் தான் வர வேண்டும் என்றும் கூறி நிர்வாக நல ஆணையராக தன் நிலையை மாற்றிக் கொண்டார். அதன் பிறகு penal wage cut செய்யப் போவதாக   மிரட்டி நிர்வாக தரப்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

தடுமாறிய BHEL சங்கங்கள்!

இதற்கிடையில் நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பதாக அறிவிப்பு வெளியிடப் பட்டது. இதனால் தமிழ்நாட்டிலுள்ள பெல் கிளைகளில் தொழிலாளர்களுக்கு இடையேயும் தொழிற் சங்கங்களுக்கு இடையேயும் கொந்தளிப்பான சூழ்நிலை உருவானது. ஆனால் நாட்டின் பிற யூனிட்களில் எவ்வித எதிர்ப்பும் உருவாகாதது அதிர்ச்சிகரமானதாக இருந்தது. அதாவது  தன் உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டி விற்றாலும்கூட பதறாத அளவு அரசியலற்ற சுயநலனில் ஊறிப்போயுள்ளன பெரும்பான்மை சங்கத் தலைமைகள்.

படிக்க:

 பிப்ரவரி 12 தேசிய பொது வேலை நிறுத்தம்

♦ ஜூலை 9 பொது வேலை நிறுத்த போராட்டம், தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கி முன்னேறட்டும்!

திமுக தலைவரும் மாநில முதல்வருமான ஸ்டாலின் அவர்கள் பிப்ரவரி பொதுவேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு என அறிவித்த பிறகும் , திருச்சி யூனிட்டின் ஒருங்கிணைப்பாளர் சங்கமான தொமுச (LPF) வேலை நிறுத்தத்தில் இருந்து பின்வாங்கியது. அதனைத் தொடர்ந்து வேறு சில சங்கங்களும் வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்றன. CITU, NDLF போன்ற சில சங்கங்களே களத்தில் நின்றன. இது திருமயம் ராணிப்பேட்டையிலும் எதிரொலித்தது.

நிர்வாகம், தொழிலாளர் நல துறையின் கடுமையான நெருக்கடி, தேர்தல் நேரங்களில் வாக்காளர்களை வட்டமடித்து பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சிகளைப் போல  அக்கட்சிகளை சார்ந்த தொழிற்சங்க தலைவர்களால் வேலை நிறுத்த காலங்களில் தொழிலாளர்களிடம் பிரச்சாரம் செய்யாதது, எவ்வளவு போராட்டங்களை நடத்தினாலும் எதுவும் மாறப் போவதில்லை என்கிற தொழிலாளர்களின் விரக்தி மனநிலை, அதை சரிப்படுத்த வேண்டிய தொழிற்சங்கங்களுக்கு இடையே ஒற்றுமையின்மை, எல்லாவற்றிக்கும் மேலாக அனைத்து வேலை நிறுத்த போராட்டங்களையும் சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கூடிய வகையில் செய்யப்பட்டுள்ள புதிய சட்ட திருத்தம் உள்ளிட்டவைகளால்  பொதுத்துறை நிறுவனத்தில்  ஒரு மணி நேரம் கண்டன ஆர்ப்பாட்டம் என்ற அளவில் பொதுவேலை நிறுத்த போராட்டம் சுருங்கிப் போனது.

நோய்க்கிருமியை அழிப்போம்!

தொழிலாளர்களின் உரிமைக்காக போராடாமல் சரணடையும் போக்கு பெல்லுடன் மட்டும் முடிந்துவிடாது. துடிப்பாக செயல்படும் பிற துறைகளுக்கும், ஆலைகளுக்கும் பரவவும் வாய்ப்புள்ளது. நோய்க்கிருமியை அடையாளம் கண்டு பொருத்தமான நோய்ப்பரவல் தடுப்பு, தொழிலாளர் விரோத போக்குகளை அம்பலப்படுத்தல்கள் மூலம் கிருமி அழிப்பு நடவடிக்கைகளை வர்க்கப்பற்றுள்ள சங்கங்கள் முன்னெடுக்க வேண்டும்.

புதிய சட்டத்திருத்தம் ஏட்டளவில் இருந்த போதே ஒரு போராட்டத்தை இந்த அளவுக்கு முறியடிக்க முடிகிறது என்றால், முழுவதுமாக நடைமுறைக்கு வந்து விட்டால் போராட்டம் என்பது சட்டவிரோதமானது என அறிவிக்க முடியும்  என ஏற்கனவே சங்கங்கள் எச்சரித்தது போல தெளிவாக தெரிகிறது. ஏப்ரல் 1 முதல் 4 சட்டத்தொகுப்புகள் அமுலுக்கு வந்துவிட்டன. இதை முறியடிக்க சாதி, மதம், இனம், மாநிலங்கள், அரசியல் கட்சிகள் என்கின்ற வேறுபாடுகளை களைந்து தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் திரள வேண்டும். வேளாண் சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராடிய விவசாய சங்கங்களின் தீரமிக்க போராட்டத்தை முன்மாதிரியாக கொள்ள வேண்டும். கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தவேண்டும்.

  • நவீன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here