“ஆர்எஸ்எஸ் அம்பானி, அதானி பாசிசம் ஒழிக” எனும் வரையறுப்புடன் மக்களை திரட்டுவதாகக்கூறிக் கொண்டு செயல்படுகின்ற வினவு தலைமை, கடந்த காலங்களில் எமது புரட்சிகர அமைப்புகளின் செயல்பாட்டைப் பற்றி கீழ்க்கண்டவாறு வரையறுத்துள்ளது.

“கடந்த காலங்களில் நமது அனுபவம் என்ன? பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்த்தும், மறுகாலனியாக்கச் சுரண்டலை எதிர்த்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். பார்ப்பன சாதித் தீண்டாமையை எதிர்த்த சீறீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், நெல்லை கங்கைகொண்டானில் கோக் எதிர்ப்புப் போராட்டம், தஞ்சை வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம், இறால்பண்ணை அழிப்புப் போராட்டம், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரானப் போராட்டம் இவையெல்லாம் ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் முன்னின்று நடத்திய போராட்டங்கள். மாதக்கணக்கான இந்த இயக்கங்களில் லட்சக்கணக்கான துண்டறிக்கைகள், பல்லாயிரக்கணக்கான சுவரொட்டிகள், ஆயிரக்கணக்கான சுவரெழுத்துக்கள், நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், போராட்டங்கள் என இடைவிடாமல் வேலை செய்துள்ளோம்.

நமது பிரச்சாரங்களின் போது நம்மை தார்மீக ரீதியாக ஆதரிக்கும் மக்கள் ஏன் இத்தகைய போராட்டங்களில் பெருந்திரளாகக் கலந்து கொள்ளவில்லை? ஏன் ஒரு எழுச்சியை நோக்கித் தொடர்ச்சியாக இந்தப் போராட்டங்கள் நகரவில்லை? என்ற கேள்விதான் மிக முக்கியமானது.

பிரச்சார இயக்கங்களால் மக்களைத் திரட்ட முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. அதற்கு மக்கள் அமைப்பாக்கப்பட்டிருப்பதுதான் அடிப்படையான தேவை. அதுதான் நாம் பரிசீலிக்க வேண்டிய மிக முக்கியமான விசயம். இந்த உண்மையைப் பரிசீலிப்பது க்ரியாயூக்கிகளுக்கு கசக்கத்தானே செய்யும்.

ஒரு எழுச்சியை உருவாக்குவது மட்டுமல்ல, அதைத் தக்கவைப்பதும், தொடர்ந்து எடுத்துச் செல்வதும்தான் முக்கியம். அதற்கு திரளான மக்கள் அமைப்பாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல் அரிச்சுவடி.

உண்மையில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வேரடி மண்ணோடு வீழ்த்துவதற்கு, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளைக் கட்டியமைக்க வேண்டிய பெருந்தேவை நமக்கு முன்னே உள்ளது. இச்சூழலில் பெருவாரியான உழைக்கும் மக்களை அமைப்பாக்குவதைப் பற்றிய எந்தப் பார்வையும் இல்லாத, வாய்ச்சவடால் அடித்துக் கொண்டு கிளம்பியிருக்கின்ற இத்தகைய முதலாளித்துவ சந்தர்ப்பவாத, நவீன அராஜகவாதப் போக்குகளை புரிந்து கொண்டு தொடர்ச்சியாக அம்பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.”

கவனியுங்கள்! மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் அரசியல் செயல்தந்திரத்தை முன்வைத்து கடந்த 30 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் பல போராட்டங்களை நடத்தி உள்ளது. இந்த செயல்தந்திர முழக்கங்கள் ஏற்படுத்திய வீச்சின் காரணமாகவே பல நூற்றுக்கணக்கானத் தோழர்கள் புரட்சிகர அமைப்புகளுக்குள் இணைந்தனர். ஆனால் இந்த செயல்தந்திர அரசியலின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாத வினவு தலைமை, எழுச்சி உருவாகாததற்குக் காரணம் அமைப்பாக்கப்படாததுதான் என கண்டுபிடிக்கிறது.

புதிய ஜனநாயகப் புரட்சி என்பதே பிரச்சாரம், கிளர்ச்சி, செயல், ஆணை என இயங்கியல் ரீதியாகக் கட்டம் கட்டமாக முன்னேறும் என்பதுதான் புரட்சி பற்றிய இயங்கியல் விதி. இது புதிய ஜனநாயகப் புரட்சி என்றப் போர்தந்திர அரசியலுக்கும், அதற்கு இடையில் தோன்றுகின்ற பல்வேறு செயல்தந்திர அரசியலுக்கும் பொருந்தும்.

புரட்சி, சமூக மாற்றம் தேவை எனப் புரிந்து கொண்ட முன்னணியாளர்கள் பிரச்சாரத்தின் மூலம் தொடர்ந்து புதிய ஜனநாயக அரசியலைக் கொண்டு சென்று அமைப்பு கட்டுவதும், பிறகு அந்த அமைப்பின் மூலம் செயல்தந்திர ரீதியாக தொடர்ந்து போராட்டங்களை நடத்துவதும் ஒரு கட்டமாகும். இது பிரச்சார கட்டத்தில் ஒரு பகுதியாகும்.

எமது அமைப்பு முன் வைக்கும் இந்த செயல்தந்திர அரசியல் வழியைத்தான் இடது சந்தர்ப்பவாதிகளான மாவோயிஸ்டுகள் “கட்ட புரட்சிக் கோட்பாடு” என்று கிண்டல் அடித்தார்கள். அதையே தனது கண்டுபிடிப்பாக முன் வைத்தது வினவு தலைமை.

சரி! பிரச்சார பாணியிலான அரசியல் தவறு என்று முடிவு செய்து விட்டார்கள். வேறு ஏதோ செய்யப் போகிறார்கள் எனக் காத்துக் கொண்டிருந்தால் தனது கண்டுபிடிப்புகளுக்கு எதிராகக் கடந்த இரண்டாண்டுகளாக தொடர்ந்து பிரச்சார இயக்கங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் அவர்கள் அறிவித்த “ வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” எனும் முழக்கத்தின் கீழான பேரணி மாநாடு குறித்த பிரச்சாரத்தை நடத்தியது பற்றி ஒரு அனுபவத்தை கீழ்க்கண்டவாறு வெளியிட்டுள்ளார்கள்

“நேற்றைய தினம் பிரச்சாரத்தின் போது ஒரு அனுபவம்..

*வீட்டிலிருந்து வெளியே வந்தவர் பார்க்கவே ஒரு முழு சாமியாரைப் போல் இருந்தார். கழுத்து நிறைய மாலைகள், ருத்ராட்சக் கொட்டைகள், அடர்ந்த தாடி, முடி…

அவரைப் பார்த்தவுடன் ஒருவேளை ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி காரராக இருந்தால் இப்போது வாக்குவாதம் ஆகிவிடுவோமோ என்ற எண்ணம் வந்தது. மாநாட்டைப் பற்றியும் அதன் நோக்கத்தைப் பற்றியும் விளக்கினோம்.

ஆமாம் நீங்க சொல்றது சரிதான். ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல் என இவர்கள் சொல்லுவது சரி இல்லை.

எல்லோரும் சமத்துவமாக வாழும் இடத்தில் இவர்கள் சொல்வது சரி இல்லை என்றவர், கையில் வைத்திருந்த 30 ரூபாய் பணத்தையும் மாநாட்டிற்காகக் கொடுத்து விட்டுச் சென்றார்.

பல மதங்கள் இருந்தாலும், மக்கள் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும், அனைவரையும் சமத்துவமாக நடத்த வேண்டும் என்ற இந்த உணர்வுதான் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பலுக்கு எரிச்சலூட்டுகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்….

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…

என்ற தமிழக மரபுதான் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது.

பாசிச எதிர்ப்பு நெருப்பை அனைவரிடமும் ஏற்றுவோம்! ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி, அம்பானி-அதானி பாசிச கும்பலுக்கு முடிவு கட்டுவோம்!”

(மார்ச் 1 2023 பிரச்சாரம் அனுபவம்)

இதே பாணியில் ஆயிரக் கணக்கானத் துண்டறிக்கைகள், வெளியீடுகள் கொடுத்து பிரச்சாரம் செய்துதானே செயல்தந்திர அரசியல் ரீதியிலான பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதற்கும் இப்போது இவர்கள் செய்வதற்கும் என்ன வேறுபாடு?

அடுத்து அவர்களே அறிக்கை எழுதி அணிகளிடம் சுற்றுக்கு விட்டுத தீர்மானிக்கப்பட்ட செயல்தந்திர முழக்கமான காவி கார்ப்பரேட் பாசிசத்தை சுருக்கி ஆர் எஸ் எஸ், அம்பானி,, அதானி பாசிசம் என வரையறுத்துள்ளனர்.

இந்த வரையறையை எப்படி தீர்மானித்தார்கள். எந்த நாட்டிலாவது தனிநபர் பாசிசம் என வரையறுக்கப்பட்டுள்ளதா? சீனாவில் தோன்றிய பாசிசச் சூழலை சைனீஸ் பாசிசம் என வரையறுக்கிறார்கள் சீனக் கம்யூனிஸ்டுகள். கார்ப்பரேட் காவி பாசிசம் என்பது இந்திய வகைப்பட்ட பாசிசமாக உள்ளது என வரையறுத்துள்ளார்கள் மார்க்சிய லெனினியவாதிகள். இவர்கள் முன்வைக்கின்ற காவி- கார்ப்பரேட் பாசிசம் என்பதைச் சுருக்கி அம்பானி, அதானி பாசிசம் எனத் திரித்து புரட்டுகிறார்கள். இதன் மூலம் நிதி மூலதனத்தின் ஆகக் கேடான வடிவம் பாசிசமாக உருவெடுக்கிறது என்ற கோட்பாட்டையும் புறக்கணிக்கிறார்கள்.

இந்தப் புரட்டல் ஒரு புறம் இருக்க பாசிசத்தை வீழ்த்துவதற்கு அவர்கள் முன்வைத்த வழிமுறைகள் இதுதான்.

“ பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியினை அமைப்பதற்கான அடிகற்களாகக் கீழிருந்து கட்டியமைக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கிய முன்னணியும், பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியும் எவ்வாறு அமைய வேண்டும் எனும் வழிமுறைகளைக் கொண்ட திட்டமிட்ட பாசிச எதிர்ப்பு வேலைத் திட்டத்தினை இக்கூட்டம் முன்வைக்கிறது. இவற்றின் வளர்ச்சிப் போக்கிலேயே ஆளும் வர்க்கத்தின் பாசிச எதிர்ப்பு பிரிவினருடனான ஐக்கிய முன்னணியாக அவை உருவெடுக்கும் எனும் தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டம், அவற்றின் உள்ளடக்கம், உருவகங்கள் குறித்தக் கண்ணோட்டத்தினை வழங்குகிறது.

நாட்டையும் மக்களையும் கவ்வியுள்ள மிகப் பெரிய அபாயத்தை உணர்ந்து, உடனடியாகக் காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க அனைத்து ஜனநாயகச் சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என இச்சிறப்புக் கூட்டம் அறைகூவல் விடுத்து, காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதற்கான உடனடிக் கடமைகளையும் வரையறுத்துக் கொடுத்துள்ளது.”எனத் தமது அமைப்பு நடத்திய சிறப்பு கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக அறிவித்தனர்.

அந்த முடிவை அமுல்படுத்துவதற்குப் பாசிச எதிர்ப்பு ஜனநாயக முன்னணி கட்டுவதற்கு எந்த வேலையும் செய்வதாகத் தெரியவில்லை. மாறாக பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி என அவர்கள் புரிந்து கொண்ட வகையில் ஒன்றை கட்டுகின்ற வேலையில் ஈடுபட்டுள்ளனர். அதற்கிடையில் தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்தும் தியாகு, பாலன் போன்றவர்கள் முன்வைக்கின்ற பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் நிபந்தனைகளுடன் பங்கேற்பதாக வேறு அறிவித்துள்ளனர்.

கவனியுங்கள்! வளர்ச்சிப் போக்கில் ஆளும் வர்க்கத்தின் பாசிச எதிர்ப்பு பிரிவினருடன் ஐக்கிய முன்னணி என எழுதி வைத்துக்கொண்டு குறிப்பான பிரச்சனைகள் தோன்றும் போது அதற்கு எதிராக முடிவு எடுக்கின்றனர்.

பாசிசத்தை எதிர்த்துப் போராடுகின்ற கட்சிகளைப் பற்றி இவர்களின் அணுகுமுறை ஒரே சமயத்தில் வறட்டுத்தனமாகவும், அதற்கு எதிரான சந்தர்ப்பவாதமாகவும் வெளிப்படுகிறது. தேர்தல் அரசியலில் உள்ள கட்சிகளைப் பற்றி அவர்களது நிலைப்பாடு இதுதான்.

“காவி கார்ப்பரேட் பாசிசத்தை திணிப்பதற்கு மிகவும் இயல்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. தேர்தல் ஆதாயம் எனும் சுயநலத்திலிருந்துதான் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகள் வருகின்றனவே தவிர ஜனநாயகம் அதன் மாண்புகளை பாதுகாக்க அல்ல; ஒவ்வொரு கட்சியை கையாளவும் ‘வழிமுறை’ இருக்கின்றது. சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்க இயக்குநரகம், நீதிமன்றங்கள் என ‘மாண்புமிகு ‘ நிறுவனங்கள் உள்ளன; ஊடகங்கள் உள்ளன.

அமித்ஷா அன்பான வேண்டுகோள் விடுத்தாலே போதும் ‘ஜனநாயக குடியரசு’ கும்பிட்டு பணிவிடை செய்யுமே” என வரையறுத்துள்ளனர். ஆனால் இந்த வரையறுப்பை அமுல்படுத்த முடியாமல் சாதாரண தெருமுனை கூட்டம் துவங்கி மாநாடுகள் வரை அனைத்திலும் தேர்தல் அரசியல் கட்சிகளை அழைத்துப் பேச வைக்கின்றனர்.

இருந்த போதிலும் அணிகளை ஏய்ப்பதற்கு புரட்சிகரமான அறிக்கைகளை அவ்வப்போது வெளியிட்டு தனது அரசியல், சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தை மறைத்துக் கொள்கின்றனர்.
மார்ச் 24 காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டபோது அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கீழ்கண்டவாறு கூறியுள்ளனர்.

“ இந்தியா எதிர்கொண்டிருக்கும் அபாயம் பா.ஜ.க. என்ற தனிப்பட்ட கட்சி அல்ல. ஒட்டுமொத்த ஜனநாயக நிறுவனங்களையும் இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கைப்பற்றியிருக்கிறது. நாம் ஒரு கட்டமைப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிக்கிறோம்” என ஒவ்வொரு மேடையிலும் பேசியவர் ராகுல் காந்தி. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு ராகுலின் மீது தனிச்சிறப்பான வெறுப்புக்கு இதுவும் ஒரு காரணம்.

ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பே பாசிசமயமாகியுள்ள அபாயத்தை தேர்தலின் மூலம் முறியடித்துவிட முடியும் எனக் கருதுவதும், பாசிசமயமாகிவரும் போலி ஜனநாயகத்தை மீட்டு உயிர்ப்பித்துவிட முடியும் எனக் கருதுவதும் மாயை. பாசிசக் கும்பல், தனது ஒவ்வொரு நடவடிக்கையின் மூலமும் இதை நமக்கு உணர்த்துகிறது!
மாற்றுக் கட்சியோ, தேர்தலோ தீர்வல்ல. பெயரளவிலும் நடைபெறும் இந்த போலி ஜனநாயகத் தேர்தலும் கூட ஒரே நாடு; ஒரே தேர்தலின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்படலாம்.
மாற்றுக் கட்டமைப்பை நோக்கிப் போராடுவதே தீர்வாகும்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்!”.

( வினவு 24/3/2013 அன்று வெளியிட்ட அறிக்கையில் இருந்து)
ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டவுடன் சொல்லிக் கொள்ளப்படும் அரைகுறை ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டு, நாடு பாசிச சர்வாதிகாரத்தின் கீழ் சென்றுள்ளது என்பதே அனைவரின் கவலை.
ஆனால் இத்தகைய சூழலில் தான் முன் வைத்திருக்கும் அரைவேக்காட்டுத்தனமான முழக்கங்கள் பெரிய விளைவை சாதித்து விடும் என்பதைப் போல பாராளுமன்றத்துக்கு வெளியில் என 40 ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடித்த அதே செக்குமாட்டுத்தனமான வழிமுறையை முன் வைக்கிறது வினவு தலைமை. பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்கிறார்கள்.

அதற்கும் புதிய ஜனநாயகக் குடியரசுக்கும் என்ன வேறுபாடு என்றாவது முன் வைத்துள்ளார்களா என்றால் அதுவும் இல்லை.
இன்றைய பாசிச அபாய சூழலில் தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துவது என்பதே பொருத்தமான நடைமுறையாக இருக்கும். ரஷ்யாவில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும், சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் பிறகு இலங்கை உட்பட உலகில் உள்ள மார்க்சிய லெனினிய இயக்கங்களும் குறிப்பிட்ட சூழலில் தேர்தல் அரசியலை ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துகின்றனர்.
ஆனால் வினவு தலைமையோ “தேர்தல் பாதை! திருடர் பாதை” எனும் முழக்கத்தை எல்லா காலகட்டங்களிலும் கிளிப்பிள்ளையைப் போல மீண்டும் மீண்டும் ஒப்பிக்கின்றனர்.

நக்சல்பரி இயக்கம் துவங்கிய காலம் முதல் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் மூலம் கிடைத்த அனுபவத்தை தொகுத்து புரிந்து கொள்ளவும் அல்லது ஒன்றுபட்ட அமைப்பு தொகுத்து கொடுத்த அனுபவத்தை புரிந்து கொள்ளவும் திராணியின்றி உள்ளனர்.
போர் தந்திர இலக்கு மாறாத சூழலில் குறிப்பான செயல் தந்திர காலகட்டங்களில் எதிரிகள், நண்பர்கள் மாறுகிறார்கள், போராட்ட வடிவங்களும் மாறுகின்றன எனும் ரசிய, சீனப் புரட்சியின் அனுபவத்தைக் கற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

கவனியுங்கள்! தேர்தல் புறக்கணிப்பை முன்வைத்து நாடாளுமன்றத்திற்கு வெளியில் மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும் என முன்வைக்கின்ற அதே வேளையில் அவர்கள் பங்கெடுத்துள்ள பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியிலும், மதுரை மாநாட்டிற்கு கட்டியுள்ள மாநாட்டு குழுவிலும் தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் கட்சிகளை ஒன்றிணைத்துள்ளனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த முன்னணியில் உள்ள தேர்தல் கட்சிகள் மற்றும் தேர்தலை ஆதரிக்கின்ற கட்சிகள் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள் எனத் தெரியாததை போல அணிகளையும், ஆதரவாளர்களையும் ஏய்கிறார்கள்.

அதன் விளைவுதான் “தேர்தலில் பங்கெடுக்கும் கட்சிகள், இயக்கங்கள் எதுவும் மாற்று இல்லை” எனக்கூறிக் கொண்டே மே 1 மதுரையில் நடத்த உள்ள சாதாரண மாநாட்டிற்கு தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் விடுதலை சிறுத்தைகள், எஸ் டி பி ஐ, நீலப் புலிகள், மற்றும் தேர்தல் அரசியலை ஆதரிக்கும் பெரியார் இயக்கங்களை ஒன்றிணைத்து மாநாட்டுக்குழு என அமைத்து இரட்டை வேடம் போடுகின்றனர்.

70களில் நக்சல்பாரி இயக்கம் துவங்கிய போது முன்வைத்த நீண்டகால மக்கள் யுத்தப் பாதை என்ற அரசியல் போர் தந்திரத்தின் பருண்மையான வடிவம்தான் தேர்தல் புறக்கணிப்பு.. தேர்தலை புறக்கணிப்பது மட்டுமின்றி கீழிருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு விவசாயிகள் மத்தியில் வேலை செய்வதும் உழுபவனுக்கே நிலம் உழைப்பவனுக்கே அதிகாரம் என்ற திட்டத்தை அமல்படுத்துவதும்தான் முன் வைக்கப்பட்ட அரசியலாகும்.

2015 ஆம் ஆண்டு விவசாயிகள் அமைப்பை கலைத்த பிறகு தற்போது வரை அதுபற்றி எந்த முடிவும் இல்லாத வினவு தலைமை தேர்தல் புறக்கணிப்பு பற்றி வாய்ச்சவடால் அடிக்கிறது. அதுமட்டுமின்றி 2018 ஆம் ஆண்டு நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை இந்தியாவிற்கு பொருந்தாது என்று அப்போதைய தலைமை முன் வைத்ததை இன்னும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா அல்லது மாற்றிவிட்டார்களா என்றும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இது ஒரு புறம் இருக்க 2014 முதல் இந்தியாவை ஆட்சி செய்து வருகின்ற பாரதிய ஜனதா கட்சி தேர்தல் ஜனநாயகம், நாடாளுமன்ற ஆட்சி வடிவம் போன்றவற்றில் சிறிதும் நம்பிக்கையற்ற பாசிச சர்வாதிகார கும்பல் என்பதும் தற்போது சட்டபூர்வமான வாய்ப்புகளை பயன்படுத்தி அரசு கட்டமைப்பை முழுக்க பாசிசமயமாக்குவது என்ற நோக்கத்துடன் தற்போதைக்கு நாடாளுமன்றத்தை பயன்படுத்துகின்றனர் என்பதும் படிப்படியாக அம்பலமாகி வருகிறது.

இத்தகைய அரசியல் சூழலில் தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்திக் கொண்டே, தேர்தல் அரசியலுக்கு வெளியில் மக்களை கீழே இருந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணிக்கு திரட்டுவது ஒன்றே மார்க்சிய லெனினியம் போதிக்கின்ற வழிமுறையாகும்.

2008 ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதாரம், மீள முடியாத மீண்டும் எழவே முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பிறகு உலகம் முழுவதும் வலதுசாரி எனச் சொல்லக்கூடியப் பாசிச சக்திகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற துவங்கின.

சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகம், தாராளவாத ஜனநாயகம், போலி சோசலிசம் போன்ற எதுவும் அரசியல் ஆட்சி வடிவமாக இருக்க முடியாது. பாசிச சர்வாதிகாரமே ஆட்சி வடிவம் எனத் திட்டமிட்டு செயல்படுகின்றன நிதி மூலதன ஏகபோகங்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை 90களிலிருந்து அமுல்படுத்தப்பட்டு வரும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் 2010 காலகட்டத்தில் தேசங்கடந்த தரகு முதலாளிகளில் புதியப் பிரிவினரை உருவாக்கியது. அந்தப் புதியப் பிரிவினர் மற்றொரு பிரிவு தரகு முதலாளிகளின் மீது ஆதிக்கம் செலுத்திப் புதிய ஆட்சி வடிவம் ஒன்றை முன் தள்ளினர். இத்தகைய ஆட்சி வடிவம்தான் கார்ப்பரேட்-காவிப் பாசிசமாக உருவெடுத்தது.

இது போன்ற ஆட்சி வடிவங்களில் மாறுதல்கள் ஏற்படும் போது சோசலிச புரட்சியை அல்லது புதிய ஜனநாயகப் புரட்சியை முன்வைத்து செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சி, மாறுகின்ற இடைநிலை வடிவங்களைப் புரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் பாட்டாளி வர்க்கத்திற்கு வழிகாட்டிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது என்பதைத்தான் தோழர் லெனின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறினார்.

ஜார்ஜ் டிமிட்ரோவ் முன் வைத்த ஐக்கிய முன்னணி தந்திரத்தில் தோழர் லெனின் முன்வைத்த இந்த வழிகாட்டுதல் குறிப்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் லெனின் நம்முடையக் கவனம் அனைத்தும் செலுத்தி “பாட்டாளி வர்க்கப் புரட்சியைக் கொண்டு வருவதற்கு வழிமுறைகள் அல்லது அணுகும் முறையைப் பற்றி ஆராய்ந்து கண்டு பிடிக்கும்படி”

அழைப்புவிடுத்தார். பல நாடுகளில் ஐக்கிய முன்னணி அரசு மிகவும் முக்கியமான இடைமாறுதலுக்கான வடிவங்களில் ஒன்றாக இருக்க முடியும் என்று நிருபிக்கப்படலாம்.

இடதுசாரி சூத்திரவாதிகள் லெனினுடைய இந்த வாசகத்தை எப்போதுமே தவிர்த்து விடுகிறார்கள். அவர்கள் மிகவும் குறுகிய புத்தியுள்ள பிரச்சாரகர்கள். அவர்கள் வெறும் குறிக்கோளைப் பற்றி மட்டுமே பேசினார்கள். மாறுதல் செய்வதற்கான வடிவங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

மறுபக்கத்தில் வலதுசாரி சந்தர்ப்பவாதிகள் ஒரு தனி ஜனநாயக இடைக்காலக் கட்டத்தை முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரத்திற்கும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்குமிடையில் உருவாக்குவதற்கு முயற்சிக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் தொழிலாளர்களிடத்தில் ஒரு சர்வாதிகாரத்திலிருந்து மற்றொன்றிற்கு சமாதானமான முறையில் பாராளுமன்ற முறையின் மூலம் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்னும் பிரமையை உண்டாக்குவதாகும். இந்தப் போலியான “இடைக்காலக் கட்டம்” என்பதை அவர்கள் லெனினிடைய வார்த்தைகளையும் மேற்கோள்காட்டி அதுதான் இடைமாறுதல் வடிவம் என்று வாதிட்டார்கள். இந்த மோசடியை அம்பலப்படுத்துவது சிரமானதல்ல.”

இவ்வாறு நாடாளுமன்றத்தை ஆதரிக்கின்ற போலி ஜனநாயகத்தின் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது என்பதும், வெறும் புரட்சி என்ற மந்திர உச்சாடனங்களின் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது என்பதும் உண்மை. இவை இரண்டையும் பகுத்துப் பார்க்கின்ற கண்ணோட்டம் வினவு தலைமைக்கு இல்லை.

ஏகாதிபத்திய முதலாளித்துவம் மற்றும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் கார்ப்பரேட்டுகள் தனது வேட்டைக்காடாக மாற்றுகின்ற நோக்கத்துடன், இந்தியாவின் மீது புகுத்தப்பட்டுள்ள மறுகாலனியாக்கத்தை முற்றாகத் தூக்கி எறிந்து புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்பதற்குச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்க கட்சி, இடையில் பாசிச அபாயம் ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில் மாறுகின்ற இடைநிலை வடிவமாக ஜனநாயகக் கூட்டரசு என்பதை முன் நிறுத்துகிறது. இத்தகைய மாறுதல் வடிவம் பற்றி தோழர் லெனின் கூறியுள்ளதை பார்ப்போம்.

“ தோழர் லெனின் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான மாறுதல் வடிவம் அணுகுமுறையைப் பற்றிக் குறிப்பிட்டார். முதலாளித்துவ சர்வாதிகாரத்தைத் தூக்கி எறிவதற்கான வழிமுறைகளைப் பற்றிக் குறிப்பிட்டார். முதலாளித்துவ மற்றும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கிடையில் உள்ள சில இடைமாறுதல் வடிவங்களைப் பற்றி அல்ல. லெனின் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும் இடைமாற்றுதல் முறைக்கும் ஏன் இவ்வளவு பெரிய முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றால், அவர் மனதிலிருந்தது எல்லா மகத்தானப் பெரியப் புரட்சிகளைப் பற்றிய அடிப்படை விதிமுறைகளைப் பற்றியதாகும்.

அந்த விதிமுறை மக்களுக்கு வெறும் பிரச்சாரமும் கிளர்ச்சியை மட்டும் அவர்களுடைய சொந்த அரசியல் அனுவத்தின் அமைப்பைப் பெற்றுவிட முடியாது. புரட்சிகரமான முன்னணிப்படையின் பக்கத்தில் உழைக்கும் மக்களின் சொந்த அரசியல் அனுபவம் முதலிடம் பெறுகிறது. இது இல்லாமல் அதிகாரத்திற்கான வெற்றிகரமானப் போராட்டம் சாத்தியம் இல்லை.

இடதுசாரிக் குணம் கொண்டவர்களின் ஒரு பொதுவானத் தவறு, ஓர் அரசியல் நெருக்கடி தோன்றியவுடன், கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் அதிகாரத்தைக் கைபற்றும் புரட்சிகரமானப் போராட்ட முழக்கத்தை முன்வைக்கலாம். அப்போது, விரிவான மக்கள் பகுதி அவர்களைப் பின்பற்றும் எனக் கருதுகிறார்கள்.

அத்தகைய ஒரு நெருக்கடி இருந்தாலும் மக்கள் எல்லா காலத்திலும் அத்தகையப் புரட்சிக்குத் தயாராகுவதில்லை. கோடிக்கணக்கான மக்களுக்கு என்ன செய்ய வேண்டும், பிரச்னையைத் தீர்பதற்கு எங்கே வழி இருக்கிறது, அவர்களுடைய நம்பிக்கைக்குரியக் கட்சி எது என்பதை அவர்கள் தங்கள் சொந்த அனுபங்களிலிருந்து வேகமாகப் புரிந்துகொள்ள உதவி செய்யவும் மற்றும் இதரக் காரியங்களுக்காவும், இடைமாற்றம் பற்றிய முழக்கங்களுக்கும் தனித்தன்மைக் கொண்ட பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு இடைமாற்றம் அல்லது அணுகும் முறை ஆகிய இரண்டும் அவசியமானவையாகும்.

இல்லாவிட்டால் மகத்தான மக்கள் பகுதியினர் எனக் குட்டிமுதலாளித்துவ ஜனநாயக மயக்கங்கள், மரபுகள் ஆகியவற்றின் செல்வாக்கின் கீழ் உள்ளவர்கள், புரட்சிகரமான நிலைமை உள்ள போதும் கூட ஊசலாடலாம். புரட்சிக்கான வழியைக் கண்டுபிடிக்காமல் காலம் தாழ்த்தித் தயங்கித் தயங்கி கேட்பாரற்றுச் சிதறிக் கிடக்காலம். பின்னர் பரிதாபமாக பாசிஸ்ட் கொலையாளிகளின் கொடுவாளின் கீழ் விழுந்து விடுவார்கள்.”

இத்தகைய கொடூரமான அபாயத்தின் கீழ் தனது அணிகளை மட்டுமின்றி, தனது ஆதரவாளர்களையும் ஆழ்த்துவதற்கு வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்கிறது வினவு தலைமை.

இயங்கியல் ரீதியிலாக நாட்டின் அரசியல், பொருளாதார நிலைமைகளை பரிசீலனை செய்யுங்கள் என முன் வைத்தால், இவர்கள் திமுகவின் அடிவருடிகள், சொம்புகள் என வசை பாடுவதன் மூலம் தன்னை மிக தீவிர புரட்சியாளர்களைப் போலக் காட்டிக் கொள்கின்றனர்.

செயல் தந்திர அரசியல் வழி கட்சியின் திசைவழியை வலது சந்தர்ப்பவாதத்தில் மூழ்கடித்து விட்டது எனப் பேசிக்கொண்டே மீண்டும் ‘செயல் தந்திரம் என்ற போர்வையில்’ ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டு பிரச்சார இயக்கங்களை நடத்துகின்றனர்.

பிரச்சாரபாணி அரசியல் அமைப்புக்கட்ட உதவவில்லை எனச் சொல்லிக் கொண்டு மீண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்திரிகை நடத்துவது, அவ்வப்போது துண்டறிக்கைகள் வெளியிடுவது, சில வெளியீடுகள் போடுவது, யூடியூப் சேனல்களில் சிலரை பேச வைப்பது, எப்போதாவது சில போராட்டங்களை நடத்துவது, கூட்டு நடவடிக்கைகளில் அதிகமாக பங்கெடுத்துக் கொள்வது, ஆங்கிலத்தில் வெளியீடு நடத்துவது, செய்திகளை வெளியிடுவது என்றெல்லாம் பிரச்சார பாணியிலான வேலையைத்தான் மீண்டும், மீண்டும் முன் வைத்து செயல்படுகின்றனர்.

எமது அமைப்பின் மீது காலையில் கைதாகி மாலையில் விடுதலையாகின்ற போராட்டங்களை நடத்துபவர்கள், மாப்பிள்ளைமார் போராட்டங்கள், போகாத ஊருக்கு வழி சொல்லும்

ம க இ க என்றெல்லாம் விமர்சிக்கின்ற மாவோயிஸ்டுகள், ஆயுதங்களுடன் பயிற்சி எடுத்து அவ்வப்போது சிக்கிக் கொள்கிறார்கள். பிறகு சில ஆண்டுகள் அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் சரி எனக் கருதியதை கடைபிடிக்கிறார்கள்.

ஆனால் அதற்கு மாற்றாக எமது அமைப்பு முன் வைக்கின்ற மக்கள் திரள் வழி, போர்த்தந்திரம், செயல் தந்திரம் வகுத்து செயல்படுவது, புரட்சியை கட்டம் கட்டமாக முன்னேற்றிச் செல்வது, குறிப்பிட்ட தருணங்களில் ஏற்படுகின்ற அரசியல் சூழலுக்குப் பொருத்தமாக மாறுகின்ற இடைநிலை வடிவங்களை முன்வைத்து மக்களை அரசியல் அதிகாரத்திற்கு தயார்படுத்துவது எனச் செயல்படுவதையே கொச்சைப்படுத்துகின்ற வகையில் பேசுவதாலேயே வினவு தலைமை முற்போக்காகி விடுவதில்லை.

பாராளுமன்றத்திற்கு வெளியில் என்பதை கிளிப்பிள்ளைகளைப் போல மீண்டும், மீண்டும் ஒப்பித்துக் கொண்டே இருக்கும் இவர்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தை நம்பி செயல்படுகின்ற அரசியல் கட்சிகளை தவிர்த்து புதிதாக யாரையும் தன்னுடன் இணைத்துக் கொள்வது இல்லை. ஆனாலும் வறட்டு சூத்திர வாதத்தை மீண்டும், மீண்டும் கடைப்பிடிக்கின்றனர். இருந்த போதிலும் பிற அனைவரையும் விட தாங்கள் மாபெரும் புரட்சியாளர்கள் என்பதை சிவப்பு சட்டை போட்டுக் கொள்வது மார்க்சிய ஆசான்களின் சில மேற்கோள்களை மீண்டும் மீண்டும் உச்சரிப்பது போன்றவற்றின் மூலம் முயற்சிக்கின்றனர்.

செயல்தந்திர அரசியல், அது உருவாக்குகின்ற நடத்தை வழி, எதிரிகள், நண்பர்களில் ஏற்படும் மாறுதல், உற்பத்தி உறவுகளில் ஏற்படுகின்ற புதிய நிகழ்ச்சிப் போக்குகள் காரணமாக உருவாகின்ற இடைக்கட்டங்கள், அதற்கு பொருத்தமான இடைநிலை வடிவங்கள் போன்ற எதையும் வினவு தலைமையால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் வினவு தலைமை தொடர்ந்து தேர்தல் அரசியல் கட்சிகளை வசைபாடுகிறது. மாற்று இல்லை எனவும் முன் மொழிகிறது.

பாசிசத்தை எதிர்த்து புரட்சிகர ஜனநாயகச் சக்திகளை ஒன்றிணைக்கின்ற முயற்சியில் ஈடுபடுகின்ற மக்கள் அதிகாரம் அமைப்பை திமுகவின் சொம்புகள், தேர்தல் அரசியலுக்கு சென்று விட்டார்கள், ஓட்டுப் பொறுக்கிகள் என வசைபாடுகிறார்களே ஒழிய, ஆக்கபூர்வமாக சொந்தக் காலில் நின்று ஒரு நூறு பேரை திரட்டுகின்ற அரசியல் எதையும் முன் வைக்க முடியவில்லை.

அதனால்தான் மேற்கண்ட வினவு தலைமை அவ்வப்போது தங்களை இணைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதும், அதற்கு நேர் எதிராக தனது இணையதளத்திலும் வெளியீடுகளிலும் வசைபாடுவதையும் இத்தகைய இரட்டை அணுகுமுறை கொண்ட சந்தர்ப்பவாத அம்சங்களை பரிசீலிக்க கோருகிறோம்.

இத்தகைய சீர்குலைவு சக்திகளுடன் தோழமை பாராட்டுவது பாசிச எதிர்ப்பு போரில் தற்கொலைப் பாதையாகும்.

நன்றி

வினை செய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here