ஆங்கிலேயரை அச்சுறுத்திய சூறாவளி: 1857 வட இந்திய சுதந்திரப் போர்!

“மனிதகுல வரலாற்றில் பழி வாங்குதல் என ஒன்று இருக்கிறது. இங்கே பழிவாங்குவதற்கான கருவிகளை உருவாக்குபவன் வன்முறைக்கு இலக்கானவன் அல்ல, அந்த வன்முறையை ஏவியவன் தான் (தனக்கெதிரான) அந்தக் கருவியையே தயார் செய்கிறான். இதுதான் வரலாற்றுப் பழிவாங்குதலின் விதி….. பிரிட்டிஷாரால் சித்திரவதை செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட விவசாயிகளிடமிருந்து தொடங்கவில்லை இந்தியாவின் கலகம். அவர்களால் சோறும் துணியும் தந்து சீராட்டி வளர்க்கப்பட்ட சிப்பாய்களிடமிருந்துதான் தொடங்கியிருக்கிறது.

கார்ல் மார்க்ஸ், செப். 4, 1857.

தென்னிந்தியாவில் தொடங்கிய விடுதலைப் போராட்டத்தின் தோய்ந்த முடிவுரையாக, எண்ணெய் தீர்ந்த விளக்கின் தெதுயரம் சுடராக, எரிந்து அடங்கியது 1806 வேலூர் சிப்பாய்ப் புரட்சி. திப்பு என்ற கவிதை கரைந்த பிறகு, தீபகற்பக் கூட்டிணைவு மறைந்த பிறகு, காலனியாதிக்கத்துக்கு எதிரான சக்திகளை ஒன்றாய்க் கட்டும் தலைமை ஏதும் இல்லாததால் அடுத்த 50 ஆண்டுகளில் அநேகமாக இந்தியா முழுமையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டது கும்பனியாட்சி.

மராத்தியர்களின் பதவிச் சண்டைகளும், இரண்டு போர்களும் மராத்தா அரசை வீழ்த்தின. பிறகு ராஜபுதனம் வீழ்ந்தது. இந்து முசுலிம் சீக்கியப் படைகளின் வீரமிக்க போருக்குப் பின் லாகூர் உடன்படிக்கையின் வளையத்தில் பஞ்சாப் வீழ்ந்தது. எஞ்சியிருந்தவை ஏற்கெனவே கும்பனியின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டிருந்த டெல்லி, அவத் (இன்றைய உ.பி, பீகாரின் பெரும்பகுதி) சமஸ்தானங்கள் மட்டுமே. நவாப் வாஜித் அலி ஷாவின் நிர்வாகம் சரியில்லை என்று சொல்லி, ஒரே ஒரு பேனாக்கோடு கிழித்து 1856 இல் அவத் அரசை கும்பனியாட்சியின் கீழ்க் கொண்டு வந்தான் டல்ஹவுஸி. அவத் மன்னன் கல்கத்தாவில் சிறை வைக்கப்பட்டான். “பகதூர் ஷாவின் மறைவுக்குப் பின் அவரது வாரிசுகள் தங்களை மன்னர்கள் என்று அழைத்துக் கொள்ளக் கூடாது; செங்கோட்டையைக் காலி செய்து விட்டு டெல்லிக்கு வெளியேதான் தங்கவேண்டும்” என்று ஆணையிட்டான். ஜான்சி ராணி லட்சுமிபாயின் தத்துப்பிள்ளைக்கு அரசுரிமை மறுக்கப்பட்டது.

எல்லா எழுத்துபூர்வமான ஒப்பந்தங்களையும் மிக அலட்சியமாக மீறியது கும்பனியாட்சி. தாழ்ந்து தாழ்ந்து நாயினும் தாழ்ந்து, இனிமேலும் தாழ்வதற்கோ வாழ்வதற்கோ வழியற்ற கையாலாகாத நிலையில் கொதித்துக் கொண்டிருந்தது பிரபுக்குலம். எனினும் காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்திற்கு அறைகூவல் விட்டுத் தலைமையேற்று நடத்தும் அருகதை அவர்கள் யாருக்கும் இல்லை. எனவே, மக்களின் கோபம் வெடித்தெழும் தருணத்திற்காக நாடு காத்திருந்தது.

காலனியாதிக்கத்தால் ஆகக் கொடூரமாகச் சுரண்டப்பட்டவர்கள் விவசாயிகள். கும்பனியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட பகுதிகளில் வரிவிதிப்பு விளைச்சலில் 55% என்ற எல்லை வரை சென்றது. வெள்ளம் வறட்சி எதற்காகவும் வரித்தள்ளுபடி கிடையாது. வரி கட்டாத விவசாயிகளுக்குக் கசையடியும், சிறையும், சித்திரவதையுமே நீதிமன்ற தீர்ப்புகளாக இருந்தன. ‘சித்திரவதை ஆங்கில அரசின் நிதிக்கொள்கையாக இருந்தது” என்று இதை அம்பலப்படுத்தினார் மார்க்ஸ்.

ஜமீன்தாரி முறை அமலாக்கப்பட்ட பகுதிகளில் முந்தைய ஆட்சியின் நிலப்பிரபுக்களான தாலுக்தார்கள் நீக்கப்பட்டனர். ஜமீன்தார் பதவிகள் ஏலம் விடப்பட்டன. பம்பாய், கல்கத்தா போன்ற நகரங்களைச் சேர்ந்த கந்து வட்டிக்காரர்கள் ஜமீன்தாரி உரிமையை அதிக விலைக்கு ஏலம் எடுத்தார்கள். முந்தைய தாலுக்தார்களிடம் கசிந்த இரக்க உணர்ச்சி கூட இல்லாமல் விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சினார்கள். வட்டி விகிதம் குறித்த பாரம்பரிய கட்டுப்பாடுகளும், கந்து வட்டிக்காரர்கள் மீது கிராம சமுதாயம் முன்பு கொண்டிருந்த அதிகாரமும் நீக்கப்பட்டு விட்டதால், நகர்ப்புறங்களிலிருந்து வந்திறங்கிய கந்துவட்டிக் கும்பல் விருப்பம் போல விவசாயிகளை ஏமாற்றியது. இது வரை விவசாயிகள் அறிந்திராத நீதிமன்றங்களுக்கு அவர்களை இழுத்தது. வட்டியும் வரியும் கட்ட முடியாத விவசாயிகளின் நிலம் ஏலம் விடப்பட்டது. தனது உடலின் நீட்சியென இதுகாறும் விவசாயி கருதிவந்த நிலத்தை வேறொருவன் பறிக்கவும் முடியும் என்ற அதிர்ச்சியைப் பல இடங்களில் விவசாய வர்க்கம் முதன் முறையாக எதிர்கொண்டது. நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை பன் மடங்கு அதிகரித்தது.

”நம்முடைய நிர்வாகம் ஒரு கடற்பஞ்சைப் போலச் செயல்படுகிறது. கங்கைக் கரையிலுள்ள அனைத்து வளங்களையும்உறிஞ்சி அவற்றை தேம்ஸ் நதிக்கரையில் பிழிந்து விடுகிறது” என்று மெச்சிக் கொண்டான் வருவாய் ஆணையத்தின் தலைவர் ஜான் சலிவன். “மெட்ராஸ் மாகாணம் முதல் வங்காளம் வரை நடந்த பச்சையான வெட்கங்கெட்ட கொள்ளை” என்று இதனைச் சாடினர் மார்க்ஸும் எங்கெல்சும். தொழிற்புரட்சி தோற்றுவித்த நவீன எந்திரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளைக் காட்டிலும் இந்தியக் கைத்தறி தரமானதாகவும் மலிவானதாகவும் இருக்கவே, இந்தியாவின் துணி ஏற்றுமதியை 1820-இல் முற்றிலுமாகத் தடை செய்தது கும்பனியாட்சி. பிரிட்டனின் துணிகள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கத் தொடங்கின. உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் கைவினைஞர்களும் நெசவாளர்களும் பிழைக்க வழியற்று விவசாயத்தை நோக்கித் தள்ளப்பட்டனர்.

இதன் விளைவாக 1770 முதல் 1857 வரை தோன்றிய 12 பெரும் பஞ்சங்கள் லட்சக்கணக்கான மக்களைக் காவு கொண்டன. “ஒருவேளைச் சோற்றை வயிறார உண்பது என்றால் என்னவென்றே 50% விவசாயிகளுக்குத் தெரியாது” என்று அன்றைய நிலைமையை வர்ணித்தான் ஒரு ஆங்கில அதிகாரி. அபினியும் அவுரியும் பயிரிடச் சொல்லி விவசாயிகளையும் பழங்குடி மக்களையும் கட்டாயப் படுத்தியதன் மூலம் உணவு உற்பத்தியை மேலும் அழித்தது ஆங்கில ஆட்சி.

ஜமீன்தார்களுக்கும், கந்துவட்டிக்காரர்களுக்கும், அவர்களை ஏவிவிட்ட கும்பனியாட்சிக்கும் எதிராக எண்ணிறந்த விவசாயிகளின் கலகங்கள் வெடித்தெழுந்தன. அவையனைத்தும் கொடூரமாக நசுக்கப் பட்டன, வரவிருக்கும் எழுச்சிக்குக் கட்டியம் கூறுவது போல 1855-இல் எழுந்தது சந்தால் பழங்குடி மக்களின் ஆயுதப் போராட்டம். வங்காளத்திலும் பீகாரிலும் பல பகுதிகளை ஆங்கிலேயரின் நிர்வாகத்திலிருந்தே இரண்டு ஆண்டுகள் விடுவிக்குமளவு போர்க் குணத்துடன் நடைபெற்ற அந்தப் போராட்டம் ஒரு ஆயுதமேந்திய மக்கள் எழுச்சியின் வலிமையை நிரூபித்துக் காட்டியது. எனினும் சமூக மனைத்தையும் தட்டியெழுப்பும் வல்லமை அந்த எழுச்சிக்கு இல்லை. எனவே அத்தகையதொரு கிளர்ச்சிக்காக நாடு காத்திருந்தது.

தொடரும்…

முந்தைய பதிவு:விடுதலைப் போரின் வீரமரபு – 18

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here