தொடர்ச்சி…
1790களில் வெள்ளையர்களோடு சிவகங்கை பாளையத்துக்குத் தீவிரமான முரண்பாடுகள் இல்லையென்ற போதிலும், வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பு நாடெங்கும் அதிகரித்து வருவதை மருதிருவரால் சகித்துக்கொள்ள இயலவில்லை. கட்டபொம்மனைப் போராடத் தூண்டுகிறார் சின்ன மருது. 500 வீரர்களை அனுப்பி
உதவுகிறார். தென்தமிழகத்தில் கூட்டணியை உருவாக்கப் பாடுபடுகிறார். இராமநாதபுரம் கூட்டிணைவிற்குத் தலைமையேற்றதோடு. கட்டபொம்மனை திருநெல்வேலி கூட்டிணைவுக்குத் தலைமை தாங்கவும் வைக்கிறார்கள் மருது சகோதரர்கள்.
1801 திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக் அனைவரும் கொல்லப்பட்டு விட்ட காலம். தீபகற்பக் கூட்டிணைவு பெரிதும் தளர்ந்து இருந்த நேரத்தில் மருதிருவர் கிளர்ச்சிக்குத் தலைமையேற்கின்றனர். இராமநாதபுரத்தில் வெள்ளையர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த மைலப்பன், அங்கிருந்து தப்பி மருதிருவரிடம் தஞ்சமடைகிறார். அதே போல பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மே 28 அன்று ஊமைத்துரையும் சிவத்தையாவும் தம் வீரர்களுடன் சிவகங்கைக்கு வருகின்றனர்.
சிவகங்கையை மையமாகக் கொண்டு, தென் தமிழகமெங்கும் வெள்ளையருக்கெதிரான போராட்டத் தீ பரவத் தொடங்குகிறது. அஞ்சி நடுங்கிய துரோகி தொண்டைமான், கவர்னருக்குக் கடிதம் எழுதுகிறான்: “சின்ன மருது இப்போது சிவத்தையாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு நாட்டில் கலகத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறான். திருமாவலூர், நத்தம், மேலூர் முதலிய கோட்டைகளைக் கைப்பற்றியுள்ளான். ஆங்கில அரசுக்கு உரிமையான இராணுவக் கிடங்குகளைத் தாக்கித் தளவாடங்களைக் கொள்ளையடித்துள்ளான். மேலும் ஒரு கிளர்ச்சிப் படையை இராமநாதபுரத்துக்கு அனுப்பியுள்ளான். எங்கு நோக்கினும் கலகம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.” தொண்டைமான் இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருந்த போதே சின்ன மருதுவின் மகன் சிவத்த தம்பி தலைமையிலான படை அறந்தாங்கியைக் கைப்பற்றுகிறது. புதுக்கோட்டையும் பறிபோய் விடுமோ என்ற பீதியில் அலறுகிறான் தொண்டைமான்.
ஆனால், ”துரோகிகளேயானாலும் நம் நாட்டவர்கள்” என்று புதுக்கோட்டையை விட்டு விட்டு, கம்பெனியின் நேரடி ஆட்சிப் பகுதிகளை மட்டும் தாக்குகிறது கிளர்ச்சிப் படை. தஞ்சை மாவட்டத்தில் நுழைந்து நாகூர் வரை செல்கிறது.
வடக்கே சத்தியமங்கலம் முதல் தெற்கே நெல்லை மாவட்டம் களக்காடு வரை, இப்போர் நடைபெற்றது. ஊமைத்துரை, சிவத்தையா தலைமையிலான படை, மதுரை திண்டுக்கல் பகுதியிலும், மைலப்பன்,
மருதிருவரின் தலைமையிலான படைகள் இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதியிலும் போர் புரிந்தனர். வெள்ளையர்களிடமிருந்து பல கோட்டைகள் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டன. கிளர்ச்சியாளர் களின் கொரில்லாப் போர் முறையினால் வெள்ளையர்களின் படைவரிசை பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. ‘திப்புவையே வென்று விட்டோம்’ என்ற ஆணவத்துடன் வந்த கம்பெனிப்படை பல தளபதிகளை இழந்து மூக்கறுபட்டது. அடிபட்டுக் கந்தலாகி, தட்டுத் தடுமாறி இராமநாதபுரம் வந்து சேர்கிறது கம்பெனிப் படை.
சிவகங்கைப் பாளையத்திலிருந்து ஒரு நாயின் ஆதரவைக்கூடப் பெறமுடியாது என்பதைப் புரிந்து கொண்ட கர்னல் அக்னியூ, நாயினும் கீழான பிறவிகளை தேடிக் கண்டுபிடிக்க ஒரு அறிக்கை விடுகிறான். “சின்ன மருது பரம்பரைப் பாளையக்காரன் அல்ல; சிவகங்கை மன்னனிடம் அடிமையாக வேலைக்குச் சேர்ந்தவன்… எனவே, சிவகங்கைப் பட்டத்துக்கு உரிமை உண்டு என்று நினைப்பவர்கள் எவரும் என்னைச் சந்தித்தால், இந்தக் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின் அவர்களுக்கு அரியணை வழங்கப்படும்…. மாறாக, மருதுவை யாரேனும் ஆதரித்தால் பாஞ்சாலங்குறிச்சி, விருப்பாட்சி போன்ற இடங்களில் மக்களுக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும்” என்று மிரட்டுகிறான்.
”உண்மையிலேயே அரியணைக்கு பாத்தியதை இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, அரியணைக்கு ஆசைப்படுகிறவன் யாராயிருந்தாலும் வா, பதவி தருகிறேன்” என்கிறான் அக்னியூ. இப்படி ஆசைகாட்டி ஆள்பிடிக்க வேண்டிய அளவுக்கு மருதிருவருக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததை அக்னியூவின் அறிவிப்பு நிரூபிக்கிறது.
ஜூன் 12ம் தேதி இராமநாதபுரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்கு, தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க திருச்சி பிரகடனத்தின் ‘ மூலம் உடனே பதிலளிக்கிறார் சின்ன மருது.
ஒரு பாளையத்தின் அரசுரிமைக்கு ஆசை காட்டுகிறான் அக்னியூ மருதுவோ, தென்னிந்திய மக்கள் (ஜம்பு தீபகற்பம்), மற்றும் இந்துஸ்தானத்து மக்கள் (ஜம்புத் தீவு) அனைவரின் விடுதலைக்கு அறைகூவல் விடுகிறார். மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறான் அக்னியூ.”ஆயிரம் ஆண்டு வாழ்ந்தாலும் சாவு நிச்சயம், போராட வா” என்று மக்களைத் தட்டி எழுப்புகிறார் மருது.
*சின்னமருதுவின் திருச்சிப் பிரகடனம்
இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும்
ஐம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்,
மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவை போல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரையொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகி விட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆக வேண்டும்… ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்ய வேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும்.
அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்…
ஆதலால்…. மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்துவிட வேண்டும்… இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்… இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது… இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!….
இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்… எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்…
இப்படிக்கு.
மருது பாண்டியன் பேரரசர்களின் ஊழியன்,
ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி.
1801 ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் நாள் வெள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட இவ்வறிக்கை திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் ஒட்டப்பட்டிருந்தது. இங்கே மொழி பெயர்த்து சுருக்கித் தரப்பட்டுள்ளது.
தொடரும்.