இந்தச் சூழ்நிலை பாளையக்காரர்கள் மத்தியில் கம்பெனி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு வித்திடுகிறது. எனினும் கிளர்ச்சிப் பாளையங்களின் ஒருங்கிணைவு உறுதியடையாதலால், தனியொரு பாளையமாய் வெள்ளையர்களை எதிர்ப்பதில் உள்ள சிக்கலை உணர்ந்த கட்டபொம்மன், ஜாக்சனை தன் படை பரிவாரங்களுடன் சந்திக்க முடிவு செய்கிறார். நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப்பயணத்தில் ஊர் ஊராக அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறான்.
பேச வந்த கட்டபொம்மன் மற்றும் அவரது மந்திரி தானாதிபதி சிவசுப்ரமணிய பிள்ளை இருவரையும் நிற்க வைத்து மூன்று மணி நேரம் விசாரணை செய்கிறான். இறுதியில் கணக்கு பார்த்ததில் வரி பாக்கி அதிகமில்லை என்று தெரிய வருகிறது. இருப்பினும் கட்டபொம்மனை கைது செய்ய ஜாக்சன் முற்படுகையில் அவர் தன் வீரர்களுடன் ஆங்கிலேய வீரர்களைத் தாக்கிவிட்டு தப்பிக்கிறார். பாஞ்சாலங்குறிச்சி திரும்பும் வழியில் பழிவாங்கும் நடவடிக்கையாக கம்பெனியின் ஊர்களைச் சூறையாடுகிறது கட்டபொம்மனின் படை. தானாதிபதிப் பிள்ளை மட்டும் வெள்ளையர்கள் கையில் சிக்குகிறார். அவரைச் சித்ரவதை செய்து திருச்சி சிறையில் அடைக்கிறார்கள்.
தன்னை அவமானப்படுத்திய ஜாக்சனுக்கு வீரத்துடன் பாடம் கற் பித்த கட்டபொம்மனை அடக்குவதற்கு அப்போதும் கம்பெனி தயங்கியது. காரணம், மைசூர் போர் முடியவில்லை. எனவே, கட்டபொம்மனை சென்னை வந்து விளக்கமளிக்குமாறு கோரியது. அவரது நல்லெண்ணத்தைப் பெறும் வகையில் தானாதிபதியை சிறையில் இருந்து விடுவித்ததோடு, அடாவடி ஜாக்சனைப் பதவியிலிருந்தும் நீக்கியது. இதே ஜாக்சன் பின்னாளில் கம்பெனியாலேயே பொறுக்க முடியாத அளவிற்கு ஊழல் செய்ததனால் வெளியேற்றப்படுகிறான். கட்டபொம்மனும் சென்னை சென்று சுயமரியாதையுடன் விளக்கமளித்துத் திரும்புகிறார்.
கம்பெனியின் ஒரு கலெக்டரையே மாற்ற வைத்த கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராக லூஷிங்டன் பதவியேற்கிறான். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது.
1799ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் தென்னிந்திய அளவில் கூட்டணிகளை ஏற்படுத்த முயல்கின்றனர். இதில் திண்டுக்கல் சீமைக்கு கோபால நாயக்கரும், இராமநாதபுரம் சிவகங்கைச் சீமைக்கு மருது சகோதரர்களும், நெல்லைச் சீமைக்கு கட்டபொம்மனும் தலைமையேற்கிறார்கள். இவர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்படுகின்றது. சிவகங்கையுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற லூஷிங்டனது எச்சரிக்கையை மீறி மருது சகோதரர்களின் தூதர்களை பழவனேரி எனும் இடத்தில் சந்தித்து அவர்கள் அனுப்பிய 500 கட்டபொம்மன் வீரர்களுடன் பாஞ்சாலங்குறிச்சி திரும்புகிறார்.
நெல்லைச் சீமையில் இருக்கும் கோலார்பட்டி, காடல்குடி, குளத்தூர், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை முதலிய பாளையக்காரர்கள் கட்டபொம்மனுடன் அணி சேருகின்றனர். கட்டபொம்மனுக்கு ஆதரவளிப்பதாக அவரது தூதர்களிடம் கள்ளர் நாட்டைச் சேர்ந்த பாளையக்காரர்களும் உறுதியளிக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலிருந்த சிவகிரி பாளையம் போர்த்தந்திர ரீதியில் முக்கியமான பகுதி. இதன் பாளையக்காரன், கம்பெனியை ஆதரித்த போதிலும் இவனது மகன் கட்டபொம்மனை ஆதரித்தார். எனவே இவரையே பாளையக்காரராக மாற்ற முயற்சிக்கிறார் கட்டபொம்மன்.
மேலும் கம்பெனியின் இராணுவ நடமாட்டத்தை ஒற்றறிய தானாதிபதிப் பிள்ளையின் சகோதரரையும் சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். கட்டபொம்மனது இத்தகைய அரசியல் நடவடிக்கைகளால் ஆத்திரமடைகின்றனர் கம்பெனிக்காரர்கள். இனியும் சகிக்க முடியாது என்ற நிலைக்கு லூஷிங்டன் வருகிறான். பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன.
உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறான் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார். போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப்போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைபிடிக்கிறார். ஆனால், கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்படுகிறது.
இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப்படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. இவ்வளவு சீக்கிரம் படையெடுப்பு இருக்கும் என்று கட்டபொம்மன் எதிர்பார்க்கவில்லை. பெருமளவு வீரர்களும், ஊமைத்துரையும், தானாதிபதியும் திருச்செந்தூரில் நடக்கும் ஆவணி மாதத் திருவிழாவுக்குச் சென்றிருந்த நேரமது. இராமலிங்க முதலியார் என்பவனைத் தூது அனுப்பி கட்டபொம்மனைச் சரணடையச் சொல்கிறான் பானர்மேன். சரணடைய மறுத்து கோட்டையிலிருந்த 1500 வீரர்களுடன் போரிடுகிறார் கட்டபொம்மன். தூது செல்லும் சாக்கில் கோட்டையின் பலவீனங்களை முதலியார் வேவு பார்த்துச் சொல்லியிருந்தும் பானர்மென்னால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.
முற்றுகையைப் பற்றிக் கேள்விப்பட்ட ஊமைத்துரையும், தானாதிபதிப்பிள்ளையும் சில வீரர்களும் வெள்ளையர்களின் அணிவகுப்பை உடைத்துக்கொண்டு கோட்டைக்குள் நுழைகிறார்கள். போர் தீவிரமடைகிறது. சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன் முதலான வீரர்கள் வீரமரணம் அடைகிறார்கள். சில வெள்ளைத் தளபதிகளும் கொல்லப்படுகிறார்கள். இன்னும் பல இடங்களிலிருந்து வரும் கம்பெனியின் படைகளுக்காக பானர்மென் காத்திருக்கிறான். இனிமேலும் கோட்டையில் இருப்பது உசிதமல்ல என்று கட்டபொம்மனும் ஏனையோரும் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிக்கின்றனர்.
தப்பிச் சென்றவர்களை கோலார்பட்டியில் எட்டப்பனின் படை எதிர் கொள்கிறது. அந்தச் சண்டையில் நாகலாபுரத்தின் சௌந்தரபாண்டியனும், தானாதிபதிப்பிள்ளையும் பிடிபடுகின்றனர். இருவரையும் பானர்மென் தூக்கிலிடுகிறான். தானாபதியின் தலையைத் துண்டித்து பாஞ்சாலங்குறிச்சியில் நட்டு வைக்கிறான். தனது மன்னனை விவேகத்துடன் வழிநடத்தி, அவனது துன்பங்களில் பங்கெடுத்த தானாதிபதி முதல் தியாகியானார். மருதிருவருடன் இணைந்து போரைத் தொடர்ந்து நடத்தும் நோக்கத்தில் கட்டபொம்மனும் அவரது இளவல்களும் சிவகங்கை நோக்கி விரைகின்றனர்.
இதனை எதிர்பார்த்து சிவகங்கை எல்லையில் காளாப்பூர் காட்டில் பதுங்கியிருந்த துரோகி தொண்டைமானின் படை அனைவரையும் கைது செய்கிறது. வெள்ளையனின் கையால் சாவதைவிட தற்கொலையே மேல் என்று கத்தியை எடுத்த கட்டபொம்மனின் கையை முறுக்கிக் கட்டி இழுத்துச் செல்கிறது தொண்டைமானின் படை.
கயத்தாறில் தன் மீது சுமத்தப்பட்ட ‘குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேசபக்தனுக்கே உரிய கம்பீரத்தோடு “ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று சுற்றி நின்ற பாளையக் காரர்கள் வெட்கித் தலைகுனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்கு மேடையேறினார் கட்டபொம்மன்.
கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். கட்டபொம்மன் அணியிலிருந்த நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்கள் சென்னை சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே இறந்தனர். குளத்தூர் பாளையக்காரர் வயதானவர் என்பதாலும், கோலார்பட்டி பாளையக்காரர் கண் பார்வையற்ற இளைஞர் என்பதாலும் விடுவிக்கப்பட்டனர். கிளர்ச்சியாளர்களது பாளையங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இடித்து உழுதுவிட்டு ஊரின் பெயரையே கூட மாற்றினார்கள் வெள்ளையர்கள்.
தனது அடிவருடிப் பாளையங்களையும் வெள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களது கோட்டைகளும் இடிக்கப்பட்டன. பாளையக்காரர்கள் அனைவரும் வெறும் ஜமீன்தார்கள் ஆக்கப்பட்டனர். “படை வைத்துக்கொள்ளக் கூடாது, அலங்காரத்துக்காகக் கூட இடுப்பில் வாள் இருக்கக் கூடாது, குடிமக்கள் கூட ஆயுதம் வைத்திருக்கக் கூடாது, மீறினால் மரண தண்டனை” என்று அறிவித்தான் பானர்மேன்.
இரண்டே ஆண்டுகளில் மரணத்தை வென்றது பாஞ்சாலங்குறிச்சி. பாளையங்கோட்டை சிறையைத் தகர்த்துவிட்டு ஊமைத்துரையும், சிவத்தையாவும் கட்டபொம்மனது கோட்டையை மீண்டும் எழுப்பினார்கள். மருது சகோதரர்களுடன் சேர்ந்து மீண்டும் போர் தொடங்கினார்கள்.
கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சித்திரை மாதம் அங்கே நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.
இதோ, வெள்ளி முளைக்கும் நேரத்தில் தொடங்குகிறது வெள்ளையத் தேவன் மனைவி வெள்ளையம்மாளின் ஒப்பாரி. அது ஆங்கிலேயர் காலக் கொடுமைகளை எண்ணி அழும் மக்களின் இயலாமை தோற்றுவிக்கும் சோகம். காலனியாதிக்க அடக்குமுறைக்கு எதிராகப் போராடி வீழ்ந்த வீரர்களின் காப்பியச் சோகம். இன்னும் சூரியன் உதிக்கவில்லை. அந்தக் கண்ணீரும் நிற்கவில்லை.
- பாலன்
தோழர் இது தவறானது…
கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்ற புத்தகத்தை வாங்கி படியுங்கள்…கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன். அவர் ஆங்கிலேயர்களை எதிர்க்கவில்லை…20 ஆம் நூற்றாண்டின் தமிழ்தேசியவாதிகளால் ஊதி பெருக்கபட்டது தான் கட்டபொம்மன் என்ற வரலாறு..
ஆனால் உண்மை என்னவென்றால் கட்டபொம்மன் வெள்ளையர்களை எதிக்கவிலை என்பதே…பல்வேறு ஆதாரங்களை திரட்டி அந்த நூல் எழுதப்பட்டுள்ளது…கட்டாயம் படிங்கள்..இந்த பதிவு தவறு…