விடுதலை வீரனாகிறான் ஒரு பாளையக்காரன்
வீரபாண்டிய கட்டப்பொம்மன்

 

நாள் : 17.10.1799.
இடம் : ஆங்கிலேயர்களின் கயத்தாறு இராணுவ முகாம்

“விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான். இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.”

“மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தூக்குமேடை ஏறியபோது, ‘இப்படிச் சாவதை விட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான்”.

கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேய தளபதி மேஜர் பானர்மென் தனது இராணுவ நிர்வாகக் கடிதமொன்றில் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கின்றான்.

அடுத்து வந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது. தமிழகத்தில் தமது நேரடி ஆட்சியை நிறுவுவதற்குத் தடையாக இருந்த பாளையங்கள் எனும் நிர்வாக அமைப்பை ஒழிப்பதற்கு கட்டபொம்மனின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.

 மதுரையை நாயக்க மன்னர்கள் கைப்பற்றிய 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்தமிழகத்தில் 72 பாளையங்கள் தோற்றுவிக்கப் பட்டன. உள்நாட்டுக் குழப்பங்களாலும், போர்களாலும் சீர்குலைந்த நாட்டுப்புறங்களில் இந்தப் பாளையங்கள் ஓரளவிற்கு அமைதியைக் கொண்டு வந்தன. பாளையக்காரர்கள் ஒரு சிற்றரசருக்குரிய உரிமைகளை அனுபவித்து வந்தனர். வரி தண்டும் உரிமை, காவல் உரிமை, நீதி வழங்கும் உரிமை முதலானவற்றை வாழையடி வாழையாகப் பெற்று வந்தனர். வசூலிக்கும் வரியில் மூன்றில் ஒரு பங்கு மன்னனுக்கும், ஒரு பங்கு படைவீரர்களைப் பராமரிப்பதற்கும், ஒரு பங்கு தனது செலவிற்கும் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேவைப்படும் சமயங்களில் தனது படை வீரர்களை மன்னரது ஆணைக்கிணங்க அனுப்ப வேண்டும். பாளையக்காரர்களை ஐரோப்பாவிலும், சீனாவிலும் இருந்த யுத்தபிரபுக்களோடும் ஒப்பிடலாம்.

18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாயக்க மன்னர்கள் வீழ்ச்சியடைய பாளையக்காரர்கள் தங்களது சுயேச்சைத்தன்மையை வளர்த்துக் கொண்டார்கள். இதற்கும் சற்று முன்பாகவே முகலாய பேரரசு தமிழகத்தைப் போரில் வென்று ஆற்காட்டு நவாப்பை தமிழகத்தின் கவர்னராக நியமித்தது. 1707இல் ஔரங்கசீப்பின் மரணத்திற்குப் பின்னர் முகலாய பேரரசும் வீழ்ச்சியடைய நவாப் சுயேச்சையாக ஆள ஆரம் பித்தான். பாளையக்காரர்கள் அவனது கட்டுப்பாட்டின் கீழ் வந்தார்கள். பேரரசன் ஔரங்கசீப்புக்கு முன்னதாகவே விவசாயிகள் மீதான முகலாயப் பேரரசின் வரிவிதிப்பு கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றது.

இலட்சக்கணக்கில் பெருகிவிட்ட படைகளுக்கு வேலையும், கூலியும் கொடுக்க இயலாத நிலையில் வீரர்கள் நாட்டுப்புறங்களைக் கொள்ளையடித்து காலம் தள்ளினர். மறுபுறம் மைய அரசு கேட்கும் அதிக வரிக்காக நிலக்கிழார்கள் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்தனர். விவசாயத்தை மையமாகக் கொண்ட நாட்டுப்புற மக்களுக்கு விளைச்சலில் மிஞ்சியது ஓரளவே. இத்துடன் பஞ்சங்களும் படாதபாடு படுத்தின. இந்தப் பின்னணியில்தான் முகலாயர்களால் நியமிக்கப்பட்ட ஆற்காட்டு நவாப் பாளையக்காரர்களிடம் அதிக வரி வசூலிக்க ஆரம் பித்தான். எதிர்த்தவர்களை அடக்க கம்பெனியின் படையை வாடகை கொடுத்து பயன்படுத்த ஆரம்பித்தான்.

வணிகம் செய்ய வந்த கம்பெனியோ தனது பொருட்களுக்குரிய சந்தை குறுகிய அளவில் இருந்ததால் லாபம் பெறுவதற்கும் தனது வணிக ஆதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கும் உள்நாட்டு மன்னர்களின் ஆட்சி விவகாரங்களில் நுழைய ஆரம்பித்தது. தனக்காக கம்பெனி செய்த போர்களுக்காகச் செலுத்த வேண்டிய பணத்தை அடைக்க முடியாத நவாப், இறுதியில் வரி வசூலிக்கும் உரிமையை நேரடியாக கம்பெனிக்கே கொடுக்க ஆரம்பித்தான். 1792ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தென்தமிழகத்தின் ஆட்சியுரிமை நேரடியாக கம்பெனிக்குச் சென்றது. இது ஒப்பந்தமல்ல. கம்பெனியின் நிபந்தனையை நவாப் ஏற்றுக் கொண்டான் என்பதே உண்மை.

ஏற்கெனவே பாளையக்காரர்கள் வசூலித்து வந்த வரியும் அதிகமாகத்தான் இருந்தது. எனினும் மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால் அவர்கள் சற்று நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் கம்பெனி ஆட்சியில் விளைச்சல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆயுத பலங்கொண்டு கறாராக வரி வசூலிக்கப்பட்டது. நவாப் மற்றும் கம்பெனியின் இந்தக் கொடுமையினை எதிர்த்து 1750களில் பூலித்தேவன் தலைமையில் சில பாளையங்கள் போரிட்டன.

1772இல் சிவகங்கை சீமையின் முத்து வடுகநாதர், கம்பெனிப் படைகளை எதிர்த்துப் போரிட்டு மரணமடைந்தார். அதன் பின் விருப்பாட்சிக்கு தப்பிச் செல்லும் வேலுநாச்சியாரும், மருது சகோதரர்களும் ஹைதர் அலியின் பாதுகாப்பில் 7 ஆண்டுகள் இருந்து விட்டு அவரது உதவியுடன் சிவகங்கையை மீண்டும் கைப்பற்றி நவாப் பின் படையை வெளியேற்றுகிறார்கள். கட்டபொம்மனது தாத்தாவும், தந்தையும் கூட கட்டபொம்மனைப் போல போராடவில்லை என்றாலும் கப்பம் கட்ட இயலாமல் தலைமறைவாயிருந்திருக்கிறார்கள்; கப்பம் கட்டும் வரை சில பணயக் கைதிகளையும் அளித்திருக்கிறார்கள். இப்படிப் பாளையக்காரர்கள் மட்டுமல்ல, மக்களும் கம்பெனியின் கொடூர ஆட்சி குறித்து வெறுப்படைய ஆரம்பத்தார்கள். கம்பெனி முன்னேறிய ராணுவத்தைக் வைத்திருந்த போதிலும் அவர்கள் வெல்லப்பட முடியாதவர்கள் அல்ல என்பதை ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் தென்னிந்திய மக்களுக்கு நிரூபித்துக் கொண்டிருந்த நேரம் அது.

 இந்தச் சூழ்நிலையில்தான் 1791-ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது முப்பதாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார். இதே காலத்தில்தான் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலி சீமையிலும் ஏற்படுகிறது. வரி வசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்றைக்கும் இருக்கும் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் தோற்றுவாய் இதுதான். அன்று கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்கு பாளையக்காரர்களைத் தடைக்கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்க வேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது. அதற்குத் தோதாக அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்கு தண்டனையும் அதிக வரியும் விதிக்கப்படுகின்றது.

இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது சில பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் பகுதிகள் துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன. அதே போன்று வானம் பார்த்த புஞ்சை பூமியான பாஞ்சாலங்குறிச்சி பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி போன்ற வளமான பகுதிகளை கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது. கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்கு தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.

தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரிவசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை ‘கொள்ளை’ என்று குற்றம் சாட்டியது. இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம், திருநெல்வேலி பகுதிகளுக்கு ஜாக்சன் எனும் ரவுடி கலெக்டராக நியமிக்கப்படுகிறான். வணிகம் செய்து இலாபமீட்டுவதைக் காட்டிலும் மக்களை நேரடியாகக் கொள்ளையடிப்பதையே தனது வணிகக் கொள்கையாக வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அதற்குப் பொருத்தமான நபர்களையே அதிகாரிகளாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. வரி வசூல் இலக்கை வசூல் செய்து தர அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அவர்கள் சொந்த முறையில் கொள்ளையடித்து சொத்து சேர்த்துக் கொள்ளவும் அனுமதித்தது.

தன்னுடைய அடாவடித்தனங்களுக்குப் பணிய மறுத்த கட்டபொம்மன் மீது உடனே படையெடுக்க வேண்டுமென்று ஜாக்சன் மேலிடத்திற்கு கடிதம் எழுதுகின்றான். திப்புவை ஒழிக்க தன் சக்திகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டிருந்த கம்பெனி நிர்வாகம், ஜாக்சனின் கோரிக்கையை வேறு வழியின்றி மறுத்தது. கட்டபொம்மனிடம் பேசித் தீர்க்குமாறு அறிவுறுத்தியது. உடனே, ஜாக்சன் அநாகரீகமான மொழியில் கட்டபொம்மனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் வரிபாக்கி நிறைய சேர்ந்து விட்டதென்றும், கட்டபொம்மனது நடவடிக்கைகள் கம்பெனிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதெனவும், அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் தன்னை இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றான்.

இச்சம்பவம் நடைபெற்ற 1798ஆம் ஆண்டு தென்மாவட்டங்கள் மழையின்றிப் பஞ்சத்தால் தவித்த காலம். வடமாவட்டங்களில் இருந்து மக்கள் உணவு தானியங்களைக் கொண்டு வருவதற்குக் கூட மாட்டு வண்டிகள் இல்லை. அத்தனையும் கம்பெனியின் மைசூர் படையெடுப்பற்காகக் கொண்டு செல்லப்பட்டு விட்டன. சோற்றுக்கே வழியில்லாமல் தென்மாவட்ட மக்கள் மடிந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான் கட்டபொம்மனது வரி பாக்கியை ஜாக்சன் ஈவிரக்கமின்றி வசூலிக்க முற்படுகிறான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here