பகத்சிங்
18,19-ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இளம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு நிசாம், மருது – தொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால், இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது. எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்குவதன் மூலமாகவே நமத்துப் போகச் செய்துவிட முடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமலாக்கினார்கள் வெள்ளையர்கள்.
அதாவது துரோகிகளையே தியாகிகளாக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளே’விடுதலையைக்’ காணும்படி மக்களைப் பயிற்றுவிக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டார்கள். உண்மையான ஆட்சியதிகாரத்தைத் தம் கையில் வைத்துக் கொண்டு மன்னராட்சிக்குரிய அடையாளங்களை மட்டும் நீடிக்க அனுமதித்ததன் மூலம் துரோகிகளைத் திருப்திப்படுத்திய பிரிட்டிஷார், அதே உத்தியை மக்களுக்கும் விரிவுபடுத்தினார்கள். இதன் விளைவாக 18,19ஆம் நூற்றாண்டுகளில் துரோகிகள் எனக் கருதப்பட்டோரின் வழித் தோன்றல்கள், 20-ஆம் நூற்றாண்டில் சமரசவாதிகளாக அவதரித்தார்கள்.
இந்தியர்களுடைய மனக்குறைகளை மேன்மை தங்கிய பிரிட்டிஷ் அரியணைக்கு மனுச்செய்து தெரிவிக்கும் நோக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் 1885-இல் வெள்ளையர்களாலேயே உருவாக்கப்பட்டது. பாரம்பரியமிக்க பிரிட்டிஷ் அடிவருடிகளான நிலப்பிரபுக்களின் நலனை மட்டுமின்றி, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து ஆதாயமடைய விரும்பிய அனைத்திந்திய வர்க்கமான தரகு முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இத்தகையதொரு அரசியல் அமைப்பு தேவைப்பட்டது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் இந்தத் தரகுக் கும்பலின் முதலாளித்துவ வர்க்கப் பின்புலத்தையும், இவர்களுக்கிடையிலான உறவையும் புரிந்துகொள்ளாத எவரும் இந்திய விடுதலையின் மீது காங்கிரசும் காந்தியும் நிலைநாட்டி இருந்த ஏகபோகத்தை உடைக்க முடியாது என்ற நிலையும் தோன்றியது. இந்திய விடுதலை இயக்கத்தினுள் காந்தி நுழைந்த பிறகு, அவருடைய அகிம்சை வழியிலான போராட்ட முறை மூலம்தான், இந்திய விடுதலை இயக்கம் உண்மையான மக்கள்திரள் இயக்கமாக மாறியது என்ற மிகப்பெரிய வரலாற்றுப் புரட்டு திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது.
இது, இரண்டு நூற்றாண்டுகளாக ஆயுதம்தாங்கிப் போராடிய லட்சோப லட்சம் மக்களின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்யும் அயோக்கியத்தனம்.
”வன்முறைப் பாதையா, அகிம்சைப் பாதையா” எனப் போராட்ட வழிமுறைகளில்தான் விடுதலை இயக்கத்தில் வேறுபாடு நிலவியதைப் போலவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பொது நோக்கில் அனைவருக்கிடையிலும் ஒற்றுமை நிலவியதைப் போலவும் ஒரு பொய்ச்சித்திரத்தைப் பதிய வைத்திருக்கிறது நமது அதிகாரபூர்வ வரலாறு. உண்மையில், ஆங்கில ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்து கொண்ட காங்கிரசு, முசுலிம் லீக் ஆகிய தரகு முதலாளித்துவ அரசியல் சக்திகள், எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை சமருக்கிழுத்த தேசியவாத சக்திகள் என இரு போக்குகள்தான் 20-ஆம் நூற்றாண்டின் விடுதலை இயக்க வரலாற்றில் களத்திலிருந்தன.
1921, 1930,1942 எனஏறத்தாழ பத்தாண்டு இடைவெளிகளில் ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்டமறுப்பு இயக்கம்’, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் என மூன்று போராட்ட இயக்கங்கள் காந்தியின் சத்தியாக்கிரக முறையில் துவக்கி நடத்தப்பட்டன. போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் மக்கள் இயல்பாக போலிசின் தாக்குதல்களுக்கு எதிர்த்தாக்குதல் கொடுக்கத் துவங்கினால், அந்நிய ஆட்சியை தம் சொந்த நடவடிக்கையின் மூலம் தூக்கியெறிய முயன்றால், மறுகணமே காந்தி போராட்டத்தை நிறுத்துவார். காந்திக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுவதற்கு முன், அரசு அவரைக் கைது செய்து விடும். பிறகு, ‘சென்டிமெண்ட் அலை’ அடிக்கத் துவங்கி, இறுதியில் இந்திய விடுதலையை மறந்து காந்தி விடுதலையாவதே தேசத்தின் லட்சியமாகி விடும். இதுதான் தியாக வேடமணிந்த துரோகத்தின் சுருக்கமான வரலாறு.
இந்தத் துரோகத்துக்கு எதிராக, சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பையும், உண்மையான நாட்டு விடுதலையையும் முன்வைத்துப் போராடிய தியாகம், பகத்சிங் என்ற இளைஞனின் வடிவில் விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழைகிறது.
‘…நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பத்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்.” சிறையில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்ட நிலையில், சுகதேவ் எழுதிய ஒரு கடிதத்திற்கு, பகத்சிங் அளித்த பதில் இது. இத்தகையதொரு பதிலை 18,19ஆம் நூற்றாண்டுகளின் வீரர்கள் கூறியிருக்க முடியாது. முந்தைய நூற்றாண்டுகளில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிய திப்பு முதல் மருது வரையிலான வீரர்களோ, பல்லாயிரக் கணக்கில் போராடி உயிர்நீத்த விவசாயிகளோ, சிப்பாய்களோ, தமது வரலாற்றுப் பாத்திரத்தை உணர்ந்திருக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை.
தனது வரலாற்றுக் கடமையை அடக்கத்துடன் புரிந்து வைத்திருந்த ஒரு அரசியல் போராளியாக, ஆனால், தன்னை சமூகத்திற்கு மேல் நிறுத்திப் பார்த்துக்கொள்ளாத ஒரு வீரனாக, தனது தியாகத்தின் அரசியல் பயனைக்கூட ஆராய்ந்து புரிந்துகொள்ள முடிந்த அற்புதமாக பகத்சிங் இந்திய விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழைகிறான்.
பகத்சிங்கை வெறுமனே நாட்டுக்காக தூக்குமேடையேறிய வீரராக மட்டும் சித்தரிப்பது அவரது வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பதாகும். இளம் வயதில் மரணத்திற்கு அஞ்சாத உறுதியே வரலாற்று நோக்கில் ஒருவருக்கு சிறப்படத்தை தந்து விடாது. ஏனெனில் காந்தியைச் சுட்டுக் கொன்று தூக்குமேடையேறிய கோட்சேயும் கூட மரணத்திற்கு அஞ்சாத இளைஞன்தான்.உயிரை துறப்பதாலல்ல, உயிரைத் துறப்பதற்கான நோக்கத்திலேதான் வீரமும், தியாகமும் அடங்கியிருக்கிறது. பகத்சிங்கின் நோக்கமும், லட்சியமும்தான் அவரது மரணத்தை வரலாறாக்கியது. இளைஞர்களை புரட்சிகர அரசியலுக்கு கவர்ந்திழுத்தது; இன்றளவும் கவர்ந்திழுக்கிறது. பகத்சிங்கினுடைய காலத்தின் தேவைதான் என்ன?
முந்தைய பதிவு: