விடுதலைப் போரின் விடிவெள்ளி

திப்புசுல்தான்

கிழக்கிந்திய கம்பெனியின் குலை நடுக்கம்’, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. இந்தியாவில் கும்பனியாட்சி நீடிக்க முடியுமா?’ என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரை தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சு படைகள். ஆனால், அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பனியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேய கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டி விடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயர் பின்னால் அணிதிரண்டனர்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர் கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. 30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது”, என்று பின்னர் குறிப் பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.

பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது. மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக் கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அதுவரை திப்புவின் இரு மகன்களை பணயக்கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் காரன்வாலிஸ். பணயத் தொகையை அடைத்து கும்பனி கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாக தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்து விட்டார்.

“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்” என்று 1798இல் கும்பனி தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவை போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசி போரில்’ பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பனியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

இதுதான் திப்புவின் இறுதிப் போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப் போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர். அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும். பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம் படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாக தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தை காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்ட வேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை. ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயருக்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு. துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்ப வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.

திப்புவின் வரலாறு தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here