ஏற்கனவே அரைவயிற்றுக் கஞ்சி ஊத்தும் வேலையும், கொரோனா ஊரடங்கால் பறிபோய் வாழ்வாதாரம் அற்று மக்கள் நிலைகுலைந்து போன நிலையிலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்களது வாழ்க்கைத் தேவைக்கு எந்த அரசும் உதவ முன்வரவில்லை. கொத்து கொத்தாக செத்து புதைக்க இடமின்றி நாய் கடித்து குதறிய போது பிணத்தை எடுத்துக்கூட போடவில்லை.

கொரோனா வைரஸ் தொற்று முதல் அலையில் தொடங்கி இரண்டாம் அலையில் வேகமெடுத்தது. இந்த இரண்டு அலையின் பாதிப்புக்களிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்கான சுகாதாரத் திட்டங்களையோ, மருத்துவ கட்டுமானங்களையோ மோடி அரசு ஏற்படுத்தவில்லை. தற்போது டெல்டா பிளஸ் எனும் பெயரில் மூன்றாம் அலையின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இப்போதும், மோடி அரசுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. கொரோனாவைக் காட்டி முதலாளிகள் மீது கவலை கொள்கிறார். அதன் விளைவு, வரிச்சலுகைகளை வாரி இறைக்கும் அறிவிப்புகள் மட்டும் வந்து கொண்டே இருக்கிறது.

நாட்டின் வரிவிதிப்பில் முன்னணியில் இருக்கிறது பெட்ரோலியப் பொருட்கள். பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தாண்டிவிட்டது. இதில் சரக்கு வரி, கலால் வரி, வாட் வரி, டீலர் கமிசன் என உற்பத்தி விலையை விட 194% வரியாகப் புடுங்கிக் கொள்கின்றன மத்திய மாநில அரசுகள். சமையல் எண்ணெய் விலையும் தங்கம் போல் நாளுக்கு நாள் உயர்கிறது. ஓராண்டில் மட்டும் 35% விலை உயர்ந்துள்ளது. இதில் எண்ணெய் மீதான இறக்குமதி வரி மட்டுமே 32.5%. இதன் பிறகு அரசுகள் அதன் மீது விதிக்கும் வரிகள் தனி. பெட்ரோல் தங்கம் போல் சமையல் எண்ணெய்க்குள்ளும் வரி அரசியல் இருக்கிறது.

1990-களின் முற்பகுதிகள் வரை இந்தியா எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருந்தது. உலகமயத்தால் ஏற்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களுக்கு ஏற்ப ஆட்சியாளர்கள் கொள்கை முடிவில் மாற்றங்கள் செய்தனர். அதற்கேற்ற வகையில் கடலை, எள், தேங்காய் கொண்டு தயாரிக்கப்படும் பாரம்பரிய எண்ணெய் உற்பத்தியை நசுக்கி, இறக்குமதி சார்ந்த பாமாயில், சூரியகாந்தி எண்ணெயை அதிகமாக்க விளம்பரம் செய்தனர். அதன் விளைவு இன்று நாட்டின் எண்ணெய்த் தேவையில் கிட்டத்தட்ட 65%  இறக்குமதியைச் சார்ந்துள்ளோம். இந்த கொள்கை முடிவுகள் தான் அரிசி, பருப்பு, கோதுமை என அனைத்து உணவுப் பொருட்கள் விலையேற்றத்திற்கும் காரணம்.

மோடியுடன் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
நாட்டை கூறு போட்டு விற்க திட்டம் போடும் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

ஏற்கனவே அரைவயிற்றுக் கஞ்சி ஊத்தும் வேலையும், கொரோனா ஊரடங்கால் பறிபோய் வாழ்வாதாரம் அற்று மக்கள் நிலைகுலைந்து போன நிலையிலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்களது வாழ்க்கைத் தேவைக்கு எந்த அரசும் உதவ முன்வரவில்லை. கொத்து கொத்தாக செத்து புதைக்க இடமின்றி நாய் கடித்து குதறிய போது பிணத்தை எடுத்துக்கூட போடவில்லை. ஆனால், முதலாளிகளது லாபம் குறைந்து போகக் கூடாது என்பதில் மட்டும் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது மோடி, நிர்மலா மாமி கும்பல்.

கடந்த ஆண்டு கோரோனாவில், படோடமாக அறிவிக்கப்பட்ட 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களால் மக்களுக்கு கொண்டைக்கடலையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. தற்போதும் மத்திய அரசு பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் என்ற பெயரில், அறிவித்துள்ள திட்டங்களால் மக்களுக்கு கடலை கிடைப்பது என்பதை விட, கோவணத்தை உருவும் வகையில் உள்ளது.

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகள் மீண்டு வருவதற்கு 1.1 லட்சம் கோடி கடன், மருத்துவ உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த 100 கோடி கடன், தொழில்துறைக்கு அரசு  உத்திரவாதத்துடன் 1.5 லட்சம் கோடி அவசரகால கடன், மற்ற துறைகளுக்கு 60 ஆயிரம் கோடி கடன், 5 லட்சம் வெளிநாட்டு பயணிகளுக்கு இலவச விசா என அரசின் பெயரால் கடன் வாங்கி முதலாளிகளுக்கு படையல் வைக்கும் திட்டங்கள் தான். ஏற்கனவே முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகள் கடனைக் கொடுத்து வாராக்கடனாக மக்கள் தலையில் எழுதினர். இந்தக் கடனால் ஏற்படும் கூடுதல் நிதிச் சுமைகள் வரியாக மீண்டும் மக்கள் தலை மேல் தான் விழும்.

அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் மக்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளின் மீதும் வரிக்கு மேல் வரியைப் போடுகிறது. வீதியில் கொட்டும் குப்பைக்குக் கூட வரி வசூலிக்கிறது அரசு. விவசாயத்திற்கு டிராக்டர் வாங்கிய கடனைக் கட்டாத விவசாயியை குண்டர்களை வைத்து தாக்குகிறது. கல்விக்கும், விவசாயத்திற்கும் ஒரு சில லட்சங்களை கடன் வாங்கிவிட்டு, வருமானமில்லாததால் கட்டமுடியாத ஏழைகளின் படங்களை பேனர் அடித்து கடைவீதியில் வைத்து அசிங்கப்படுத்துகிறது. தந்தை வாங்கிய கடனை மகன் கட்ட முடியாததால், அவரது கணக்கை முடக்கி, மருத்துவம் செய்து கொள்ள பணம் எடுக்க முடியாமல் செய்து கொல்கிறது வங்கிகள். கொரோனா நெருக்கடியில் வருமானமின்றி இருக்கும் போதும் 1000, 2000 ரூபாய் கடன் தவணையைக் கேட்டு அசிங்கமாய்ப் பேசி மிரட்டுகின்றன நுண்கடன் நிறுவனங்கள். விவசாயத்தால் போண்டியாகி கடன் கட்ட முடியாமல் நேர்மைக்குப் பயந்து தற்கொலை செய்து கொள்கின்றனர் விவசாயிகள்.

இயற்கை வளங்களை சூறையாடும் தரகு முதலாளி அதானியுடன் மோடி!

ஆனால், பல்லாயிரம் கோடிகளைக் கடன் வாங்கி விட்டு, வாங்கிய கடனுக்கு வட்டியையும், தொழில் செய்து சம்பாதிக்கும் பணத்தில் வரியைக் கூட கட்டாமல் ஏய்க்கும் முதலாளிகளோ வெட்கப்படுவதில்லை. வெளிநாடுகளில் பத்திரமாக பதுங்கிக் கொள்கின்றனர். அம்பானி ரிலையன்ஸின் 2020-21 ஆண்டின் லாபம், ரூ.5,32,739 கோடியாகும். இந்த லாபத்திற்கான வரி மதிப்பீடு ரூ.13,726 கோடிகள் ஆனால், அந்நிறுவனம் செலுத்தியது வெறும், 1722 கோடி (12.5%) மட்டுமே என தி இந்து பிஸினஸ்லைன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி மூலம் அரசு கஜானாவுக்கு வந்த பணம், 2015-ல் ரூ.72000 கோடி, 2020-21 ல், ரூ.3,60,000 கோடி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வரி வருவாய் ரூ.35,000 கோடியாகும். அது தவிர, ஜி.எஸ்.டி மூலம் மாதத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கு மேல் கஜானாவிற்கு வருகிறது. கொரோனா ஊரடங்கில் மக்கள் வேலையிழந்து பல லட்சம் மக்கள் ஆயிரக்கணக்கான கி.மீ. நடந்து செத்துக் கொண்டிருந்த ஏப்ரல் மாதத்தில், அதிகபட்சமாக ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடியை வரியாகப் பிடுங்கியுள்ளது மோடி அரசு. உண்மையில் மக்களிடம் கொள்ளையடிக்கும் வரிகள் மூலம் தான் வரி ஏய்ப்பு செய்யும் முதலாளிகளை வரிச்சலுகை, மானியம், தள்ளுபடி என பணத்தால் குளிப்பாட்டுகிறது மோடி கும்பல். ஆனால், அந்த மக்களுக்கான நலனுக்கென திட்டங்கள் போடுவதற்கு காசில்லை என கைவிரிக்கிறது.

முதலாளிகளுக்கு கடன் கொடுத்து வங்கிகள் நட்டமடைவது மட்டுமல்ல, திவாலான முதலாளிகளைத் தூக்கி விடுவதற்காகவும் வங்கிகள் நட்டத்தைச் சந்திக்கின்றன. குறிப்பாக, வீடியோகான் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.71,433 கோடி கட்ட முடியாமல் திவால் நோட்டீஸ் கொடுத்த போது அந்நிறுவனத்தை ரூ.2,963 கோடி கொடுத்து கைப்பற்றியது கொலைகார ஸ்டெர்லைட். இதன் காரணமாக மக்கள் மீது சுமத்தப்பட்ட கடன், ரூ.68,471 கோடியாகும். அதே போல் ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கருக்குச் சொந்தமான நிறுவனங்களின் பெயரில் வாங்கிய கடன் ரூ. 4863 கோடி, இதில் திரும்ப பெறப்பட்டது வெறும் ரூ.323 கோடி மட்டுமே. இதன் மூலம் மக்கள் பெயரில் கணக்கு எழுதப்பட்ட பணம், ரூ. 4540 கோடியாகும். இவை தவிர, டி.எச்.எப்.எல் நிறுவனத்திற்கு ரூ.63000 கோடி, பூஷன் ஸ்டீல் – ரூ.18000 கோடி,  எஸ்ஸார் பவர் – ரூ.9400 கோடி, ருச்சி சோயா – ரூ.9400 கோடி என கடன் தள்ளுபடி பட்டியல் இன்னும் நீள்கிறது. மோடியின் ஆட்சியில் வங்கிக் கடன் மோசடி 5 மடங்கு உயர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படி முதலாளிகளுக்கு கொட்டிக் கொடுப்பதைப் பற்றி மூச்சு விடாத மோடி கும்பல், ஒரே மாதத்தில் பெட்ரோல் மூலம் வழிப்பறி செய்த 35,000 கோடியை தடுப்பூசி திட்டத்துக்கு ஒதுக்கி விட்டு, அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவதாக பீற்றிக் கொள்கிறது. மக்களிடம் வரியாய்ப் பிடுங்கிய பணத்தை வைத்துத் தான் மக்களுக்கான தடுப்பூசிக்கு செலவு செய்கிறது. நமது எலும்பை உடைத்துத் தான் நமக்கு சூப் கொடுக்கிறது.

அது மட்டுமின்றி, கிடைக்கும் கூலியில் 5, 10 என மிச்சம் பிடித்து சேமிக்கும் மக்களின் வங்கிச் சேமிப்பை எடுக்கவும் வரி போடுகிறது. ஏ.டி.எம்.-ல் மாதத்திற்கு 4 முறைக்கு மேல் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ஜி.எஸ்.டி-யுடன் ரூ.15. 10 காசோலைகளுக்கு மேல் அடுத்த 10 காசோலைகளுக்கு ரூ. 40/- என சேவைக்கட்டணம். ஆனால் எந்த சேவையும் இல்லாமல், மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி ஒரு மாதத்தில் 1000 கோடிக்கு மேல் ஏழைகளின் பணத்தையும் வங்கிகள் கொள்ளையடிக்கின்றன.

முதலாளிகள் வளர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்! நாட்டின் பொருளாதாரமோ வீழ்ந்துக் கொண்டிருக்கிறது.

கொரோனாவில் மக்கள் திணறிக் கொண்டிருக்கும் போதும், கொரொனா தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் மீது ஜி.எஸ்.டி வரி போடுகிறது. கொரோனா சிகிச்சைப் பொருட்களுக்கு 15.2%, கிருமி நாசினிக்கு 55.8%, பாதுகாப்பு உடைகள் மீது 13.3%, காலி ஆக்சிஜன் சிலிண்டருக்கு 9.8% மருத்துவ ஆக்சிஜனுக்கு 7.5% என வரி விதித்தது. இந்த வரி விகிதம் முன்னேறிய அமெரிக்காவை-விட 7 மடங்கு அதிகம் பின் தங்கிய ஆப்கானிஸ்தானை விட 60% அதிகம்.

இப்படி கொரோனா நெருக்கடியிலும் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றிக் கொண்டே போகிறது. ஆனால், கார்ப்பரேட்டுக்கள் மீதான வரியோ, அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளை விட குறைவு. அதாவது, OECD என்று சொல்லப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் கூட்டமைப்பில் இருக்கும் வளர்ச்சியடைந்த 37 நாடுகளின் சராசரி வரி விகிதத்தை 15% குறைவானதாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்டுக்களின் மீது ஏகாதிபத்திய நாடுகளில் விதிக்கப்படுவதைப் போல 65 சதவீதம் வரி விதிக்கப்பட்டால் 2020-21 ஆம் ஆண்டுகளில் நாட்டின் வரி வசூல் 150 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.

இந்தக் குறைவான வரி விகிதத்தைக் கூட கட்டாமல், மறுபுறம் பல லட்சம் கோடிகள் கடன் தள்ளுபடியைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றுகின்றனர் முதலாளிகள். அவர்களைக் காப்பாற்றுவதற்கு ஏற்ற வகையில் சட்டங்களை மாற்றி அமைத்துக் கொண்டே வருகின்றனர் ஆட்சியாளர்கள். ஆனால், மக்கள் வாங்கும் பொருட்களின் மீது அல்லாமல் மக்கள் தூக்கியெறியும் குப்பை வரையிலும் வரியைத் திணித்து மக்களைப் போண்டியாக்குகிறது அரசு.

திருவிதாங்கூர் மன்னன் பெண்களுக்கு முலைவரி போட்டான். அந்த வரியைக் கட்டமுடியாது; மார்பு இருந்தால் தானே வரி கேட்பாய் என்று சொல்லி தனது மார்பை அறுத்து எறிந்தாள் வீரப்பெண் நாஞ்செலி. அதனால் வரியை ரத்து செய்தான் மன்னன் என்பது வரலாறு. இன்று நமது போராட்டமோ, வரிக் கொள்ளையின் மூலம் உயிர்வாழும் முதலாளித்துவ அரசை வேரறுப்பதற்கானதாக இருக்க வேண்டும். அது தான் வரிக் கொள்ளையற்ற சமூகம், புதிய ஜனநாயக சமூகம் படைப்பதற்கான புதிய வரலாற்றுக்கான தொடக்கமாக அமையும்.

இவண்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,

தமிழ்நாடுபுதுச்சேரி

தொடர்புக்கு: 94444 42374.

 

                                                       

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here