திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்&பால் கடல் உணவு பதப்படுத்தப்படும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டும் எத்தனை தொழிலாளர்கள் இறந்துள்ளார்கள் என்ற செய்தி மறைக்கப்பட்டும் அரசு முதலாளிக்கு ஆதரவாய் தொழிலாளர்களை அனாதையாய் நிறுத்தியுள்ளது.
கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள நிறுவனத்தில் ‘வடமாநிலத்’ தொழிலாளர்கள் தானே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கிராமம் மக்கள் கண்டும் காணாதுமாய் கடந்து சென்று விட்டார்கள். பிழைப்புவாத அரசியல்வாதிகளோ வட மாநில தொழிலாளர்கள் தானே, இதில் அரசியல் செய்ய முடியாது என சிறிது நேரம் தனது இருப்பை காண்பித்து விட்டு காணாமல் போய்விட்டார்கள். இறந்ததெல்லாம் இளம் பெண் தொழிலாளர்கள். பாவம் வடமாநில தொழிலாளர்களின் பிணங்கள் கேட்பாரற்று பிணவறையில் அழுது கொண்டிருக்கிறது.
000
வடமாநில தொழிலாளர்கள் செத்தால் எனக்கென்ன?
எதுவும் கேட்காமல் கடந்து சென்றாய்…!
ஆலையின் அம்மோனியா நச்சுக்காற்று உயிர்களை அறுத்துச் சென்றது!
பெயரையோ, பூர்வீகத்தையோ விசாரிக்கவில்லை!.
நம் வீட்டுத் தெருவில் யாரும் சாகவில்லை!
மனசாட்சியும் உயிருடன் தான் இருக்கிறதா?
நேற்று வரை இறால்களைப் பதப்படுத்திய கைகள்!
இன்று வெள்ளைத் துணியால் பாதுகாக்கப்படுகிறது!
அவை “வடமாநிலக் கைகள்” தான்
ஆனால் அவையும் உழைப்பின் கைகளே!
பசிக்காக வந்தாள்
குடும்பத்திற்காக வந்தாள்!
வியர்வை மட்டுமே அடையாளமாக கொண்டவள்!
முதலாளித்துவ லாபவெறியால்
உயிரையும் இழந்து கிடக்கிறாள்இன்று!
தொழிலாளிக்கு
ஏது மாவட்டம்?
ஏது மாநிலம்?
ஏது நாடு?
அவன் அவள் முகவரி எல்லாம் தொழிற்சாலையின் கதவோடு முடிவடைகிறது.
கனவுகள் எல்லாம் மாத சம்பளத்தில் தொடங்குகின்றன.
இன்று பிணவறையில் முடிந்துள்ளன!
ஒருவன் இறந்தான்(ள்)!
“அவன் நம் ஆள் இல்லை”என்று
விலகி நிற்கும் சமூகமே!,
நாளை மரணம் உன் கதவை தட்டும்
அது உன் ஜாதி, மதம், மொழி, மாநிலம்
கேட்டு நிற்காது! விடாது!
வடமாநில தொழிலாளர்கள் செத்தால் எனக்கென்ன?
நான் சமூகத்திடம் திருப்பிக் கேட்கிறேன்
மனிதன் செத்தால், உன் சக வர்க்கம்
செத்தால்கூட எனக்கென்ன வென்றால்
உன்னுள் இன்னும் மனிதம்
உயிரோடு இருக்கிறதா?
செந்தில், டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் தொழிலாளி.







சிறப்பு அருமை தோழரே..
மத்திய மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது என்பது இது போன்ற அபாயங்களை பற்றிய ஆலையின் சுற்றியுள்ள பகுதி மக்கள் யாரும் எந்தவித கவலையும் பட முகாந்திரத்தை உருவாக்காது என்பதால் தான்.. யாரோ இந்திக்காரன் இறந்துவிட்டானாம்பா என்று அனிச்சையாகவே சென்று விடும் சூழலை உருவாக்கும்,
தற்போதும் திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலையிலும் அது தான் நடைபெற்றுள்ளது..
எதைப் பற்றியும் நம் மக்களுக்கு கவலை இருக்காது என்பது தான் நிதர்சனம்..
என் ஆயில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு கூட அவன் எவனோ ஒருவன் ஏதோ ஒரு மாநிலத்தை சேர்ந்தவன் அவன் நமது ஊர் அல்ல, நமது உறவுக்காரன் அல்ல என்ற பார்வை தான்
நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிலாளி என்ற வர்க்க சிந்தனையில் ஒன்றிணையாமல் இருப்பதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த பலவித கான்ட்ராக்ட் முறைகள் தான் தொழிலாளி வர்க்கத்தை ஒன்று சேர விடாமல் தடுக்கிறது..
தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்.