தற்போதைய அரசாங்கத்தின் அதிதீவிரமான உந்துதல்களான தனியார்மயமாக்கல், கார்ப்பரேட்மயமாக்கல், மற்றும் தானியங்கிமயமாக்கல் – “பொருளாதார சீர்திருத்தங்கள்” என்று வஞ்சகமாக அழைக்கப்படுகிறது. கடந்த சில பத்தாண்டுகளாக பின்தங்கிய சமூகங்களுக்குக் கிடைத்த ஆதாயங்களைச் சீர்குலைக்கிறது, அவை என்ன விலை கொடுத்தாகவாவது எதிர்க்கப்பட வேண்டும்.

“பொருளாதார சீர்திருத்தங்கள்”- இது இந்தியாவின் ஊடகப் பண்டிதர்கள் முப்பது ஆண்டுகளாக ஒரு மந்திரம் போல் திரும்பத் திரும்பச் சொல்லும் ஒரு சொல்லாடல். இவை நவீன இந்தியாவின் ஜோதிபாய் பூலே முதல் ஸ்ரீ நாராயண குரு வரை முன்னெடுத்த “சமூக சீர்திருத்தங்கள்” என்பதற்குச் சமமான “பொருளாதார சீர்திருத்தங்கள்” என்று அவர்கள் கூறிவருகிறார்கள்.

டெல்லி எல்லையில் மோடியின் உருவபொம்மையை எரித்துப் போராடும் விவசாயிகள்

ஆனால் உண்மையில், அவர்கள் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவு கொள்கையின் (தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம் மற்றும் உலகமயமாக்கம்) பக்கம் நின்றுபேசுகிறார்கள்.  20-ஆம் நூற்றாண்டின் நான்காவது காலாண்டில் பல நாடுகளில் இக்கொள்கை மேலிருந்து கீழாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 1990-களின் தொடக்கத்தில் இந்தியாவிலும்  நடைமுறைப்படுத்தப்பட்டது. “புதிய தாராளமயம்” என்று விமர்சகர்களால் அழைக்கப்படும் வஞ்சகம் நிறைந்த இந்த கொள்கைகள் ஒரே ஒரு பிரதான நோக்கத்தைக் கொண்டுள்ளது: பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒவ்வொரு துறையிலும் தடையின்றி நுழைவதை எளிதாக்குகிறது, அரசு தனியார் மூலதனத்தின் பாதுகாவலராகவும், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை ஏலம்விடும் ஒரு முகவராகவும் மட்டுமே செயல்படக் கோருகிறது. உண்மையில், இந்தியாவின் “பொருளாதார சீர்திருத்தங்கள்” அதன் சமூகசீர்திருத்தவாதிகளால் மிகுந்த போராட்டத்திற்குப் பின்னர் சாதித்த சில வெற்றிகளைக்கூட பறித்திருக்கலாம் என்று எங்களின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

எங்கள் நிறுவனமான சுதேசி அந்தோலன் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியாவின் முதல் 25 தனியார் நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் எஸ்சி அல்லது எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை. ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேர் மட்டுமே உள்ளனர். இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் மொத்தம் உள்ள 270 நிர்வாகிகளில் 86 (31%) பார்ப்பனர்கள், 52 பேர் பனியா (19%), மற்ற சாதிகளான காத்ரிஸ் மற்றும் காயஸ்தா (12%), நடுத்தர சாதிகளான பட்டேல் மற்றும் ரெட்டி (5%), மற்றும் ஜெயின்கள், பார்சிகள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினர் மீதமுள்ளவர்கள்.  குறிப்பிடத்தக்க மற்றொரு காரணி ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு குடிமக்கள் (38) ஆகும், அவர்கள் மொத்தத்தில் 14%. ஒட்டுமொத்தப் பெண்களின் எண்ணிக்கை 37, அவர்களில் சிலர் வெளிநாட்டு குடிமக்கள்.

தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு (National Sample Survey Organisation- NSSO) 61-வது சுற்றின் (2004-05) கணக்கெடுப்பின் அட்டவணை 10-ன் படி மக்கள்தொகையில் சுமார் 31% முன்னேறிய வகுப்பினர் உள்ளனர். இருந்தபோதிலும், இந்திய வணிகத்தில் இவ்வகுப்பினரின் சாதி ஆதிக்கத்தை எங்களின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. வெளிநாட்டு குடிமக்களை விட்டுவிட்டால், 90% மேற்பட்டோர் பார்ப்பனர்கள் என்பதை எண்கள் காட்டுகின்றன. பொதுவாக, இந்தியாவில் வணிகம் என்பது பனியா சமூகங்களின் கோட்டை என்று பரவலாக உணரப்பட்டாலும், நாட்டின் முன்னணி நிறுவனங்களில் முக்கிய முடிவெடுக்கும் பாத்திரங்களில் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

 

இந்தியாவின் முன்னணி கார்போரேட்டுகளில் சில

மேலும், முதல் 25 நிறுவனங்களின் இயக்குநர் குழுக்கள் பெருமளவில் பார்ப்பனர்களால் தலைமை தாங்கப்படுகின்றன.  பார்ப்பனர்களும் பனியாக்களும் இந்த ஒன்பது பதவிகளை வகிக்கிறார்கள், கத்ரியர்கள் நான்கு இடங்களை வகிக்கிறார்கள். மீதமுள்ள மூன்று பதவிகளில் இரண்டு முறையே ஷியா முஸ்லீம் (விப்ரோ) மற்றும் ஒரு வெளிநாட்டு குடிமகன் (நயாரா எனர்ஜி) மூலம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது, அதே சமயம் எச்சிஎல் டெக்னாலஜியின் (HCL Technology) சிவன் நாடார் மட்டுமே இந்த பட்டியலில் பார்ப்பனர் அல்லாதவர்.

வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வு

பல்வேறு கட்ட ஆய்வுகள் இந்திய வணிகத்தில் குறிப்பாக பெருநிறுவங்களின் காணப்படும் ஆழ்ந்த சாதிரீதியான பாகுபாட்டை வெளிப்படுத்துகிறது. பொருளாதார சமத்துவமின்மையை மோசமாக்குவதிலும், புதிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதிலும் “பொருளாதார சீர்திருத்தங்களின்” பங்கு என்ன என்பதையும் அவ்வாய்வுகள் வெளிப்படுத்துகின்றன. “இந்தியாவில் செல்வமும் சமத்துவமின்மையும்” என்ற தலைப்பில் சாவித்ரிபாய் புலே பழ்கலைக்கழகம், JNU மற்றும் தலித் கல்வி நிறுவனம் (Institute of Dalit Studies) இணைந்து 2015-2017 காலகட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் 1.10 லட்சம் குடும்பங்களை உள்ளடக்கிய NSSO தரவுகளின்அடிப்படையில் நடத்திய சமூக-சமய ஆய்வு அவற்றை இன்னும் தெளிவாக விளக்குகிறது.

இந்த ஆய்வின்படி, “இந்து உயர் சாதியினர்” பட்டியல் சாதியினரைவிட நான்கு மடங்கு அதிக செல்வத்தை கொண்டிருக்கிறார்கள். மேலும், “இந்து உயர் சாதியினர்” நாட்டின் மொத்த செல்வத்தில் 41% ஐ வைத்திருக்கிறார்கள், இது அவர்களின் மக்கள்தொகையான 22.28% விட இரண்டுமடங்கு அதிகமாகும். செல்வத்தின் அடுத்த மிகப்பெரிய துண்டு பிற பிற்படுத்தப்பட்ட இந்து வகுப்பினரால் (HOBCs) 31%க்கு அருகில் உள்ளது, இது அவர்களின் மக்கள்தொகை அளவை விட சற்று குறைவாக (35.66%) உள்ளது. நாட்டின் மொத்த சொத்துக்களில் 8% முஸ்லிம்கள் வைத்திருக்கும் போது அவர்களது குடும்பங்களின் பங்கு கிட்டத்தட்ட 12% ஆக உள்ளது. மேலும், எதிர்பார்த்தபடி, எஸ்சி மற்றும் எஸ்டி-க்கள் தங்கள் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது (11.3% இணைந்து) கணிசமாக குறைவான சொத்தை (11.3%) வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் சாதிவாரியாக செல்வத்தின் பங்கீடு

2012-இல் பொருளாதார மற்றும் அரசியல் வார இதழில் (Economic & Political Weekly) வெளியிடப்பட்ட மற்றொரு விரிவான ஆய்வில், “இந்தியாவில் உள்ள முதல் 1,000 நிறுவனங்களின் இயக்குனர்குழு உறுப்பினர்களின் சராசரி எண்ணிக்கை ஒன்பது. அவர்களில் கிட்டத்தட்ட 88% உள்நாட்டினர் மற்றும் 12% சுயசார்பான இயக்குநர்கள். சாதிவாரியாக, இயக்குனர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 93% முற்பட்ட சாதியினர் என்பதை காட்டுகிறது; 46% வைசியர் மற்றும் 44% பார்ப்பனர். ஓபிசி மற்றும் எஸ்சி/எஸ்டி முறையே 3.8% மற்றும் 3.5%.

இந்த எண்களின் மூலம் கார்ப்பரேட் இந்தியாவின் மிக உயர்ந்த மட்டங்களில் பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தின் சாயல் கொஞ்சம்கூட இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். மேலும் கார்ப்பரேட் இந்தியாவின் மிக உயர்ந்த மட்டங்கள் என்பது அடிப்படையில் பார்ப்பன ஆண்களின் கிளப்பாகவே உள்ளது. இந்த ஆய்வுகள் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார அடுக்குமுறையில் பிற சாதிகளின் பங்கேற்பில் மிகக் குறைவான மாற்றங்களைகூடச் செய்யவில்லை என்பதைக் காட்டுகின்றன. உண்மையில், அந்த அடுக்குமுறையில் மேலே செல்லச் செல்ல, அதாவது முன்னணி 1000 நிறுவனங்களுக்கு மாறாக முன்னணி 25 நிறுவனங்கள் என்று எடுத்துக்கொண்டால், அந்நிறுவனங்களின் அதிகாரம் முழுக்கமுழுக்க பார்ப்பனர்களின் கைகளில் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளமுடியும்.

இந்திய மக்கள்தொகையில் பின்தங்கிய சமூகங்கள் (Backward and Most Backward Class) பெரும்பான்மையினரை உள்ளடக்கியிருக்கிறது. ஆனால் முக்கிய முடிவுகளை எடுக்கும் இயக்குநர்கள் குழுகளில் இவர்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருப்பது கார்ப்பரேட் உலகின் ஒருசார்புநிலையை வெளிப்படுத்துகிறது. அரசு வேலைகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு கட்டாயம் என்ற நிலை இருப்பதால், ஒவ்வொரு துறையையும் தனியார்மயமாக்கும் மோடி அரசின் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதை பின்தங்கிய சமூக மக்கள் (BC and MBC) அனுமதித்தால் அது அவர்களே தோண்டிக்குள்ளும் குழிக்குச் சமம்.

 தனியார்மயமாக்கல் எனும் ஆபத்து

தற்போதைய மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை (PSUs) தனியார்மயமாக்குவதற்கான தொடர் நகர்வுகளை அறிவித்துள்ளது. பல முனைகளில் வெளிப்படையாகிவிட்ட மோடி கும்பலின் மிதமிஞ்சிய கார்ப்பரேட் நட்பானது பொதுத்துறை நிறுவனங்களை சல்லிக்காசுக்கு மொத்தமாக தனியார் கைகளுக்கு மாற்றுவதற்கு தூண்டுகிறது. இதை தனியார்மயமாக்கல் என்ற பெயரில் தொடர்ந்து நடத்தி வருகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் வரலாற்று ரீதியாக தேசத்தை உருவாக்குவதிலும், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியிலும் ஒரு சிறந்த பங்கைக் கொண்டுள்ளன, ஆனால் இப்போது அவற்றில் 25-க்கும் மேற்பட்டவை தனியார்மயமாக்கப்பட்டுவிட்டன அல்லது  ஆக்கப்பட உள்ளன. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL), ஏர் இந்தியா, பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML), ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL), தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் (NMDC), இந்திய மருத்துவம் மற்றும் பார்மசூட்டிகல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (IMPCL), இந்திய கப்பல் கழகம் (SCI), இந்திய பெட்டகக் கழகம் (CONCORD), நீலச்சல் இஸ்பாட் நிகாம் (NINL) மற்றும் இந்திய ரயில்வே போன்ற நிறுவனங்கள் மட்டுமல்ல, நீர் வழங்கல் மற்றும் சுகாதார சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளும் தனியார்மயமாக்க முன்மொழியப்பட்டுள்ளன. 2020-21 ஒன்றிய பட்ஜெட் மாவட்ட மருத்துவமனைகளில் கூட தனியார் பங்கேற்பை (PPP) பரிந்துரைத்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் சமீபத்திய அறிக்கையில், தீவிர வறுமை மற்றும் மனித உரிமைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர், பிலிப் ஆல்ஸ்டன், “அத்தியாவசிய பொருட்களின் (உற்பத்தி மற்றும் விநியோகத்தில்) பரவலான தனியார்மயமாக்கல், மனித உரிமைப் பாதுகாப்பை நீக்கி, குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் வறுமையில் வாடுபவர்களின் நலன்களை மேலும் ஓரங்கட்டுகிறது” என்றார். மற்ற நாடுகளின் அனுபவங்களின்படி, தனியார்மயமாக்கத்தைத் தடுக்கவில்லையென்றால் இறுதியில் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொதுநல சேவைகள், பள்ளிக் கல்வி, ஓய்வூதிய முறை, பூங்காக்கள் மற்றும் நூலகங்கள், காவல், குற்றவியல் நீதி மற்றும் இராணுவத் துறை ஆகியவற்றுக்கு பரவி, பொதுமக்களுக்கும் ஏற்கனவே சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கும் மிகவும் தீங்கான விளைவுகளையே கொண்டுவரும் என்பதைக் காட்டுகிறது.

இந்தியாவில், தனியார்மயமாக்கல் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் எதிர்காலத்திற்கு கடுமையான தாக்கங்களைக் கொண்டுள்ளது, அவர்கள் இத்தகைய கொள்கைகளால் அதிகம் இழக்க நேரிடும். தனியார்மயமாக்கல் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களை ஓரங்கட்டுகிறது, அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொது சேவைகளால் செயல்படுத்தப்படும் இடஒதுக்கீடு கொள்கைகள் பின்தங்கிய சமூகத்தினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை எளிதாக்குவதில் பெரும் பங்கு வகித்தன. இவை தனியார்மயமாக்கப்படும்போது, இந்த வாய்ப்புகள் நிரந்தரமாக இழக்கப்பட்டு, கடந்த சில பத்தாண்டுகளில் இந்த சமூகங்கள் செய்த முன்னேற்றத்தை தடைசெய்கின்றன. இந்த சமூகங்களில் படித்த இளைஞர்கள் தங்கள் சமூகங்கள் சமீபகாலங்களில் முன்னேற உதவிய உயர்அந்தஸ்து மற்றும் உயர்வருமானம் பெறும் வேலைவாய்ப்புகளை நிரந்தரமாக இழக்க நேரிடும் என்பதையும் இது குறிக்கிறது.

வேலைகேட்டுப் போராடும் இளைஞர்கள்

பெரும்பான்மை மக்களை விலக்கும் நிறுவனமயமாக்கல்

சுதந்திரத்திற்குப் பிறகு, பின்தங்கிய சமூகங்கள் கல்வி மற்றும் அரசு சேவைகளில் இடஒதுக்கீடு பெற்றன, இது சிறுதொழில்களைத் தவிர்த்து, குறிப்பாக விவசாயம் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் நிறுவனங்களைத் தொடங்க உதவியது. பல பிற்படுத்தப்பட்ட  வகுப்பினரும், ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் இத்தகைய முயற்சிகளைத் தொடங்கினர், மேலும் தொழில்துறையில் சிறந்து விளங்கும் திறனையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிறுவனங்களில் அவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்துவதால், அவர்களின் ஒட்டுமொத்த சமூகமும் முன்னேற உதவியது.

இப்போது மோடி அரசு ஒவ்வொரு துறையிலும் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளதால், இந்த ஒவ்வொரு துறையையும் கார்ப்பரேட் மயமாக்க வழிவகுக்கிறது. WTO மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஏற்ப இந்தியா அனைத்து துறைகளிலும் இறக்குமதி வரிகளை குறைத்துள்ளது, இது சிறுதொழில்களை கடுமையாக பாதித்துள்ளது.  வாஜ்பாய் தலைமையிலான அரசு பல சிறிய அளவிலான தொழில்களை திறந்து விட்டது. WTO மற்றும் தடையற்ற வர்த்தக கொள்கைகள் பார்ப்பனர்களால் நடத்தப்படும் பெரிய நிறுவனங்களுக்கு இந்தத் துறைகளை அகலமாகத் திறந்தன, எனவே உயர்சாதி ஊழியர்கள் அதிக சம்பளத்தில் தவறாமல் வேலை செய்கிறார்கள். உண்மையில், இந்தக் கொள்கைகள் ஏற்கனவே பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தொழில்முனைவோரால் நடத்தப்படும் பல சிறிய அளவிலான தொழில்களை மூடுவதற்கு வழிவகுத்தன.

அரசாங்கம் பெருநிறுவனங்களுக்கு உதவும் மற்றொரு வழி, பெரிய நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் கடன்களை வழங்குவதாகும். பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகளில் இருந்து எடுக்கப்பட்ட இத்தகைய கடன்களை பெருநிறுவனங்கள் திருப்பிச் செலுத்தத் தவறும் போது (இது ‘NPA’ செயலற்ற சொத்துகள்) இழக்கப்படுகிறது. “வங்கி மறு மூலதனம்” என்ற செயல்முறையின் வழியாக (மக்களுக்கு கூடுதல் வரிகளை விதித்து அந்த) வரிப்பணத்தை உட்செலுத்துவதன் மூலமும், வங்கிகளுக்கு இழப்பீடு வழங்குவதன் மூலமும் வங்கிகளின் இழப்பு சரிசெய்யப்படுகிறது.

முன்னணி நிதி நிறுவனமான கிரெடிட் சூயிஸின் (Credit Suisse)அறிக்கையின்படி, மோடி அரசின் முதல் ஐந்து ஆண்டுகளில் பெருநிறுவனங்களின் ரூ. 7,77,800 கோடி மதிப்புள்ள வாராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாகக் கூறுகிறது. ஆனால் அதே அரசாங்கம் இந்தியாவின் போராடும் விவசாயம் மற்றும் சிறுதொழில் துறைகளுக்கு எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை. அத்துறைகளில்தான் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். GST மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற தவறான கொள்கைகள் காரணமாக இந்த துறைகள் ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கின்றன. மோடி அரசின் இந்த புறக்கணிப்பு சிறிய அளவிலான தொழில்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்களை மிகவும் பாதித்து இவற்றை நம்பியிருந்த பின்தங்கிய சமூகங்களுக்கு, ஏற்கனவே கல்வி, கடன் போன்றவை அவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ள நிலையில், பெருத்த அடியைக்கொடுத்தது.

மூன்று புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயம் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் கார்ப்பரேட்மயமாக்கலை எளிதாக்குவது மோடி அரசின் மற்றொரு முயற்சியாகும். இந்த துறைகள் நிறுவனமயமாக்கப்பட்டால், இந்த துறைகளில் பின்தங்கிய சமூகங்களால் தொடங்கப்பட்ட பெரும்பாலான நிறுவனங்கள் அழிந்துவிடும், அவற்றின் மூலம் வருமானத்தையும் வேலைவாய்ப்பையும் பெறும் இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களை கடுமையாக பாதிக்கும்.

தானியங்கிமயமாக்கல் எனும் அச்சுறுத்தல்

தரவுகள் காண்பிப்பது போல, பெரிய நிறுவனங்களின் உலகம் கிட்டத்தட்ட உயர் சாதியினரால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் நுழையும் சில பின்தங்கிய வகுப்பினர் குறைந்த தரம் மற்றும் கடினமான உடல் உழைப்பு வேலைகளில் திருப்தியடைய வேண்டும். பெருநிறுவனங்களின் சார்பாக தற்போதைய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும்  தானியங்கிமயமாக்கல் நிலைமைகளை இன்னும் மோசமாக்குகிறது. வேலைவாய்ப்புகளை மட்டுமல்ல, முழுத் தொழில்களையும் அழிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. உலக வங்கி ஆய்வுக் கட்டுரையின் படி, “தானியங்கிமயமாக்கல் இந்தியாவில் 69 சதவீத வேலைகளையும், சீனாவில் 77 சதவிகிதத்தையும் அச்சுறுத்துகிறது.”

பின்தங்கிய வகுப்பினர் சமீபத்தில் வேலைவாய்ப்பைக் கண்டறிந்த தொழில்துறை உற்பத்தி போன்ற பகுதிகளைக்கூட தானியங்கிமயமாக்கல் அச்சுறுத்துகிறது. தானியங்கிமயமாக்கல் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தாத துறைகளைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் புதிய தொழிலாளர் திருத்தச் சட்டம் தொழிலாளர்களை அடிமைகளின் நிலைக்கு தள்ளப்படுவதை உறுதி செய்கிறது.

எப்படி எதிர்ப்பது?

பின்தங்கிய சமூகங்களுக்கு இந்த போக்குகள் ஒரு தெளிவான எச்சரிக்கையைத் தருகின்றன. எளிமையாகச் சொல்வதானால், தனியார்மயமாக்கல் என்பது அதிக நிறுவனமயமாக்கலைக் குறிக்கிறது, இது அதிக தானியங்கிமயமாக்கலை ஊக்குவிக்கிறது, சிறிய அளவிலான வணிகங்கள் மற்றும் வர்த்தகங்களின் அழிவுக்கு வழிவகுக்கிறது, இதன் பொருள் அதிக வேலை இழப்பு.

முப்பதுஆண்டுகால ‘பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிறகு, இந்தக் கொள்கைகளால் யார் ஆதாயமடைந்தார்கள், யார் இழந்தார்கள் என்பது தெளிவாகிறது. ஆட்சியில் உள்ள அரசாங்கங்கள் தொடர்ந்து வரி விதிப்புகள், நிதி நடவடிக்கைகள் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் சட்டங்கள் போன்ற கொள்கைகளை இந்து உயர்சாதியினர் ஆதிக்கம் செலுத்தும் நிறுவன உலகிற்கு ஆதரவாக வடிவமைக்கின்றன. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இந்த கொள்கைகளின் கீழ் நசுக்கப்படுகின்றன அல்லது இந்த கொள்கைகள் தங்கள் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் திருடாமல் அவற்றைப் பாதுகாக்க அவநம்பிக்கையான போராட்டங்களுக்குள் தள்ளப்பட்டுள்ளன. இந்த போராட்டங்களை வழிநடத்தும் சமூக அமைப்புகள், பல்வேறு இடது குழுக்கள் மற்றும் ஏக்தா பரிஷத் போன்ற காந்திய அமைப்புகள் இந்த கொள்கைகள் மற்றும் அவற்றின் தாக்கங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு அவைகளுக்கு எதிராக கைகோர்த்து அணிதிரள வேண்டிய நேரம் இது.

இந்த கடினமான வேளையில் கேரள மாநிலத்தின் மற்றும் இந்தியாவின் வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவராக இருந்த ஸ்ரீ நாராயண குருவை நினைத்துப்பார்க்கவேண்டியிருக்கிறது. அவர் சமூகத்தில் இருந்து மூலதனத்தைத் திரட்ட முன்முயற்சி எடுத்தார். அதன்மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலுள்ள தொழில்முனைவோர்கள் சொந்தமாக தொழில் தொடங்க முடிந்தது. இந்த முன்முயற்சி 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் அம்மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக மற்றும் பொருளாதாரத்தில் வியக்கத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டுவந்தது.

அனைத்து பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் ஒன்றிணைந்து தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க வளங்களைச் சேகரிக்கும் நேரம் இது. அதே நேரத்தில் தங்கள் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த “சீர்திருத்தங்களை” எதிர்த்தாக வேண்டும். இந்த எதிர்ப்பு இரண்டு வழிகளில் இருக்க வேண்டும்: ஒருபுறம், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு மீண்டும் ஒரு அடித்தளத்தைத் தரக்கூடிய சிறுதொழில்களை விழுங்கும் பார்ப்பனர்கள்/உயர்சாதி இந்துக்களின் நிறுவனங்களை எதிர்த்துப் பின்வாங்க வைக்கவேண்டும். மறுபுறம், இத்தகைய அழிவுகரமான “சீர்திருத்தங்களை” ஆதரிக்கும் அரசியல் கட்சிகளை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.

ஆங்கிலத்தில்:
K.V. பிஜு, 
அகில இந்திய அமைப்புச் செயலாளர்.
சுதேசி அந்தோலன்.

தமிழில்: வண்ணன்
நன்றி: Countercurrent.org

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here