மார்ச் 23
பகத்சிங் – ராஜகுரு – சுகதேவ்
நினைவுநாளில் சூளுரைப்போம்!


கார்ப்பரேட்- காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!
கல்வி, வேலை, ஜனநாயகம்  வென்றெடுப்போம்!

தமிழகம் தழுவிய தெருமுனைக் கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள்

மாணவர்களே! இளைஞர்களே!

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசால் தூக்கிலிடப்பட்ட நாள் மார்ச் 23. அன்று ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்டனர் அந்த  ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள். “அநீதிகளுக்கு எதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை’’ என்று ஆங்கிலேய அரசுக்கு எதிரான போரில் அனைத்து இளைஞர்களும் பங்கெடுக்க அறைகூவல் விடுத்தனர். இன்று, நம் நாட்டில் இளைஞர்கள்தான் அதிகம் உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 25 வயதுக்கு உட்பட்டோர் அளவு மட்டும் 47%. இந்த சூழலில், நாட்டின் பெரும்பகுதி இருக்கும் மாணவர்கள், இளைஞர்களின் வாழ்வின் முன்னேற்றம் மிக முக்கியமானதாக உள்ளது. அவர்களுக்கு கல்வி, வேலை, ஜனநாயகம் அவசியமானது.

நாடு ‘சுதந்திரம்’ அடைந்து 75 ஆண்டுகளில் போராடிப் பெற்ற கல்வி உரிமைகளும் கூட பாசிச மோடி ஆட்சியின் கீழ் பறிக்கப்படுகின்றன. சாதி ரீதியாக கல்வி மறக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் இட ஒதுக்கீட்டை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உயர்சாதி ‘ஏழை’களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது; பட்டியல் சமூக மாணவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வி உதவித் தொகையை வெட்டுவது; நீட் போன்ற தேர்வுகளை திணித்து ஏழை மாணவர்களின் உயர்கல்வி கனவை தகர்ப்பது; புதிய கல்விக் கொள்கை மூலம் பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றுவது; கல்வி – குடிமக்களின் உரிமை என்பதை மறுத்து பல லட்சம் கோடிகள் புரளும் சந்தையாக அதனை கார்ப்பரேட்டுகளிடம் கூறுபோடும் திட்டத்துடனே செயல்படுகிறது. ஈராயிரம் ஆண்டுகள் பார்ப்பனியத்தால் சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட கல்வி இன்று தனியார்மயத்தால் பணத்தின்  பெயரால் மீண்டும் மறுக்கப்படுகிறது.

படிக்க:

  பகத்சிங் பேசுகிறார்!
  மாவீரன் பகத்சிங் பிறந்த தினம்! 

கார்ப்பரேட் மயத்துடன் இணைந்து, ஹிஜாப் போன்ற பிரச்சினைகளை எழுப்புவதன் மூலம், மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்துவது, பாடத்திட்டங்களில் இந்தியை திணிப்பது, புராண, இதிகாச பொய் புரட்டுகளைத் திணிப்பது என கல்வியையும், கல்விக் கூடங்களையும் காவிமயப்படுத்துகின்றது.

மற்றொரு புறம், “இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்குவேன்” என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த மோடி அரசாங்கம் அதனை நிறைவேற்றாதது மட்டுமல்ல; பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, கொரோனா ஊரடங்கு என தனது திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான தொழிலாளர்களை வேலை இழக்க செய்துள்ளது. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, அனைத்தும் தோல்வியையே தழுவியது. மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதன் விளைவாக கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். வேலை இழந்தவர்களும் படித்துவிட்டு புதிதாக வேலை தேடி வருபவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தங்கள் தகுதி, படிப்புக்கேற்ற வேலை என்பதை கனவு கூட காண முடியாத சூழலில் ஸ்விக்கி, ஜோமோடோ என கிடைக்கின்ற வேலைக்கு அத்துக்கூலிக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். CMIE என்ற ஆய்வு நிறுவனத்தின் கடந்த டிசம்பர் 2021 கணக்குப்படி, 5.3 கோடி பேர் வேலையின்றி இருந்ததாகக் கூறுகிறது. இது மட்டுமின்றி, இந்திய மக்களில் 50% பேருக்கு மேல் மாதம் 5000 ரூபாய் வருமானம் கூட ஈட்ட முடிவதில்லை. அரசின் கணக்கின் படியே கடந்த 2018 முதல் தற்போது வரை 10,000 பேருக்கு மேல் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து இறந்துள்ளனர். இந்த வேலையின்மை அவலத்தின் சமீபத்திய உதாரணம் – பீகாரில் 35,000  ரயில்வே காலி பணியிடங்களுக்கு 1.25 கோடி பேர் விண்ணப்பித்து இருந்த, பெரிதாக படிப்பறிவு தேவைப்படாத அந்த வேலைக்கு லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்தனர் என்பதை கொண்டு நிலைமையை எளிதாக புரிந்து கொள்ளலாம். கல்வி இல்லை, வேலை இல்லை என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, சமூகத்தில் அதன் தாக்கம் ஆழமானது. முறையான கல்வி, வேலை இல்லாமல் இருப்பது சுயமரியாதை உணர்வற்ற, விட்டேத்தித் தனமான உதிரி மனிதர்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குகிறது. இந்த உதிரித் தன்மை, சமூகத்தில் குற்றங்களை அதிகமாக்குகிறது.

1990-களில் தனியார்மயம், தாராளமயம் உலகமயம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தனியார்மயமாக்கப்பட்டது, விவசாயத்திலிருந்து விவசாயிகள் விரட்டப்படுவதும், சிறுதொழில்கள் முடமாக்கப்படுவதும், பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுவதும் நடந்தேறி வருகிறது. மோடி அரசின் எட்டு ஆண்டு கால ஆட்சி, அந்த நடவடிக்கைகளை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது.  ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல், நாடாளுமன்றம், நீதித்துறை, அதிகார வர்க்கம், இராணுவம் என அரசின் கட்டுமானங்கள் அனைத்திலும் தங்களது அடியாட்களை நிரப்பி, பாசிச ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டுள்ளது. அந்த அதிகாரத்தைக் கொண்டு நாட்டின் சொத்துக்களையும் மக்களின் வாழ்வையும் பறித்து அம்பானி, அதானி போன்ற தேசங்கடந்த தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கும் தாரை வார்க்கின்றது.

படிக்க:

♦  எப்படி வாழ்வது?எப்படி சாவது?
  ஒரு கோபம் எப்படி இருக்க வேண்டும்? (சர்தார் உத்தம் சினிமா)

நாட்டையும் மக்களின் வாழ்வையும் அழிக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுபவர்களை‌ பொய் வழக்குகளில் சிறையில் அடைத்து பாசிச அடக்குமுறையை ஏவுகிறது; சட்டவிரோதமான காவி குண்டர் படையைக் கொண்டு சுட்டுக் கொல்கிறது; அவர்களது குடும்பங்களுக்கு மிரட்டல் விடுக்கிறது.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் காவியையும், கார்ப்பரேட்டையும் புகுத்தி, நாட்டின் பெரும் அபாயமாக வளர்ந்துள்ள இந்த கார்ப்பரேட்- காவி பாசிசத்தை வீழ்த்தாமல் நாட்டின் பெரும்பான்மையான மாணவர் இளைஞர்களுக்கு, கல்வியும், வேலை வாய்ப்பும் வழங்க முடியாது. அதற்கான போராட்டம் பகத்சிங் பாதையில் இருக்க வேண்டியது தவிர்க்க முடியாததும், அவசியமானதும் ஆகும்.

பகத்சிங், தனது 23 வது வயதில், வெள்ளையனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டை மீட்பதற்கு, அகிம்சை வழியிலான சுதந்திரப் போராட்டம் சாத்தியமற்றது என்றான். நாட்டின் சட்ட திட்டங்களையும், கொள்கைகளையும் ஒட்டுமொத்தமாக புரட்டிப் போடும் வகையிலான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே இந்திய நாட்டிற்கும், மக்களுக்கும் உண்மையான விடுதலை சாத்தியமாகும் அப்படிப்பட்ட விடுதலையை, புரட்சியின் மூலமே ஏற்படுத்த முடியும் என்றான் பகத்சிங். தனது இந்த லட்சியத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்துவதற்கும், காந்தி போன்ற சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களது கேளாத செவிகளைக் கேட்க வைப்பதற்கும், யாருக்கும் பாதிப்பில்லாத வகையில், பாராளுமன்றத்தில் குண்டு போட்டு தூக்கு மேடை ஏறினான்.

பிரிட்டிஷ் வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடு சுதந்திரம் பெற்றதாகச் சொல்லி, முக்கால் நூற்றாண்டு நிறைவு பெற்ற இன்றைய சூழலிலும், மக்கள் பிரச்சினைகள் தீரவில்லை. மாறாக, அதிகரித்துக் கொண்டே வருகிறது. அன்று பிரிட்டிஷ் என்ற ஒரு ஏகாதிபத்தியத்தின் அடிமையாய் இருந்த நாடு, இன்று பல ஏகாதிபத்தியங்கள் சுரண்டும் நாடாக மாறியுள்ளது. அதற்கு ஏற்ப கார்ப்பரேட் காவி பாசிசம் மக்கள் மீது ஏறித் தாக்கி வருகிறது.

எனவே, கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த, பகத்சிங் விட்டுச் சென்ற பாதை மாணவர்கள், இளைஞர்களைத் தேடுகிறது. பகத்சிங்-கின் தியாகம், இன்று நம்மைக் கேள்வி கேட்கிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டியது, நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்ற பகத்சிங் நம்மை அழைக்கிறான். வாரீர்!

பு.மா.இ.மு. – தமிழ்நாடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here