தச்சார்பற்ற, பன்மைத்துவ நாட்டை இந்து நாடாக மாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டு இந்தியாவின் தீவிர தேசியவாத இசைக்கலைஞர்கள் வெறுப்பு நிறைந்த, வன்முறையைப் போற்றும் பாடல்களை இந்துத்துவ தீவிரவாதிகளுக்காக தயாரித்து வருகின்றனர்.

அத்தகைய பாடகர்களில் ஒருவரான சஞ்சய் ஃபைசாபாடியின் (Sanjay Faizabadi) இசை வீடியோக்கள் நுட்பமானவை. அவரது பாடல்களில் அணிவகுத்துச் செல்லும் ராணுவ வீரர்கள் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் படங்கள் திரையில் மின்னுகின்றன.

சஞ்சய் ஃபைசாபாடி

ஒரு வீடியோவில், ராணுவ வீரர்கள் அணியும் சீருடையுடன் தலையில் கருப்பு துணியைச் சுற்றி, அவரது முகம் மற்றும் பற்கள் இரத்தத்தால் சிவந்திருக்கும். எரியும் போர் விமானங்கள், வெடிக்கும் போர்க்கப்பல்கள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பில் விரையும் டாங்கிகள் ஆகியவற்றுடன் ஒரு பழைய கோட்டை காட்சியளிக்கிறது. அப்போது டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் போன்ற சர்வதேச தலைவர்களுடன் மோடியின் முகம் தோன்றுகிறது. “சூறாவளிகளை திசை திருப்பவும், மலைகளை நசுக்கவும் நமக்கு ஆற்றல் உண்டு! தேசத்தின் எதிரியே, கவனமாகக் கேள், ஒவ்வொரு இந்தியனும் அணுகுண்டு!” என்று ஃபைசாபாடி பாடுகிறார்.

தேசிய பெருமை, ராணுவவாதம் மற்றும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எதிரான கிளர்ச்சி ஆகியவற்றை கலந்து வரும் சஞ்சய் ஃபைசாபாடியின் வீடியோக்கள் வடஇந்தியாவில் பிரபலமாக உள்ளன. மேலே விவரிக்கப்பட்ட வீடியோ YouTube-ல் கிட்டத்தட்ட பத்து லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஃபைசாபாடியின் மற்றொரு வீடியோ 15 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

தங்களுடைய தீவிர தேசியவாத பாடல்களால் ரசிகர்களை அதிகரித்து வரும் பல இசைக்கலைஞர்களில் சஞ்சய் ஃபைசாபாடியும் ஒருவர். இத்தகைய தீவிர தேசியவாத இசைக்கலைஞர்கள் என்றென்றும் அழிந்திடாத இந்திய தேசத்தைப் போற்றிப் பாடுகிறார்கள், இந்து தெய்வங்களைப் போற்றுகிறார்கள், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுகிறார்கள், மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக வாய்ச்சவடால் அடிக்கிறார்கள். இந்த இசை பாணி, 2014 முதல் இந்தியாவைப் பீடித்திருக்கும் இந்து தேசியவாதிகளின் முத்திரையாகவும், இந்துக்களுக்கு புனிதமான நிறமாகவும் சொல்லப்படும் காவி நிறத்தின் பெயரால் “காவி பாப்” என்று அழைக்கப்படுகிறது.

முப்பதுகளில் இருக்கும் லக்ஷ்மி துபே (Laxmi Dubey) என்ற இவர்தான் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர். இவரது வீடியோக்கள் 40 லட்சம் பார்வைகளை ஈர்க்கின்றன. விதவிதமான ஆடையலங்காரத்துடன் சுமார் இரண்டு டஜன் இசைக்கலைஞர்களின் பரிவாரங்களுடன் கச்சேரிகளில் மேடை ஏறுகிறார். இவரது பாடல்களில் “ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கங்களுடன், “ஜெய் ஸ்ரீ ராம் சொல்லமுடியாதென்றால் இந்தியாவில் இருக்கமுடியாது!” என்று பாடல் வரிகள் வருகின்றன.

லட்சுமி துபே

இவரைப்போன்றே ஷானாஸ் அக்தர் (Shahnaz Akthar) என்ற பெண்ணும் பல “காவி பாப்” இசைப் பாடல்களைப் பாடி YouTube-ல் வெளியிட்டு உள்ளார்.

சஞ்சய் ஃபைசாபாடி அவரது பங்கிற்கு இராணுவம், போர் மற்றும் பாகிஸ்தானின் மீது அதிக நாட்டம் காட்டுகிறார். ஆனால் அவரது யூடியூப் சேனல், அதிகளவில் இந்துமதம் தொடர்புடைய பாடல்களைக் கொண்டுள்ளது. சமீபத்திய வீடியோ ஒன்றில் அவர் கோவில் பின்னணியில் தோன்றி எப்போதும் அணியும் ராணுவத் சீருடைக்குப் பதிலாக காவி அங்கிகளை அணிந்திருப்பதைக் காணமுடியும்.

இந்து தேசியவாத நரேந்திர மோடி மற்றும் அவரது பா.ஜ.க. ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன, கிறித்தவர்கள் தாக்கப்பட்டும் அவர்களின் வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டும் வருகின்றன. தலித்துகள் மீதான சாதிரீதியாக தாக்குதல்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இத்தகைய பின்னணியில் “காவி பாப்” என்பது மதச்சார்பற்ற மற்றும் பன்மைத்துவ தேசமான இந்தியாவை மேலும் மேலும் ஒரு இந்து நாடாக மாற்றும் கொள்கைகளுக்கான ஒரு ஒலி/ஒளி வடிவமாக இந்துத்துவ குண்டர்களின் மத்தியில் வளர்ந்துவருகின்றது.

தற்போது இந்தியாவில் ஒரு சாதாரண முஸ்லீம் மாட்டு இறைச்சியை சாப்பிடுவதும் அல்லது தனது மாடுகளை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வதுமே அவர் அடித்துக்கொல்லப்படுவதற்குப் போதுமானது. இதுபோன்ற சம்பவங்களில் ஏற்கனவே டஜன் கணக்கான முஸ்லிம்கள் இந்துத்துவ காலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய சம்பவங்களினால் சிறுபான்மையினரிடம் அச்சத்தையூட்டுவதும், அவர்களை எந்த உரிமைகளுமற்ற இரண்டாந்தர குடிமக்களாக ஒடுக்கி மதச்சார்பற்ற மற்றும் பன்மைத்துவ இந்தியாவை ஒரு “இந்து ராஷ்டிராவாக” மோடியும் அவரது கட்சியும் படிப்படியாக மாற்றிக்கொண்டுள்ளனர்.

டெல்லியின் புறநகர்ப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தின் மேல்தளம் ஒன்றில் சஞ்சய் ஃபைசாபாடியின் ஸ்டுடியோ அமைந்துள்ளது. வேகமான டிஸ்கோ இசையின் பின்னணியில் “அன்புள்ள தோழர்களே, இன்று நான் உங்களுக்கு ஒரு புதிய பாடலைக் கொண்டு வருகிறேன். உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்கள் ஆசீர்வாதத்தை எனக்குக் கொடுங்கள். வாழ்க இந்தியா” என்று சஞ்சய் மைக்ரோஃபோனில் பேசுகிறார்

“நான் பணத்திற்காக இதைச் செய்யவில்லை,” என்று குறிப்பிடுகிறார். அவருடைய YouTube வீடியோக்கள் இப்போதுதான் சில ஆயிரம் யூரோக்களை வரவழைக்கத் தொடங்கியுள்ளன. “சில சமயங்களில் ராணுவ வீரர்கள் எனது பாடல் ஒன்றில் தங்கள் பெயரைக் குறிப்பிட சில ஆயிரம் ரூபாய்கள் தருகிறார்கள்” என்கிறார். அவரது வீடியோக்கள் மிகவும் பிரபலமாக உள்ளன என்று பெருமைப்படுகிறார். ஏற்கனவே 60-க்கும் மேற்பட்ட பதிவுகளை இணையத்தில் பதிவிட்டுள்ளார். “எனக்கு எந்த ஒரு எதிர்மறையான கருத்தும் வரவில்லை!” என்று சஞ்சய் கூறுகிறார்.

தனது இசை முஸ்லீம்களுக்கு எதிராக அல்ல, மாறாக பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதிகளுக்கு எதிரானது. தனது ரோல் மாடல்களில் ஒருவராக அடால்ஃப் ஹிட்லரையும், மற்றொருவராக பிரதமர் நரேந்திர மோடியையும் குறிப்பிடுகிறார். ஒரு பாடலில் அரசாங்கத் தலைவரின் புகழ்பெற்ற பரந்த மார்பைப் புகழ்கிறார்.

சஞ்சய் ஃபைசாபாடி உத்தரபிரதேசத்தில் உள்ள பைசாபாத்தைச் சேர்ந்தவர். பைசாபாத் அயோத்தி நகரத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை. சிறிய வயதினனாக இருந்ததால் 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்கமுடியவில்லை எனவும், ஆனால் கரசேவையில் பங்கெடுத்த குழுக்களில் ஒருவருக்கு உணவு வழங்க உதவியதாகவும் ஃபைசாபாடி கூறுகிறார். “கோயில் கட்ட விடாமல் தடுக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறது?” என்பது அவரது பாடலில் ஒரு வரி.

2020-ல் மோடி 40 கிலோ எடையுள்ள வெள்ளிக் கட்டியால் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். கோவிலை கட்டுவதை சாத்தியமாக்கியதன் மூலம் மோடி சரித்திரம் படைத்துள்ளார் என்கிறார் ஃபைசாபாடி.

இந்து தேசியவாதிகள் இந்து ராஷ்டிரத்தை நோக்கி அனைத்து துறைகள் – குறிப்பாக “காவி பாப்” இசையின் உதவியுடனும் வெகுவேகமாக முன்னேறி வருவதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆங்கிலத்தில்: Jennifer Taylor
தமிழில்: செந்தழல் (சில கூடுதல் உள்ளீட்டுடன்)
மூலம்: Till Fähnders (Germany)

https://en.qantara.de/content/hindu-nationalism-in-india-indias-hate-filled-saffron-pop?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here