சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது “ஆன்மிகம் இல்லாத மனிதன் யாராவது இருக்க முடியுமா?” என்று ஹெச்.ராஜா கேட்கிறார். ஒரு பத்திரிகையாளரோ “தந்தை பெரியார்” என்கிறார். திகைத்தபடியே சிரிக்கிறார் ஹெச்.ராஜா.
‘ஆன்மிகம்’ என்னும் சொல்லாடல் இரண்டு வகைகளில் அர்த்தப்படுத்தப்படுகிறது. ஆன்மிகத்தின் வேர்ச்சொல் ஆன்மா. ஆன்மாவை ஏற்றுக்கொண்ட மதம், சடங்குகள், வழிபாட்டுமுறைகள் ‘ஆன்மிகம்’ என்று அழைக்கப்படுகிறது. இன்னும் சிலர் ‘ஆன்மா’ என்னும் வேர்ச்சொல்லைப் பொருட்படுத்தாமல் வாழ்வியல் நெறி என்று ஆன்மிகத்தை அர்த்தப்படுத்துகின்றனர். கோவை ஞானி ‘மெய்யியல்’ என்று அழைத்தார். பெரியார் ‘ஆன்மிகம் இல்லாத மனிதரா?’ என்பது குறித்து சிந்திப்போம்.
இந்த இடத்தில் இயக்குநர் பா. இரஞ்சித் சில நாள்களுக்கு முன் பரத்வாஜ் ரங்கனுக்கு அளித்த நேர்காணல் நினைவுக்கு வருகிறது. இரஞ்சித் பெரியாருக்கு எதிராகப் பேசியதாக அப்போது ஒரு சர்ச்சையும் எழுந்தது.
நான் அந்த நேர்காணலை முழுவதுமாகப் பார்த்தேன். பரத்வாஜ் ரங்கனின் அசட்டுத்தனமான கேள்விகளைத் தவிர்த்துப்பார்த்தால் உண்மையில் அது ஒரு நல்ல பேட்டி. (ஆத்திகம், நாத்திகம், பௌத்தம் குறித்து எந்த அடிப்படைகளும் இல்லாமல் அபத்தமான கேள்விகளை முன்வைப்பது, இதில் என்ன அரசியல் இருக்கிறது, அதில் என்ன குறியீடு இருக்கிறது என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான கேள்விகளே பரத்வாஜ் ரங்கனின் நேர்காணல். தமிழில் வெளியாகும் பெரும்பாலான சினிமா வீடியோ பேட்டிகள் அதைவிட மோசமாக இருப்பதால் பரத்வாஜ் ‘இலுப்பைப்பூ சர்க்கரை’யாக இருக்கிறார்).
இரஞ்சித்தின் பேட்டிக்கு வருவோம். ஷோபாசக்தியின் ‘ம்’ நாவலில் மீன்கள் பேசுவதாக வரும் காட்சியைத் தன் ‘தம்மம்’ படத்தில் பயன்படுத்தியது, ‘நட்சத்திரம் நகர்கிறது’ தலைப்பு தோன்றிய கணம் என்று பல முக்கியமான கலை சார்ந்த விஷயங்களை இரஞ்சித் அந்தப் பேட்டியில் பேசியிருப்பார். பெரியார் குறித்து அவர் இரண்டு இடங்களில்தான் பேசுகிறார். ‘மதம் வேண்டாம்னு சொன்ன பெரியார் அதுக்கு மாற்று எதையும் சொல்லவில்லை’ என்பது இரஞ்சித்தின் கூற்று. இதுமட்டுமில்லாமல் மதம் குறித்த இரஞ்சித்தின் சிந்தனைக் குழப்பங்கள் அந்த நேர்காணலில் தெரியும்.
இதையும் படியுங்கள் : நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்| தோழர் ராஜசங்கீதன் பதிவு!
பிரெஞ்சுப்புரட்சி உருவாக்கிய மதிப்பீடுகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைக் கொண்டு இந்துமதத்தை மதிப்பிட்ட அம்பேத்கர், “எல்லா மதங்களும் கடவுள் மனிதர்களைப் படைத்ததாகச் சொல்லின. ஆனால் இந்து மதமோ கடவுள் ஒரு மனிதனைத் தலையிலிருந்தும் இன்னொரு மனிதனைக் காலில் இருந்தும் படைத்ததாகச் சொன்னது” என்றார். இரஞ்சித்தோ இதே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை வேறு கண்ணோட்டத்தில் அந்த நேர்காணலில் விளக்குகிறார்.
“சுதந்திரம் வந்திடுச்சு. சமத்துவத்தை பவர் (அதிகாரம்) உருவாக்கிடும். சகோதரத்துவத்துக்கு மதம் முக்கியம்” என்று சொல்லி பௌத்தத்தின் தேவையை முன்வைக்கிறார். இது அடிப்படையில் குழப்பமானது. உண்மையிலேயே இங்கு சுதந்திரம் வந்துவிட்டதா என்பதுதான் அரசியல் கேள்வி. அப்படி முழுமையான சுதந்திரம் கிடைத்துவிட்டதாகக் கருதினால் அரசியல் இயக்கங்களே தேவையில்லை. மேலும் சுதந்திரம் என்பது அரசியல் விடுதலையை மட்டும் குறிக்காது. அது கருத்தியல் ரீதியான மாற்றத்தை நோக்கிய அகம்சார்ந்த விடுதலையையும் குறிக்கும். மேலும் அதிகாரம் (பவர்) மட்டுமே சமத்துவத்தைக் கொண்டுவந்துவிட முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்பது பல வழிகளில் ஒன்று மட்டுமே. பல நேரங்களில் அதிகாரமே சமத்துவத்துக்கு எதிராக இருப்பதே எதார்த்தம்.
சகோதரத்துவம் மதத்தின் மூலமாக உருவாவதாக இரஞ்சித் சொல்வதையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. பௌத்தம் கருத்தியல்ரீதியில் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் முன்வைத்தாலும் நடைமுறையில் பௌத்ததர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளும் அதிகார மனநிலையும் இருப்பதற்கு இரட்டைமலை சீனிவாசன் பர்மிய பவுத்ததில் கோயிலடிமைகள் இருந்ததைக் குறிப்பிடுவது தொடங்கிச் சிங்களப் பேரினவாதம் வரை பல உதாரணங்களைக் கூற முடியும்.
மார்க்சியம் மதத்தை நிராகரித்ததாக இரஞ்சித் கூறியதும் தவறான புரிதலே. மதமற்ற சமூகத்தை மார்க்சியம் முன்வைத்தாலும் வரலாற்றில் மதத்தின் பாத்திரத்தையும் அது அங்கீகரித்தது. ‘மதம் மனிதனுக்கு அபின்’ என்று சொன்னதுடன் மட்டும் மார்க்ஸ் நிற்கவில்லை. ‘ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப்பெருமூச்சு’ என்றும் ‘இதயமற்ற உலகின் இதயம்’ என்றும் வர்ணித்தார். சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளானவர்கள் அதை மறந்து தங்கள் ஆறுதலாக மதத்தை நினைப்பதாலேயே மார்க்ஸ் மதத்தை அபின் என்றார்.
மதம் குறித்த பெரியாரின் நிலைப்பாடு என்ன? மதத்தையும் கடவுளையும் மறுத்தால் அந்த இடத்தில் எதை வைப்பது என்ற கேள்வி பெரியாரின் காலத்திலேயே கேட்கப்பட்டபோது “நடுவீட்டில் மலம் நாறுகிறது. அதை எடுத்து வீசு என்றால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்று ஏன் கேட்கிறாய்?” என்றார் பெரியார்.
அதேநேரத்தில் இதைச் சொன்ன பெரியார்தான் ‘இன இழிவு நீங்க இஸ்லாத்தே நன்மருந்து’ என்று பிரச்சாரம் செய்தார். பௌத்தமத மாற்றத்தை ஆதரித்தார். சாதியை மறுத்தவர் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்காகப் போராடியதையும் கோயிலை மறுத்தவர் கோயில் நுழைவுக்கும் அனைத்துச்சாதியினர் அர்ச்சகராகும் உரிமைக்குப் போராடியதையும் புரிந்துகொண்டால் இதையும் புரிந்துகொள்ளலாம்.
மதமாற்றத்தைப் பெரியார் தொடர்ந்து வலியுறுத்தினாலும் அது ஆன்ம விடுதலையுடன் தொடர்புடையது அல்ல என்பதையும் அவர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார். 4 மணிக்கு தீண்டத்தகாதவனாய் இருக்கும் ஒருவர் 4.05க்கு மதம் மாறி, அந்த இழிவிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டால் அதை வரவேற்பதாகச் சொன்ன பெரியார், ”மோட்சத்திற்குப் போவதற்காக நான் மதம் மாறச் சொல்லவில்லை” என்பதையும் அழுத்திச் சொல்கிறார்.
அதேநேரத்தில் பெரியார் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இஸ்லாத்தையும் பௌத்தத்தையும் ஆதரித்தார் என்று சொல்லிவிட முடியாது. இஸ்லாத்திலும் பௌத்ததிலும் உள்ள சில கருத்துகள் தனக்கு உகந்தவை என்பதையும் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். கம்யூனிசம், இஸ்லாத், பௌத்தம் மூன்றும் அவர் சிந்தனை முறையில் தாக்கத்தை ஏற்படுத்தியவை. ‘மற்ற மதங்களுடன் ஒப்பிடும்போது இஸ்லாத் காலத்துக்குப் பிந்திய மதம் என்பதால் அதில் நவீனச் சிந்தனைகள் இருக்கின்றன’ என்றார் பெரியார். மிலாது நபி விழாக்களில் கலந்துகொண்டார். அதேநேரத்தில் ‘தாடி வளர்த்துக்கொள்வதோ தொப்பி போட்டுக்கொள்வதோ மட்டும் இஸ்லாம் அல்ல’ என்றும் அப்படியான அடையாளங்களைப் பின்பற்றாமல் தானும் சில விஷயங்களில் இஸ்லாமை அனுஷ்டிக்கிறவன் என்றும் சொன்னார்.
இஸ்லாத்திலாவது கடவுள் உண்டு. பௌத்தத்தில் அதுவும் இல்லை என்பதால் அதை இன்னும் தனக்கு நெருக்கமாகப் பார்த்தார். பௌத்த மாநாடுகளிலும் புத்தர் சிலை திறப்பு விழாக்களிலும் கலந்துகொண்டார். புத்த ஜெயந்தி கொண்டாட புத்தர் சிலைகளைத் தயாரித்துக்கொள்ளுங்கள் என்றார். ஏராளமான குழந்தைகளுக்குக் கௌதமன், சித்தார்த்தன் என்று பெயர் சூட்டினார்.
புத்தரின் திரிசரணக் கோட்பாட்டை முன்வைத்து தன் இயக்கத்தின் அடிப்படையை விளக்கினார். ‘புத்தம் சரணம், தம்மம் சரணம், சங்கம் சரணம்’ என்பதைத் தலைமை, கொள்கை, அமைப்பு மூன்றுக்கும் உண்மையாக இருப்பது’ என்று விளக்கிய பெரியார் தன் திராவிடர் கழகத் தோழர்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பௌத்த மதத்தில் பார்ப்பனர்கள் புகுந்து அதன் கருத்தியலை நீர்த்துப்போகச் செய்ததாலேயே தன் இயக்கத்தில் பார்ப்பனர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்றும் சொன்னார்.
இஸ்லாத், பௌத்தம் என்னும் இருமதங்களின் கருத்துகளைப் பாராட்டினாலும், மதமாற்றத்தை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தாலும் பெரியார் இரு மதங்களுக்கும் மாறவில்லை. அம்பேத்கர் புத்த மதத்திற்குத் தன்னை அழைத்தபோது மதம் மாற மறுத்த பெரியார், ”மதம் மாறிவிட்டால் இந்து மதத்தை விமர்சிக்கும் உரிமை போய்விடும்” என்று காரணம் சொன்னார். ஆனால் அதுமட்டுமே முழுமையான காரணம் என்று நான் கருதவில்லை.
பெரியாரைப் பொறுத்தவரை நிறுவனங்களுக்குள் கட்டுப்படாதவர். இஸ்லாத்தோ பௌத்தமோ எந்த மதத்துக்கு மாறினாலும் அதை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் பௌத்தத்தின் திரிசரணக் கோட்பாட்டை முன்வைத்து தன் இயக்கத் தோழர்களுக்கும் அதையே அவர் வலியுறுத்தியிருக்கிறார். ‘என்னுடைய கொள்கைகளையும் இயக்கத்தையும் வெளியே இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சியுங்கள். ஆனால் இயக்கத்துக்குள் வந்துவிட்டால் அமைப்புக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியம்’ என்பதே அவருடைய நிலைப்பாடு. எந்த ஒரு நிலைப்பாடாக இருந்தாலும் மற்றவர்களுக்கு வலியுறுத்துவதற்கு முன்பு தான் அந்த நிலைப்பாட்டை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் பெரியாரின் வழக்கமாக இருந்திருக்கிறது. எனவேதான் மதமாற்றம் என்பது சடங்குகளுக்கும் நிறுவனமயமாதலுக்கும் தன்னைக் கொண்டுசெல்லும் என்னும் தயக்கம் பெரியாருக்கு இருந்திருக்கலாம். பெரியார் அரசியல் விடுதலைக்காக மதமாற்றத்தை ஆதரித்தாலும் இஸ்லாத், பௌத்த மதக்கருத்துகளில் சிலவற்றை அவர் ஏற்றுக்கொண்டாலும் ஒரு நிறுவனமாக மதத்தை ஏற்றுக்கொள்ள அவரது மனம் விரும்பியிருக்காது.
இதையும் படியுங்கள்: மனுசாஸ்திரத்தை எரிக்க வேண்டும். ஏன்? – பெரியார்
மதம் அல்லது ஆன்மிகம் மட்டுமே வாழ்வியல் நெறிகளை முன்வைக்கிறது என்பது பரவலாக நம்பப்படும் கற்பிதம். ஆனால் அது அடிப்படையில் அபத்தமானது.
நான் பத்து வயதிலிருந்து மத மறுப்பாளன்; கடவுள் மறுப்பாளன். எந்த இழப்புகளும் நிர்ப்பந்தங்களும் என்னை இந்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுசேர்க்கவில்லை. சுயமாகச் சிந்தித்தே அந்த இடத்துக்கு வந்தேன். என் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள், ஏற்றத்தாழ்வுகள், வெற்றி தோல்விகள் எல்லாவற்றுக்கும் நான், என்னைச் சுற்றியிருப்பவர்கள், சூழல் மட்டுமே காரணம் என்று அழுத்தமாகக் கருதுகிறேன். மனிதருக்கு மேலே எதுவுமில்லை, மனிதரில் மேல், கீழ் இல்லை என்பதை உறுதியாக நம்புகிறேன்.
உண்மையில் மத நம்பிக்கையுள்ளவர்களைவிட இறை மறுப்பாளர்களின் வாழ்க்கை ரிஸ்க் ஆனது. அவர்கள் அடையும் தோல்விகள், ஏமாற்றங்கள், சரிவுகளுக்கு முன்னவர்களைவிட கூடுதலாகவே குற்றம் சுமத்தப்படுவார்கள். அந்தக் குற்றச்சாட்டுகளில் வன்மம் தூக்கலாகவே இருக்கும். ஆனால் எல்லா நிகழ்வுகளுக்கும் நானே காரணப்படுத்தப்படுவதையே, அது மிகையாகவும் வன்மத்துடன் இருந்தாலும்கூட, விரும்புகிறேன்.
என் வீட்டில் புத்தர் படங்களும் சிலைகளும் உண்டு. என் மகனுக்கு போலீஸால் சுட்டுக்கொல்லப்பட்ட நக்சல்பாரி தோழரின் பெயரையும் புத்தரின் பெயரையும் இணைத்துப் பெயரிட்டிருக்கிறேன். ஆனால் நான் ஒருபோதும் புத்தரை வணங்க மாட்டேன். புத்தர் எனது அடையாளம். இந்திய மரபில் எழுந்த எதிர்ப்புக்குரல்களின் உருவகம். மார்க்ஸ், அம்பேத்கர், பெரியாரைப் போல் புத்தர் என் கருத்தியல் முன்னோடி,
மதம், கடவுள், சடங்குகள் உள்ளிட்ட எந்த புற அழுத்தங்களும் இல்லாமல் தன் வாழ்க்கைநெறிகளை அமைத்துக்கொள்வது கடவுள் மறுப்பாளர்களின் முன்னுள்ள சவால். அதிலும் ‘மதம் மட்டுமே அறவியல் மதிப்பீடுகளையும் வாழ்வியல் நெறிகளையும் கொண்டிருக்கிறது. மத மறுப்பாளர்கள் அற மதிப்பீடுகளும் இலக்குகளும் அற்றவர்கள்’ என்ற வலுவான கற்பிதத்துக்கு எதிராகப் போராடுவது கூடுதல் சவால். ஆனால் உண்மையான மத, கடவுள் மறுப்பாளர்கள் தங்களுக்கான சுயேச்சை அறங்களை உருவாக்கிக்கொள்வார்கள். அவர்களுக்கான அற மதிப்பீடுகளை மதநூல்களோ கடவுளோ உருவாக்கித் தருவதில்லை. அப்படித்தான் பெரியார் “பிறர் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோமோ அதேபோல் நாம் பிறரிடம் நடந்துகொள்வது தான் ஒழுக்கம்” என்றார். என்னை யாரும் ஏமாற்றக்கூடாது என்றால் நான் யாரையும் ஏமாற்றக்கூடாது,. என்னை யாரும் சுரண்டக்கூடாது என்றால் நான் யாரையும் சுரண்டக்கூடாது. இத்தகைய சுயேச்சையான அறங்களே இறை மறுப்பாளர்களின் அடிப்படை.
மதத்தில் இருந்தும் கடவுளிடம் இருந்தும் விடுபட்ட நமக்கான சுயேச்சை அறங்களை நாமே உருவாக்கி வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் மிகப்பெரும் மகிழ்ச்சியிருக்கிறது. அது மதவாதிகளின் கற்பனை சொர்க்கத்தைவிட அற்புதமானது. மத மறுப்பும் கடவுள் மறுப்பும் கொள்கையும் நிலைப்பாடும் மட்டுமல்ல, அதுவே வாழ்வியல், அதுவே பண்பாடு.