அன்பார்ந்த வாசக தோழர்களே!
மக்கள் அதிகாரம் அமைப்பின் இணையதளம் துவங்கி 6 மாத காலங்களில் ஆயிரக்கணக்கான புதிய வாசகர்களிடம் சென்று சேர்ந்துள்ளது.

2015-ஆம் ஆண்டு எமது அமைப்பை துவக்கிய போது அதற்கென்று தனியே ஊடகமொன்று துவங்கவில்லை. ஆனால் வெகுஜன அரங்கில் புரட்சிகர அரசியலை கொண்டு செல்வதற்கு எமது அமைப்பு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.

குறிப்பாக, தமிழகத்தை போதைக்கு ஆளாக்கி மொட்டை அடித்துக்கொண்டிருந்த அதிமுக கொள்ளை கூட்டத்தை அம்பலப்படுத்துகின்ற வகையில் ‘மூடு டாஸ்மாக்கை’ என்ற இயக்கத்தை நடத்தினோம். இந்த போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் எமது அமைப்பின் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த வழக்குகள் இன்னமும் நடந்து கொண்டுள்ளது.

தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரியை பாதுகாப்பதற்கு திருச்சி கல்லணையிலிருந்து நாகை மாவட்டம் பூம்புகார் வரை நடை பயணத்தை மேற்கொண்டு வழியில் லட்சக்கணக்கான மக்களை நேரடியாக சந்தித்தோம். நீதிமன்ற பாசிசத்தை அம்பலப்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்கள் துவங்கி உயர் நீதிமன்றம் வரை வழக்கறிஞர்கள், ஜனநாயகத்தன்மை உடைய நீதிபதிகள், பொதுமக்கள் அனைவரிடமும் பிரச்சாரத்தை கொண்டு சென்று நீதித்துறையில் ஏற்பட்ட கட்டமைப்பு நெருக்கடியை அம்பலப்படுத்தினோம்.

தொண்ணூறுகளில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமுல்படுத்த துவங்கியதன் காரணமாக விவசாயத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டு நாடு முழுவதும் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்தது. பல நூற்றாண்டுகளாக தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த தஞ்சையில் விவசாயிகளின் தற்கொலை செய்துகொண்டது பேரவலமாக நிகழ்ந்தது.

இந்த சமயத்தில் தஞ்சாவூரில் “விவசாயியை வாழவிடு” என்ற முழக்கத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளையும், பொதுமக்களையும் திரட்டி மாநாடு நடத்தி விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்களையும், அதற்கான மாற்று என்ன என்பதையும் விளக்கி கூறினோம்.

ஆர்.எஸ்.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பின் முகமூடியாகவும், கார்ப்பரேட் கைக்கூலியாகவும் திகழ்கின்ற பாசிச மோடி ஆட்சிக்கு வந்தவுடன் மொத்த நாட்டையும் கொடூரமான ஏகாதிபத்திய முதலாளித்துவ சுரண்டலின்கீழ் கொண்டு சென்று அதற்கு பொருத்தமான பார்ப்பன பேரரசை நிறுவுவதற்கு எத்தனித்து கொண்டிருக்கும் சதித்தனத்தை அம்பலப்படுத்தி திருச்சியில் 2019-ஆம் ஆண்டு “கார்ப்பரேட்-காவி பாசிசம் எதிர்த்து நில்!” என்ற முழக்கத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள பாசிச எதிர்ப்பாளர்களை, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து மாநாடு நடத்தினோம்.

அதன் பிறகு 2020-ஆம் ஆண்டு திருச்சியில் நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள், கார்ப்பரேட்-காவி பாசிச எதிர்ப்பு சக்திகளை ஒன்றிணைத்து CAA-NRC-NPR வேண்டாம், கல்வி வேலை ஜனநாயகம் வேண்டும்! அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் ! “அஞ்சாதே போராடு!” என்ற தலைப்பில் மாநாடு நடத்தினோம்.

உலகின் மிகப்பெரும் நிதி மூலதன ஆதிக்க சக்தியான வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை, தூத்துக்குடியில் தொடர்ந்து நடத்தி லட்சக்கணக்கான மக்களை உயிருடன் கொல்வதற்கு எத்தனித்தபோது, அதை முறியடிக்க போராடிய பிற அமைப்புகளுடன் இணைந்து லட்சக்கணக்கான மக்களை திரட்டி மக்கள் திரள் போராட்டத்தை நடத்தினோம்.அந்தப் போராட்டத்தில் 14 இன்னுயிர்களை துப்பாக்கிச்சூட்டுக்கு பலிகொடுத்து ஆலையை இழுத்து மூடி உள்ளோம். மீண்டும் அந்த ஆலையை திறப்பதற்கு முயற்சிக்கின்ற ஸ்டெர்லைட் கொலைகார நிறுவனத்தின் சதித்திட்டங்களை முறியடிக்க நீதிமன்றங்களிலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராடி வருகிறோம்.

மக்கள் அதிகாரம் அமைப்பு துவங்கிய நாள் முதல் அதன் அரசியல் முழக்கங்களும், பிரச்சார வடிவங்களும், பரந்துபட்ட மக்களை திரட்டும் ஆற்றலையும் கண்டு தமிழகத்தில் உள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகள் மட்டுமின்றி அகில இந்திய அளவில் உள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகளும் ஒரு முன்னோடி அமைப்பாக மக்கள் அதிகாரம் அமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை எமது பிரச்சாரத்தை லட்சக்கணக்கான பிரசுரங்கள், வெளியீடுகள், ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள், சுவர் எழுத்துகள், தெருமுனைக் கூட்டங்கள், பேருந்து, ரயில் பிரச்சாரங்கள், ஆலை வாயில் கூட்டங்கள், பேரணி, பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் போன்ற வடிவங்களில் மேற்கொண்டோம்.

தற்போது கார்ப்பரேட்-காவி பாசிச அபாயம் நாட்டை விழுங்குகின்ற நெருக்கடியான சூழலில் அதனை எதிர்த்து முறியடிக்கின்ற வகையில் தொடர்ந்து எமது அமைப்பின் செயல்பாடுகளைக் கொண்டு செல்கின்றோம்.

கார்ப்பரேட்-காவி பாசிசத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள், பாசிச அரசியலுக்கு எதிரான ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர் அனைவரையும் ஒன்றிணைத்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒன்றை அமைத்து ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிச சக்திகளை அனைத்து அரங்குகளில் இருந்து விரட்டவும், கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தவும் பரந்துபட்ட மக்களை அணிதிரட்டி வருகிறோம்.

இந்த அரசியல் நோக்கத்திற்கு உகந்த வகையில் எமது இணைய தளத்தை மேலும் விரிவாகக் கொண்டுசெல்ல இருக்கிறோம். ஆகையால் கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வேரோடு பிடுங்கி எறிய களத்தில் போராடும் எமது மக்கள் அதிகாரம் அமைப்பையும், அதன் இணையதளத்தையும் தொடர்ந்து ஆதரியுங்கள்.

FACEBOOK :

https://www.facebook.com/peoples.powerTN

YOUTUBE

https://www.youtube.com/channel/UCR1v0DCZwMniQseXpjEidJA

INSTAGRAM:

https://instagram.com/makkalathikaram_media?utm_medium=copy_link

TWITTER :

https://twitter.com/peoplespowerTN?t=1w9i81Q_6IhdHmO1Hvl2IA&s=09

NEWSHUNT :

https://profile.dailyhunt.in/peoplespower2021?s=a&ss=pd&uu=0x41ac947b68027e36

SHARE CHAT

https://sharechat.com/profile/peoplespower?d=n

PINTEREST

https://pin.it/6mSrCWK

உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களிலும் எங்களை தொடருங்கள். நண்பர்கள், உறவினர்கள், பாசிச எதிர்ப்பு ஜனநாயக புரட்சிகர சக்திகள் அனைவரிடமும் கொண்டு சேருங்கள்.

கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!
ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்!

தோழமையுடன்
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here