போலீஸ் குண்டர்களின் ராஜ்ஜியம்! திமுகவின் கையாலாகாத்தனம்!

1
325

ள்ளக்குறிச்சி அருகில் உள்ள கனியமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் நடந்த மாணவியின் மரணத்திற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இறுதி ஊர்வலத்தின் போது அவரது தந்தை வீட்டிலிருந்து இடுகாடு செல்லும் வரை இதைச் சொல்லிச் சொல்லி கதறி அழுது கொண்டிருந்தார்

கொலைகாரப்பள்ளி மீண்டும் இயங்குவதற்கு கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளிக்கிறார். சட்டத்திற்கு புறம்பாக ஒரே கட்டிடத்தில் இரண்டு பள்ளி நடத்துவது மற்றும் விடுதியை நடத்துவது ஆகியவற்றை பற்றி அம்பலமான பிறகும் வாயை பொத்திக் கொண்டுள்ளார்.

கடந்த பனிரெண்டாம் தேதி மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதி தனது மரணத்தின் மூலம் நமக்கு உணர்த்தி இருக்கும் செய்தி என்ன?

அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய கல்வித்துறை தனியார் கல்விக் கொள்ளையர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறது. கொடூரமான இலாப வேட்டைக்கு கல்வி வியாபாரத்தில் போட்டி தலை விரித்து ஆடுகிறது.

எங்கள் பள்ளியில் என்னென்ன வசதிகள் உள்ளது, எங்கள் பள்ளி மாவட்டத்தில் முதலிடம் பெற்றது, எங்கள் பள்ளியில் படித்தவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள், எங்கள் பள்ளியில் படித்தவர்கள் ஐஐடி தேர்வில் முன்னணியில் உள்ளனர் என கல்வி வியாபாரிகள் கொடுக்கும் விளம்பரத்தில் மதிமயங்கி தனியார்பள்ளியை நோக்கி ஓடுகின்றனர் பெற்றோர்கள்.

இந்த பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு பகற்கொள்ளையில் இறங்கி கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டுகிறார்கள் கல்வி வியாபாரிகள்.

பிராய்லர் கோழிகளை உருவாக்குகின்ற நாமக்கல் மாவட்டத்தில் துவங்கி சேலம், விழுப்புரம் மாவட்டம் வரை உண்டு உறைவிட பள்ளி என்ற பெயரில் பிராய்லர் பள்ளிகள் பரவி வருகிறது.

இந்த பிராய்லர் பள்ளிகளின் முதலாளிகள், அனைத்து கட்சி அரசியல்வாதிகளையும் தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளில் நடக்கின்ற சட்டவிரோத செயல்களில் கருத்து சொல்ல முடியாத அளவிற்கு வாய் பொத்தி நிற்பதும், அதை எதிர்த்து போராட வக்கற்ற நிலைக்கு ஓட்டுக் கட்சிகள் அனைவரும் விலைபோய் கிடப்பதும் நாடறிந்த உண்மை. மாணவி ஸ்ரீமதி மரணத்திலும் இது எதிரொலிக்கிறது.


படிக்கஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வேண்டும்! | தோழர் ராஜூ உரை


நிலவுகின்ற சமூக கட்டமைப்பில் தேர்தல் அரசியலில் நின்று வெற்றி பெறுகின்ற எம்எல்ஏக்கள் துவங்கி அமைச்சர்கள் மற்றும்  முதல்வர்கள் வரை அனைவரும் தங்களது தகுதிக்கேற்ப நர்சரி பள்ளி முதல் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வரை நடத்துகின்றனர். தங்களது அதிகாரம் மற்றும் குறுக்கு வழியில் கொள்ளை அடித்த பணத்தை முதலீடு செய்து கல்வி வியாபாரத்தில் இறங்கி கல்லா கட்டுகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன?

கள்ளக்குறிச்சி தாலுகாவில் இத்தகைய கல்வி நிறுவனங்கள் கொடி கட்டி பறக்கின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 70 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அந்த வரிசையில் சக்தி மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், ஈசிஆர் இன்டர்நேஷனல் என்ற கல்வி நிறுவனத்தின் உரிமையாளருமான திருவாளர் ரவிக்குமார் நர்சரி பள்ளியாகத்தான் இந்த பள்ளியை துவக்கினார்.

இவர் ஆர் எஸ் எஸ் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இந்து முன்னணி மற்றும் ஆலய பாதுகாப்பு கமிட்டி போன்றவைகளில் உறுப்பினராக, முன்னணி செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவரது பள்ளி ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாமாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆர் எஸ் எஸ் தலைவர்களாக வலம் வரும் ஹெச்.ராஜா, அண்ணாமலை மற்றும் அமித் ஷாவின் மகனுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

பாஜக எச்.ராஜாவுடன் சக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர்

மற்றொருபுறம் சொந்த சாதி அடிப்படையில் முன்னாள் முதல்வர் எடப்பாடியுடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி குறுகிய காலத்தில் ஒரே வளாகத்தில் மெட்ரிக் பள்ளி மற்றும் இன்டர்நேஷனல் பள்ளி இரண்டையும் துவங்கினார். விதிமுறைகளை மீறி இரண்டு பள்ளிகளின் விடுதியை மூன்றாவது அடுக்கில் கட்டிக்கொண்டார்.

இத்தகைய பள்ளிகள் எந்த இலட்சணத்தில் இயங்குகிறது என்பதை சோதிப்பதற்கென்று மக்கள் வரிப்பணத்தில் இலட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தை பெறுகின்ற கல்வி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கோடிக்கணக்கில் கையூட்டு பெற்றுக் கொண்டு பள்ளிகளில் நடக்கின்ற சட்டவிரோத விதிமீறல்களை கண்டு கொள்வதில்லை.

அதுபோலத்தான் சக்தி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்த விதிமீறல்களை கண்டு கொள்ளவில்லை.

மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு முன்பு இதே பள்ளி வளாகத்தில் ஐந்து மாணவ, மாணவிகள் கொடூரமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது மரணமடைந்துள்ளனர்.

2003 தனது பள்ளி வேன் மூலம் அம்மகளத்தூர் மாணவர்களை வேன் ஏற்றி இடித்ததால் படுகாயத்திற்கு உள்ளாக்கியது.

2004 ஆம் ஆண்டு ராஜா என்ற மாணவர் பள்ளியின் கொடூரமான பயிற்சி முறையால் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் ஆனால் பல லட்சம் செலவழித்தும் வாய் ஊமையாகவும் நடைபிணமாகவும் மாறினார்.

2004 ஆம் ஆண்டு ராஜா என்ற வேறொரு மாணவர் கொலையுண்டார். அதே ஆண்டில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து பல்வேறு மாணவர்களை நிரந்தர ஊனமாக்கியது.

2005 பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்காக இந்து மத சாமியார்கள் முன்வைத்த நரபலிக்காக பிரதிஷா என்ற நாலு வயது சிறுமியை வேனுக்கு அடியில் போட்டு நசுக்கி கொன்றது.

இந்த சம்பவங்கள் அனைத்தும் நன்றாக அம்பலமாகி மாட்டிக்கொண்ட பிறகு செய்தித்தாள்களிலும், காவல் நிலையத்திலும் பதிவானவை. ஆனால், கணக்கில் வராமல் அமுக்கப்பட்ட பாலியல் வன்முறைகள், கொடூரமான முறையில் கல்வி கற்பிக்கும் தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் எண்ணிலடங்காதவை.

மேற்கண்ட சம்பவங்களின் போது எந்த பாணியை கையாண்டு மரணத்தையும், கிரிமினல் குற்றங்களையும் அமுக்கினார்களோ அதே பாணியில் மாணவி ஸ்ரீமதி மரணத்தை முடித்து விடலாம் என்று கையாண்டுள்ளனர்.

ஆனால் justice for srimathi என்ற பெயரில் வெகுண்டெழுந்த மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் காரணமாக நிர்பந்தத்திற்கு உள்ளானார்கள்.

மறுபுறத்தில் புலன்விசாரணை நடத்த வேண்டிய அதிகாரம் படைத்த போலீசு அதீத விசுவாசத்துடன் பள்ளிக்கு வாலாட்டியது. மாணவியின் மரணம் நடந்த தினத்தில் இருந்தே தமிழகத்தின் டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபு பள்ளியின் மீது எந்த குற்றமும் இல்லை ஆசிரியர்கள் நல்லவர்கள் என விசாரணைக்கு முன்பே தீர்ப்பளித்து தனது விசுவாசத்தை காட்டிக் கொண்டார். இவரும் பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரும் நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல அப்பகுதியில் உள்ள திமுக எம்எல்ஏக்கள் உதயசூரியன் மற்றும் வசந்தன் கார்த்திகேயன், எம்பி கௌதம சிகாமணி போன்றவர்கள் பள்ளி தாளாளர் ரவிக்குமார் மற்றும் அவரது மகன் சக்தியுடன் நெருக்கமானவர்கள். மாணவியின் மரணத்திற்குப் பிறகு இவர்களின் தயவில்தான் ரவிக்குமார் மற்றும் குடும்பத்தினர் நான்கு நாட்கள் வரை நடவடிக்கையில் இருந்து தப்பி வந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மக்களே இவர்களின் யோக்கியதையை காரி துப்புகின்றனர்.

மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து இறந்து போனதாக மாணவி ஸ்ரீமதியின் மரணத்தை புதைக்க எண்ணி கல்வி கொள்ளையர்களுக்கு விசுவாசமாக போலீஸ் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி, மாவட்ட கல்வித்துறை, வருவாய்த்துறை, ஆட்சிப் பணித்துறை மூன்றும் வரிசை கட்டி நின்றனர்.

விளைவு மாணவியின் மரணத்திற்கு உரிய விடை தேடாமல் போராட்டத்தை ஒடுக்குவதில் கவனம் செலுத்தியது போலீசு குண்டர்கள் படை.

ஜூலை 15 – கல்வி வரலாற்றில் திருப்புமுனை!

மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு பள்ளியின் வாயிலில் போராடிக் கொண்டிருந்தனர். அதற்கு முன்பு மூன்று நாட்கள் போராடிய அதே வழிமுறையைத்தான் அவர்கள் கையாண்டனர்.

ஆனால் மாணவர்- இளைஞர்களுக்கு வெளியில் இருந்து திடீரென்று வந்த கூலிப்படை ஒன்று தனது குண்டர்களை கொண்டு பள்ளி வளாகத்தில் புகுந்து தீ வைப்பது, கட்டிடங்களை இடிப்பது, கேமராக்களை உடைப்பது, வாகனங்களை அடித்து நொறுக்குவது என வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் யார் என்பதைத்தான் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பள்ளி நிர்வாகமும் தன் பங்கிற்கு ‘கவுண்டர் சாதி’ குண்டர்களை தயாராக வைத்திருந்தது. போராடிய மாணவர்களின் மீது தாக்குதல் நடத்துவதற்கு தருணம் பார்த்து காத்துக் கொண்டிருந்தது.

இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு எழுச்சியுடன் போராடிய போராட்டம் கூலிப்படையினரால் கலவரமாக மாறி வாகனங்களை கொளுத்துவது, கட்டிடங்களை கொளுத்துவது போன்ற வன்முறை வெறியாட்டங்கள் நடந்த போது ஐந்து மணி நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. போலீசு.

இருசக்கர வாகனங்கள் மற்றும் வேன்களில் வந்த குண்டர்கள் படை பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேறிய பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பள்ளி நிர்வாகத்தின் கூலிப்படையுடன் இணைந்து கொடூரமான முறையில் தாக்கி வெறியாட்டம் போட்டனர்.

அதுபோல பள்ளியில் நடந்த மரணத்திற்கு நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கும்போது, கலவரக்காரர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையை கண்ட உள்ளூரில் உள்ள மக்கள் சிலர் தனது ஆத்திரத்தின் வெளிப்பாடாக பள்ளிக்குச் சொந்தமான நாற்காலி, பெஞ்ச் போன்ற சிலவற்றை கொண்டு சென்றனர். அதையும் தற்போது மாவட்ட நிர்வாகத்தின் மிரட்டலின் பேரில் திரும்பவும் கொண்டு வந்து போட்டு விட்டனர்.

பள்ளிக்கு எதிராக நடந்த இந்த நிகழ்வை இலங்கையில் கோத்தபாயா நாட்டை சூறையாடியதற்கு எதிராக நடந்த இலங்கை மக்களின் எழுச்சியான போராட்டத்துடன் ஒப்பிடுவது அரசியல் தற்குறித்தனமாகும். இலங்கை மக்களையும் இழிவுபடுத்தும் கேடுகெட்ட செயலாகும்.

வன்முறையை நடத்திய கலவரக் கும்பல் வெளியேறிய பிறகு போலீசு சேலம் சாலை, சென்னை சாலை, வேப்பூர் சாலை மூன்றையும் பிளாக் செய்து இடையில் கையில் கிடைத்த மாணவர் -இளைஞர்கள், கருப்பு சட்டை அணிந்து வழியில் சென்ற வழிப்போக்கர்கள், அனைவரையும் மிருகத்தனமான முறையில் தாக்கி கைது செய்து சிறையில் அடைத்தனர். சின்னசேலம் காவல் நிலையத்தில் குற்ற எண் 236 மற்றும் 237 ஆகியவற்றின் கீழ் 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் திருச்சி மற்றும் கடலூர் மத்திய சிறைகளிலும் வேலூர் மற்றும் கடலூர் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டுள்ளனர். பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாக இவர்களின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளியில் நடந்த எதிர் தாக்குதல் நிகழ்வின் காரணமாக விழித்துக் கொண்ட தமிழக அரசு, குறிப்பாக திமுக முதல்வர் உத்தரவின் பேரில் சக்தி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவி சாந்தி ரவிக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்ட மூவரை போலீசு கைது செய்தது.

அதன் பிறகு பள்ளியில் நடந்த வன்முறைகளைப் பற்றி மதிப்பீடு செய்வதற்கு வந்த திமுகவின் அமைச்சர்கள் குழு, எ.வ.வேலு தலைமையில் பள்ளியில் நடந்த சேதங்களை பார்த்து தனது வர்க்க பாசத்துடன் சேதங்களைப் பற்றி மதிப்பீடு செய்தனர்.

மாணவியின் மரணத்தை துச்சமாகவும், பள்ளியின் இழப்புகளை பெரிதாகவும் முன்னிலைப்படுத்தி தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தனர். மாணவியின் மரணத்தைக் கண்டு பதைக்காத அவர்களின் ‘நெஞ்சுக்கு நீதியின்றி,’ கல்வி கொள்ளையனுக்காக துடி துடித்தது.


படிக்க: கள்ளக் குறிச்சி சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ் பின்னணி என்ன?


திமுகவின் எ.வ.வேலு, பொன்முடி போன்றவர்கள் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தி கொள்ளையடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்வது பற்றியோ அல்லது இது போன்ற கல்வி கொள்ளையர்களின் காம வெறியாட்டங்களை முறியடிக்கின்ற வகையில் பள்ளியை பறிமுதல் செய்வதைப் பற்றியோ, மக்களின் கோரிக்கையை ஏற்று அரசுடமையாக்குவதை பற்றியோ பேட்டி கொடுக்காத அமைச்சர் படை, கல்வி நிர்வாகத்திற்கு ஆதரவாகவே தனது விசுவாசத்தை காட்டியது.

இதே நேரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் என்பவர் மாணவியின் மறு கூறாய்வு பற்றிய விசாரணையில் தனது வரம்பை மீறி போராடிய மாணவர்களை பற்றி அவதூறாகவும், வன்முறையாளர்கள் என்பதைப் போலவும் சித்தரித்தது மட்டுமின்றி, கல்வி கொள்ளையர்கள் மதிப்பீடு செய்த 30 கோடி ரூபாய் மாணவர்கள் இளைஞர்கள் தரப்பிலிருந்து வசூலிக்க வேண்டும் என தனது ஆளும்வர்க்க சேவையை வெளிக்காட்டினார்.

இதற்கு முன் நடந்த பல்வேறு பள்ளிக் கல்லூரி மாணவர்கள் படுகொலையிலும், ஐஐடியில் நடந்த மாணவி தற்கொலையிலும் ஒரு முடியையும் புடுங்க முடியாத ‘நீதியரசர்கள்’ கள்ளக்குறிச்சி பள்ளியில் மட்டும் எகிறிகுதித்ததற்கு பாஜகவின் கூலிப்படையாக நீதித்துறையும் செயல்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

போலீசு குண்டர்களின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டு!

மாணவியின் மரணம் நடந்த தினத்திலிருந்து மாணவியின் அடக்கம் நடைபெற்ற தினம் வரை போலீசு அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு வெறியாட்டம் போட்டது என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளது.

எடுத்துக்காட்டாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை விசாரணை என்ற பெயரில் கொண்டு சென்று காட்டுமிராண்டிகளைப் போல கை, கால்களை முறித்து மாவு கட்டு போட்டுவிட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக பச்சையாக புளுகியது மட்டுமின்றி நீதிபதியிடமும் அவ்வாறே கூற வேண்டும் எனவும் மிரட்டி சிறையில் அடைத்தனர்.

பள்ளி நிர்வாகத்தின் குண்டர்களும் போலீசுடன் இணைந்து கொண்டு மாணவர்களின் மீது உருட்டு கட்டை முதல் இரும்பு தடி வரை அனைத்தையும் பயன்படுத்தி கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் – இளைஞர்கள் கொண்டு சென்ற இரு சக்கர வாகனங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி குப்பையை போல வாரி எரிந்தனர்.

வாட்ஸ் அப் குழுக்களில் போராட்ட செய்திகளை பகிர்ந்த அனைவரையும் குறி வைத்து கைது செய்து தனது எஜமான விசுவாசத்தை கட்டிக் கொண்டனர். ஸ்காட்லாந்து யார்ட்டுக்கு நிகரானது தமிழக போலீசு என பீற்றிக்கொள்ளும் போலீஸ் வாட்ஸ் அப்பில் பிரச்சாரம் செய்வதற்கும் கலவரத்தை தூண்டுவதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை கூட புரிந்து கொள்ள துப்பில்லாமல் எஜமான விசுவாசத்துடன் மாணவர்களின் மீது பாய்ந்து குதறியது. தற்போது தேடுதல் வேட்டைக்கென்று உளவுத்துறையில் புதிதாக 37 பேரை சேர்த்துள்ளது.

நீதிபதியோ கருப்பு சட்டை போட்டவர்கள் அனைவரும் கலவரக்காரர்கள் என காவிக்கு எதிராக திரண்டு வரும் மக்கள் திரள் போராட்டங்களை கண்டு நடுங்கி, மிரட்டுகின்ற வகையில் தீர்ப்பளித்தார். போலீஸ் ராஜ்யத்தை கட்டவிழ்த்து விடுமாறு ஆலோசனையை கூறினார்.

எனவே, மேலும் போலீசுக்கு கை தினவெடுத்து திரிய ஆரம்பித்தது. விளைவு மாணவி இறப்பின் போது யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்பதில் துவங்கி 40 கிலோ மீட்டருக்கு போலீஸ் குவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி உண்மையில் பள்ளி வளாகத்தில் தீ வைப்பு வாகன எரிப்பு போன்ற வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட ‘குண்டர் படையின்’ மீது ஒரு துரும்பையும் அசைப்பதற்கு துணிச்சல் இல்லாத கோழைகளாக, சாதி வெறியர்களின் அடியாள் படையாக செயல்பட்டு, போராடிய மாணவர்களின் மீது தாக்குதலை நடத்தி தன்னை யோக்கியவன்களாக காட்டிக் கொண்டது.

சொல்லிக் கொள்ளப்படும் சட்டங்கள், விதிமுறைகள் போன்ற எதையும் மதிக்காத போலீசின் அக்கிரமங்களைக் கண்டு “போலீசு சட்டபூர்வ கிரிமினல் கும்பல்” என அதன் முகத்திரையை கிழித்தெறிந்தார் ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணய்யர். ஆனால் இன்றோ பாசிஸ்டுகளின் கையாட்களாக மாறி கொடூரமான கொலை வெறி பிடித்த குண்டர்களாக மாறி உள்ளனர். குறிப்பாக தமிழக போலீஸ் ஆளுநர் ஆர் எஸ் எஸ் ரவியின் பிடியில் கட்டுப்பாட்டில் உள்ளது.

இவர்களுக்கு சித்த பிரம்மை பிடித்து விட்டது, மனரீதியாக அழுத்தம் மேலோங்கி விட்டது,, தொடர்ச்சியான பணியின் காரணமாக வெறி பிடித்துள்ளனர் என்றெல்லாம் பல்வேறு கதை அளக்கின்றனர் ஆளும் வர்க்க கைக்கூலிகள்.

அதிக வேலை செய்பவர்கள் அனைவரும் இதுபோல வன்முறையில் இறங்குவதற்கு அனுமதி கொடுப்பார்களா?

இவர்கள் கூறும் கூற்றுப்படி பார்த்தால் கடும் உழைப்பில் ஈடுபடும் கூலி விவசாயி தனது உழைப்பை சுரண்டிக் கொழுக்கும் ஆளும் வர்க்கத்தை தூக்கி எறியும் புரட்சிக்கு அணி திரள்வது நியாயமானதுதான் என்ற நாணயமான முடிவுக்குத்தான் இவர்கள் வரவேண்டும்.

ஆனால் அதை வன்முறை எனவும், தீவிரவாதம் எனவும் பிரச்சாரம் செய்து முடக்கத் துணிவார்கள் என்பதுதான் நிதர்சனம்.

அதிமுகவுக்கு தூத்துக்குடி, திமுகவிற்கு கள்ளக்குறிச்சி என்பது உண்மையா?

சில அரைவேக்காடுகள், அமைப்பு ‘பெயர் பொறுக்கிகள்’ தூத்துக்குடியில் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு போராடிய போது அதன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொலை வெறியாட்டம் நடத்தப்பட்ட சம்பவத்தையும், மூன்று நாட்கள் தனியார் கல்விக் கொள்கைக்கு எதிராக குறிப்பிட்ட மாவட்டத்தைச் சார்ந்த சில ஆயிரம் பேர் ஒன்று திரண்டு போராடிய போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தடியடி தாக்குதல் சம்பவத்தையும் ஒன்று என மதிப்பிடுகின்றனர். இவ்வாறு பார்ப்பதே அறிவு குருட்டுத்தனமாகும்.

தூத்துக்குடி சம்பவத்தில் அனில் அகர்வால் மீது சாதாரண வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. அது மட்டும் இன்றி 13 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை வெறியாட்டமிட்ட போலீஸ் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

ஆனால் கள்ளக்குறிச்சியிலோ பள்ளி தாளாளர்கள், உரிமையாளர் உள்ளிட்ட மூவருடன் ஆசிரியர்கள் இருவரையும் சேர்த்து கைது செய்துள்ளனர். இத்தகைய சூழலில் தூத்துக்குடி- கள்ளக்குறிச்சி என ஒப்பீடு செய்வது அரசியல் அற்ற முட்டாள்தனமாகும்.

பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மற்றும் இந்து முன்னணி அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் மக்கள் அதிகாரம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளை கருவறுக்க வேண்டும் என தூத்துக்குடியுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர்.

இத்தகைய ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகளாக சீரழிந்து போய் உள்ள ‘பெயர் பொறுக்கி’ பிழைப்புவாத கும்பல், உண்மையாகவே போராடிய மக்கள் அதிகாரம் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ராமலிங்கத்தின் பெயரையும், வாட்ஸ் அப்பில் பதிவு செய்வதற்காக அதிகாலையில் கைது செய்யப்பட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில பொருளாளர் சுரேந்திரன் மற்றும் மூன்று தோழர்களின் கைது சம்பவத்தையும் தமது தோழர்கள் மீதான கைது என்பதைப் போல சித்தரித்து வெட்கமின்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேராசிரியர் அ.மார்க்ஸ் உடன் இணைந்து பேட்டி கொடுக்கின்றனர்.

மாணவியின் மரணத்திற்கு உண்மை குற்றவாளிகள் அதிகார வர்க்கம், போலீசு, ஆர்எஸ்எஸ் கூட்டு என அறிவித்தால், இதில் திமுகவின் பெயர் இல்லை என ஒப்பாரி வைக்கின்றனர். இன்னும் சில அரைவேக்காடுகளோ திமுகவிற்கு முரட்டு முட்டு என்றெல்லாம் உளறுகின்றனர்.

இவை அனைத்தும் ஒரு தலைபட்சமான, முழு உண்மையையும் பொறுமையாக ஆய்வு செய்யாத தற்குறித்தனமான பிதற்றல்கள் ஆகும். பிரதானமான எதிரியான பள்ளி நிர்வாகி ஆர் எஸ் எஸ் ரவிக்குமாரின் மீது குறிப்பான அடி விழாமல் தப்ப வைக்கும் நயவஞ்சகத்தனமாகும்.

‘மூக்கு இருக்கும் வரை சளி பிடிக்கும்’ என்பதைப் போல தனியார் கல்விக் கொள்ளையர்கள் கல்வியை தனது பிடிக்குள் வைத்திருக்கும் வரை இது போன்ற மரணங்களும் அதற்கு எதிரான போராட்டங்களும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மாறினாலும் திருத்த முடியாது.

அதுபோல மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிரந்தர அதிகார உறுப்புகளான போலீசு, அதிகார வர்க்கமான கலெக்டர், தாசில்தார் மற்றும் நீதிபதிகளை கொண்ட நிரந்தர அரசு கட்டமைப்பு எந்த ஆட்சி நடந்தாலும், ஆளும் வர்க்க சேவையில் முன்னணியில் நிற்பார்கள் என்பதை மக்களுக்கு புட்டுக்காட்டுவதன் மூலம் மட்டும்தான் புதிய சமூக மாற்றத்திற்கு அவர்களை அறை கூவி அழைக்க முடியும்.

மாறாக ஒரு கட்சிக்கு விசுவாசமாக மற்றொரு கட்சியின் மீது விமர்சனத்தை ஏவுவதோ, கண்ணில் கண்ட அனைவரையும் ஓட்டு பொறுக்கிகள் என விமர்சித்து உண்மையான எதிரிகளை தப்ப வைப்பதோ மக்களுக்கு செய்யும் துரோகம் என்பதை ‘பெயர் பொறுக்கிகள்’ புரிந்து கொள்வதில்லை.

கல்வியை தனியார் மையத்தின் பிடியிலிருந்து மீட்பதை மாணவி ஸ்ரீமதியின் மரணத்தை முன்னிறுத்தி பிரச்சார இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும். ஒரே நாளில் வங்கிகளை தேசிய மயமாக்கியது போல கருப்புப் பணம் மூட்டைகளின் பிடியில் சிக்கியுள்ள அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளையும் அரசு உடமையாக்குவது மூலம் இத்தகைய கொடூரமான மரணங்களுக்கு முடிவு கட்ட முடியும் என்பதே சரியான மார்க்சிய லெனினிய பார்வை.

  • செல்வம்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here