போர்ச்சூழலில் பொருளாதாரம்:
ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்த போர் உலகளவில் பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் ரஷ்யாவின் பாதுகாப்பு அச்சுறுத்தப்படும். என்பதே இந்தப் போருக்கான முதன்மையான காரணம். எத்தகைய பிரச்சனையாக இருந்தாலும் அமைதி வழியில் தீர்வுபெற முயற்சிக்காமல் போரில் ஈடுபட்டு பல இன்னுயிர்கள் அழியக் காரணமான ரஷ்ய அரசின் செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது. ஆனால் எண்ணிலடங்கா போர்க்குற்றங்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்த அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ரஷ்யாவின் மீது பொருளாதாரத்தடை விதிக்க என்ன யோக்கிதை/ முகாந்திரம் உள்ளது என்பது தான் கேள்வி. சர்வதேச அரங்கில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் விதமாக அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கா ஐக்கிய முடியரசு, ஐரோப்பிய ஒன்றியம், கனடா உட்பட பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஆனால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, ஆற்றல் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கவில்லை. ஏனென்றால் அதனால் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கபடும் அல்லவா.
.டாலர், யூரோ, பவுண்டு, ஜப்பானிய யென்னில் வணிகம் செய்வதற்கான ரஷ்யாவின் திறனை நாங்கள் கட்டுப்படுத்துவோம் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பொருளாதாரத் தடைகள், ‘ஸ்விஃப்டு’- உலகளாவிய வங்கிகளுக்கிடையிலான நிதி தொலைத்தொடர்புக்கான சமூகத்தில் (Society for Worldwide Interbank Financial Telecommunications) இருந்து விலக்கி வைப்பு, ரஷ்யர்களின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கம் போன்ற நடவடிக்கைகளால் ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.
2018ல் ரஷ்யா வாங்க வேண்டிய ஆயுதங்களுக்கான 20 சதவீத பரிவர்த்தனைகளை அமெரிக்கா தடுத்தது. அமெரிக்காவால் ரஷ்யாவின் சர்வதேச பரிவர்த்தனைகள் தடுக்கப்படுவதால் ‘ஸ்விஃப்டு’- உலகளாவிய வங்கிகளுக்கிடையிலான நிதி தொலைத்தொடர்புக்கான சமூகத்தின் (Society for Worldwide Interbank Financial Telecommunications) முறைக்கு மாற்றாக ‘எஸ்.பி.எஃப்.எஸ்’ (SPFS -System for Transfer of Financial Messages) என்ற நிதிச் செய்திகளை அனுப்பும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் 18 சதவீத பணப் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து கனிம எரிபொருள்கள் மற்றும் எண்ணெய்கள், உரங்கள், இயந்திரங்கள், அணு உலைகள் மற்றும் அதன் பாகங்கள் முத்துக்கள் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் என பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்துவருகிறது. இந்த பொருட்களின் விலைவாசி உயர்வினாலும், வழங்கல் சங்கிலி இடர்பாடுகளாலும் இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை 80% இறக்குமதியையே சார்ந்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் $100 பில்லியனைத் தாண்டி, கடந்த ஆண்டைக் காட்டிலும் இருமடங்கு அதிகரிக்க உள்ளது. கச்சா எண்ணெயின் விலை உயர்வு மற்ற பொருட்களிலும் விலைவாசி உயர்வை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் விலை 10 டாலர் உயர்ந்தால் பணவீக்கம் 0.5% உயரும் என மத்தியவங்கி ஆய்வு குறிப்பிடுகிறது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற எரிபொருள்களின் விலைஉயர்வு இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரித்து ரூபாயை பலவீனப்படுத்தி பணவீக்கத்தை மேலும் உயர்த்தி பொருளாதார வளர்ச்சியை மட்டுப்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா உக்ரைனிலிருந்து சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்கிறது. உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் காரணமாக சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி தடைபட்டுள்ளது. இந்தியா ஆண்டுக்கு 25 லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெயை இறக்குமதி செய்கிறது, அதில் 70 விழுக்காடு உக்ரைனிலிருந்தும், 20 விழுக்காடு ரஷ்யாவிலிருந்தும், 10 விழுக்காடு அர்ஜென்டினாவிலிருந்தும் பெறுகிறது. உணவுக்கான எண்ணெய்க்கு இந்தியா 65% இறக்குமதியையே சார்ந்துள்ளது. இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியானது, உலகளாவிய விலை உயர்வு காரணமாக சென்ற ஆண்டில் கிட்டத்தட்ட ரூ.72,000 கோடியாக இருந்தது 2020-21 சந்தை ஆண்டில் (நவம்பர் முதல் அக்டோபர் வரை) ரூ.1.17 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்தோ அவற்றை சரக்கு சேவை வரி அமைப்புக்குள் கொண்டுவருவது குறித்தோ எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், விமான எரிபொருளின் விலையைக் குறைப்பதில் நமது நிதியமைச்சர் அதிக அக்கறை செலுத்தியுள்ளார். விமான எரிபொருளை சரக்கு சேவை வரி அமைப்புக்குள் கொண்டுவர சரக்கு சேவை வரி அவையின் அடுத்த சந்திப்பில் முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு, விமான எரிபொருள் ஆகிய ஐந்து பொருட்களும் சரக்கு சேவை வரி அமைப்புக்கு வெளியே உள்ளன.
கொரோனா கொள்ளை நோய் தாக்கத்தினால் உலகப் பொருளாதாரம் முடங்கிய நிலையில் 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க மத்திய வங்கி தூண்டுதல் அளிப்பதாகக் கூறி வட்டிவீதத்தை சுழியத்திற்குக் குறைத்தது. கோவிட்-19க்கு முந்தைய நிலையை பொருளாதாரம் இன்னும் அடையவில்லை. அமெரிக்காவில் தொடர்ந்து பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் 7.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி அதிகரித்துள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மார்ச்சிலிருந்து வட்டிவீதத்தை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இது சரியான தீர்வாகுமா, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துமா என்றால் இல்லை என்றே குறிப்பிடவேண்டும். பொதுவாக பொருட்கள்/சேவைகளுக்கான வேண்டல் அவற்றின் வழங்கலைக் காட்டிலும் அதிகரிக்கும் போதும், அல்லது பொருட்கள்/சேவைகளுக்கான வழங்கல் வேண்டலைக் காட்டிலும் குறையும் போதும் பணவீக்கம் ஏற்படுகிறது. பணவீக்கம் எதனால் தற்போது அதிகரித்துள்ளது, பொருட்கள்/சேவைகளின் வேண்டல் அதிகரித்ததாலா, அல்லது வழங்கல் சீர்குலைந்ததாலா. வழங்கல் சீர்குலைந்ததாலே பணவீக்கம் அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தில் மொத்த வேண்டல் அதிகமானதால் பணவீக்கம் தூண்டப்பட்டால் வட்டிவீதத்தை உயர்த்தி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே மத்தியவங்கிகளின் நடைமுறையாக உள்ளது. பூஜ்ஜிய வட்டிவீதம் உண்மையான பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கவில்லை நிதிமய நடவடிக்கைகளையும், பங்குச்சந்தைகளையுமே உயர்த்தியது என்பதே உண்மை என்றபோதும் கோவிட்-19 பொருளாதார நெருக்கடியால் உலகளவில், நாடுகள், நிறுவனங்களின் கடன் நிலை அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க மத்திய வங்கி வட்டிவீதத்தை உயர்த்தினால் பெரும் எண்ணிக்கையிலான நிறுவனங்களை நொடிப்புநிலைக்குத் தள்ளப்பட்டு பொருளாதார குறுக்கத்தை ஏற்படுத்தும்.
வட்டிவீதத்தை உயர்த்துவது வேலைவாய்ப்பின்மையும், கடன் நெருக்கடியும் அதிகரிப்பதுடன் பொருளாதார வளர்ச்சியையும் பாதித்து பொருளாதாரக் குறுக்க விளைவை உருவாக்கும். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது உழைக்கும் மக்களே. ஆனால் தற்போது மொத்த வேண்டல் அதிகமானதால் பணவீக்கம் ஏற்படவில்லை, உலகளவில் உழைக்கும் மக்களின் வருவாய், வாங்கும் சக்தி குறைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகளும் கோவிட்-19க்கு முந்தைய நிலையை அடையவில்லை. வழங்கல் தட்டுப்பாட்டினால் வந்த பணவீக்கத்தை வட்டி வீதத்தை அதிகரிப்பதன் மூலம் சரிசெய்யமுடியுமா? உதாரணமாக அதீத மழையால் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. அதனால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. அப்பொழுது என்ன செய்யவேண்டும் காய்கறிகளின் வழங்கலை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். வட்டிவீதத்தை அதிகரிப்பதால் தக்காளியின் வழங்கலை அதிகரிக்க முடியுமா. ஆம் என்கிறது அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கை. இவ்விசயத்தில் ஒப்பீட்டளவில் இந்திய வங்கியாளர்களின் நிலைப்பாடு மேம்பட்டதாக உள்ளது என்றே கூறவேண்டும். இந்திய மத்திய வங்கியின் துணை ஆளுநர் மைக்கேல் பாத்ரா கூறுகிறார்: “அதிகப்படியான வேண்டலால் பணவீக்கம் உயரவில்லை, வழங்கல்/விநியோகத் தட்டுப்பாடுகளால் உயர்ந்துள்ளது. பணவியல் கொள்கைக்கு வேண்டலை வழங்கலுடன் சீரமைப்பதில் பங்கு உள்ளது ஆனால் பின்வழியில் அல்ல. பணவீக்கம் வேண்டலால் உயரும் போது, பணவியல் கொள்கையால் பணவீக்கத்தையும் வளர்ச்சியையும் நிலைப்படுத்த முடியும். வழங்கல் தடைபாடுகளின் விளைவாக பணவீக்கம் இருக்கும்போது பணவியல் கொள்கையால் அதை நிலைப்படுத்த முடியாது.”
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீரற்றதாக உள்ளதாகவும் கோவிட்-19க்கு முந்தைய நிலையை அடையவில்லை என்று குறிப்பிட்ட இந்திய மத்திய வங்கி வட்டிவீதத்தில் எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. மத்திய வங்கியின் உறுப்பினர் ஆஷிமா கோயல் கோவிட் மூன்றாவது அலை குறைந்த பொருளாதார தாக்கத்தில் கடந்துவிட்டதாகத் தோன்றினாலும், நுகர்வு தொற்றுநோய்க்கு முந்தைய மட்டத்திலே தொடர்கிறது, எனவும் இது வருமானம் மற்றும் வேண்டல் இழப்பைச் சுட்டிக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரியில் சில்லறை பணவீக்கம் உச்சவரம்பைத்தாண்டி 6.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது. உற்பத்தியாளர்களின் செலவை குறிக்கும் மொத்த விலை பணவீக்கம், ஜனவரியில் 12.96% ஆக உள்ளது. இது தொடர்ச்சியாக பத்தாவது மாதமாக இரட்டை இலக்கங்களுக்கு மேல் உள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணவீக்கம் 6% என்ற உச்ச வரம்பை விட உயர்ந்தாலும் பீதியடைய வேண்டாம் என்கிறார் மத்திய வங்கியின் ஆளுநர். தற்போதைய அரசால் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அடிப்படையிலான பணவீக்கத்தை 6.2% க்குள் கட்டுப்படுத்த முடிந்தது, மாறாக 2008-09 உலகளாவிய நிதி நெருக்கடியின் போது பணவீக்கம் 9.1% ஆக இருந்தது எனத் தங்களது அரசு நிர்வாகத்திறனை உயர்த்திப்பிடிக்கிறார் நிதியமைச்சர். ‘அதிக வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கம் கொண்ட ஒரே பெரிய பொருளாதாரம் இந்தியா தான்’ என்று பிரதமர் ந.மோடி அவர்களோ பெருமை கொள்கிறார்!.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதால் இந்தியா போன்ற வளரும் சந்தைகளிலிருந்து 2021 அக்டோபரிலிருந்து அந்நிய முதலீடுகளின் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சென்ற ஆண்டைவிட அந்நிய முதலீடுகளின் அளவு குறைந்துள்ளது. சரியும் அந்நியச் செலவாணியாலும், உயரும் இறக்குமதிக் கட்டணங்களாலும் வெளிக்கொடுப்புநிலையில் பிரச்சினை ஏற்படும் அபாயமும் உள்ளது. ஃபிப்ரவரியில் 35,000 கோடி ரூபாய்க்கு மேல் அந்நிய நிதி முதலீடுகள் வெளியேறியுள்ளன. இந்தியாவின் தேசியப் பங்குச்சந்தை நிஃப்டி குறியீடு (52 வாரங்களில் உயர்ந்த மதிப்பு 18604.45) 10 விழுக்காடு குறைந்து முதல் திருத்தத்தை கண்டுள்ளது. நிஃப்டி குறியீடு 27 ஃபிப்ரவரியில் 16898.80ஆக குறைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தைக் குறியீடும் 10 விழுக்காட்டிற்கு மேல் குறைந்து 55329.46 அடைந்து முதல் திருத்தத்தைக் கண்டுள்ளது.
தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) தரவுகளின் படி சென்ற ஆண்டில் 6750 கோடி டாலராக இருந்த மொத்த அன்னிய நேரடி முதலீடுகள் (பங்குகளில் வரவு, மறு முதலீட்டு வருவாய், பிற மூலதனம்) நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாத காலத்தில் 6034 கோடி டாலராக குறைந்துள்ளது. 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு (FDI) 16% குறைந்து 4317 கோடி டாலர்களாக உள்ளது. 2020-21 சென்ற நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர் 2021) 21.46 பில்லியன் டாலரில் இருந்த பங்குகளில் முதலீட்டு வரவு இந்த நிதி ஆண்டில் இதே காலப்பகுதியில் 1200 கோடி டாலராகக் குறைந்துள்ளது. சென்ற நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 2616 கோடி டாலராக இருந்த மொத்த நேரடி அன்னிய முதலீடுகள் இந்த நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 1794 கோடி டாலராக குறைந்துள்ளது.
2021 ஏப்ரல்-டிசம்பர் காலப்பகுதியில், இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்த நாடுகளில் 1,170 கோடி டாலர் முதலீடு செய்த சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து 752 கோடி டாலர் முதலீடு செய்த அமெரிக்கா உள்ளது. மொரிஷியஸ் 658 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. கேமன் தீவுகள் 274 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. நெதர்லாந்து 266 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. ஐக்கிய முடியரசு 144 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. இவை அனைத்துமே ரகசிய ஆட்சிப் பகுதிகளாக செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உணவு மானியத்தில் 28%, மதிய உணவுக்கான ஒதுக்கீட்டில் 12%, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் திட்டத்தின் கீழ் வேலைகளுக்கான நிதியில் 25% வெட்டி மக்கள் நலனை குழிதோண்டி புதைத்த 2022-23 நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் பின்னணியில், பெரிய நாடுகளுடன் ஒன்றிணைந்து இந்தியப் பொருளாதாரம் விரைவான வேகத்தில் வளரத் தயாராக இருப்பதாக நிதி அமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு நிலையான மீட்சியை விரும்புவதாகவும், உள்கட்டமைப்பு உருவாக்கம் குறித்த நிதிநிலை அறிக்கை திட்டங்கள் பொருளாதாரத்தில் பெருக்க விளைவை உருவாக்கும் என்றும் மூலதன முதலீடுகளிலான உயர்வு தனியார் முதலீடுகளையும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மக்களுக்குத் தேவையான குடிநீர், மின்சாரம், எரிவாயு இணைப்புகள், கழிப்பறைகள் மற்றும் சாலைகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதில் 100 சதவீதம் நிறைவு பெற வேண்டிய நேரம் இது. இதை அடைவதற்கான தெளிவான வரைபடத்தை 2022-23 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை அளித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவைக் கூட அளிக்காத நிதிநிலை அறிக்கையை விவசாயத்தை நவீனமாகவும், திறன்மிக்கதாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர்.
விவசாயிகளின் நலன்களை தொடர்ந்து புறக்கணிக்கும் பாஜக அரசு விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை தேவையில்லை என்று மக்களவையில் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயத்துக்காக தனி நிதிநிலை அறிக்கை உருவாக்குவதால் நாட்டுக்கோ, விவசாயிகளுக்கோ எந்த பயனும் இல்லை என்று கூறியுள்ளார்.
சுகாதாரத்துறைக்கு நிதிநிலை அறிக்கையில் குறைந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது சுகாதாரத்துறை முதன்மையாக மாநிலங்களின் பொறுப்பு என்று பொறுப்பற்ற முறையில் நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் சோமநாதன் பதிலளித்துள்ளார்.
உற்பத்தியுடன்-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டம் மூலதனச் செறிவுமிக்க நிறுவனங்களுக்கே அளிக்கப்படும் போது அதன் மூலம் 60லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் கூறியிருப்பது வெறும் வாய்ச்சவடால் மட்டுமே.
இந்தியா ரேட்டிங்ஸ் அமைப்பு கொள்ளைநோய்க்கு மத்தியில் கிராமப்புறங்கள் துன்புறும் நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கு முன்மொழியப்பட்ட நிதி ஒதுக்கீடுகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக குறைத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கையின் மூலதனச் செலவிலான 35 சதவீத உயர்வு சாலைக்கட்டுமானம் போன்ற குறைவான வேலைவாய்ப்பைத் தரும் நீண்ட காலத் திட்டங்களுக்கே கவனம் செலுத்துவதாகவும் இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
“குறுகிய காலத் திட்டங்கள், வேலைவாய்ப்பை அதிகம் அளிக்கும் திட்டங்களுக்கு மூலதன செலவில் கணிசமான விகிதத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். அதுவே தாழ்ந்த நுகர்வு தேவையால் பாதித்த பொருளாதாரத்திற்கு ஆதரவளித்திருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் குறைதீர்ப்பாளர் செயலியை (APP) அறிமுகப்படுத்திய மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் கிரிராஜ் சிங், பல்வேறு மாவட்டங்களில் குறைதீர்ப்பாளர்களை நியமிக்காதது குறித்து கவலை தெரிவித்ததோடு, பல இடங்களில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 80 விழுக்காடு மாவட்டங்களில் குறைதீர்ப்பாளரை நியமிக்காத மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம்:
சென்ற ஆண்டு ஜனவரியில் 2.51 விழுக்காடாக இருந்த மொத்த விலை பணவீக்கம் இந்த ஆண்டு ஜனவரியில் 12.96 விழுக்காடாக உயர்ந்துள்ளது, எரிபொருள், ஆற்றலின் விலைவாசி 32.27 விழுக்காடு உயர்ந்துள்ளது. உற்பத்திப் பொருட்களின் விலைவாசி 9.42 விழுக்காடு உயர்ந்துள்ளது. கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உணவுப்பொருட்கள், ஆகியவற்றின் விலை உயர்வினால் பணவீக்கம் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது. நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் அளவு ஜனவரி மாதத்தில் 6.01 விழுக்காடு அதிகரித்துள்ளது, சென்ற மாதத்துடன் ஒப்பிடும் போது 0.30 விழுக்காடு குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசி 5.43 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற மாதத்துடன் ஒப்பிடும் போது 1.32 விழுக்காடு குறைந்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 5.19 விழுக்காடு உயர்ந்துள்ளது. பழங்களின் விலைவாசி 2.26 விழுக்காடு உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 3.02 விழுக்காடு அதிகரித்துள்ளது. முட்டையின் விலை 2.23 விழுக்காடு உயர்ந்துள்ளது. எண்ணெய், கொழுப்பு ஆகியவற்றின் விலைவாசி 18.70 விழுக்காடு அதிகரித்துள்ளது. மீன், இறைச்சியின் விலைவாசி 5.47 விழுக்காடு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்கம் 5.56 விழுக்காடு உயர்ந்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி:
புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி டிசம்பர் மாதத்தில் உற்பத்தி 0.4 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மைத் துறைகளில் சுரங்கத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றில் உற்பத்தி முறையே 2.6, 2.8 விழுக்காடு உயர்ந்துள்ளது. செய்பொருளாக்கத் துறை 0.1 விழுக்காடு சரிவடைந்துள்ளது. முதன்மை பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி அளவுகள் முறையே 2.8, 0.3, 1.7 விழுக்காடு உயர்ந்துள்ளன. மூலதனப் பொருட்களின் உற்பத்தி 4.6 விழுக்காடு குறைந்துள்ளது. உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 0.6 விழுக்காடு குறைந்துள்ளது. நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 2.7 விழுக்காடு குறைந்துள்ளது.
ஜனவரியில் தொழில்துறை வளர்ச்சி:
இந்தியாவின் தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த உற்பத்திக்குறியீடு ஜனவரியில் 3.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாத உற்பத்தி அளவோடு ஒப்பிடும் போது நிலக்கரி உற்பத்தி 8.2 விழுக்காடும், சிமெண்ட் உற்பத்தி 13.6 விழுக்காடும் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 2.4 விழுக்காடும் உர உற்பத்தி 2.0 விழுக்காடும் குறைந்துள்ளது. உருக்கு உற்பத்தி 2.8 விழுக்காடும் பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 3.7 விழுக்காடும் அதிகரித்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 11.7 விழுக்காடும், மின்சார உற்பத்தி 0.5 விழுக்காடும் அதிகரித்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டிற்கான தேசிய வருமானத்தின் இரண்டாம் முன்கூட்டிய மதிப்பீடுகள்:
தேசிய புள்ளியல் அலுவலகம் 2021-22 ஆம் ஆண்டிற்கான தேசிய வருமானத்தின் இரண்டாம் முன்கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் நிலையான விலையில் (2011-12) உண்மையான உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு முதலாம் முன்கூட்டிய மதிப்பீடுகளில் 135.58 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது தற்போது இரண்டாம் முன்கூட்டிய மதிப்பீடுகளில் இது 147.72 லட்சம் கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2020-21 இல் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பில் 6.6 விழுக்காடு குறுக்கம் காணப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது 2021-22 ஆம் ஆண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8.9 விழுக்காடாக மதிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் முன்கூட்டிய மதிப்பீடுகளில் இது 9.2 விழுக்காடாக மதிப்பிடப்பட்டிருந்தது.
அடிப்படை விலைகளில் உண்மையான மொத்த மதிப்பு கூட்டல் (GVA) 2020-21ல் ரூ.125.85 லட்சம் கோடியாக இருந்தது 8.6 விழுக்காட்டு வளர்ச்சியடைந்து 2021-22ல் ரூ.136.24 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் இறுதி நுகர்வு செலவினம் 2020-21ல் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பில் 57.3 விழுக்காடாக இருந்தது 2021-22ல் 56.6 விழுக்காடாக குறைந்துள்ளது. அரசு இறுதி நுகர்வு செலவினம் 2020-21ல் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பில் 11.3 விழுக்காடாக இருந்தது 2021-22ல் 10.9 விழுக்காடாக குறைந்துள்ளது. மொத்த நிலை மூலதன உருவாக்கத்தின் மதிப்பு 2020-21ல் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பில் 30.5 விழுக்காடாக இருந்தது 2021-22ல் 32 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
2020-21ல் 0.6 விழுக்காடு குறுக்கமடைந்த உற்பத்தித் துறை 2021-22ல் 10.5 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது. சுரங்கம் மற்றும் குவாரி 12.6 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது. வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் 11.6 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது. வேளாண் துறை 3.3 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் & பிற பயன்பாடு சேவை 7.8 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது. நிதி, ரியல் எஸ்டேட் & தொழில்முறை சேவைகளின் வளர்ச்சி 4.3 விழுக்காடு உயர்ந்துள்ளது. பொது நிர்வாகம், பாதுகாப்பு & பிறசேவைகளின் வளர்ச்சி 12.5 விழுக்காடு உயர்ந்துள்ளது.
2021-22ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (Q3) மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள்:
மூன்றாம் காலாண்டில் உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு 5.4 விழுக்காடு வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாம் காலாண்டில் அடிப்படை விலைகளில் உண்மையான மொத்த மதிப்பு கூட்டல் (GVA) 2020-21ல் ரூ.33.66 லட்சம் கோடியாக இருந்தது 4.7 விழுக்காட்டு வளர்ச்சியடைந்து 2021-22ல் ரூ.35.25 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் இறுதி நுகர்வு செலவினம் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பில் 59.8 விழுக்காடாக இருந்தது 2021-22ல் 60.7 விழுக்காடாக குறைந்துள்ளது. அரசு இறுதி நுகர்வு செலவினம் 2020-21ல் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பில் 9.5 விழுக்காடாக இருந்தது 2021-22ல் 9.3 விழுக்காடாக உள்ளது. மொத்த நிலை மூலதன உருவாக்கத்தின் மதிப்பு 2020-21ல் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பில் 31.1 விழுக்காடாக இருந்தது 2021-22ல் 30.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
மூன்றாம் காலாண்டில் உற்பத்தித் துறை 2021-22ல் 0.2 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது. சுரங்கம் மற்றும் குவாரி 8.8 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது. வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் 6.1 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது. வேளாண் துறை 3.3 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் & பிற பயன்பாடு சேவை 3.7 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது. நிதி, ரியல் எஸ்டேட் & தொழில்முறை சேவைகளின் வளர்ச்சி 4.6 விழுக்காடு உயர்ந்துள்ளது. பொது நிர்வாகம், பாதுகாப்பு & பிறசேவைகளின் வளர்ச்சி 16.8 விழுக்காடு உயர்ந்துள்ளது.
பொதுக் கணக்கு கட்டுப்பாட்டாளரின் (CGA) 2021 டிசம்பர் மாத தரவுகளின் படி, மத்திய அரசின் வருவாய் நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில் 96.9 விழுக்காட்டை அடைந்துள்ளது. சென்ற ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு 53.9 விழுக்காடு வருவாயை பெற்றிருந்தது. அரசின் பங்குகளை விற்று பெறப்படும் வருவாய் கடனல்லா மூலதன வருவாய் (non-debt capital receipts) என அழைக்கப்படுகிறது. கடனல்லா மூலதன வருவாய் உட்பட அரசின் மொத்த வருவாய் டிசம்பரில் நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில் 89.1 விழுக்காட்டை அடைந்துள்ளது. சென்ற ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு 49.9 விழுக்காடு வருவாயை பெற்றிருந்தது. மத்திய அரசின் மூலதன செலவினம் சென்ற ஆண்டு டிசம்பரில் 75.0 விழுக்காடாக இருந்த நிலையில் இந்த ஆண்டு டிசம்பரில் 70.7 விழுக்காடாக உள்ளது. அரசின் மொத்த செலவினம் சென்ற ஆண்டு டிசம்பரில் 74.9 விழுக்காடாக இருந்த நிலையில் இந்த ஆண்டு டிசம்பரில் 72.4 விழுக்காடாக உள்ளது.
அரசின் நிதிப்பற்றாக்குறை சென்ற ஆண்டு டிசம்பரில் 145.5 விழுக்காடாக இருந்த நிலையில் இந்த ஆண்டு டிசம்பரில் 50.4 விழுக்காடாக உள்ளது.
2020ல் டிசம்பர் வரை நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் 108 விழுக்காடு உணவு மானியம் அளிக்கப்பட்டிருந்தது, 2021ல் 76 விழுக்காடு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. 2020ல் டிசம்பர் வரை அளிக்கப்பட்ட ஊட்டச்சத்து அடிப்படையிலான உரமானியம் 76 விழுக்காடாக இருந்த நிலையில் 2021 டிசம்பர் வரை 171 விழுக்காடு அளிக்கப்பட்டுள்ளது. 2020ல் டிசம்பர் வரை அளிக்கப்பட்ட யூரியாவுக்கான மானியம் 116 விழுக்காடு. 2021ல் டிசம்பர் வரை யூரியாவுக்கு அளிக்கப்பட்ட மானியம் 83 விழுக்காடாக உள்ளது. 2020ல் டிசம்பர் வரை அளிக்கப்பட்ட பெட்ரோலிய மானியம் 70 விழுக்காடாக உள்ள நிலையில் 2021-22 டிசம்பர் வரை வெறும் 10 விழுக்காடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 2020ல் டிசம்பர் வரை அளிக்கப்பட்ட மொத்த மானியம் 100 விழுக்காடு இருந்த நிலையில், 2021-22 டிசம்பர் வரை வழங்கப்பட்ட மொத்த மானியத்தின் அளவு 81 விழுக்காடாக உள்ளது.
2021-22 நிதியாண்டில் கடனல்லா மூலதன வருவாய் 1.88 லட்சம் கோடி திரட்டப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 2021 டிசம்பர் வரை மத்திய அரசு அதில் 15.1விழுக்காட்டிற்கு 28469 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. 2022-23ல் பங்குவிலக்கல் மூலம் 65000 கோடி ரூபாய் திரட்டப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22 நிதிநிலை திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் பங்குவிலக்கல் இலக்கு 78000 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.60,000 கோடியை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் 5% அரசுப் பங்குகளை மார்ச் மாதத்தில் பொதுப்பங்கு வெளியீட்டில் விற்பதன் மூலம் திரட்டலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் 20% வரை நேரடி அந்நிய முதலீட்டுக்கு (FDI automatic route) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாளுக்கு நாள் பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளை உண்ணும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் உடல் பருமன் அடைந்து அவதிக்குள்ளாகின்றனர். குழந்தைகள் மத்தியிலும் உடல் பருமன் நோய் ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த உப்பு, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு கூடுதல் வரி விதிப்பதை நிதி ஆயோக் ஆலோசனை செய்து வருகிறது. தற்போதைய நிலையில் வணிகத்தர சிற்றுண்டி உணவுகளுக்கு 12% சரக்கு சேவை வரி விதிக்கப்படுகிறது. பிறவற்றிற்கு 5% வரி விதிக்கப்படுகிறது.
பிரதமர் கதி சக்தி திட்டம் இந்திய சிறு குறு நடுத்தர நிறுவனங்களை உலகளவில் போட்டியிடும் திறன் மிக்கவையாக மாற்றும் என போற்றியுள்ளார். சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு பாஜக அரசு வெறும் பெயரளவு ஆதரவே அளித்துள்ளது.
குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகம் குறு, சிறு நடுத்தர நிறுவன (MSME) துறையின் மேம்பாடு தொடர்பான பல்வேறு திட்டங்கக்கு ஒதுக்கப்பட்டதைக் காட்டிலும் மிகக்குறைவாகவே செலவுசெய்துள்ளது அரசு தரவுகளில் தெரியவந்துள்ளது. 2020-21 ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.7,572.20 கோடியில், ரூ.5,647.50 கோடி செலவிடப்பட்டது, 25% அல்லது சுமார் ரூ.1,924.7 கோடி செலவிடப்படாமல் உள்ளது. 2019-20 இன் ஒதுக்கப்பட்ட உண்மையான தொகையை விட 14% குறைவாக செலவழித்துள்ளது என கே.இ.ரகுநாதன், இந்திய சங்கங்களின் கூட்டமைப்புக்கான ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
காதி, கிராமம் மற்றும் தென்னை நார்த் தொழில்களின் வளர்ச்சிக்கு மொத்தம் ரூ. 1525.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 947.52 கோடி மட்டுமே செலவிடப்பட்டது.
பிரதம மந்திரி வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2,500 கோடியில் ரூ.1,905.80 கோடி மட்டுமே செலவிடப்பட்டது
கடன் ஆதரவு திட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.100 கோடியில் எந்த செலவும் செய்யப்படவில்லை.
சந்தைப்படுத்தல் ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 103.63 கோடி ரூபாயில் 14.49 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 611.92 கோடி ரூபாயில் 164.38 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,460 கோடி ரூபாயில் ரூ.795.08 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
தேசிய பட்டியல் சாதி/பழங்குடியினர் மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.150 கோடி ரூபாயில் 120 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது
“எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்த மையத்தின் தலைவராக நான் இருப்பதால், எஸ்சி/எஸ்டி மையத்திற்காக அவர்கள் இந்த ரூ.120 கோடியை எங்கே செலவுசெய்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அவர்கள் அந்தத் தொகையை எங்கு செலவழித்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை என்கிறார் நேஷனல் எஸ்சி/எஸ்டி ஹப் தலைவரும், தலித் இந்திய வர்த்தகம் தொழில்துறையின் (டிஐசிசிஐ) நிறுவனர்-தலைவருமான மிலிந்த் காம்ப்ளே.
தொழில்நுட்ப மேம்பாடு, தரச் சான்றளிக்கும் திட்டம் மற்றும் செயலகப் பொருளாதாரச் சேவைகளைத் தவிர, மற்ற அனைத்துத் திட்டங்களுக்கும் குறைவாகவே செலவிடப்பட்டுள்ளது. காதி கிராம தொழிலக மையத்திற்கு 45 சதவீதத் தொகை செலவிடப்படவில்லை; பிரதம மந்திரி வேலைவாய்ப்புத் திட்டத்தில் 19 சதவீதமும்; சந்தைப்படுத்தல், ஊக்குவிப்புத் துறையில் 85 சதவீதமும்; தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டில் 80 சதவீதமும், உள்கட்டமைப்பு திட்டத்தில் 50 சதவீதமும்; ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் 30 சதவீதமும் செலவிடப்படாமல் உள்ளது. இந்த செயலற்ற தன்மையை என்னவென்று அழைப்பது? என்கிறார் ரகுநாதன்.
ஜான் சரோகர், தேசிய கொள்கை ஆலோசனைக் குழு அரசு கூடுதல் வருவாயை திரட்டி ஏழைகளுக்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். மக்கள் தொகையில் முதல் 1% பணக்காரர்களுக்கு சொத்து வரியையும், வாரிசுரிமை வரியையும் விதிக்கவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. பணக்காரர்களின் மீதான 2% சொத்து வரியும், 33% வாரிசுரிமை வரியும் ஆண்டுக்கு ₹11 லட்சம் கோடியைப் பெற்றுத்தரும் என்றும் இதன் மூலம் அடிப்படை சமூகத் துறைகளுக்கான உரிமைகளுக்கு ஆதரவளிக்க முடியும் என்றும் ஆலோசனை அளித்துள்ளது.
இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வும், வறுமையின் அளவும் அதிகரித்துள்ளதாகக் கூறிய ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின் வழிமுறைகளும் ஆக்ஸ்ஃபாம் பயன்படுத்தும் கணக்கீட்டு முறையும் தவறு என்றும் அது அரசாங்கத்தின் பல்வேறு மக்கள்நல முன்முயற்சிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்!.
பொருளாதாரத்தை மீட்பதற்கான முதல் படி, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, போதுமான பணத்தை மக்களின் கைகளில் அளிப்பதே: என ஒரு பெருமுதலாளி நௌஷாத் ஃபோர்ப்ஸ், ஃபோர்ப்ஸ் மார்ஷலின் இணைத் தலைவர், பரிந்துரைக்கிறார்.
பொருளாதாரத்தில் வேண்டல்/நுகர்வு பற்றாக்குறை காணப்படுவதை அங்கீகரித்த அவர் நிதிநிலை அறிக்கையில் சமூகத் துறைக்கு அதிக அரசு செலவினங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் முதலாளித்துவ நிதிநிலை அறிக்கை அளித்த நிதியமைச்சரும், விவசாயிகளின் இதயங்களை வெல்ல முயற்சிப்பதாகக் கூறும் பிரதமரும் பொருளாதாரக் குருடர்களாக வேடம் போடுகின்றனர்.
Samantha ks