பொருளாதார ஆய்வறிக்கை 2021-22 (Economic Survey):

ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது. பொருளாதார ஆய்வறிக்கை இந்தியாவின் பொருளாதார நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பிரச்சினைகளை கண்டறிந்து அடுத்த நிதியாண்டில் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற எத்தகைய கொள்கை நெறிமுறைகளை செயல்படுத்தவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலையும் அளிக்கவேண்டும். ஆனால் அவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்படுகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான முறையில் மத்தியில் ஆளும் கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகள் தான் மிகச்சரியானவை என நியாயம் கற்பிப்பதுடன் அவற்றைப் போற்றிப் புகழ்பாடும் பிராச்சார அறிக்கையாகவும் பொருளாதார ஆய்வறிக்கை மாற்றப்படுகிறது. பாரபட்சமற்ற முறையில் பொருளாதார தரவுகளை ஆய்வுசெய்யாமல் ஆளும் கட்சிக்கு சாதகமான முறையில் புள்ளிவிவரங்கள் திரித்து சித்தரிக்கப்படுகின்றன.

சமீப ஆண்டுகளாக இரு தொகுப்புகளாக வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை இந்தாண்டு ஒரு தொகுப்பாகக் குறைக்கப்பட்டுள்ளது. புள்ளிவிவர அட்டவணைகள் தனித்தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு தொகுப்புகள் ஒரு தொகுப்பாகக் குறைக்கப்பட்டதால் தான் என்னவோ சென்ற ஆண்டில் பா.ஜ.கவின் சாதனைகளாகப் போற்றி அளந்துகொட்டிய புகழ்பாடல்கள் இந்த ஆண்டு சற்று அடக்கிவாசிக்கப்பட்டுள்ளது போன்ற தோற்றத்தை அளிக்கிறது.

தீவிர நிச்சயமற்ற நிலைமைகளின் கீழ் கொள்கை உருவாக்குதலின் கலையும், அறிவியலுமே இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையின் கருப்பொருள்,
“இந்த நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டு, பாஜக அரசு ‘பார்பெல் உத்தியை’ (barbell strategy) தேர்வுசெய்தது. மற்ற நாடுகள் ‘வாட்டர் ஃபால்’ (water fall) உத்தியைக் கடைபிடிக்கும் போது இந்தியா பின்னூட்ட-சுழல்கள் மற்றும் நிகழ்நேர சரிசெய்தல் ஆகியவற்றைக் கொண்ட ‘அஜைல்’ உத்தியைக் (agile strategy) கடைபிடித்ததாகவும் பீற்றிக் கொள்கிறது.

கோவிட் கொள்ளை நோய் பரவிய போது சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர், வணிகத்தொழில் துறையின் மீதான அதன் தாக்கத்தை குறைக்க இந்திய அரசு உடனடியாக செயல்பட்டு பாதுகாப்பு வலைகளின் பூங்கொத்தை அளித்ததாம். ஜன்தன் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு 500 ரூபாய் மூன்று முறை அளித்ததாம். இதை நிதித்தூண்டல் என்று ஒருமுறை சொல்லுவதே வெட்கக்கேடு இதை சென்ற ஆண்டு சொல்லிக் காட்டியதுடன் விடாமல் இந்த ஆண்டும் மீண்டும் அதே பல்லவியை பாடி சொல்லிக் காட்டுவதை என்னவென்பது. கோவிட் தொற்று காலத்திற்கு முன்னரே நடைமுறையில் இருந்த திட்டங்களையும், சில கடன் உத்தரவாதத் திட்டங்களையும் நிதித்தொகுப்பு என்ற பெயரில் புதிய திட்டங்கள் போல் மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தியதே ஒழிய புதிய நிதித் தொகுப்பு எதுவும் அளிக்கவில்லை என்பதே உண்மை.
இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு அரசு அளித்த நிதித்தொகுப்பு மிகவும் போதாக்குறையானவை. ஆகவே மக்களையும், பொருளாதாரத்தையும் காக்க மீண்டும் நிதித்தொகுப்புகளை அளிக்கவேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. ஆனால் மத்திய அரசு அதையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை.

மார்ச் 2020ல் முன்னறிவிப்பு இல்லாமல் கடுமையான பொதுமுடக்கத்தை நடைமுறைபடுத்தியதால் உயிர்களும், வாழ்வாதாரங்களும் காக்கப்பட்டதாக பாராட்டுகிறது ஆய்வறிக்கை. அதனால் எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.
உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகள் பெரிதும் அதிகரிக்கப்பட்டு, இடைக்கால வேண்டல் உருவாக்கப்பட்டதுடன் வழங்கல் பக்க நடவடிக்கைகளும் தீவிரமாக செயல்படுத்தி நீடித்த நீண்ட கால பொருளாதார விரிவாக்கத்திற்கு தளம் அமைத்ததாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மற்ற நாடுகள் வேண்டல் பக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தபோது இந்தியா சாதுர்யமாக வழங்கல் பக்க சீர்திருத்தங்களை மேற்கொண்டதாகவும் குறிப்பிடுகிறது. அரசு ஒழுங்குமுறைகளின் நீக்கம், தனியார்மயம், செயல்முறைகளை எளிமைப்படுத்துதல், ‘பின்னோக்கிய வரி’ நீக்கம் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை போன்ற பல்வேறு வழங்கல் பக்க சீர்திருத்தங்களை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது. இச்சீர்திருத்தங்களால் வழங்கல் பக்க பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டிருந்தால் பிறகு ஏன் மொத்த விலை பணவீக்கம் தொடர்ச்சியாக பல மாதங்களில் இரண்டு இலக்க அளவில் கடுமையாக உயர்ந்துள்ளது? உலோகங்கள், மூலப்பொருள், ஆற்றல் ஆகியவற்றின் விலைவாசி கடுமையாக உயர்ந்திருந்ததை வழங்கல் பக்க சீர்திருத்தங்களால் ஏன் சரிசெய்யமுடியவில்லை.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் நூறு நாள் வேலைகளுக்கான தேவை வழங்கலை விட அதிகரித்துள்ள போதும் உரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்காததாலும், நிதிப் பற்றாக்குறையாலும் பல்வேறு மாநிலங்களில் மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் பொருளாதார ஆய்வறிக்கையோ தக்க அளவில் நிதியளிக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவே குறிப்பிடுகிறது.

மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, பீகார் போன்ற பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மூல மாநிலங்களில் 2021 ஆம் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் நூறுநாள் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 2020 இல் இருந்த அளவை விட குறைவாக உள்ளதாகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அதிகம் கொண்ட பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நூறுநாள் வேலைவாய்ப்புக்கான தேவை, 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் பெரும்பாலான மாதங்களுக்கு அதிகமாக காணப்பட்டதாகவும் ஆதலால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைபிரச்சினை ஏதும் காணப்படாதது போல நியாயம் கற்பிக்கிறது பொருளாதார ஆய்வறிக்கை.

தனியார்மயம், பங்குவிலக்கல் குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.
1991 பொருளாதாரசீர்திருத்தங்களுக்குப் பிறகு, பொதுத்துறை, தனியார் துறை பற்றிய சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டது. 1991 இடைக்கால நிதிநிலை அறிக்கையில் முதல் முறையாக ‘பங்கு விலக்கல்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் பங்கு விலக்கல் கொள்கை ஊக்கம் பெற்றது, 1999இல் பங்குவிலக்கல் துறை புதிதாகத் தொடங்கப்பட்டது. 2001இல் பங்குவிலக்கலுக்கான முழு அமைச்சகமாக அது மாற்றப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் மூலோபாய விற்பனை பற்றிய கருத்துரு கொள்கை விவாதத்தின் ஒரு பகுதியாக மாறியது.

இந்த காலகட்டத்தில் தான் 12 பொதுத்துறை நிறுவனங்களில் அரசு பங்குகள் விற்கப்பட்டன. பங்கு விலக்கல் செயல்முறை அடுத்த பத்தாண்டுகளில் 2004-2014 வரை, இடைவிடாமல் தொடர்ந்து செய்யப்பட்ட போதும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பங்குவிலக்கலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
2014க்குப் பிறகு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று பங்கு விலக்கல் கொள்கை புதுப்பிக்கப்பட்டது. புதிய, ‘தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க வணிகத் தொழில் நிறுவனங்களில் பொதுத்துறை பங்கேற்பு மறுவரையறை செய்து அனைத்து துறைகளிலும் தனியார் துறை பங்கேற்பை ஊக்குவிக்கும் அவசியம் ஏற்பட்டது.

இந்தப் பின்னணியில், ஆத்மநிர்பர் பாரதத்திற்கான புதிய பொதுத்துறை நிறுவன கொள்கை ஃபிப்ரவரி 4, 2021 அன்று அறிவிக்கப்பட்டது. இக்கொள்கை பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் இருப்பைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய பொதுத்துறை நிறுவனங்களுக்கான கொள்கையின் கீழ், பொதுத்துறை
நிறுவனங்கள் மூலோபாய துறை, மூலோபாயமற்ற துறை என இருவகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
(i) அணு ஆற்றல், விண்வெளி, பாதுகாப்பு; (ii) போக்குவரத்து, தொலைத்தொடர்பு; (iii) ஆற்றல், பெட்ரோலியம், நிலக்கரி, பிற கனிமங்கள்; (iv) வங்கி, காப்பீடு, நிதி சேவைகள் ஆகியவை மட்டுமே மூலோபயத் துறைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
2016 முதல், 35 பொதுத்துறை நிறுவனங்கள் ,துணை நிறுவனங்கள், ஐடிபிஐ வங்கி ஆகியவற்றை தனியார்மயப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
தனியார்மயம், பங்குவிலக்கலின் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட 2021-22 நிதி நிலை அறிக்கையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அரசால் 9330 கோடி ரூபாயை (ஜனவரி 24, 2022 நிலவரப்படி) மட்டுமே திரட்ட முடிந்தது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொதுத்துறை நிறுவனக் கொள்கையும், சொத்துக்களை பணமாக்கும் அரசின் உத்தியும் தனியார்மயமாக்கம், பங்குவிலக்கல் சார் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

முக்கிய சொத்துக்களின் பணமாக்குதல் திட்டத்தில் இதுவரை, பொதுத்துறை நிறுவனங்களின் ~3400 ஏக்கர் நிலம், பிற சொத்துக்களை விற்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காகவே தேசிய நிலத்தை பணமாக்கும் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது என பெருமை கொள்ளும் ஆய்வறிக்கை ஏர் இந்தியாவின் தனியார்மயம் தனியார்மய நடவடிக்கைகளுக்கு தூண்டுதல் அளிக்கும் என்றும் கூறியுள்ளது.

ஆய்வறிக்கையின் தரவுகளின் படி மொத்தப் பொருளாக்க மதிப்பில் சரக்கு சேவை வரிகளின் விகிதம் 2.6 விழுக்காட்டிலிருந்து 2.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது, பெறுநிறுவன வரி 3.3 விழுக்காட்டில் இருந்து 2.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
இந்தியாவின் மூலதனச் சந்தைகள் சிறப்பாகச் செயல்பட்டதாகப் போற்றும் பொருளாதார ஆய்வறிக்கை பங்குச் சந்தைகளின் ஊகப்பெருக்கத்தை உண்மையான பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட உயர்வு போல் மெச்சியுள்ளது.

குஜராத்தில் உள்ள சர்வதேச நிதிச்சேவை மையத்தில் அமைந்துள்ள அலகுகளுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு வரிச் சலுகைகள் குறித்தும் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் மொத்த வாராக் கடன் 2018-19ல் 7.5 விழுக்காடாக இருந்தது 2020ல் 6.5 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகவும் இந்தியாவில் 70 விழுக்காட்டினருக்கு இருமுறை கோவிட் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறது பொருளாதார ஆய்வறிக்கை.

சீனா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு அடுத்தபடியாக உலகளவில் அந்நிய செலாவணி இருப்புகளை அதிகம் வைத்திருக்கும் நாடுகளில் நான்காம் இடத்தில் இந்தியா உள்ளது எனப் பெருமிதம் கொள்ளும் பொருளாதார ஆய்வறிக்கை ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் பேரியல் பொருளாதார நிலைத்தன்மைக்கான குறிகாட்டிகள், 2022-23ஆம் ஆண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளது.

பெருந்தொற்றால் தூண்டப்பட்ட பொருளாதார மந்த நிலை வேண்டலைக் குறைத்திருப்பினும் அதை வேண்டல் சார் பிரச்சினையாகப் பார்ப்பது சரியன்று என்று கூறுவதன் மூலம் பொருளாதாரத்தின் நிகர வேண்டலில் காணப்படும் பற்றாக்குறை ஆய்வறிக்கையால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொருளாதார சமமின்மை கோவிட்-19 தாக்கத்துக்கு முந்தைய நிலையைக் காட்டிலும் மேலும் உயர்ந்துள்ளது. மக்களின் வருவாயும், வாங்கும் திறனும் வீழ்ச்சியடைந்துள்ளது. வேலையின்மை, வறுமை, பட்டினி அதிகரித்துள்ளது. இத்தகைய பிரச்சினைகளின் இருப்பையே பொருளாதார ஆய்வறிக்கை அங்கீகரிக்கவில்லை. பிரச்சினைகளை பிரச்சினைகளாக அங்கீகரித்தால் தானே அவற்றிற்கான திர்வுகளை பெறுவதற்கான வழிமுறைகளை நோக்கி முன்னேறமுடியும். பிரச்சினைகளை மூடிமறைத்து இந்திய பொருளாதாரம் வண்ணமயமாக உள்ளது என்பது போன்ற சித்திரத்தை வழங்கும் இந்த பொருளாதார ஆய்வறிக்கை வழக்கம் போல் சரியான கொள்கை உருவாக்கத்திற்கான திசைகாட்டலையும், சரியான திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதலையும் வழங்கத் தவறிவிட்டது.

  • Samantha KS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here