தென் அமெரிக்க நாடான பெருவில் இயங்குகின்ற சைனிங் பாத் (Shining path) என்ற கம்யூனிச கொரில்லா குழுவின் தலைவரும், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியுமான டாக்டர் அபிமால் குஸ்மான் என்கிற கன்சாலே நேற்று (11-09-2021) சிறையில் மரணம் அடைந்தார். கடந்த ஜூலை மாதம் முதல் கடுமையான புற்றுநோய் காரணமாக அவதியுற்ற அவர் மருத்துவமனையில் உள்ள பாதுகாக்கப்பட்ட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார், தனது 86 வயது வரை ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த அவரது மரணம் புரட்சிகர இயக்க வரலாற்றில் முக்கியமான இழப்பாகும்.

சீனாவில் தோழர். மாசேதுங் தலைமையில் நடைபெற்ற ”மக்கள் போர்“ என்ற ஆயுதம் தாங்கிய மக்கள் படையை கட்டுகின்ற வழிமுறையை உலக அளவில் நடைமுறையில் அமுல்படுத்திய சில நாடுகளில் பெருவின் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றாகும். 1949 ஆம் ஆண்டு நடந்த சீனப் புரட்சிக்குப் பின்னர் தோழர். கன்சாலே தலைமையில் செயல்பட்ட பெரு கம்யூனிஸ்ட் கட்சி (சைனிங் பாத்) PCP- யின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிச புரட்சியாளர்களுக்கும், புரட்சிகர. இயக்கங்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் பெரும் நம்பிக்கை அளிப்பதாக இருந்து வந்தது.

1969- ஆம் ஆண்டு 11 தோழர்களைக் கொண்டு துவக்கப்பட்ட போது மார்க்சிய-லெனினியமே எதிர்காலத்திற்கான ’ஒளிரும் பாதை’ என்ற பொருளுடன் கட்சியின் பெயரை தீர்மானித்தனர். 1980 களில் தோழர். கன்சாலே தலைமையில் தலைமறைவு கட்சியுடன் கூடிய கொரில்லா குழுக்களின் ஆயுத போராட்டத்தை முன் வைத்து பெருவின் அரசுக்கு எதிரான. போராட்டத்தை தொடர்ந்தனர். அதே சமயம் இருவழிப்பாதையை அமுல்படுத்தினர். கிராமப்புறங்களில் அரசியல் பணிகளை செய்வதனூடாகவே கொரில்லா குழுக்களைக் கட்டுவதும், நகர்ப்புறங்களில் தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் பணிகளின் ஊடாகவே செயல்படக்கூடிய கொரில்லா குழுக்களைக் கட்டுவதையும் தோழர். கன்சாலே திறம்படக் கையாண்டார். தோழர் மாவோவிற்கு பிறகு மக்கள்திரள் வழியை (Mass line) சிறப்பாக அமுல்படுத்தினார்.

தேர்வு செய்யப்பட்ட தளப் பிரதேசத்தை, புரட்சிகர அடிப்படையில் உருவாக்குவதற்கும் கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடையிலான முரண்பாட்டைக் கையாள்வதிலும், அரசியல் போராட்டத் திற்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் உள்ள உறவை கையாள்வதிலும் மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையை சரியாக பயன்படுத்தினார். கிராமப்புறங்களில் மட்டுமன்றி, நகர்ப்புறங்களிலும் கொரில்லா இராணுவ படை அமைப்புகளை நிறுவி அவை இரண்டையும் இணைத்து ’மக்கள் போரை’ நடத்தினார். பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள் போன்ற அறிவுஜீவிகளைக் கொண்டு ஐக்கிய முன்னணியை உருவாக்கி நகர்ப்புறங்களில் கம்யூனிஸ்டுக் கட்சியை காலூன்ற செய்தார். தலைநகர் லிமா உட்பட சைனிங் பாத் அமைப்பின் செல்வாக்கு பரவியது.

தோழர் மாவோவின் அனுபவத்தை பின்பற்றி உலக அளவில் நீண்டகால மக்கள் யுத்தப் பாதையையும், அதை நிறைவேற்றும் வழிமுறையான கொரில்லா யுத்த முறையையும் குறிப்பிடத்தக்க அளவிற்கு தேர்ச்சியுடன் PCP முன்வைத்து போராடியது. தோழர். மாவோ காலத்தில் ரசிய கம்யூனிஸ்டு கட்சியுடன் நடந்த மாபெரும் விவாதத்தில் பங்கேற்று தோழர், மாவோவுடன் இணைந்து குருச்சேவின் நவீன திருத்தல்வாதத்திற்கு எதிராக கன்சாலே போராடினார். டெங் கும்பலின் திரிபுவாத வழிமுறைகளை நிராகரித்தார்.

1963 முதல் பெருவில் ஆட்சி நடத்தி வந்த ஜென்ரல் ஜூவான் வெலாஸ்கோ தலைமையிலான இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக சைனிங் பாத் தலைமையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் அரசு பயங்கரவாதத்தினால் ஏறக்குறைய 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் அடிக்கப்பட்டனர் என்று 2003 ஆம் ஆண்டு வெளியான மனித உரிமை அமைப்பின் ஆவணம் தெரிவிக்கிறது. சைனிங் பாத் அரசியல் விரிவாக்கத்தை பொறுக்க முடியாத அமெரிக்க மேல்நிலை வல்லரசு, பாசிச சர்வாதிகாரி பிஜு மோரியை ஊக்குவித்து ஆட்சிக்கு கொண்டு வந்தது.. இந்த சர்வாதிகாரியின் அரசு 1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தோழர் கன்சாலேவை கைது செய்து பசிபிக் கடற்கரையில் உள்ள இராணுவ சிறையில் மிகுந்த பாதுகாப்புடன் அடைத்தது.

தோழர். கன்சாலே கைதுக்கு பின்னர் சைனிங் பாத் இயக்கத்தின் முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது அவருடன் எண்ணற்ற தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சைனிங் பாத் அமைப்பின் தலைவர் கன்சாலே கைது செய்யப்பட்ட பிறகு அவரது விடுதலைக்காக உலகம் முழுவதும் 1993 முதற்கொண்டு பல போராட்டங்கள் நடைபெற்று வந்தது. அவரது விடுதலைக்காக மட்டுமின்றி 2003 ஆம் ஆண்டு ஆசிரியர்கள், விவசாயிகள், நீதிமன்ற ஊழியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் ஒன்றுபட்டு அப்போதைய அதிபர் டொலெடோவுக்கு எதிராக நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் வரை சென்றது. மக்கள் போராடங்களை அடக்குமுறைகளின் மூலம் ஒடுக்குவது என்ற பாசிச வழிமுறைகள் மேலும் மக்களின் ஒற்றுமைக்கே பயன்பட்டது.

தோழர். கன்சாலேவின் கைதுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கும் போதே, வலுவான ஏகாதிபத்திய எதிர்ப்பு முகாம் ஒன்று இல்லாத சூழலில் உலகம் முழுவதும் உள்ள உண்மையான கம்யூனிஸ்டுகளின் மீதான அவதூறுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. கம்போடியாவின் கெமர்ரூஜ் தலைவர் போல்பாட் மீது சர்வாதிகாரி என்று அவதூறு செய்யப்பட்டதைப் போலவே கன்சாலே மீதும் ஏகாதிபத்திய எடுபிடி ஊடகங்களினால் கருத்துருவாக்கமும், அவதூறுகளும் செய்யப்பட்டு வருகிறது.

1969 ஆம் ஆண்டு பெரு கம்யூனிஸ்டுக் கட்சி துவங்கிய காலம் முதல் இராணுவ ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து போராடியதன் விளைவாக 1980 ஆம் ஆண்டு இராணுவம் வேறு வழியின்றி ஜனநாயக பூர்வமாக நடப்பதாக கூறிக் கொண்டு தேர்தலை அறிவித்தது. அப்போது கன்சாலே தலைமையில் செயல்பட்ட சைனிங் பாத் அமைப்பு தேர்தலை புறக்கணித்தது. அரசியல் ரீதியாக மக்களிடம் பிரச்சாரம் செய்து அவர்களின் சொந்த அனுபவத்தில் இருந்து தேர்தல் புறக்கணிப்பு செய்ய வைப்பதற்கு எந்த அளவு முயற்சி செய்தனர் என்பது தெரியவில்லை. அதன் பிறகே ஆயுதப் போராட்ட பாதையில் முன்னேறி சென்றனர். ஆனால் வாக்கு சாவடிகளை கைப்பற்றுவது, வாகனங்களை தீவைத்து அழிப்பது போன்ற வழிமுறைகளின் மூலம் தேர்தல் புறக்கணிப்பு நடத்தியதாக முதலாளித்துவ ஊடகங்கள் இன்று வரை அவதூறு பிரச்சாரம் செய்கின்றன.

1993 ஆம் ஆண்டு சைனிங் பாத் குழுவில் இருந்து பிளவுபட்ட குழு ஒன்று, தொலைக் காட்சியில் மக்கள் முன்பு தோன்றி புரட்சியை கைவிடுமாறும், இனி சமாதான முறையில் மாற்றத்திற்கு போராட போவதாகவும் அறிவித்துத. அதனால் 6,000 கம்யூனிஸ்டுகள் சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது.

பெருவில் ஆல்பிரட்டோ பிஜு மோரியின் ஆட்சியில் இருந்து அமுலாகும் புதிய தாராளவாத கொள்கைகளை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பெருவில் குறிப்பாக நிறைந்து கிடக்கும் தங்கம், செம்பு, துத்தநாகம் உள்ளிட்ட கனிம வளங்களை கொள்ளையடிக்க துடிக்கும் அமெரிக்கவிற்கு எதிராக சுரங்க தொழிலாளர்களின் போராட்டங்கள் 2011 முதல் நடந்து வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க அடிமைகள் நடத்தி வந்த புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்தி வருவதற்கு எதிராக ஆத்திரத்தில் உள்ள மக்கள் 2021 நாடாளுமன்ற தேர்தலில் ’சுதந்திர பெரு’ என்ற போலி சோசலிச கட்சியை சேர்ந்த பெட்ரோ காஸ்டிலோ என்பவரை தேர்வு செய்துள்ளனர். அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு இருந்தாலும், கம்யூனிச சித்தாந்த தலைமை இல்லாத நிலையிலும், வலுவான கம்யூனிஸ்டு கட்சி இல்லாத நிலையிலும் போலி இடதுசாரிகளை தேர்வு செய்வது தவிர்க்க முடியாத நிலைமையாகும். தென் அமெரிக்க கண்டம் முழுவதும் இதுதான் போக்காக உள்ளது. சமகாலத்தில் பெருவில் போலி சோசலிச தலைவர்கள் ‘சுதந்திர பெரு’ என்ற கட்சியின் மூலம் ஆட்சியை பிடித்துள்ளதும் இது போலத்தான்.

சர்வதேசிய அளவில் வர்க்க அணி சேர்க்கை அவ்வப்போது மாறிக் கொண்டுதான் வருகிறது. இது குறித்து தொடர்ந்து அவதானித்து, பருண்மையான முடிவுகள் எட்டப்படாத நிலையில் உடனடியாக ’மார்கிஸ்டுகள்’ தனது ’இடது’ வகையிலான வறட்டு அளவு கோலை தூக்கி கொண்டு பெருவில் ஆட்சிக்கு வந்துள்ள பெட்ரோ ஒரு போலி என்று முத்திரை குத்தியுள்ளனர். கடந்த காலத்தில் கியூபாவின் காஸ்ட்ரோ, வெனிசூலாவின் ஹியூகோ சாவேஸ் போன்றவர்களையும் இந்த பார்வையில் நிராகரித்து விட்டு இறந்த பின்பு ’முழி’த்துக் கொண்டனர். வரலாற்று பொருள்முதல்வாத பார்வை இன்றி குதிரைக்கு ’குர்ரம் என்றால், யானைக்கு அர்ரம்’ என்பது போன்ற அணுகு முறையால், தான் என்று கர்வம் கொள்ள முடியுமே ஒழிய கதைக்கு உதவாது.

10,000 கொரில்லா போராளிகளுடன் ஏறக்குறைய பெரு நாட்டின் தலைநகர் லிமா உள்ளிட்ட பெரும் பகுதிகளை கைப்பற்றும் அளவு முன்னேறிய இயக்கம் ஏன் பின்னடைவுக்கு உள்ளானது என்ற அனுபவத்தை கற்போம். தோழர். கன்சாலே உயிருடன் இருக்கும் போதே சர்வதேசிய – கம்யூனிச உணர்வுடன் விடுதலைக்காக குரல் கொடுக்காத நமது தவறுக்காக சுய விமர்சனம் ஏற்போம். ஆளும் வர்க்கத்திடம் மன்னிப்பு கோராமல், உடல்நலனைக் காட்டி கெஞ்சாமல் போராடிய, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியும், நேர்மையான கம்யூனிஸ்டுமான தோழர். கன்சாலேவுக்கு அஞ்சலி செலுத்துவோம். தான் ஏற்றுக் கொண்ட இலட்சியத்திற்காக உறுதியுடன் நின்று, இறுதிவரை சிறையில் இருந்து மடிந்துள்ள தோழர். அபிமல் குஸ்மன் என்கிற கன்சாலேவுக்கு வீரவணக்கம் செலுத்தி விடை கொடுப்போம்!.

  • பா.மதிவதனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here