வணக்கம். நான், இன்றைக்கு தேசிய கல்விக்கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் என்ன என்பது பற்றியான ஒரு சுருக்கமான விளக்கத்தை உங்களுக்கு வழங்கலாம் என்று நினைக்கிறேன். தேசிய கல்விக் கொள்கை 23 பகுதிகளைக் கொண்டு 450 பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கிற வரைவு அறிக்கையில், பேசப்பட்டிருக்கிற செய்திகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்று சொன்னால், அடிப்படையில் 5 செய்திகள் அதில் உள்ளன என்பதை நான் உங்களுக்கு முதலில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

முதலாவதாக, வடிகட்டுதல் அதாவது கிராமப்புற மற்றும் பின்தங்கிய முதல் தலைமுறையில் படிக்கக்கூடிய குழந்தைகளை தொடர்ச்சியாக மேலும் மேலும் படிக்க விடாமல் கீழ் வகுப்பிலேயே அவர்களை வடிகட்டுகிற வேலையை பள்ளிக் கல்வி என்ற பகுதியில் சொல்லப்பட்டிருக்கிற செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

இரண்டாவதாக, உயர் கல்வி என்ற பகுதியில் பேசப்பட்டிருக்கிற செய்திகளின் உள்ளார்ந்த பொருள் என்பது கல்வியை, குறிப்பாக உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவது என்பதுதான் அதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது. அது என்னென்ன வகையில் இடம் பெற்றிருக்கிறது என்பதை நீங்கள் வாசிக்கும்போது அறியமுடியும்.

மூன்றாவதாக, இந்த அறிக்கையில் அவர்கள் கொடுத்திருக்கிற மிக மிக முக்கியமான முக்கியத்துவம் மொழி குறித்து. அதாவது சமஸ்கிருதம் பயிலுதல் குறித்தும், சமஸ்கிருத இலக்கியங்கள் படித்தல் குறித்துமான விவரங்களை மிக அதிகமாக இந்த அறிக்கையில் தந்திருக்கிறார்கள்.

நான்காவதாக, இன்றைக்கு இருக்கக்கூடிய பிஜேபி அரசினுடைய மிக முக்கியமான செயல்பாடாக இருக்கக் கூடிய கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்தெடுத்தல். அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான தேவைக்கேற்ப எவ்வாறு தொழிற் கல்விகளை வடிவமைக்கலாம் என்பது குறித்து இந்த அறிக்கை மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது.

இறுதியாக இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கிற நேஷனல் எஜீகேஷன் கமிஷன் (National Education Commission) என்று சொல்லப்படுகிற அந்த அமைப்பு என்பது முற்று முழுதான அதிகார மையமாக உருவாக்கப்பட்டு அந்த அதிகார மையமே அனைத்து முடிவுகளையும் மேற்கொள்ளவேண்டிய ஒரு வடிவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, நீங்கள் தேசிய கல்வி அறிக்கையை வாசிக்கிறபோது நான் சொன்ன இந்த வடிகட்டுதல். முறை எப்படியெல்லாம் பள்ளிக் கல்வியில் இருக்கிறது என்பதை தேடிப்பாருங்கள், அதைப்போலவே உயர்கல்வியில் எப்படி தனியார் மயமாக கல்வியை ஆக்குவது என்பதற்கான திட்டங்களை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பதைத் தேடுங்கள், மூன்றாவதாக சமஸ்கிருத மொழி பற்றி அவர்கள் பேசியிருக்கக்கூடிய செய்திகள் எல்லாவற்றையும் நீங்கள் தொகுத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். நான்காவதாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கல்வி நிறுவனங்களாக தொழிற்கல்வி போன்றவற்றை அவர்கள் எப்படி வடிவமைக்கிறார்கள் என்பதை நீங்கள் அதன் வாசிப்பினூடே கண்டறிந்து கொள்ளலாம். இறுதியாக இவர்கள் உருவாக்கப்போகிற இந்த கல்வி அதிகார மையம் என்பது ஒரு மிக மோசமான பாசிச அமைப்பினுடைய வடிவம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இவை ஒவ்வொன்றையும் நாம் விரிவாகப் பார்க்கலாம். பள்ளிக்கல்வி என்று அவர் குறிப்பிடுகிறார் விசயத்தில் என்ன செய்கிறார்கள் என்றால் 3-ஆம் வகுப்பு முதல் குழந்தைகளுக்கு தேர்வு வைப்பது என்பதை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். 3-ஆம் வகுப்பு முடித்த குழந்தையிடம் அந்த குழந்தைக்கு எழுதத் தெரிகிறதா, அந்த குழந்தைக்கு கணிதம் வருகிறதா, அந்த குழந்தைக்கு வேறு திறமைகள் இருக்கிறதா என்பதைப் பற்றிப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த பரிசோதனையில் அந்த குழந்தைகள் வெற்றி பெறாவிட்டால் அந்த குழந்தைகளை மேல் வகுப்புகளுக்கு அனுப்புவது என்று இல்லாமல் மீண்டும் அந்த குழந்தையை கீழ் வகுப்பிலேயே படிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை கொடுக்கிறார்கள். இதைப்போலவே ஐந்தாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் பத்தாம் வகுப்பிலும் என்று ஏறக்குறைய பள்ளிக்கல்வியை முடிக்கிற காலத்திற்குள்ளாகவே ஐந்து முறை குழந்தைகளைச் சோதனைக்கு உட்படுத்துகிறார்கள்.

இது மிகக் கொடுமையான வன்முறையாகும். ஏனென்று சொன்னால் உலகத்தில் பல்வேறு கல்வியாளரும் அறிஞர்களும் சொல்லக் கூடிய செய்தி என்னவென்று சொன்னால், இந்த தேர்வு முறையே இருக்கக்கூடாது என்பதுதான். அதைவிட குழந்தைகளை மிக மிகக் குறைந்த வயதில், மூன்று வயதிலேயே அவர்களுக்கு கல்வி புகட்டுவது என்பதும், பள்ளிக்கூட வளாகங்களில் அவர்களை உட்கார வைப்பதும் மிகப் பெரிய வன்முறை என்பதையும் சொல்லி இருக்கிறார்கள். விளையாடவேண்டிய காலகட்டங்களில் அவர்களை வகுப்பறையில் போட்டு அடைக்கக் கூடிய கல்வி என்பது அவர்களுக்கு மனகொடுமையையும் சிறையில் வாழக்கூடிய மனிதனின் மன நிலமையையும் உருவாக்கும் என்பதும் உலகத்தில் உள்ள மிகப்பெரிய கல்வியாளர்கள் அவருடைய ஒட்டுமொத்த கருத்தாகும்.

ஆனால், இந்தக் கல்வி அறிக்கையில் அவர்கள் சொல்கிறார்கள், தாங்கள் ஆராய்ச்சி செய்து பார்த்ததன் மூலமாக, பல்வேறு ஆய்வுகளின் மூலமாக, தாங்கள் கண்டறிந்தது என்னவென்று சொன்னால் மிக இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு, பல்வேறு மொழிகளையும், கற்பித்தால் அவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்வார்கள் எனவே மும்மொழிக் கொள்கையை மூன்றாம் வகுப்பிலேயே தொடங்கிவிட வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். இதுவும் குழந்தைகளுக்கு செய்யக்கூடிய மிகக் கொடுமையான வன்முறையாகும். ஏனென்று சொன்னால் குழந்தைகள் பேச்சு மொழியை அவர்கள் இயல்பாக கற்றுக்கொள்வார்கள். ஒலியைக் கேட்டு அந்த ஒலியை திருப்பிச் சொல்வது தான் அதன் தன்மை. ஆனால் எழுத்து மொழியை அந்தக் குழந்தைகளுக்கு கற்பிக்கின்றபோது, குழந்தைகளின் மூளை பாதிக்கப்படும் என்பது அறிஞர்களுடைய கருத்தாகும்.

இவற்றையெல்லாம் எந்தக் கவனத்திலும் எடுத்துக் கொள்ளாமல் அந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. அதோடு பள்ளிக்கல்வியில் பல்வேறு விதமான வெளியார்களை அழைத்து பாடம் நடத்த வேண்டும் என்று அவர்கள் பல இடங்களில் குறிப்பிடுகிறார்கள். அவர்களை சமூக சேவகர்கள் சமூக போதகர்கள் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் யார்? இவர்களை எதற்காக நாம் பள்ளிக்கூடங்களில் அழைத்து பாடம் நடத்தச் சொல்ல வேண்டும்? என்பது பற்றிய கேள்வி, மிகப்பெரும் சந்தேகத்தை உருவாக்குகிறது. இது அவர்களுடைய நோக்கத்தில் என்னவென்று சொன்னால் அவர்கள் படிப்படியாக கீழ்மட்டம் வரைக்கும் இன்றைக்கு இந்தியா முழுவதும் கட்டமைத்து இருக்கிற ராஷ்ட்ரிய சுய சேவக் சங்(RSS) என்கிற ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், அவர்களை நேரடியாக பள்ளிக்கல்விக்குள் கொண்டு செல்லக்கூடிய திட்டமாகத்தான் நாம் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

தொடரும்…

பேராசிரியர். வீ.அரசு

மேனாள் தமிழ்த்துறை தலைவர், சென்னை பல்கலைக்கழகம்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here