புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் – பகுதி 3


புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் – பகுதி 2

தொடர்ச்சி…

அதைவிட அந்தத் தனியார் கல்லூரிகள் என்பது படிப்படியாக அவர்களுடைய முழு அதிகாரம் பெற்ற நிறுவனங்களாகவும் மாற்றவேண்டும் என்று சொல்கிறார்கள். அதாவது கல்லூரிகள் என்பவை பல்கலைக் கழகங்களின் இணைப்பிலிருந்து படிப்படியாக நீக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி நீக்கப்பட்ட கல்லூரிகள் தன்னாட்சியாக செயல்படும் என்றும் அவர்களுடைய பாடத்திட்டத்தை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள் என்றும், அந்தக் ஆசிரியர்கள் நியமிப்பதை அவர்களே நியமிப்பார்கள் என்றும், அப்படி அந்தக் கல்லூரிகளின் கட்டணங்கள் எவ்வளவு வாங்கவேண்டும் என்பதற்கான உரிமையும் அவர்களுக்கே கொடுக்கப்படும் என்றும் இந்த அறிக்கையில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக நீங்கள் என்ன புரிந்துகொள்கிறீர்கள்.

கல்வியை ஒரு தனியார் வணிகமாக முற்று முழுதாக மாற்றுகிறார்கள். இப்பொழுதே அது தனியார் வணிகமாக மாற்றப்பட்டிருக்கிறதை தமிழ்நாட்டு வரலாற்றில் நீங்கள் பார்க்க முடியும், குறிப்பாக, எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள் முழுமையும், அதற்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகளும், இப்பொழுது மிக அண்மையில் சட்டக் கல்லூரிகளும் முற்று முழுதாக தனியார் மயமாக்கப்பட்டு வணிகமாக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். எம்ஜிஆர் தனது கட்சியில் இருக்கக்கூடிய எம்எல்ஏ, எம்பி, நெருக்கமானவர்கள் எல்லாம் அரசாங்கத்தின் மிகப்பெரிய பொது காலியிடங்களை, புறம்போக்கு நிலங்களை எல்லாவற்றையும் ஒதுக்கி அவற்றில் அவர்கள் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களை உருவாக்கி அவற்றை அது சுயஆட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள் என்று சொல்லக்கூடிய (Deemed) பல்கலைக் கழகமாக உருவாக்கி, அதை ஒரு மிகப்பெரிய வணிகமாக இன்றைக்கு செய்து வருவதை நாம் காண்கிறோம்.

இதன் மூலமாக நடக்கக்கூடிய கொடுமைகள் என்பது கொஞ்சநஞ்சமல்ல. குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்பது அந்தக் காலத்தில் அண்ணாமலை அரசர் போன்றவர்கள் ஏதோ ஒரு சேவை நோக்கத்தில் உருவாக்கினாலும் இன்றைக்கு அது எவ்ளவளவு பெரிய மோசடி நிறுவனமாக மாறி, அதில் அரசு தலையிட்டு, இப்போது அரசு அந்த நிறுவனத்தை எப்படி நடத்துகிறது என்பதும், அதில் நடந்த சீர்கேடுகள் என்பதும் 100 ஆசிரியர்கள் இருக்கவேண்டிய இடத்தில் 500 ஆசிரியர்களை நியமிப்பது என்பதும், அங்கு நடத்தப்பட்ட பாடங்களுக்கு அவர்கள் பட்டங்கள் வழங்கியவை எப்படி எந்த பயிற்சியும் இல்லாமல் மிக மோசமான படிப்பு முறையை அவர்கள் உருவாக்கினார்கள் என்பதையும் நாம் அறிவோம். அதைப்போல பச்சையப்பன் கல்வி நிறுவனமும் ஒரு காலத்தில் சேவை நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. பின்னர் அது நேரடி அரசாங்கத்தின் நோக்கத்திலும், அவை தனியான குழுக்களின் நோக்கத்திலும் செயல்படுவதன் மூலமாக, அங்கு நடக்கக்கூடிய ஊழல்கள் என்பதும், அங்கு ஆசிரியர்கள் நியமனம் என்பதற்கு 30 லட்ச ரூபாயிலிருந்து 50 லட்ச ரூபாய் வரை வாங்குவது என்பதும், அப்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் எப்படி வகுப்பறைகளில் பாடம் நடத்துவார்கள் என்பதும், இப்படி பல்வேறு விதமான செய்திகளை இன்றைக்கு தனியார் கல்வி நிறுவனங்களின் மூலமாக நீங்கள் புரிந்துகொள்ள முடிகிறது.

இப்படியான தனியார் கல்வி நிறுவனங்களை முற்று முழுதாக உருவாக்குவதற்கான வரைவு அறிக்கையாகவே, இந்தத் தேசிய கல்விக் கொள்கையின் அறிக்கையின் உள்ளார்ந்த அரசியல் நோக்கம் இருக்கிறது என்பதை நண்பர்களே நீங்கள் வாசிக்கும்போது புரிந்துகொள்ளலாம். அடுத்ததாக இந்த அறிக்கையில் 4ஆவது அத்தியாயத்தில் 5ஆவது பிரிவில் வாசித்துப் பார்த்தீர்கள் என்று சொன்னால், உலகத்திலேயே மிகச்சிறந்த மொழி சமஸ்கிருதம்தான் என்றும், இந்தியர்களாக நாம் வாழவேண்டும் என்றால் கண்டிப்பாக நாம் சமஸ்கிருத மொழியை படித்திருக்க வேண்டும் என்றும், சமஸ்கிருத மொழியில் உள்ள இலக்கியங்கள் எல்லாம் கீழ் வகுப்பிலிருந்தும் மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும் என்றும், 12-ஆம் வகுப்புக்கு வருகிற கட்டங்களில் அவர்களுக்கு செம்மொழி இலக்கியம் என்ற ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தி அதில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், அதன்மூலமாக சமஸ்கிருத இலக்கியத்தையே அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்றும் இதிலே எழுதுகிறார்கள்.

சமஸ்கிருத இலக்கியத்தில்தான் மிகச்சிறந்த சமஸ்கிருத உலக அறிவு இருக்கிறது என்பது போன்று அவர்கள் பேசுகிறார்கள். இலக்கியத்திற்கும், சமஸ்கிருத மொழிக்கும் எந்த அளவிலும் குறைவில்லாத தமிழ் பற்றியோ, தமிழ் இலக்கியம் பற்றியோ அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை. ஏதோ இந்தியாவில் உள்ள வேறு மொழிகளில் தமிழும் ஒன்றாக அவர்கள் குறிப்பிட்டு அவர்கள் பட்டியலிடுகின்றபோது தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் உள்ள இலக்கியங்களைப் படிக்கவேண்டும் என்று ஒரு வரி குறிப்பிடுகிறார்கள். ஆனால் சமஸ்கிருத இலக்கியத்தை மட்டும் கட்டாயமாக மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இந்த சமஸ்கிருத இலக்கியம், சமஸ்கிருத மொழி இதனுடைய தன்மை என்ன என்பதைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

சமஸ்கிருத மொழி என்பது கிபி 9 நூற்றாண்டிலேயே பேச்சு வழக்கை இ 6/10 மொழி. சமஸ்கிருத மொழி என்பது நீண்ட நெடுங்காலம் ஒலி வழக்காகவே இருந்து வந்த மொழி, இந்த மொழி என்பது ஒரு சமய மொழி, இது கோயில்களில் மந்திரம் ஓதுவதற்கு என்றும், அது சார்ந்த சடங்குகளை செய்வதற்கு என்றுமே முதன்மையாக பயன்படுத்தப்பட்ட மொழி. இந்த மொழியில் நல்ல இலக்கணப் படைப்புக்களை பாணினி போன்றவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

நாட்டிய சாஸ்திரம் போன்ற படைப்புக்களின் மூலமாக கலை சார்ந்த பதிவுகள் அதில் செய்யப்பட்டிருக்கின்றன. காளிதாசருடைய பல்வேறுவகையான காவியங்கள், பாசருடைய நாடகங்கள், எல்லாம் இந்த மொழியினுடைய சிறப்பான ஆக்கங்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இவற்றையெல்லாம் நாம் வாசிப்பதில், இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதில் நமக்கு இரண்டு கருத்தில்லை. ஆனால் இதே அளவுக்கு இணையான நமது சங்க இலக்கியங்களையும், தொல்காப்பியத்தையும், திருக்குறளையும், இளங்கோவடிகளுடைய சிலப்பதிகாரத்தையும் வாசிக்கவேண்டும் என்று இவர்கள் சொல்கிறார்களா? ஏன் அதைப்பற்றி எந்தக் குறிப்பும் இல்லை? இந்தியா ஒரு பல்வேறு இனங்களின் ஒருமைப்பட்ட ஆட்சி நடத்துகிற ஒரு நாடு என்று சொன்னால் செம்மொழி என்று பேசுகிறபோது சமஸ்கிருதம் என்று இவர்கள் பேசினால் உடனடியாக அடுத்த வரியில் தமிழைப்பற்றி பேச வேண்டாமா? ஏன் பேசமாட்டேன் என்கிறார்கள்? இதனுடைய அரசியல் என்ன, இவர்கள் சமஸ்கிருத மொழி என்பது கிபி 7-ஆம் நூற்றாண்டு மூலமாக அரச மொழியாக கட்டமைக்கப்பட்டது. அதிகார மொழியாக கட்டமைக்கப்பட்டது. அரசர்கள் தங்கள் அரசவைகளில் அவற்றை போதித்தார்கள். நமது கலை வடிவங்கள், நமது கட்டிடக் கலை, நமது இசை, நமது நிலப்பகுதியில் இருந்த அனைத்து செய்திகளையும் அவர்கள் சமஸ்கிருத மொழியில் எழுதிவைத்தார்கள். அவற்றையெல்லாம் இவர்கள் இன்றைக்கு எடுத்து வைத்துக்கொண்டு அவை எல்லாம் அவர்களுடைய கலை வடிவங்கள் என்று சொல்லுகிறார்கள். எடுத்துக்காட்டாக ஒன்றே ஒன்றை மட்டும் நான் கேட்கிறேன்.

தொடரும்…

பேராசிரியர். வீ.அரசு

மேனாள் தமிழ்த்துறை தலைவர், சென்னை பல்கலைக்கழகம்

முந்தைய பதிவு

புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் – பகுதி 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here