கேரளாவில் திரைப்படத்துறை பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சீண்டல்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளில் அம்பலப்பட்டு நாறி வருகிறது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான மூன்று நபர் கொண்ட குழுவினர் கொடுத்த அறிக்கை தாமதமாக வெளியிடப்பட்ட பிறகு மலையாள திரைப்பட உலகின் முன்னணி நடிகர்கள் என்று கருதப்படும் பல யோக்கிய சிகாமணிகளின் முகத்திரை கிழிந்துள்ளது. அம்மா என அழைக்கப்படும் மலையாளதிரைப்பட நடிகர் சங்க பொருப்பாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த நிலையில், ’எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற கதையாக தமிழக திரைப்பட நடிகர் சங்கம் நேற்று கூடி பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளை நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்று தனது உறுப்பினர்களை கேட்டுக் கொண்டது உட்பட ஏழு தீர்மானங்களை போட்டுள்ளது.

பாலியல் சீரழிவு மிகுந்த துறை என்று நாடே அறிந்த திரைப்படத்துறையில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அடங்கிய முக்கூட்டு நடத்தி வரும் பாலியல் வக்கிரங்கள் அவ்வப்போது வெளிவந்து சந்தி சிரித்தாலும் தற்போது கேரளாவில் ஹேமா கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை இந்த துறையின் மீதான கொஞ்ச நஞ்சம் இருந்த மரியாதையையும் ஒழித்துக் கட்டி உள்ளது.

இதனால் பொதுவெளியில் மானம் போகிறது என்ற நடுக்கத்தில் தமிழகத் திரைப்பட நடிகர்கள் சங்கம் மேற்கண்ட தீர்மானங்களைப் போட்டு அதனையே அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1. பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

5. பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும் அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழக திரைப்பட நடிகர்கள் சங்கம் பெரியதிரை மற்றும் சின்னத்திரை ஆகியவை இணைந்து அதிகபட்சம் 3500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த மிகச்சிறிய எண்ணிக்கையிலான கும்பல்தான் தமிழர்கள் என்று கூறிக் கொள்ளும் 12-13 கோடி மக்களின் வாழ்க்கை முறை, உடை அலங்காரம் முதல் முடி அலங்காரம் வரை அனைத்தையும் தீர்மானிப்பவர்களாக உள்ளனர்.

தனக்கு பிடித்தமான நடிகன் நடித்து வெளியாகின்ற திரைப்படம் வெளியாகின்ற போது பெட்டியை வரவழைத்து, அதை ஊர்வலமாகக் கொண்டு சென்று தேங்காய் உடைப்பது, சூடம் ஏற்றுவது, பார்ப்பனர்களை வைத்து பூஜை செய்வது, கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வது, அலகு குத்திக் கொள்வது, மண் சோறு தின்பது உள்ளிட்டு பக்தி பரவசத்துடன் பிற ரசிகர்களை உசுப்பேத்துகின்றனர் ரசிகர் மன்றத்தினர்.

அதுமட்டுமன்றி அந்த நடிகரைப் போலவே முடியை வெட்டிக் கொள்வது; முகத்தை கோணலாக்கிக் கொள்வது; நல்ல பேண்ட், சட்டையை கிழித்துப் போட்டுக் கொள்வது என்று காப்பியடித்துக் கொண்டு நடிகர்கள் வாழ்கின்ற நிஜ வாழ்க்கையை தன்னுடைய நிழல் வாழ்க்கையில் அனுபவிக்க துடிக்கின்றனர்.

அது மட்டும் இன்றி ஒவ்வொரு சீசனிலும் பெண்களை பல்வேறு வகையில் கேலி, கிண்ட்டல் செய்கின்ற, பாலியல் வக்கிர சேட்டைகளை தனது நடிப்பு திறமை மூலம் பன்மடங்கு சமூகமயமாக்குகின்ற சமூகப் பொறுப்பற்ற கழிசடைகளாகவே பெரும்பான்மை நடிகர்கள் உள்ளனர்.

தற்போது தமிழக திரைப்படத்துறையில் ஆக்கிரமித்து இருக்கும் ரஜினியின் மருமகனான தனுஷ், சிவகார்த்திகேயன், டி ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் போன்றவர்கள் பெண்களை உருவ கேலி முதல் மிகவும் கீழ்த்தரமாக சித்தரிக்கின்ற ஆபாச வக்கிர சேட்டைகள் செய்வது வரை புதிய தளத்திற்கு திரைப்படத்துறையை கொண்டு சென்ற பெருமை இவர்களுக்கு உண்டு.

குறுகிய காலத்தில் பல கோடிக்கு அதிபதியாகின்ற துறையாக இருப்பதால் தன் வாழ்க்கையில் திரைப்பட நடிகனாகிவிட வேண்டும் என்ற ஏக்கம் மற்றும் கனவு, லட்சியம், வெறி கொண்ட இளைஞர் கும்பல் இவர்களைப் போன்று சேட்டைகளை அமுல்படுத்துகின்றனர். சின்னத் திரை நடிகர்களோ தானும் இது போன்ற கீழ்த் தரமான செயல்களை துவங்குவது மட்டுமின்றி பெரிய திரையின் வக்கிரங்களை அன்றாட தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் பரப்புவதற்கும் முயற்சிக்கின்றனர்.

ஏற்கனவே முன்னணி நடிகர்கள் செய்த ஆபாச வக்கிர நடவடிக்கைகளை தாண்டி புதிதாக ஏதாவது செய்தால் தான் அதை ட்ரெண்டாகும் என்ற முறையில் வக்கிரத்தை பரப்புவதற்கு ஐந்து நட்சத்திர விடுதிகளில் ரூம் போட்டு யோசிக்கின்றனர்.

சினிமா நடிகர்கள் அது சின்னத்திரை, பெரியதிரையாக இருந்தாலும் குடிவெறி, புகழ்வெறி, குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் புரளும் பணவெறி போன்றவை இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக மனிதத்தன்மையற்ற, பாலியல் வெறிபிடித்த மிருகங்களாக மாற்றுகின்றது. இதனால் சக நடிகைகள், துணை நடிகைகள் அனைவரிடமும் பாலியல் சேட்டைகளை, பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்துகின்றனர். இதனை சகித்துக் கொண்டு போகின்ற நடிகைகள் மட்டும்தான் திரைப்பட உலகில் மீண்டும் சான்ஸ்களை பெற முடியும் என்பதை எழுதப்படாத சட்டமாக அமல்படுத்தி வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மீ டூ என்ற ஹேஸ்டேக் மற்றும் இயக்கம் நாடு முழுவதும் பிரபலமானது. தனது குடும்ப உறுப்பினர்கள் தொடங்கி படிக்கின்ற பள்ளி, கல்லூரிகள் பணியாற்றுகின்ற இடங்கள், அனைத்து துறைகளிலும் நடக்கின்ற பாலியல் வன்கொடுமைகளை துணிச்சலுடன் பெண்கள் மீ டூ என்ற பெயரில் வெளியிட்டனர். ஆனால் அதன் பிறகு வக்கிர பேர்வழிகளின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்பது மட்டுமின்றி, இதுபோன்று தனது பெயர் பிரபலம் அடைந்ததை கண்டு மேலும் மனக்கிளர்ச்சியடைந்து குரூரமான நபர்களாக நடமாட துவங்கினர். இந்த இயக்கத்தின் விளைவு ஒன்றுமில்லை என்று விமர்சிக்கின்றார் எழுத்தாளர் ஜீவசுந்தரி.

படிக்க:

♦ நீதியரசர் ஹேமா அறிக்கையும், ஆணாதிக்க வக்கிர வெறிபிடித்த சமூகத்தின் யோக்கியதையும்.

♦ கார்ப்பரேட்டுகளின் பிடியில் சினிமா! ரசிகனின் தலையை தடவும் நடிகர்கள்!

சினிமா கழிசடைகளின் வாழ்க்கையை கடைபிடிப்பதற்கும், திரைப்படங்களில் அவர்கள் முன் வைக்கின்ற ’அரிய பெரிய’ கருத்துக்களை முன்னுதாரணமாக கொண்டு கடைபிடிப்பதற்கும் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

கடுமையான வாழ்க்கை நெருக்கடியிலும் தனது குடும்பத்தையும், தனது உறவுகளையும் தனது அண்டை அயலாரிடம் நேர்மையாகவும், ஒழுக்கத்துடன் பழகி வருகின்ற பல கோடிக்கணக்கான பாட்டாளி வர்க்கத்திடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஆயிரக்கணக்கான விஷயங்கள் இருக்கின்றன.

’அரிதாரம் பூசிக்கொண்டு ஆடுகின்ற’ திரைப்பட கழிசடைகளிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை என்பது மட்டுமின்றி இப்படிப்பட்டவர்கள் அம்பலமாகின்ற போது ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து சமூகப் புறக்கணிப்பு செய்வது மட்டுமின்றி வீதியில் விசாரணை செய்து தண்டிக்கின்ற வகையில் விசாரணை அமைப்புகள் மாற்றப்பட வேண்டும்.

இது கொடூரமானது என்பவர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லி, நலன் குமாரசாமி, போன்ற இளைய இயக்குனர்கள் துவங்கி மணிரத்தினம், ஷங்கர் வகையறாக்கள் வரை குற்றவாளிகளுக்கு கொடுக்கின்ற தண்டனைகளை பார்த்து கற்றுக் கொள்வோம்.

பார்த்தசாரதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here