பழந் தமிழரிடையே சூழலியல் விழிப்புணர்வு:-

இன்று உலகு எதிர்நோக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் எது எனக் கேட்டால் பலரும் `கொரோனா` எனக் கூறலாம், ஆனால் அதனைக் காட்டிலும் மிகப் பெரிய கேடாக அமைவது சூழல் மாசடைதலால் ஏற்படும் பருவ நிலை மாற்றமேயாகும். கோவிட் 19 நோயால் ஏற்பட்ட உலகளாவிய இறப்புகளைக் காட்டிலும்( 4 மில்லியன்), மாசடைந்த காற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ( ஒவ்வொரு ஆண்டும் 7 மில்லியன்) அதிகம்; மேலும் கோவிட்19 இறப்புகளுக்குக் கூட மாசடைந்த காற்றினால் ஏற்பட்ட விளைவுகள் பங்களித்துள்ளன. தாங்கள் முன்பு கருதியதை விட காற்று மாசுபாடானது இடர்ப்பாடு மிக்கதாக இருக்கிறது என உலக நலத்துறை அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. மேலும் அது வரும் நவம்பர் மாதம் `COP26` உச்சி மாநாட்டுக்கு முன்னராக அதன் 194 உறுப்பு நாடுகளையும் தங்களின் நச்சுக் காற்று உமிழ்வைக் குறைக்க வலியுறுத்தியுள்ளது . அதே போன்று சில கிழமைகளுக்கு முன்னர் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படப் போகும் இன்னல்களையும் உலக அறிவியலாளர்கள் சேர்ந்து ஒரு அறிக்கை (IPCC report) மூலம் எச்சரித்துமிருந்தார்கள். தொழில் முயற்சிகளின் விரிவாக்கத்தினையும், நகர்ப்புற வளர்ச்சியினையும் உரிய முறையில் மேலாண்மை செய்யத் தவறியமையே, இத்தகைய சூழல் கேடுகளுக்கான காரணங்களாகவுள்ளன. அதே வேளையில் அண்மைக்காலத்தில் தமிழர் நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் பழந் தமிழரின் தொழிற்துறை வளர்ச்சி பற்றியும் தெரிய வருகின்றது. இந்த நிலையில் பழந் தமிழரிடையே சூழல் விழிப்புணர்வு எவ்வாறு இருந்தது என இக் கட்டுரை ஆய்வு செய்யவுள்ளது.

source: statisca.com

இயற்கையினைப் பேணிய சங்க காலத் தமிழர்:-

இயற்கையால் அமைந்ததே உலகு, எனவே இயற்கையினைப் பேண வேண்டும் என்பதனைச் சங்ககாலத் தமிழர்கள் நன்றாக அறிந்தேயிருந்தார்கள். முரஞ்சியூர் முடிநாகராயர் எனும் சங்ககாலப் புலவர் பாடிய பின்வரும் புறநானூற்றுப் பாடல் இதனை எமக்கு நன்கு தெளிவுபடுத்தும்.

“மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளி தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்று ஆங்கு 5
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல”
:புறநானூறு 2: 1-6

முரஞ்சியூர் முடிநாகராயர்

(பொருள் – மண் செறிவாய் அமைந்துள்ள நிலமும், அந்த நிலம் ஏந்திநிற்கும் வானும் , அந்த வானத்தைத் தடவிவரும் காற்றும், அந்தக் காற்றினால் எழுந்த தீயும், அந்தத் தீயுடன் மாறுபட்ட நீரும் என்று ஐந்துவகையான பெரிய பூதத்தினது தன்மை போல)

அதே போன்று சங்க இலக்கியங்களில் கூறப்படும் `தமிழ் ஏழு வள்ளல்கள்` எனப்படும் குறுநில மன்னர்களும் இயற்கையினைப் பேணி வந்த செய்திகளைக் காணலாம் (`கடையேழு வள்ளல்கள்` என்பதைத் தவிர்ப்போம், ஏனெனில் கடையேழு வள்ளல்கள் எனில் முதல் ஏழு வள்ளல்கள் என்ற புராணப் புனைவுகளை ஏற்க வேண்டியிருக்கும்). `மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகன்`, `முல்லைக்குத் தேர் தந்த பாரி` போன்றவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்; இங்கு முல்லைக்குத் தேர் கொடுத்தமையோ அல்லது மயிலுக்குப் போர்வை கொடுத்தமையையோ அவர்கள் முறையே மரம்-செடிகளையும், உயிரிகளையும் பேணியமைக்கான உவமைகளாகவே கொள்ளப்பட வேண்டும்.

பழந் தமிழர் மரங்களைத் தெய்வமாகக் கருதி மதித்தமையினைப் பல சங்ககாலப் பாடல்கள் எடுத்து இயம்புகின்றன. அவற்றுள் சில வருமாறு:

“தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்ற பெண்ணை வாங்கு மடல் குடம்பை”

: நற்றிணை 303: 3-4

(தொன்றுதொட்டு உறையும் கடவுள் சேர்ந்த பருத்த அரையைக் கொண்ட
மன்றத்தில் நிற்கும் பனைமரத்தின் வளைந்த மடலே இருப்பிடமாய்க்கொண்டு)

“கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த 395
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை”
: மலைபடுகடாம்.395-396

(நல்ல அடிப்பகுதியையுடைய மரா மரத்தடிகளில்
கடவுள் (படிமங்கள்) ஓங்கிநிற்கும் காடுகள் நிறைந்த கிளைவழிகளில்)

“மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்”

: அகநானூறு 87 :1

(ஊர்ப்பொதுவிடத்தில் உள்ள மரா மரத்தில் இருக்கும் கடவுள்)
இவ்வாறு பல சங்க காலப் பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதே போன்று மரத்தினை ஒரு உடன் பிறந்தவளாகக் கருதும் பாடல் கூட உண்டு.

“நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே”

: நற்றிணை 172 :4-5

(உம்மைக்காட்டிலும் சிறந்தது இந்த உமது தங்கையானவள் என்று
அன்னை கூறினாள் இந்தப் புன்னையது சிறப்பைப்பற்றி)

மரம் வளர்த்தலின் முகன்மை பற்றிப் பல பாடல்களில் பேசப்படுகின்றன. ஒரு சிறு செடி கூட வளர்ந்து, யானையினையே கட்டும் கட்டுத்தறியாக மாறும், எனவே சிறு செடிகளைக் கூடத் தேவையில்லாமல் அழிக்க வேண்டாம் என நாலடியார் பாடலொன்று கூறுகின்றது.

“ஆடு கோடாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும்”

: நாலடியார்: 192

பதினெண் கீழ்க் கணக்கு நூலான நாலடியார் சொன்னது போன்றே , அத் தொகுப்பினுள் வரும் சிறுபஞ்ச மூலம் எனும் நூலும் பின்வருமாறு கூறுகின்றது (பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் சங்ககாலத்தினை அடுத்து வந்த காலப் பகுதிகளில் பாடப்பட்டவை).

“நீர்அறம் நன்று, நிழல்நன்று, தன்இல்லுள்
பார்அறம் நன்று,பாத்து உண்பானேல் – பேரறம்
நன்று, தளிசாலை நாட்டல் பெரும்போகம்
ஒன்றுமாம் சால உடன். “
: சிறுபஞ்சமூலம்.

பொருள்- நீர் நிலைகளை (குளம்,கிணறு..) அமைத்தல், மரம் நடுதல், உறைவிடம் அமைத்தல், பகிர்ந்து உண்ணல், பாதையோரங்களில் மரம் நடுதல் ஆகிய செயல்களே பேரின்பத்துக்கான வழிகளாகும் என சிறுபஞ்ச மூலம் சொல்லுகின்றது.

மண் அரிப்பினைத் தடுப்பதற்காகவும், கடற் பேரலைகளால் ஏற்படும் அழிவுகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும் , கரையோரங்களில் மரங்கள் வளர்க்கப்பட்ட செய்தியினையும் பல பாடல்களில் காணலாம்.

“புது மணல் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல்
கண்டல் வேலிய ஊர் அவன்” 10
நற்றிணை 74:6-10

மேலுள்ள பாடலில் கடற்கரையிலுள்ள ஊர் ஒன்றின் வேலியாக கண்டல் மரங்கள் காணப்பட்ட செய்தியினைக் காணலாம்.

புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன்”
நற்றிணை 94:6

கடற் பெருக்கினைத் தடுக்கும் புன்னை மரங்கள் உவமையாகக் கூறப்படுகின்றன.

“அகரு வழை ஞெமை ஆரம் இனைய 5
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்
வளி வரல் வையை வரவு
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய்”
: பரிபாடல் 12:5-9

இப் பாடலில் வைகை ஆறு வந்து மோதும் கரைகளில் நட்டு வைக்கப்பட்டுள்ள மரங்கள் ( நாகமரம், தகர மரம், ஞாழல் மரம், தேவதாரு மரம்) பற்றிய குறிப்பினைக் காணலாம். இது ஒரு வகையில் மண் அரிப்பினைத் தடுத்துச் சூழலைப் பேணும் ஒரு செயற்பாடாகக் கொள்ளலாம்.

`புவி வெப்பமடைதல்` பற்றி இன்று பெரிதாகப் பேசுகின்றோம். அது பற்றிய அறிவும் பழந் தமிழருக்கு இருந்துள்ளதோ என்ற ஐயத்தினை எமக்கு ஏற்படுத்தும் வகையில் மணிமேகலையில் ஒரு பாடல் அமைந்துள்ளது . எழுத்தாளர் மருது கிருஷ்ணன் அண்மையில் இப் பாடலினைச் சுட்டிக் காட்டியிருந்தார்.

“ புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி
மன் உயிர் மடிய மழைவளம் கரத்தலின்
அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன்
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன்
அரும் பசி களைய ஆற்றுவது காணான்
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன்
:மணிமேகலை

இப் பாடலில் புல்லும் மரமும் புகையுமளவுக்கு வெப்பம் மிகுந்தமையால் உயிர்கள் அழியுமாறு செல்வம் அழிந்து போனமையால், நாய்க் கறியினையே உண்ணும் நிலை ஏற்பட்டது எனச் சொல்லப்படுகின்றது. இதனை விடப் `புவி வெப்பமடைதல்` பற்றிய எச்சரிக்கையுணர்வினை எவ்வாறு வெளிப்படுத்துவது?

இன்று எல்லாம் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் மாசுகளினால் சூழல் கெடுவதனைத் தடுக்க, தொழிற்சாலைகளைச் சுற்றி மரம் வளர்க்க நிறுவனங்கள் வலியுறுத்தப்படுவதனைக் காண்கின்றோம். இந்த ஏற்பாட்டினால் சூழல் மாசுபடுவது கட்டுப்படுத்தப்படும் என்பதாலேயே, இம் முறை பின்பற்றப்படுகின்றது. இச் சூழல் மாசுபடல் தொடர்பான அறிவு சங்க காலத்திலேயே உண்டு. பின்வரும் பட்டினப்பாலை பாடலினைப் பாருங்கள்.

“கார் கரும்பின் கமழ் ஆலை
தீ தெறுவின் கவின் வாடி 10
நீர் செறுவின் நீள் நெய்தல்
பூ சாம்பும் புலத்து ஆங்கண்
காய் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழு குழவி
கூட்டு நிழல் துயில் வதியும் 15
கோள் தெங்கின் குலை வாழை
காய் கமுகின் கமழ் மஞ்சள்
இன மாவின் இணர் பெண்ணை
முதல் சேம்பின் முளை இஞ்சி
அகல் நகர் வியல் முற்றத்து” 20
: பட்டினப்பாலை 9–20

கரும்பு ஆலையிலிருந்து வெளிவரும் மாசினால் நெய்தல் மலர் வாடுவதும், மரங்கள் ஆலையினைச் சூழ அமைந்திருப்பதும் சொல்லப்படுகின்றது. பாடலினை நுணுக்கமாக ஆய்ந்தால் மர இலைகள்-பூக்கள் மாசினைப் பிடித்து வைக்கும் செய்தியினையும் உய்த்துணரலாம்.

இலக்கியச் சான்றுகளின் படி சூழல் விழிப்புணர்வு எல்லாமிருந்தது சரிதான், இதனை மெய்ப்பிக்கும் தொல்லியல் சான்றுகள் ஏதாவது உள்ளதா? எனப் பார்ப்போம். கொடுமணல் அகழ்வாய்வு முடிவுகளை உள்ளடக்கிய ஒரு பெரும் நூலினை `தொன்மைத் தமிழ் எழுத்தியல்` என்ற பெயரில் எழுதியிருந்தார். அந்த நூலில் இரும்பு உருக்கும் உலைக் கலன்கள் கொடுமணல் ஊரின் எல்லையோரங்களிலேயே அமைக்கப்பட்டிருப்பதனை அகழ்வாய்வுகளின் வழி காட்டியிருப்பார். அதற்கான காரணத்தினையும் பின்வருமாறு கூறியிருப்பார் : “இரும்பு உருக்கும் தொழில் இடம் பெற்ற இடங்களில் குடியிருப்புக்கான (வீட்டுத் தரை, சுவர், ஓடுகள்) சான்றுகள் காணப்படாமையாலும், இங்கு கிடைத்த மட்பாண்டங்களில் எழுத்துகள் பொறிக்கப்படைமையாலும்; ஊரின் புறப் பகுதியிலேயே இத் தொழில் மேற்கொள்ளப்பட்டமையினைக் காட்டுகின்றது. இந்த ஏற்பாடு புகை, ஒலி போன்ற தேவையற்ற மாசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு விழிப்புணர்வாகவிருக்கலாம்” (அவரது கருத்துகளின் சுருக்கமான வடிவம்). இவ்வாறு ஊரின் புறப் பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைப்பதும் அதனையொட்டி மரங்களை வளர்த்திருப்பதும் ஒரு வகையான சூழலியல் விழிப்புணர்வாகவே கொள்ளப்பட வேண்டும்.

கொடுமணல்

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எமது முன்னோர் எத்தகைய சூழலியல் விழிப்புணர்வுடன் இருந்துள்ளார்கள் எனப் பார்த்தோம். இனியாவது நாமும் விழித்துக் கொள்வோம். பருவநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் மீளச் சரி செய்ய முடியாத நிலையினை எட்டி விடும் இறுதி விளிம்பில் நாம் இன்று இருக்கின்றோம், இதில் தவறுவோமாயின் எமது எதிர்காலத் தலைமுறை எம்மைப் பற்றிப் பெருமைப்பட மாட்டாது. அவ்வாறு நினைப்பதற்கு முதலில் எதிர்காலத் தலைமுறைக்கு வாழ்வதற்கான வாய்ப்பு இருக்குமா! என்பதே கேள்விக்குறியாகவேயுள்ளது.

நன்றி: வி.இ.குகநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here