நியூஸ்18க்கு அளித்த பேட்டியில் பாசிச மோடி முஸ்லிம்களை “ஊடுருவல் காரர்கள்” என்றோ “அதிக பிள்ளைகள் பெற்றுக் கொள்பவர்கள்” என்றோ நான் கூறவேயில்லை என்றும் நீங்கள்தான், அதாவது, மற்றவர்கள் தான் எனது வார்த்தைகளை தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள் என்றும் மோடி அடித்துக் கூறி இருக்கிறார்.

அந்தப் பேட்டியின் போது,

‘இந்து, முஸ்லிம் என்று பிரித்து பேசுவேனாகில் நான் நீண்ட நாளைக்கு பொதுவாழ்வில் இருக்க முடியாது’ என்றும் பாசிச மோடி திருவாய் மலர்ந்திருக்கிறார்.

இது அப்பட்டமான பொய் என்பது மோடியின் பேச்சை கவனித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வெளிப்படையாக தெரியும் ஒன்று. இருப்பினும் இந்த விஷயம் தெரியாதவர்களுக்கு மோடியின் மத வெறுப்பு பேச்சை குறித்த சில விவரங்களை இங்கு பார்ப்போம்.

பாசிச மோடி கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசும் பொழுது இஸ்லாமியர்களை அந்நிய நாட்டில் இருந்து “ஊடுருவியவர்கள்” என்றும் “அதிக பிள்ளைகள் பெற்றுக் கொள்பவர்கள்” என்றும் பேசி இந்துக்களிடையே முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை தூண்டிவிட்டுக் கொண்டிருந்தார்.

அந்தக் கூட்டத்தில் மட்டுமல்ல அதற்குப் பிறகு பேசிய பொதுக்கூட்டங்களிலும் இதை வழிமொழிந்து தொடர்ந்து மோடி பேசிக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பொதுமக்களும் ஜனநாயக சக்திகளும் பத்திரிக்கையாளர்களும் மோடியின் மதவெறிப் பேச்சுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மதவாதத்தை தூண்டும் விதமாக பேசிய மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏறக்குறைய 17 ஆயிரம் பேர், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தியாவில் நிலைமை இப்படி இருக்க, மோடியின் மதவெறுப்பு பேச்சிற்கு எதிராக உலகம் முழுவதிலும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

படிக்க: பாசிச மோடி பேசுவது வெறுப்பு அரசியல் மட்டுமல்ல! கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதம்!

இப்படி உலகமே காரி துப்பிக் கொண்டிருந்த பொழுதும் கூட மோடி பேசிய மத வெறி பேச்சுக்கு எதிராக விளக்கம் கேட்டு மோடிக்கு கடிதம் கொடுப்பதற்கு பயந்து கொண்டு பாஜகவின் தலைவர் நட்டாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது.

மோடியின் எடுபிடிகளான தேர்தல் ஆணையர்கள் இப்படி செய்தது என்பதே மிகவும் அதிகம்.

அடுத்து,

மோடி பொது வாழ்விற்கு தகுதியற்றவர் என்பதற்கான காரணங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1. மோடி குஜராத்தின் பிரதமராக இருந்த பொழுது 2002 ஆம் ஆண்டில் 3000 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்தக் கலவரத்தை தொடர்ந்து குஜராத் சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலின் போது இஸ்லாமியர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்த முகாம்களை குறிப்பிட்டு “குழந்தைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்” என்று கேவலமாக பேசி இருந்தார் திருவாளர் மோடி.

2. அந்தப் பிரச்சாரத்தின் போது இஸ்லாமியர்கள் பலதாரமணம் செய்பவர்கள் என்றும் “நாங்கள் ஐவர் எங்களுக்கு 25 குழந்தைகள்” என்று இஸ்லாமியர்கள் செயல்படுவதாகவும் மோடி இஸ்லாமியர்கள் குறித்து கேவலமாக பேசியிருந்தார்.

3. தற்போது நடக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ராஜஸ்தானில் மோடி பேசும் பொழுதும் இஸ்லாமியர்களை “அதிகப்பிள்ளை பெற்றுக் கொள்பவர்கள்” என்று இழிவாக பேசியுள்ளார்.

இப்படியெல்லாம் பேசியுள்ள மோடி தான் இந்து முஸ்லிம் என்று பிரித்து நான் பேசவே இல்லை. அப்படி பேசினால் நான் பொது வாழ்விற்கு தகுதியானவனாக இருக்க முடியாது என்றெல்லாம் அடித்து விட்டு இருக்கிறார்.

மதவெறி பிடித்த மோடி இப்படி மாற்றி பேசுவதற்கு காரணம் என்ன? 

1. தனது வெறுப்பு பேச்சை கண்டித்து உள்நாட்டு பத்திரிகைகள் மட்டுமல்ல வெளிநாட்டு பத்திரிகைகளும் கண்டன குரல் எழுப்புவதை கண்ட உலகத்திற்கே பாடம் சொல்லும் உலக குரு (அதாவது விஸ்வகுரு) என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் மோடி சற்று விழித்துக் கொண்டிருக்கலாம்.

2. இந்த வெறுப்பு பேச்சால் வாக்காளர்கள் பிஜேபிக்கு எதிராக வாக்களித்து விடுவார்களோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

3. தனது மதவெறி பேச்சுக்கு, முஸ்லிம் விரோத பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள புகார்களை இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்கும் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் தன்னை தற்காத்துக் கொள்வதற்கும் இப்படி மோடி பேசி இருக்கலாம். அதாவது இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பாக பேசியதை மறைக்கும் விதமாக தற்போது பேசி வருவதை வைத்து ஒரு நாடகம் ஆடுவதற்காக மோடி பேசி இருக்கலாம்

அதுவும் மோடி எந்த அளவிற்கு பேசி உள்ளார் தெரியுமா? எந்த ஒரு மக்கள் பிரிவும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கு காரணம் வறுமைதான் என்று மோடி ஆணித்தரமாக தற்போது கூறியுள்ளார்.

வறுமை, கல்வியறிவின்மை போன்றவைகள் தான் மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு காரணம் என்று சமூகவியலாளர்கள் பொருளாதார ஆய்வாளர்கள் ஜனநாயக சக்திகள் என அனைவரும் கூறிவருகின்றனர். இதையெல்லாம் மறைத்து இஸ்லாமியர்கள் திட்டமிட்டே அதிக பிள்ளைகள்‌ பெற்றுக் கொள்கிறார்கள். அதுவும் இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க வேண்டும் என்பதற்காகவே பெற்றுக் கொள்கிறார்கள் என்று இஸ்லாமியர்கள் மீது மத வெறியை தூண்டி வந்தவர்தான் இந்த மோடி. இப்படிப்பட்ட மோடியின் சிந்தனை இஸ்லாமிய வெறுப்பில் ஊறி திளைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட மதவெறி பிடித்த பாசிச மோடி பொது வாழ்வில் இருப்பதற்கே தகுதியற்றவர். இப்படிப்பட்ட மதவெறி பாசிஸ்டுக்கு பொது வாழ்வில் இருந்து அகற்றப்படும் தண்டனை மட்டும் போதுமானதா?

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here