ஹரியானா தேர்தல் முடிந்து விட்டது. ஆனால் காங்கிரசின் அலறல் சத்தம் இன்னும் ஓயவில்லை. காங்கிரசும் இந்தியா கூட்டணியும் போகிற போக்கை பார்த்தால் இனிவரும் தேர்தல்களிலும் ஒப்பாரிச் சத்தம் தொடரத்தான் போகிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது.

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் இந்த மாதம் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளிலும் காங்கிரஸ்  37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஹரியானாவில் பாஜகவிற்கு எதிராக மாபெரும் அலை வீசிக் கொண்டிருந்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று வெளிவந்திருந்த நிலையில் இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மட்டுமின்றி ஹரியானா மக்களுக்கும் பாஜக எதிர்ப்பு சக்திகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

வாக்குப்பதிவு மோசடி!

வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 7 மணி அளவில் 61% வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அடுத்த 24 மணி நேரத்திற்குள், இந்தத் தேர்தலில் 68% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. இது தேர்தல் ஆணையம் அரங்கேற்றிய மோசடி.

இந்த அளவுக்கு வாக்கு வித்தியாசத்தை அறிவித்திருந்தும் கூட, தேர்தல் தில்லுமுல்லுகள் நடந்து இருந்தும் கூட இந்தத் தேர்தலில் பாஜக 39.94 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் 39.09 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ள நிலையில் இருவருக்கும் இடையிலான வாக்கு  வெறும் 0.85 சதவீதம் மட்டுமே.

இதை வைத்துப் பார்க்கும் பொழுதும் தில்லுமுல்லு செய்து தான் பாஜக அங்கு வெற்றி பெற்றிருக்கிறது என்பது தெரிய வருகிறது.

ஹரியானா தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கணக்கு பாஜகவை வீழ்த்துமா?

மக்கள் ஓட்டு போட பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களின் பேட்டரிகள் 30% அளவிற்காவது தனது மின்சக்தியை இழந்திருக்கும். காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பேட்டரிகள் 60 – 70 சதவீத அளவிற்கே  மின் சக்தி  இருந்தன. அதாவது குறைந்தபட்சம் 30 சதவீதம் மின் சக்தி செலவழிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பாஜக வென்ற 20 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பேட்டரிகளில்  99 சதவீதம் மின் சக்தி மீதம் இருக்கிறது. அப்படியானால் இது மக்களால் ஓட்டு போடப்பட்ட வாக்கு இயந்திரங்கள் அல்ல. பாஜகவினர் வேறு எங்கோ வைத்து சிறிது நேரத்திற்குள் மொத்த வாக்கையும் செலுத்தியதால் தான் இந்த வாக்குப்பதிவு எந்திரங்களின் பேட்டரியில் உள்ள மின்சாரம் அப்படியே செலவழிக்கப்படாமல் உள்ளது என்பதும் நமக்குப் புரிகிறது.

இப்படி,  இந்தத் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி தில்லுமுல்லுகள் செய்து காங்கிரசின் வெற்றியை பாஜக பறித்துக் கொண்டு விட்டது. இதை காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகாராக  அளித்திருக்கிறது.

காங்கிரசின் உட்கட்சி பூசல்!

காங்கிரசிலிருந்து வெளியேறிய ஒரு அதிருப்தி வேட்பாளர் சுயேட்சையாக போட்டியிட்டு  வெற்றி பெற்றுள்ளார். அதேபோல காங்கிரஸில் இருந்து வெளியேறிய 11 அதிருப்தி வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு, பாஜக வென்ற இடங்களில், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். தனது உட்கட்சி பூசலை சரியாக கையாள முடியாததால் காங்கிரஸ் கட்சி 12 இடங்களில் தோற்றுப் போய்விட்டது. இந்தப் 12 பேரை சரி கட்டி இருந்தால் கூட இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 49 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்திருக்க  வாய்ப்புண்டு. அதேசமயம்  பாஜக வெறும் 32 இடங்களில் மட்டுமே வென்றிருக்க வாய்ப்புண்டு என்பதும் தற்பொழுது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

பிரிந்து நின்ற இந்தியா கூட்டணி!

காங்கிரசை விட  பாஜக வெறும் 0.85 சதவீதம்  மட்டுமே அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி 1.79 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு இருந்தால் கூட பாஜகவை  தோற்கடித்திருக்க  முடியும். ஆனால் தங்களின் தனிப்பட்ட நலனை முன் நிறுத்தி இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடாததால்தான் தோற்றுப் போய்விட்டன. இந்த நிலையில் பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் இந்தியா கூட்டணிக்  கட்சியினரிடம் உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

ஆட்சியில் உள்ள ஒரு பாசிசக் கட்சியை எதிர்த்து வீழ்த்துவதற்கு அனைவரும் ஓரணியில் திரள வேண்டியது அவசியம் என்பதை இந்தியா கூட்டணி கட்சிகள் உணர்ந்து கொள்ளவே இல்லை. தாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து சாத்தியமான அளவு கொள்ளையடிக்க வேண்டும், பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பதன் விளைவுதான் அரியானா  தேர்தல் முடிவுகள்.   

பாடம் கற்காத இந்தியா கூட்டணி கட்சிகள்!

‘ஜனநாயகத்தை’ கொலை செய்வது, அதாவது, தேர்தல்களில் தில்லு முல்லு செய்து வெற்றி பெறுவது என்பது பாஜக — ஆர் எஸ் எஸ் கும்பலின் தொடர்  நடைமுறையாக உள்ளது. தேர்தல் ஆணையமும், அதிகார   வர்க்கமும், கோடி மீடியாக்களும் இதற்குத் துணையாக உள்ளன என்பது உலகத்திற்கே தெரிகிறது.

7 மாநில இடைத் தேர்தல் வெற்றிகளும் இண்டியா கூட்டணியின் பாஜக எதிர்ப்பு அரசியலில் தோல்வியும்!

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவில் நடக்கும் பல தேர்தல்களில் தில்லுமுல்லுகள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் சண்டிகரில் நடந்த மேயர் தேர்தல், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நடந்த சட்டமன்ற  தேர்தல்கள், சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் எல்லாம் பாஜக — தேர்தல் ஆணையத்தின் கூட்டணி பல்வேறு தில்லுமுல்லுகளின் ஈடுபட்டது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக மிகவும் எளிதாக தேர்தல் முடிவுகள் திருடப்படுகின்றன என்பதும் மிகத்தெளிவாக அம்பலப்பட்டு போய் உள்ளது. இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக பழைய வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பாசிசத்திற்கு எதிராக போராடும் அனைவரும் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் அடுத்த தேர்தல் வரும் வரை இந்தியா கூட்டணிக் கட்சிகள் இது குறித்து வாயே திறக்கவில்லை. தேர்தலின் போது இதுகுறித்து பேசியதோடு நிறுத்திக் கொண்டன.

பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டு வருவதற்காக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ச்சியான போராட்டத்தை நாடு முழுவதற்குமான போராட்டமாக வளர்த்தெடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வழக்கத்தில் இருந்து தூக்கி எறிய வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் தான்  பாஜகவின் தோல்வியை உத்திரவாதப்படுத்த முடியும்.

ஆனால், இந்தியா கூட்டணிக் கட்சிகள் இதைப் பற்றி கவலைப்படவில்லை. ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் இருந்து படிப்பினை எடுக்காவிடில் அடுத்து வரும் மாநில தேர்தல்களிலும் பாசிச பாஜகவை வீழ்த்துவது கடினம்.

  • குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here