தேர்தல் தில்லுமுல்லு! மின்னணு (EVM) வாக்கு இயந்திர மோசடியும்…. வாக்குச்சீட்டு முறைக்கான கோரிக்கையும்….

வீதிப் போராட்டங்களே இருக்கக்கூடிய குறைந்தபட்ச போலி ஜனநாயக நடைமுறைகளையும், போலி அரசியல் சட்ட அமைப்பு முறைகளையும் கூடப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதே நிதர்சனமான உண்மை!

0

பொதுவாக தற்போதைய போலியான ‘நாடாளுமன்ற ஜனநாயக’த் தேர்தல் வழிமுறை மூலமாக நாட்டின் அறுதிப் பெரும்பான்மை மக்களுக்கான விடியலைப் பெற்றுவிட முடியும் என நம்ப வைத்திருப்பது என்பது ஒரு புறம்!….

‘அரசியல் சட்ட அமைப்பு முறை’ சர்வ வல்லமை பொருந்திய மக்களுக்கான மிக முக்கிய ‘ஒரே நிவாரணி’ என்ற ஒரு கருத்துத் திணிப்பு என்பது அனைவராலும் போற்றப்படக்கூடிய நிலையில் வியாபித் திருப்பது என்பது மறுபுறம்!….

சரி! பல்வேறு அரசியல் கட்சிகள் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ள மேற்கண்ட இரண்டு வடிவங்களையும் மக்கள் வேறுவழியின்றி பயன்படுத்தி வருகின்றனர்! ஆனால், அதிலாவது குறைந்தபட்ச நேர்மை – நாணயமான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தக் கூடிய, சூழல் நீடித்திருக்கிறதா என்பது தான் இன்றைய பிரதான கேள்வி.

பாஜக ஆட்சிக்கு வந்த காலம் முதல் தேர்தல் ஆணையம், நீதித்துறை, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, ஒன்றிய உளவுத்துறை – இராணுவம் – காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் காவிமயமாக்கப்பட்டு விட்டன! இதற்கு உந்து விசையாக இருப்பது ‘நச்சு சக்தி’-யான ஆர் எஸ் எஸ் – தான் என்பது வெள்ளிடை மலை!

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி முறை, ஒரே ரேசன் கார்டு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்… இப்படி எண்ணற்ற ஒரே…ஒரே… என்ற வடிவங்களை நாடு முழுமையும் திணித்து ஒற்றைச் சர்வாதிகாரத்தை ‘நாசிச ஹிட்லர்’ போல், ‘போலி ஜனநாயக மோசடித் தேர்தலின்’ மூலமாகவும்; இருக்கக்கூடிய ‘போலி அரசியல் அமைப்புச் சட்ட முறை’ போதாது என்று, மக்களுக்கு எதிரான எண்ணற்ற அடக்குமுறைச் சட்டங்களை திருத்தி அமைத்து நிறைவேற்றிக் கொண்டிருப்பதன் மூலமாகவும், பாஜக – ஆர் எஸ் எஸ் கும்பல் நான்கு கால் பாய்ச்சலில் வெறியாட்டம் போடுவதையும் நாம் அறிவோம்!

ஏற்கனவே பல்வேறு தேர்தல்களிலும் பாஜக அரசு எண்ணற்ற தேர்தல் மோசடிகளை – தில்லுமுல்லுகளை அரங்கேற்றியதன் வாயிலாகவே அக்கும்பல் தனது ஆட்சி அதிகாரத்தைத் தொடர்ந்து அபகரித்துக் கொண்டுள்ளது என்று சொன்னோம்!

EVM வாக்கு இயந்திர மோசடி; VVPAT ஒப்புகைச் சீட்டுகளை எண்ணிட மறுக்கும் மோசடி; Control Machine மோசடி மற்றும் எண்ணற்ற தில்லுமுல்லுகளை நடத்தியே பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதற்கு அண்மை உதாரணம் மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தல். அத்தேர்தலில் எண்ணற்ற பல மோசடிகளைச் செய்து பாஜக ‘வெற்றிக்கனி’ யை அபகரித்துச் சென்றுள்ளது. ‘ஒரு சோற்று பானைக்கு – ஒரு சோறு பதம்’ என்பது போல மகராட்டிரா மாநிலம் கன்னட் (Kannad) சட்டமன்றத் தொகுதியில், டால்னர் (Talner) என்ற கிராம வாக்குச்சாவடியில் நடந்துள்ள தேர்தல் மோசடி ஒரு சிறு உதாரணம்.

அக்கிராமத்தில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கையே 396 தான்!

பதிவான வாக்குகளோ 312 தான். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது கட்சி வாரியாக பெறப்பட்ட வாக்குகளை கீழே காண்பீர்!

1)சிவசேனா (UBT):-194

2)சிவசேனா (ஷிண்டே):-326

3) சுயேட்சை:-104

ஆக மொத்த வாக்குகள்:-

194+326+104=624

ஆக கிராமத்தில் மொத்த வாக்குகளே 396 தான்! வாக்குப்பதிவானதோ 312 தான்!

அப்படி என்றால் வாக்கு எண்ணிக்கையின் போது 624 வாக்குகளாக உயர்ந்தது எப்படி? (கிடைக்கப்பெற்ற ஆங்கில ஆவணப் புள்ளி விவரங்களைக் கீழே காண்க)

இதுதான் மராட்டிய மாநிலத்தின் ‘மோடி மஸ்தான்’ மேஜிக் மோசடி வேலை என்பது பட்டவர்த்தனமாக அம்பலமாகியுள்ளது. ஒரு உதாரணத்தை மாநிலம் முழுமைக்கும் பொருத்திப் பார்க்கலாம்!

ஆர்.எஸ்.எஸ். (RSS) இயக்கம் துவங்கி 2025-வுடன் நூற்றாண்டை நிறைவு செய்கிறது. ஆர்எஸ்எஸ் இன் தலைமையகம் மகராட்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் என்பதனையும் நாம் அறிவோம்.

இக்காலச் சூழலில் மகராட்டிரா மாநிலம் ஆர் எஸ் எஸ் -ன் – பாஜக-வின் கோட்டை என்பதனை எந்த வகையிலேனும் பிரகடனப் படுத்திக் கொள்ள வேண்டும்; தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் -ன் பிதாமகன் மோகன் பகவத் கொடுத்த செயல்திட்டம்! அத்தகைய செயல் திட்டத்தை மோசடிகள் பல செய்து தில்லு முல்லுகள் பல செய்து ஆட்சி அதிகாரத்தை இந்தக் காவி(லி) ப்படை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பின்னர் எப்படி எதிர் அணியினர் சில தொகுதிகளைக் கைப்பற்றினர் என நாணயமாக வினா எழுப்புவோர் புரிந்து கொள்ள வேண்டியது யாதெனில், எந்த ஒரு பாசிச மோசடிப் பேர்வழிகளும் நூறு சதவீதம் தானே வெற்றி பெற்றுக் கொண்டதாக அறிவித்துக் கொண்டால் நிர்வாணமாக அம்பலப்பட்டுப் போய் நிற்கக்கூடிய சூழல் வெளியில் தெரிந்துவிடும் என்பதாலேயே இப்படி ஒரு ‘ஜனநாயக மாய வித்தை’ ஏற்பாட்டைச் செய்து கொள்கிறார்கள் என்பதைச் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இப்போது நடப்பது போல் இந்தியா முழுமைக்கும் எண்ணற்ற தொகுதிகளில் இதே போல பதிவான வாக்குகளை விட பல்லாயிரம் வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டதும், குறைவாக எண்ணப்பட்டதும் ‘வரலாறாக’ தேங்கிவிட்டது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும், உச்சநீதிமன்றத்திலும் பற்பலர் முறையீடு செய்து பார்த்தும் எதுவுமே நடக்கவில்லை என்பதை நாம் அறிவோம். உச்ச நீதிமன்ற சந்திர சூட் போன்ற தலைமை நீதிபதி உட்பட பல்வேறு நீதிபதிகளும் இவிஎம் வாக்கு எந்திரத்தை நீதிமன்றத்திற்கே தேர்தல் ஆணையத்தை கொண்டு வரச் செய்து செய்முறை பயிற்சியின் மூலமாக தவறே நடக்காது என்றதொரு போலி நாடகத்தை உருவாக்கி அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு தொடுத்த அவர்களின் கோரிக்கைகளை ஒட்டடையை ஒதுக்கித் தள்ளுவது போல் நிராகரித்து விட்டார்கள்.

அதன் பின்னர் பாஜக அரசுக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டத்தை நடத்திய பஞ்சாப் – அரியானா விவசாயிகள் போராட்டம் கனன்று நீடித்துக் கொண்டிருந்த நேரத்தில் நடந்த அரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக உறுதியாக மண்ணைக் கவ்வும் என்று நாடு முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூழலில் அத்தேர்தலிலும் பாஜக மோசடிகளை – தில்லு முல்லைகளை அரங்கேற்றியே வெற்றியை ஈட்டியது. அங்கே நிகழ்ந்த மோசடிகளை சில ஆதாரப்பூர்வமான தரவுகளுடன் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்கின்ற பொழுது, இந்திய தேர்தல் அதிகாரி இப்படிச் சொன்னார்:

‘ தேர்தலில் எந்த மோசடியும் நடைபெறவில்லை; தில்லுமுல்லுகள் எதுவும் நடைபெறவில்லை; காங்கிரஸ் கட்சிக்கு இப்படி குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பதே வாடிக்கையாகப் போய்விட்டது’ என்று வாய்க்கொழுப்பெடுத்துப் பேசி பாஜகவின் ஊதுகுழல் தான் தேர்தல் ஆணையம் என்பதை தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டு விட்டது.

அண்மையில் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.ஏ.பால் தாக்கல் செய்திருந்த மனுவில் கீழ்க்கண்டவாறு கூறிருந்தார்.

“தற்போது தேர்தலில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் நடத்த முடியும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். அதேபோல சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 180 நாடுகள் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்துகின்றன. தேர்தல் நேரத்தில் ரூபாய் 9000 கோடியை இந்திய தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. அதேபோன்று வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த 18 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே மின்னணு வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தி தேர்தல் நடத்தும் முறைக்கு மாற்றாக வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த அனுமதித்து உத்தரவிட வேண்டும்” என்பது வழக்கறிஞரின் வாதம்.

இந்த வழக்கு 26-11-2024 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கீழ்க்கண்டவாறு உத்தரவிட்டுள்ளனர்.

“இது போன்ற மனுவை தாக்கல் செய்யும் எண்ணம் மனுதாரருக்கு எவ்வாறு வந்தது என்பது புரியவில்லை; இந்த மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை. குறிப்பாக வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகனும் தாங்கள் தேர்தலில் தோல்வியடையும் போது மட்டுமே சந்தேகத்தைக் கிளப்புவார்கள். எனவே இந்த கோரிக்கையுடனான மனுவை ஏற்க முடியாது” என்று அறிவித்து மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்!

ஆனால் உண்மை என்னவென்றால் வாக்கு இயந்திர மோசடிகள் மற்றும் தில்லுமுல்லுகள் குறித்து ஜெகன்மோகன் ரெட்டியும் சந்திரபாபு நாயுடுவும் மட்டும் குறை கூறவில்லை. எண்ணற்ற இயக்கங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தான் கடந்த காலங்களில் இது குறித்து குற்றச்சாட்டுகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர். ஊறுகாய் மாமி நிர்மலா சீதாராமனின் கணவர் பர்கல பிரபாகரன் உட்பட சில தனி நபர்களும் தன்னார்வலர்களும்கூட இக்கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி மோசடிகளின் ஆதாரங்களுக்கு புள்ளி விவரங்களுடன் எண்ணற்ற ஊடகங்களில் அம்பலப்படுத்தினர் என்பதுவும், இவை எவற்றையுமே தேர்தல் ஆணையமோ, நீதித்துறையோ கண்டுகொள்ள முன்வரவே இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.

ஆக, உச்ச நீதிமன்றத்தில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த கோரி வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் கே.ஏ.பால்-ன் மனுவின் மீது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் லட்சணம் எப்படி அமைந்துள்ளது என்பதைப் பார்த்தீர்களா? அதனால் தான் கூறுகிறோம்… நாட்டில் உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் காவிமயமாகிவிட்ட சூழலில் நியாயமான தீர்ப்புகளையோ, நிவாரணங்களையோ இக்கட்டமைப்பில் பெறவே முடியாது. காவிக் கூட்டத்திற்கு கார்ப்பரேட் முதலாளிகளான அதானி – அம்பானி வகையறாக்கள் பல லட்சம் கோடிகளை வாரி இறைக்கத் தயாராக தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்ற பொழுது, மோடி மஸ்தான் வேலையும் தங்கு தடையின்றி பயணப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். ஆக இதற்கான – தீர்விற்கான வழிமுறைகளை நடைமுறையில் உள்ள சட்டகத்துக்குள் இருந்து விடை தேட முடியாது.


படிக்க: பாஜகவுக்கு 8 ஓட்டு! அம்மணமாக நிற்கும் தேர்தல் ஆணையம்!


வீதிப் போராட்டங்களே இருக்கக்கூடிய குறைந்தபட்ச போலி ஜனநாயக நடைமுறைகளையும், போலி அரசியல் சட்ட அமைப்பு முறைகளையும் கூடப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதே நிதர்சனமான உண்மை! இந்த அவலத்திற்கே இவ்வளவு பாடுபட வேண்டி உள்ளது என்பதனையும் சமூக அரசியலை விஞ்ஞான கண்ணோட்டத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டி உள்ளது.

‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பதற்கிணங்க, காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி தல்காத்ரா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மிக அண்மையில் பேசும்போது கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

“ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி அஞ்சுகிறார். ஏனெனில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டால் அனைவரும் தங்கள் பங்கைக் கோர தொடங்குவார்கள் என்று அவர் பயப்படுகிறார். நீங்கள் உண்மையில் நாட்டில் ஒற்றுமையை விரும்பினால் நீங்கள் வெறுப்பை பரப்புவதை நிறுத்த வேண்டும். எமக்கு ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேண்டாம்; வாக்குச்சீட்டு தான் வேண்டும்’; மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்புவதற்காக காங்கிரசார் இந்திய அளவில் ஒற்றுமை யாத்திரை நடத்த வேண்டும். பாஜகவிடம் கூட்டாட்சித் தன்மை இல்லை. கோடீஸ்வர தொழிலதிபர் அதானியின் செல்வம் ஆபத்தில் இருப்பதால் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் அவருக்கு நிறைய தொடர்புள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறி அவர்களை ஒதுக்கித் தள்ள வேண்டும். தேர்தல் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால் அனைத்து ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாக்குகளும் வீணாகப் போகிறது என்று நான் உறுதியாக கூறுவேன். அவர்கள் அனைவரும் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க வேண்டும். அவர்கள்(பாஜக) மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தங்களிடம் வைத்துக் கொள்ளட்டும். ‘எங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேண்டாம். வாக்குச்சீட்டில் வாக்களிக்க வேண்டும்.’ அப்போதுதான் அவர்களின் நிலை என்ன? எங்கு நிற்கிறது? என்பது அவர்களுக்குத் தெரியும். இது பற்றி மற்ற அரசியல் கட்சிகளிடம் நாங்கள் பேசுவோம். இதற்காக ராகுல் காந்தி ஒரு இயக்கத்தை தொடங்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

இப்படிப்பட்ட கோரிக்கைகள் இதற்கு முன்னர் பலராலும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளன. தேர்தல் மோசடிகள் புள்ளி விவரங்களோடு பல்வேறு தருணங்களில் அம்பலப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்த ஒரு கட்சியும் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. போகட்டும் இப்பொழுதாவது காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே இந்த அளவில் அறிக்கை வெளியிட்டிருப்பதை ஓரளவு வரவேற்கலாம்.

ஆனால் பாதயாத்திரை போன்றவற்றால் எவ்விதப் பலனும் ஏற்பட்டு விடப் போவதில்லை. மாறாக இந்தியா கூட்டணியும் இன்ன பிற ஜனநாயக சக்திகளும் புரட்சிகர இயக்கங்களும் கூட ஒன்றிணைந்து வெகு மக்களைத் திரட்டி வீதிகளில் இறங்கி பெரும் போராட்டங்களை நடத்தி தியாகங்கள் பல புரிவதன் மூலமாகவே பாசிஸ்டுகளின் ஆட்சியை வீழ்த்துவதோடு, இந்த சீர்கெட்டுப்போன ‘போலி ஜனநாயக’முறைகளை அகற்றி அதனிடத்தில் உண்மையிலேயே மக்களின் ஜனநாயகத்தை நிலைநாட்டக்கூடிய தேர்தல் முறையை உருவாக்க முடியும்! கார்ப்பரேட் – காவிப் பாசிசத்தை துடைத்தெறிய முடியும் என்பதே நமது அபிப்பிராயம்!

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here