பாஜகவின் தேர்தல் அறிக்கையை மக்கள் எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கிராமப்புறத்தில் உள்ள எளிய மக்களும் கூட “ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ன ஆனது? விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆகிவிட்டதா? மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போட்டார்களா? வெளிநாடுகளில் பதுக்கி உள்ள கருப்பு பணத்தை மீட்கக்கூட வேண்டாம், குறைந்தபட்சம், வெளிநாட்டு வங்கிகளில் எந்தெந்த முதலாளிகள் எவ்வளவு கருப்பு பணம் வைத்திருக்கிறார்கள் என்ற பட்டியலையாவது வெளியிட்டார்களா?” என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
எனவே நாம் இது போன்ற எளிய கேள்விகளை தவிர்த்து விடுவோம்.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசயத்தை நவம்பர் 2023 ல் சத்தீஸ்கரில் நடந்த தேர்தலின் போது ஒரு பேரணியில், “இந்தியாவின் 80 கோடி ஏழைகளின் தட்டில் உணவு இருப்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம் 2028 வரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்” என்று பிரதமர் மோடி ஏற்கனவே பேசி இருந்தார்.
மோடியின் மேற்கண்ட கூற்றையும், பாஜகவினரின் தேர்தல் அறிக்கையையும், பார்க்கும் பொழுது இரண்டு விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன.
இந்தியாவில் 80 கோடி மக்கள் சோற்றுக்கு வழி இன்றி அரசின் இலவச ரேசனை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர் என்பது எந்த அளவிற்கு உண்மையோ,
அதே அளவிற்கு, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2028ஆம் ஆண்டு வரையிலும் கூட இந்த 80 கோடி மக்கள் ஏழ்மை நிலையில் இருந்து மீட்கப்பட மாட்டார்கள் என்பதும் யாரும் மறுக்க முடியாத உண்மை தான்.
எப்படி நம்மால் இப்படி ஆணித்தரமாக கூற முடிகிறது?
பாஜக- வின் கடந்த தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்ற வில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் 80 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாக எந்த வாக்குறுதியையும் பாஜக வழங்கவில்லை.
அதிலும் குறிப்பாக மத்திய அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள 30 லட்சம் இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து நிரப்புவோம் என்று கூட வாக்குறுதி அளிக்கவில்லை.
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை என்பது எவ்வளவு கோரமாக உள்ளது தெரியுமா? இந்தியாவில் உள்ள இளைஞர்களில் 80 சதவீதம் பேர் வேலை வாய்ப்பின்றி இருக்கிறார்கள். இந்தியாவின் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி., ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களுக்கே வேலை கிடைக்கவில்லை.
இதையும் படியுங்கள்: காவிக்கூடங்களாகும் கல்விக்கூடங்கள்!
உதாரணமாக, சென்னையில் உள்ள – ஐஐடி மெட்ராஸ் – கல்வி நிறுவனத்தில் பயின்ற 45 சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இது போன்ற தகவல் வெளிவந்து நாடுமுழுதும் படித்துக் கொண்டிருக்கிற மாணவர்கள், இளைஞர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த லட்சணத்தில் நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்குவதைப் பற்றி பாஜகவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது நாட்டு மக்களின் பிரச்சனையில் எவ்வளவு அக்கறையுடன் இவர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
“இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவோம்” என்று தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே உலகில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியாவை வளர்த்து விட்டோம், வளர்த்து விட்டோம் என்று கூவிக் கொண்டிருக்கிறார்கள்.
பொருளாதாரம் வளர்ந்தது என்றால் அதன் பலன் இந்திய மக்களுக்குச் சென்றதா? இல்லையே அம்பானி அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு தானேசென்றது?
இந்திய மக்கள் தொகையில் வெறும் 5% ஆக உள்ள பணக்காரர்கள் இந்தியாவில் உள்ள செல்வத்தில் 60%க்கும் அதிகமானதைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் 50% இந்தியர்கள் இந்தியாவில் உள்ள செல்வத்தில் வெறும் 3% செல்வத்தை மட்டுமே பெற்றிருக்கிறார்கள் என்ற விபரத்தை 2023 ஆம் ஆண்டு ஆக்ஸ்பாம் (அமைப்பு) இந்தியாவின் சமத்துவமின்மை குறித்த தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: தேசத்தின் சொத்துக்களை விற்கும் தறுதலையின் கவுரவ பெயர் பிரதமர்!
அத்துடன் நிற்காமல் 2012 மற்றும் 2021 க்கு இடையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட செல்வத்தில் 40 சதவீதமானது, மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதமானவர்களுக்கு (பெரும் பணக்காரர்களுக்கு ) சென்றுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 2014ல் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலின்படி , 2024ல் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 116 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதன் படி பார்க்கப் போனால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்தாலும் அதன் பலன் அம்பானி அதானிகளுக்குத்தான் செல்லுமே அல்லாமல் சாதாரண மக்களுக்கு வரவே வராது என்பதுதான் உண்மை.
அடுத்து கல்வியை பற்றிய இவர்களின் வாய்ச்சவடாலை பார்ப்போம்.
10 வருடமாக ஆட்சியில் இருக்கிறார்கள். ஆனால் வடமாநிலங்களில் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியாவதை இவர்களால் தடுக்கவே முடியவில்லை. இது மிகமிகக் கேவலமான ஒன்று. இதனால் மக்கள் கொதிப்படைந்து போயிருக்கிறார்கள்.
இந்தக் கேவலமான நிலையில் தான் பாஜக தமது தேர்தல் அறிக்கையில் (தேர்தலுக்கு முன்பு) “வினாத்தாள் கசிவை தடுக்க சட்டம் இயற்றுவோம்” என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.
(வினாத்தாள் கசியாமல்) ஒழுங்காக தேர்வையே நடத்த முடியாத இந்த பிஜேபி தனது தேர்தல் அறிக்கையில் “தரமான கல்வி, புதிய உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவோம்” என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ‘செயல் திறன் மிக்க’ ‘மக்கள் நலனில் அக்கறை கொண்ட’ பாசிச பிஜேபி தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளை பற்றி எல்லாம் நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
செத்துப்போனவர்களுக்கெல்லாம் வைத்தியம் பார்த்ததாக ஊழல் செய்து கொள்ளையடித்த பிஜேபி-னர் “ஏழை குடும்பங்களுக்கு ₹5 லட்சம் வரை இலவச மற்றும் தரமான மருத்துவ சேவைகளை தொடர்ந்து வழங்குவோம்”…. என்று கூறி இருக்கிறார்கள். (இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பிணத்திற்கு வைத்தியம் பார்க்கும் நடைமுறையை தொடர்வார்கள்)
இதையும் படியுங்கள்: ஆசியாவில்: சாவை எதிர்நோக்கியிருக்கும் குழந்தைகள்! | பாகிஸ்தான்
ஆண்களுக்கு பிரசவம் பார்த்ததாக பொய் கணக்கெழுதி ஊழல் செய்த இந்த பிஜேபி-யினர் “கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை அகற்ற ஒரு மையப்படுத்தப்பட்ட முயற்சியைத் தொடங்குவோம்”… என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். (மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால், ஆண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சிகிச்சை அளித்ததாக கணக்கு காட்டி ஊழல் செய்வார்கள் )
“சமச்சீர் பிராந்திய வளர்ச்சி, வடகிழக்கில் அமைதியைப் பேணுதல்”…. என்று அறிக்கையில் முழங்குகிறார்கள்( ஆனால் மணிப்பூர் மக்களை பிரித்து மோத விட்டு, அந்த வன்முறை நெருப்பில் குளிர் காய்பவர்களே இவர்கள் தான்)
இப்படி இவர்களின் தேர்தல் அறிக்கையையும், இவர்களது கடந்த கால நடைமுறையையும், ஒப்பிட்டு கூறிக் கொண்டே போகலாம்.
இந்த நிலையில், ஏழை வீடுகளுக்கு இலவச மின்சாரம்…. மூன்று கோடி கிராமப்புற பெண்களை “லக்பதி தீதிகள்” (லட்சாதிபதி)ஆக்குவதற்கான முயற்சிகள்….
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்துதல்….
என்று இவர்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.
இவர்களின் கடந்த கால நடைமுறையை மனதில் கொண்டு இந்த வாக்குறுதிகளை படிப்பவர்கள் கால் தூசி அளவுக்குக் கூட இவர்களை மதிக்க மாட்டார்கள்.
மீண்டும் ஆட்சி அமைத்தால் மக்களுக்கான தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நினைப்பே இல்லாத பாசிச பிஜேபி யினர், கீழ்க்கண்ட வாக்குறுதிகளை மட்டும் கட்டாயம் நிறைவேற்றிய ஆக வேண்டும் என்று துடிப்பார்கள் என்பது மட்டும் உண்மை.
குடியுரிமை (திருத்தம்) சட்டத்தை (CAA) செயல்படுத்துதல் …. பொது சிவில் சட்டத்தை கொண்டு வருதல் ….”ஒரே நாடு, ஒரே தேர்தல் ” என்பதை நிஜமாக்குதல்”….
இந்த வாக்குறுதிகள் எதுவும் மக்களுக்கானவை அல்ல. இவைகள் மக்களின் உரிமைகளை, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து கார்ப்பரேட்- காவி பாசிசத்தை நிலை நாட்டுவதற்கானவை.
மக்களே புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் நாட்டு மக்களுக்கு எதிரான பாசிஸ்டுகள்.
—குமரன்