ராஜஸ்தான் மாநிலம் சுரு நகரில் ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பாசிச மோடி

“உங்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். இதுவரை நாம் செய்ததெல்லாம் வெறும் முன்னோட்டம்(trailer) தான். இன்றைய நாட்களில் நாம் பெரிய உணவகங்களுக்கு செல்லும் பொழுது உணவிற்கு முன்பாக சில பசியூக்கிகளை ( appetizers: பசியை தூண்டும் விதமாக இனிப்பு பலகாரம் அல்லது சூப் போன்றவற்றை)நமக்கு பரிமாறுகிறார்கள்… இதுவரை மோடி செய்ததெல்லாம் பசியை தூண்டுவதற்காக பசியூக்கியை கொடுத்ததை போன்றது. இனிமேல்தான் முக்கிய விருந்து(main course ) வர இருக்கிறது. நாம், நமது நாட்டை முன்னேற்றியாக வேண்டும்.” என்று மோடி திருவாய் மலர்ந்திருக்கிறார்.

மோடியின் பேச்சை கேட்ட சங்கிகள் வேண்டுமானால் இவரது பேச்சை நம்பி குதூகலிக்கலாம். ஆனால் பாசிச மோடியின் பேச்சை கேட்ட நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

இனி வரும் காலங்களில் நாட்டு மக்களுக்கு விருந்தளிப்பது இருக்கட்டும் இந்த 10 ஆண்டு ஆட்சியிலேயே

  • கார்ப்பரேட்டுகளின் 14 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்து கார்ப்பரேட்டுகளுக்கு மிகப் பெரும் விருந்தளித்து இருக்கிறார் மோடி.
  • இந்தியாவில் மட்டும் பெரிய முதலாளிகளாக இருந்த அம்பானி, அதானிகளை உலகப் பணக்காரர்கள் ஆகும் அளவிற்கு இந்திய மக்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்க மோடி உதவி உள்ளார்.
  • மேற்கொண்டு யார் யாருக்கெல்லாம் விருந்து வைத்துள்ளார் என்பதை ஓரளவுக்காவது அறிய வேண்டும் எனில் தேர்தல் பத்திரங்களில் பாஜக -வினர் செய்த அயோக்கியத் தனங்களை பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும்.

அடுத்து நாட்டு மக்களின் பசியை மோடி எப்படி தூண்டினார் என்ற கதையை பார்ப்போம்.

இதையும் படியுங்கள்: 

மோடி சொல்வது போல பசியூக்கிகளை (அதாவது இனிப்பு பலகாரம், சூப்பு போன்றவற்றை) ஒருவருக்கு கொடுப்பதன் மூலம் பசியை தூண்ட முடியும். அதேசமயம், ஒருவரை சாப்பிட விடாமல் பட்டினி கிடக்க வைப்பதன் மூலமாகவோ அல்லது அரை வயிறு, கால் வயிறு மட்டுமே சாப்பிடக்கூடிய நிலையில் வைத்திருப்பதன் மூலமாகவோ கூட பசியை தூண்டி விட முடியும் என்பதும் உண்மை.

மோடி இந்த இரண்டு வழிகளிலும் மக்களின் பசியை தூண்டிவிட்டு இருக்கிறார்.

  • மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் தங்களது சொத்துக்களை பல மடங்கு பெருக்கிக் கொண்டது போல, மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இனி வரும் ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்களை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற அகோரப் பசியை பெரும் பணக்காரர்களுக்கு தூண்டிவிட்டுள்ளார் .
  • ஆனால் இந்தியாவில் வாழும் மக்கள் வேலையின்மை காரணமாகவும், செய்யும் வேலைக்கான கூலி விலைவாசி ஏறும் அளவிற்கு உயராதது காரணமாகவும் கடும் பசி – பட்டினியில் தள்ளிவிட்டு ஏழை மக்களின் பசியை கொடூரமாகத் தூண்டியுள்ளார்.

இது மட்டும் இன்றி விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காததால் தொடர்ந்து நட்டமடையும் விவசாயிகள் இந்தியாவில் பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். எம் எஸ் சாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்த விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை வழங்கும் சட்டத்தை இயற்ற மறுத்ததன் மூலம் இப்படி ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற தற்கொலை பசியையும் பாசிச மோடி தூண்டி உள்ளார்.

மோடி இப்படி மக்களின் பசியைத் தூண்டிய கொடுமையையும், கார்ப்பரேட்டுகளுக்கு விருந்து வைத்த அயோக்கியத்தனத்தையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

நாட்டு மக்களின் நிலையிலிருந்து பார்ப்பவர்களுக்கு மோடி பொய் சொல்வதாகத்தான் தோன்றும். ஆனால் மோடி பொய் சொல்லவில்லை உண்மையைத்தான் சொல்கிறார்.

பட்டினியில் தவிக்கும் நாட்டு மக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ள போதிலும் கூட நாடு முன்னேறி இருக்கிறது, நாட்டு மக்களின் வருமானம் உயர்ந்திருக்கிறது என்று மோடி பேசுவதை நாம் கேட்கவில்லையா?

நாட்டின் முன்னேற்றம் – நாட்டின் வளர்ச்சி, மக்களின் முன்னேற்றம் – மக்களின் வளர்ச்சி என்று மோடி சொல்வதெல்லாம் நாட்டு மக்களை மனதில் வைத்துக் கொண்டு அல்ல; பெரும் பணக்காரர்களை மனதில் வைத்துக் கொண்டுதான் அப்படி சொல்கிறார்.

இந்த உண்மையை மனதில் கொண்டு பார்க்கும் பொழுது இத்தனை நாள் நடைபெற்றுள்ள மோடியின் ஆட்சி என்பது வெறும் முன்னோட்டம் (trailer)தான். இனிமேல் தான் பெரும் விருந்து (main course) வர இருக்கிறது என்று மோடி சொன்னதை கண்டு அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகள் குதூகலத்தில் இருப்பார்கள் என்பது மட்டும் உண்மை.

மோடி காட்டிய ட்ரெய்லரே (trailer) இந்த அளவிற்கு கொடூரமாக இருக்கிறது என்றால் அடுத்து மோடி தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தால் மெயின் பிக்சர் (main course) எவ்வளவு கர்ணகொடூரமாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது.

மோடி தன்னை மாபெரும் அறிவாளியாகவும் மக்களை முட்டாள்களாகவும்கருதுபவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

மக்கள் அனைவரையும் மீண்டும் முட்டாள்கள் ஆக்கிவிட முடியும் என்ற மாபெரும் நம்பிக்கையில் , “சுரு “பொதுக்கூட்டத்தில் மோடி இப்படி பொளந்து கட்டி இருக்கிறார்.

ஆனால், மோடியின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தற்பொழுது விழிப்படைந்து வருகின்றனர் என்பதுதான் உண்மை. அந்த உண்மை தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டு பாசிச பிஜேபி தோற்கடிக்கப்பட வேண்டும் என்றால் ,மக்களின் வாக்குகள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக விழவேண்டும் என்பது மட்டும் போதாது. பாசிச பிஜேபி -யினர் தேர்தல்களில் தில்லுமுல்லுகள் செய்வதையும் மக்கள் விழிப்போடு இருந்து தடுத்தாக வேண்டும்.

குமரன்

செய்தி ஆதாரம்: Times of India

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here