பாஜக-விடம் எதிர்பார்க்கலாமா?

அதிகரித்து வரும் ஓமைக்ரான் தொற்று அபாயமும், பொருளாதார நெறிகளை புரிந்துகொள்ளாத அரசுகளின் செயல்பாடுகளும் உலகளவில் பொருளாதார மீட்சியை சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 90 டாலர் வரை உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் 7விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. எதனால் பண வீக்கம் உயர்ந்துள்ளது என்பது குறித்து ஆங்காங்கே விவாதங்கள் நடைபெறுகின்றன. பணப் புழக்கத்தை அதிகரிப்பது பணவீக்கத்தை உயர்த்தும் போக்கை ஏற்படுத்தும் என்றபோதும் அது மட்டுமே பண வீக்கம் உயர்ந்ததற்கான காரணமல்ல. வழங்கல் பக்கத்தில் விநியோக சங்கிலிகளில் நேர்ந்த பாதிப்புகள் சரக்குகளின் விலையேற்றத்தை ஊக்குவித்ததுடன் அதில் ஊக வணிகத்தையும் அதிகரித்துள்ளதால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ஊக நாணயமான பிட்காயின் மதிப்பு 40 விழுக்காட்டிற்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கியான “ஃபெடரல் ரிசர்வ்” பணப்புழக்கத்தைக் குறைக்கும் விதமாக நிதிப்பத்திரங்கள் வாங்குவதைக் குறைத்துள்ளது, மார்ச் மாதத்தில் வட்டி வீதத்தை உயர்த்தப் போவதாகவும் அறிவித்துள்ளது. இதனால் இந்தியா போன்ற வளரும் சந்தைகளிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கும் போக்கு அதிகரித்துள்ளதால் பெருமளவு அந்நிய முதலீடுகள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில், கொரோனா கொள்ளை நோய் தாக்கத்தினால் முடங்கிய பொருளாதாரத்திற்கு தூண்டுதல் அளிப்பதற்காக அமெரிக்க மத்திய வங்கி வட்டிவீதத்தை சுழியத்திற்குக் குறைத்தது. ஆனால் அது உண்மையான பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கவில்லை நிதிமய நடவடிக்கைகளையும், பங்குச்சந்தைகளையுமே உயர்த்தியது.

இந்தியப் பங்குச்சந்தை நிஃப்டி குறியீடு 52 வாரங்களில் உயர்ந்த மதிப்பாக 18604.45ஐ அடைந்தது, 27 ஜனவரி ல் 16898.80ஆகக் குறைந்துள்ளது. ஆன போதும் 10 விழுக்காடு முதல்திருத்தம் பெற பங்குச்சந்தை 16,744.005க்கு குறையவேண்டும். 52 வாரங்களில் குறைந்த மதிப்பு 14151.40.

2021 டிசம்பரில் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 2020 டிசம்பரில் 38.7 மில்லியனாக இருந்த மொத்த வேலையற்றோர் எண்ணிக்கை 34 விழுக்காடு உயர்ந்து 52 மில்லியனாக அதிகரித்துள்ளது, இந்தியாவில் நகர்புறங்களில் வேலையின்மை நவம்பரில் 8.21 விழுக்காடாக இருந்தது டிசம்பர் மாதத்தில் 9.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கிராமப்புற வேலையின்மை கடந்த நவம்பரில் 6.44 சதவீதமாக இருந்த நிலையில், டிசம்பரில் 7.28 சதவீதமாக அதிகரித்துள்ளது. காலமுறை உழைப்புச் சக்தி கணக்கெடுப்பு 2019-20 இன் படி, கிட்டத்தட்ட 3.2 கோடி மக்கள் விவசாயத் தொழிலுக்கு இடம்பெயர்ந்துள்ளனர், அதாவது விவசாயத்தில் தொழிலாளர்களின் பங்கு 3% உயர்ந்துள்ளது.

“பிரைஸ்” என்ற மும்பையைத் தளமாகக் கொண்ட குழுவால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், 2015-16லிருந்து 2020-21-வரை 5 ஆண்டுகளில் இந்தியாவின் மிக ஏழ்மையான 20 விழுக்காடு குடும்பங்களின் வருமானம் 53% சரிந்துள்ளதாகவும், கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தினரின் குடும்ப வருமானம் இதே காலகட்டத்தில் 39 விழுக்காடு சரிந்துள்ளதாகவும், நடுத்தர வர்க்க மக்களின் (middle class) ஆண்டு வருமானம் 9 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதே ஐந்தாண்டு காலக்கட்டத்தில் உயர் நடுத்தர வர்க்க குடும்பங்களின் வருமானம் 7 விழுக்காடும், 20% பணக்காரர்களின் ஆண்டு குடும்ப வருமானம் 39% வளர்ச்சி பெற்றுள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

1995 ஆண்டில் 20 விழுக்காடு பணக்காரர்கள் மொத்த குடும்ப வருமானத்தில் 50.2 விழுக்காட்டை பெற்றிருந்தனர். அது 2021-ல் 56.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது , இதற்கு நேர்மாறாக, 20 விழுக்காடு ஏழை மக்களின் மொத்த குடும்ப வருமானத்தின் பங்கு 5.9 விழுக்காட்டில் இருந்து 3.3 விழுக்காடாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, 2021-ல், கொரோனா தாக்குதலுக்குப் பிறகு இந்த 20 விழுக்காடு ஏழை மக்கள் 2016-ல் பெற்ற வருமானத்தில் பாதி அளவு மட்டுமே தற்போது பெறமுடிவதாகவும் இந்த ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. 2016-ம் ஆண்டில் மிகவும் ஏழையான 20 விழுக்காட்டினரில், 90 விழுக்காட்டினர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 2021-ல் இந்த எண்ணிக்கை 70 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதேநேரம் நகர்ப்புறங்களில் வசித்து வந்த மிக ஏழை மக்களின் பங்கு 2016-ல் 10 விழுக்காடாக இருந்தது 2021-ல் 30 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே வருகின்றன. இந்தியா விடுதலை அடைந்த 75ஆம் ஆண்டுக்கான இலக்காக புதிய பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கலாம், புதிய வேலைவாய்ப்புத் திட்டங்களை அறிவிக்கலாம்.

ஆனால் சமூக விடுதலையின் பொருளையே கேளிக்குள்ளாக்கும் விதத்தில் விடுதலை அடைந்ததன் 75 வது ஆண்டை முன்னிட்டு 75 வாரங்களில் 75 ‘யூனிகார்ன்’ நிறுவனங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று இந்திய தொழில்துறைக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கும் ஈவுத்தொகையின் பங்கு 2009-10 இல் அவர்களின் நிகர லாபத்தில் 36% இலிருந்து 2020-21 இல் 77% ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பகுதி அவற்றின் முக்கிய பங்குதாரரான மத்திய அரசைச் சேரும். பொதுத்துறை நிறுவனங்கள் திட்டங்களுக்கான நிதியை வெளிநாட்டுக்கடனின் மூலம் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ரயில்வேத் துறையில் அதிகரித்து வரும் தனியார்மயம் காரணமாக ரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணமாக பயணிகளின் பயணச் சீட்டுக் கட்டணத்தில் ரூ.10 முதல் ரூ.50 வரை வசூலிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் தொலைதூர ரயில் பயணங்களுக்கான கட்டணம் உயரும்.

பாஜக அரசு ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமத்திற்கு கிட்டத்தட்ட இலவசமாக ஒப்படைத்ததுடன் ஏர் இந்தியாவின் ரூ.61,000 கோடி மதிப்பு கடனையும் அடைத்துள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை வளரவிடாமல் கழுத்தறுத்து ஜியோவை வளர்த்தெடுத்த பாஜக இப்பொழுது வோடபோனைக் காக்க பங்குதாரராக மாறியுள்ளது.

வோடபோன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம் கோடி கடன்களில் வட்டித் தொகையான ₹16,000 கோடியை அரசுப் பங்குகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு வோடபோன் ஐடியாவின் 35.8% பங்குகளை வைத்திருக்கும், அதே நேரத்தில் வோடபோன் குழுமத்தின் பங்கு 44.39% இலிருந்து 28.5% ஆகவும், ஆதித்யா பிர்லா குழுமத்தின் உரிமையானது 27.66% இல் இருந்து 17.8% ஆகவும் குறையும். ஜியோ நிறுவனம் நிரந்தர இணைப்பு மூலமான பிராட்பேண்ட் சேவை அளிப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. தற்போது கூகுள் ஏர்டெல் நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நீண்டகால ஒப்பந்தமாக ரூ.7,500 கோடியை (1 பில்லியன் டாலர்) முதலீடு செய்துள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் அமைப்பான சககர் பாரதி பிரதான் மந்திரி மானியத்துடன் கூடிய வீட்டுக்கடன் திட்டத்தின் கீழ் வீட்டுக்கடன் வழங்குவது, சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ் வைப்புத்தொகை திட்டம் அளித்தல் போன்ற பல செயல்பாடுகள் கூட்டுறவு வங்கிகள் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. மத்திய அரசின் திட்டங்களில் பங்குபெற அனுமதிப்பதிலிருந்து வரிவிதிப்பில், வணிக வங்கிகளுடன் இணையாக சமநிலையை கூட்டுறவு வங்கிகள் பெறுவதை உறுதிசெய்யவேண்டும் என அரசுக்கு, நிதிநிலை அறிக்கைக்கு முந்தைய கோரிக்கைகளை அளித்துள்ளன.

நிட்டி ஆயோக் முன்னுரிமைத் துறை கடனில் மின்சார வாகனங்களுக்கான கடனையும் சேர்க்குமாறு முன்மொழிந்துள்ளது. இது பிற முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் அளவைக் குறைக்காது இருக்கவேண்டியது அவசியம். சிறு குறு மத்திய நிறுவனங்களின் துறையில் அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார். உள்நாட்டில் முன்னுரிமைத்துறைக் கடன் மூலம் மலிவுக்கடனைப் பெறச் செய்யாது வெளிநாட்டு நிதியை சார்ந்து இயங்கச் சொல்வது சரியான வழிமுறையாகாது.

மத்திய வங்கியின் தரவுகளின் படி கடந்த 5 ஆண்டுகளில் மீட்கப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு தொகையை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. இந்தியாவில் உள்ள வணிக வங்கிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.9.54-லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. கடந்த ஐந்தாண்டுகளில் வங்கிகள் தள்ளுபடி செய்த தொகை, அந்தக் காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகம். பொதுத்துறை வங்கிகள் 5 ஆண்டுகளில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு தள்ளுபடி செய்துள்ளன, இது 2014 முதல் அரசு அளித்த மூலதனத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

மத்திய வங்கியின் அறிக்கை, 2011ஆம் நிதியாண்டிலிருந்து வழங்கப்படும் மொத்தக்கடனில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு குறைந்து வருவதையும், அதே சமயம் தனியார் வங்கிகளின் பங்கு உயர்ந்து வருவதையும் குறிப்பிட்டுள்ளது. மொத்தக் கடன்களில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு 2016 இல் தோராயமாக 70.84% ஆக இருந்து 2021 இல் 58.68% ஆகக் குறைந்துள்ளது, அதே நேரத்தில் தனியார் வங்கிகளின் பங்கு 2016 இல் 24.56% இலிருந்து 2021 இல் 36.41% ஆக உயர்ந்துள்ளது.

ரகுராம் ராஜன் இந்தியா வெறும் உற்பத்தி அல்லது விவசாயம் சார்ந்து சிந்திப்பதை நிறுத்தி அதற்கு பதிலாக, அதன் பெரிய பலமான சேவைத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது சரியான பரிந்துரையல்ல, உற்பத்தி, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதே நாட்டின் தற்சார்பு பொருளாதாரத்திற்கும், நீடித்த வளர்ச்சிக்கும் துணைவகுக்கும்.

நிதிநிலை அறிக்கைக்கான நிதி ஆதாரங்களை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழி, அரசு நிறுவனங்களின் சில பகுதிகள், உபரி அரசு நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களை விற்பனை செய்யவேண்டும் என்றும் ராஜன் பரிந்துரைத்துள்ளார். பொதுத்துறை சொத்துக்களை விற்பதே பாஜக அரசின் தேர்வுகளில் முதலாவதாக இருக்கும்போது இத்தகைய பரிந்துரை செய்வதற்கே அவசியம் இல்லை. இத்தகையப் போக்கே தொடர்ந்தால் சில ஆண்டுகளில் விற்பதற்கு எதுவும் எஞ்சப்போவதும் இல்லை.
இலக்கு வரம்பிற்குள் நிதிப் பற்றாக்குறையை பராமரிக்கும் முயற்சியில், திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் தங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்துமாறு அமைச்சகங்களையும் துறைகளையும் நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. நிதியாண்டின் கடைசி காலாண்டில் செலவினம் நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில் 33% ஆகவும், மார்ச் மாதச் செலவு, நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில் 15% ஐ விட அதிகமாகவும் இருக்கக்கூடாது எனவும் வரம்பிடப்பட்டுள்ளது.

2021-22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில் 30 விழுக்காடு கூடுதலாக 5.54 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஜல்ஜீவன் திட்டத்துக்கான செலவினமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. 2021-22 நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பர் காலப் பகுதியில் மத்திய அரசின் மூலதன செலவினம் அதற்கு முந்தைய நிதியாண்டில் செய்யப்பட்டதைக் காட்டிலும் 14% மட்டுமே அதிகரித்துள்ளது அதாவது மூலதன செலவுகளில் 54 விழுக்காடு சரிவடைந்துள்ளது.
மத்திய அரசு பெரும்பாலான துறைகளை ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 25% பதிலாக 20 விழுக்காட்டளவில் செலவைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியது. நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பர் காலப்பகுதியில், மத்திய அரசின் மொத்தச் செலவு ரூ. 20.7 லட்சம் கோடி அல்லது முழு ஆண்டு மதிப்பீட்டில் 59.6% ஆக இருந்தது, முந்தைய ஆண்டில் ஏப்ரல்-நவம்பர் காலப்பகுதியில் மொத்த செலவு இலக்கில் 62.7% ஆக இருந்துள்ளது.

2020-21 ஆம் ஆண்டிற்கான சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடு திருத்தப்பட்ட மதிப்பீடுகளிலிருந்து 10 விழுக்காடு சரிவடைந்துள்ளது, கல்விக்கான ஒதுக்கீட்டில் ஆறு விழுக்காடு குறைக்கப்பட்டது மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு 1.5 விழுக்காட்டிலிருந்து 0.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
பொதுக் கணக்கு கட்டுப்பாட்டாளரின் தரவுகளின் படி, மத்திய அரசின் மொத்தச் செலவினம், நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில் 60% ஆகவே இருப்பதாவும், மூலதனச் செலவினங்கள், நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில் 50%க்கும் குறைவாகவே செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கான வெளிநாடு நிதிப்பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட அங்கீகாரத்தைப் புதுப்பிக்க மத்திய அரசு மறுத்துவிட்டதால் 16 மாநிலங்களில் நடைபெற்றுவரும் மனிதநேயம் தொடர்பான பணிகள், உதவிகள் தடைப்பட்டுள்ளன என்று ஆக்ஸ்ஃபாம் இந்தியா தெரிவித்துள்ளது. ஆக்ஸ்ஃபாம் இந்தியா, டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், டெல்லி ஐஐடி, இந்திய மருத்துவக் கூட்டமைப்பு உள்ளிட்ட 6 ஆயிரம் நிறுவனங்கள் வெளிநாடு நிதிப்பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட உரிமத்தைப் புதுப்பிக்கத் தவறியதாகக் கூறி அவற்றின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நிறுத்தி வைத்தது. இதனால், இந்த நிறுவனங்களால் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற முடியவில்லை. பாஜக அரசின் இத்தகைய நிதி ஒடுக்குமுறை செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின் படி கோவிட் கொள்ளை நோய்க்குப் பிறகு இந்தியப் பெரும் செல்வந்தர்களது சொத்துக்களின் மதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. பெரும் செல்வந்தர்களது எண்ணிக்கை 102லிருந்து 39 விழுக்காடு அதிகரித்து 142 ஆக உயர்ந்துள்ளது, முதல் 10 விழுக்காடு பெரும் செல்வந்தர்கள் தேசிய செல்வத்தில் 45 விழுக்காட்டை குவித்துள்ளனர், அதே நேரத்தில் மக்கள்தொகையில் அடிமட்ட 50 விழுக்காட்டினரின் பங்கு வெறும் 6 விழுக்காடு மட்டுமே. சொத்து வரியை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம் பெரும்பான்மையினருக்கு வளங்களை உருவாக்குவதற்காக இந்தியாவின் பெரும் செல்வந்தர்களிடமிருந்து செல்வத்தை மறுபங்கீடு செய்யுமாறு நாங்கள் அரசை கேட்டுக்கொள்கிறோம். 10 கோடிக்கு மேல் வருமானம் உள்ள தனிநபர்கள் மீது வெறும் 2 விழுக்காடு வரி விதித்தால், அமைச்சகத்தின் நிதிவருவாய் 121 விழுக்காடு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் 102 பெரும் செல்வந்தர்கள் உலக அளவில் மக்களை வறுமையிலிருந்து மீட்க எங்களுக்கு அதிக வரி விதியுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் இந்தியாவின் அம்பானியோ, அதானியோ இடம்பெறவில்லை என்பதை சொல்லவும் வேண்டுமா.

அந்த 102 பெரும் செல்வந்தர்கள் தங்கள் கோரிக்கையில் “தற்போதைய வரிமுறை சரியாக இல்லை. கடந்த இரண்டு வருடங்களாக இந்த உலகம் தீராத துன்பத்தில் இருந்து வருகிறது. இந்தத் தொற்றுக் காலங்களில் உண்மையில் எங்களது செல்வம் உயர்வதைக் கண்டோம். பணக்காரரர்களிடம் செல்வம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதேசமயம் வறுமையும், பொருளாதார ஏற்றத்தாழ்வும் உலக அளவில் அதிகரித்துள்ளன. இதற்கு தற்போதைய வரிவிதிப்பு முறை நியாயமாக இல்லாததே காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். செல்வந்தர்களிடம் பணம் மேலும் உயர்கின்றது. எனவே எங்களைப் போன்ற பெரும் செல்வந்தர்கள் மீது அதிக வரி விதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு நாடும், பெரும்செல்வந்தர்களின் மீது அதிக வரி விதிப்பதன் வாயிலாக ஓராண்டில் 189 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும். இத்தொகை உலக மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தவும், 230 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்கவும் உதவும்” எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களின் கோரிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதா, இல்லையா என்பது குறித்து எந்த விசயத்தையும் அறியமுடியாமல் அச்செய்தி காற்றோடு கலந்துவிட்டது.

இந்தியாவின் பெரும்செல்வந்தர்கள் என்ன செய்கிறார்கள். அதானி ஸ்டேட் வங்கியின் உறுதுணையோடு வங்கி வாடிக்கையாளர்களைக் கொள்ளையடிக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். முகேஷ் அம்பானி சமீபத்தில் நியூயார்க் நகரில் சொகுசு ஹோட்டல் வாங்கியுள்ளார்.

பணவீக்கம்:

சென்ற ஆண்டு டிசம்பரில் 1.95 விழுக்காடாக இருந்த மொத்த விலை பணவீக்கம் இந்த ஆண்டு டிசம்பரில் 13.56 விழுக்காடாக உயர்ந்துள்ளது, எரிபொருள், ஆற்றலின் விலைவாசி 32.30 விழுக்காடு உயர்ந்துள்ளது உற்பத்திப் பொருட்களின் விலைவாசி 10.62 விழுக்காடு உயர்ந்துள்ளது. கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம், ஆகியவற்றின் விலை உயர்வினால் பணவீக்கம் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது. நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் அளவு டிசம்பர் மாதத்தில் 5.59 விழுக்காடு அதிகரித்துள்ளது, சென்ற மாதத்துடன் ஒப்பிடும் போது 0.36 விழுக்காடு குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசி 4.05 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற மாதத்துடன் ஒப்பிடும் போது 1.18 விழுக்காடு குறைந்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 2.99 விழுக்காடு குறைந்துள்ளது. பழங்களின் விலைவாசி 3.54 விழுக்காடு உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 2.43 விழுக்காடு அதிகரித்துள்ளது. முட்டையின் விலை 1.48 விழுக்காடு உயர்ந்துள்ளது. எண்ணெய், கொழுப்பு ஆகியவற்றின் விலைவாசி 24.32 விழுக்காடு அதிகரித்துள்ளது. மீன், இறைச்சியின் விலைவாசி 4.58 விழுக்காடு உயர்ந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி:

புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி நவம்பர் மாதத்தில் உற்பத்தி 1.4 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மைத் துறைகளில் சுரங்கத் துறை, செய்பொருளாக்கத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றில் உற்பத்தி முறையே 5.0, 0.9, 2.1 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மை பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி அளவுகள் முறையே 3.5, 2.5, 3.8 விழுக்காடு உயர்ந்துள்ளன. மூலதனப் பொருட்களின் உற்பத்தி 3.7 விழுக்காடு குறைந்துள்ளது. உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 0.8 விழுக்காடு உயர்ந்துள்ளது. நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 5.6 விழுக்காடு குறைந்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டிற்கான தேசிய வருமானத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள்:
தேசிய புள்ளியல் அலுவலகம் 2021-22 ஆம் ஆண்டிற்கான தேசிய வருமானத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் நிலையான விலையில் (2011-12) உண்மையான உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பு ₹147.54 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2020-21 இல் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பில் 7.3 விழுக்காடு குறுக்கம் காணப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது 2021-22 ஆம் ஆண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 9.2 விழுக்காடாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆய்வறிக்கை 2021-22 நிதியாண்டிற்கு 11 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தை கணித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

அடிப்படை விலைகளில் உண்மையான ஜிவிஏ (மொத்த மதிப்பு கூட்டல்) 2020-21ல் ரூ.124.53 லட்சம் கோடியாக இருந்தது 8.6 விழுக்காட்டு வளர்ச்சியடைந்து 2021-22ல் ரூ.135.22 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் இறுதி நுகர்வு செலவினம் 2020-21ல் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பில் 56.0 விழுக்காடாக இருந்தது 2.1 விழுக்காடு குறைந்து 2021-22ல் 54.8 விழுக்காடாக உள்ளது. அரசு இறுதி நுகர்வு செலவினம் 2020-21ல் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பில் 11.7 விழுக்காடாக இருந்தது 0.8 விழுக்காடு குறைந்து 2021-22ல் 11.6 விழுக்காடாக உள்ளது. மொத்த நிலை மூலதன உருவாக்கத்தின் மதிப்பு 2020-21ல் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க மதிப்பில் 31.2 விழுக்காடாக இருந்தது 5.4 விழுக்காடு மட்டுமே உயர்ந்து 2021-22ல் 32.9விழுக்காடாக உள்ளது.

2020-21ல் 7.2 விழுக்காடு குறுக்கமடைந்த உற்பத்தித் துறை 2021-22ல் 12.5 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது.சுரங்கம் மற்றும் குவாரி 14.3 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது. வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் 11.9 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது.வேளாண் துறை 3.9 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் & பிற பயன்பாடு சேவை 8.5 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளது. நிதி, ரியல் எஸ்டேட் & தொழில்முறை சேவைகளின் வளர்ச்சி 4 விழுக்காடு உயர்ந்துள்ளது. பொது நிர்வாகம், பாதுகாப்பு & பிறசேவைகளின் வளர்ச்சி 10.7 விழுக்காடு உயர்ந்துள்ளது.
தேசிய புள்ளியல் அலுவலகம் 2021-22 ஆம் ஆண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2019-20 ஆம் ஆண்டில் கோவிட் நோய்க்கு முந்தைய ரூ.145.69 லட்சம் கோடியைத் தாண்டிவிடும் என மதிப்பிட்டிருந்தது. தற்போது தான் கோவிட்-19 தொற்றுத் தாக்கத்துக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளதே தவிர வளர்ச்சி ஏற்படவில்லை என்பதே உண்மை. 2020-21 ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021-22ல் தனியார் இறுதி நுகர்வு செலவினம், அரசு இறுதி நுகர்வு செலவினம் குறைந்துள்ள நிலையும் மொத்த நிலை மூலதன உருவாக்கம் கணிசமாக அதிகரிக்காமல் இருப்பதும் கவலைக்குரிய விசயங்களாகும்.
பட்டினி , ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்துப் போராட சமூக உணவகங்களுக்கான திட்டத்தை உருவாக்க மத்திய, மாநிலங்கள், ஒன்றிய புலங்களுக்கு வழிகாட்டுதல்களைக் கோரும் பொதுநல வழக்கில் விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம் சமூக உணவகங்களுக்கான திட்டத்தை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடு முழுவதும் சமூக உணவகங்கள் திட்டத்தை செயல்படுத்துவதற்கும், மாநிலங்களுக்கு கூடுதல் உணவு தானியங்களை வழங்குவதற்கும் ஒரு மாதிரியை தயார் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

விரைவில் விற்பனையாகும் நுகர்வுப்பொருள்களுக்கான (FMCG) வேண்டலை அதிகரிக்க உள்கட்டமைப்பு திட்டங்கள் அல்லது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் (MNREGA) மூலம் நுகர்வோரின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசு பணம் வழங்க வேண்டும் என பொருளியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் சுப்பராவ், உழைப்பு செறிந்த துறையிலிருந்து, மூலதனம் செறிந்த துறைக்கு செயல்பாடுகள் மாறியதால் வேலைகள் இழக்கப்பட்டுள்ளன என்றும், உயர் வருமானப் பிரிவினர் தங்கள் வருமானத்தைப் பாதுகாத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், உண்மையில் அவர்களின் சேமிப்பையும் செல்வத்தையும் வளர்க்க முடிந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்
வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை, வளர்ச்சியை விரைவுபடுத்துவதைத் தவிர, பொருளாதாரத்தில் அதிகரித்துள்ள சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும், வேலைகளை உருவாக்குவதற்கும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

ஃபிப்ரவரி 1ல் நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களையும் கருத்தில் கொண்டு தான் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.
மக்கள் நலன் அடிப்படையில் நிதிநிலை அறிக்கையின் மீதான எதிர்பார்ப்புகள் பின்வருமாறு:

கல்வி, சுகாதாரத்துறைகளுக்கான ஒதுக்கீடுகளை கணிசமாக உயர்த்தவேண்டும்.
பொதுச்சொத்துக்களை விற்று வருவாய் திரட்டும் ஈனப் பிழைப்பை நிறுத்திக் கொள்ளவேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் கோரிக்கையின் படி நாடு முழுவதும் பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாட்டை குறைக்க சமூக உணவகங்களை உருவாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும், அதில் பன்முகப்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்கும் விதத்தில் புத்தாக்கமுயற்சிகளை அறிமுகப்படுத்தவேண்டும். நகர்புறங்களிலும் பரந்த அளவில் இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்.

இந்தியாவில் அதிகரித்துள்ள வருவாய், சொத்துக்களின் பொருளாதார சமமின்மையை குறைப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும். அதற்கு அரசு வருவாயில் சுற்றடி வரிகளின் பங்கீட்டைக் குறைத்து நேர்முக வரிகளின் பங்கீட்டை அதிகரிக்கும் விதத்தில் வரியமைப்பில் சீர்திருத்தம் ஏற்படுத்தவேண்டும்.
சொத்துவரியை அறிமுகப்படுத்தவேண்டும். பெருநிறுவனங்கள் மீதான வரியை உயர்த்தவேண்டும். ரியல் எஸ்டேட் மீதான வரியை உயர்த்தவேண்டும்.
பங்குச் சந்தைகளில் ஊகமுதலீடுகளை குறைக்கும் விதமாக நிதிப் பரிவர்த்தனை வரியை உயர்த்தவேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் விதத்தில் அவற்றையும் சரக்கு, சேவை வரியமைப்புக்குள் சேர்க்கவேண்டும்.

சொத்துக்கள் (மூலதனம்) மற்றும் மூலதன அடிப்படையிலான வருமானத்தின் மீதான வரிகளை உயர்த்தவேண்டும்.

சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் மலிவுக்கடன் பெறுவதை உறுதிசெய்யவேண்டும்.
தற்போது குறைந்தபட்ச ஆதாரவிலையின் மூலம் 5.6 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே பயனடைகின்றனர். அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையை விரிவாக்கம் செய்யவேண்டும்.
சமூகநீதியின் அடிப்படையில் இந்த எதிர்பார்ப்புகள் முற்றிலும் ஏற்புடையவை தான். ஆனால் இவற்றை பாஜக-விடம் எதிர்பார்க்கலாமா?

நன்றி:
Samantha ks.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here