உலகளவில் மெக்சிகோவை சேர்ந்த 15,000 செல்போன்களில் இருந்து தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாகவும், இந்தியாவில் 300 பேர் உடைய தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus spyware) என்ற உளவு பார்க்கும் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படும் ஒரு பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட முன்னணி பத்திரிக்கையாளர்களின் தொலைபேசி எண்கள் இடம் பெற்றிருக்கிறது. இது மட்டுமன்றி இன்னும் பலருடைய தொலைபேசிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் உள்ள 10 நாடுகளை சேர்ந்த அதிபர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நீதிபதிகள், பத்திரிக்கையாளர்களின் அலைபேசியில் இருந்து தகவல்களை திருடியதாக இஸ்ரேலின் உளவு நிறுவனத்தின் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. உலகின் பலதுறைகளை சேர்ந்த 50,000 பேர் இவ்வாறு தனது தகவல்களை பறி கொடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதுபற்றி பிரபல ஆங்கில ஏடான ’தி கார்டியன்’ உள்ளிட்டு 16 சர்வதேச பத்திரிக்கைகள் நடத்திய விசாரணையில், உலகம் முழுவதும் உள்ள வலதுசாரி பிற்போக்கு சக்திகள், குறிப்பாக ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் உள்ள பாசிஸ்டுகள் இந்த தகவல்களை பெறுவதற்கு காரணமாக உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. யூத ஜியோனிச இனவெறி கொண்ட இஸ்ரேலின் என்.எஸ்.ஒ நிறுவனம் 2016 முதல் கொண்டே தனது பெகாசஸ் மால்வேர் சாப்ட்வேர் மூலமாக தனது உளவுப் பணியை செய்து வருகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகளவில் மெக்சிகோவை சேர்ந்த 15,000 செல்போன்களில் இருந்து தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாகவும், இந்தியாவில் 300 பேர் உடைய தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பத்திரிக்கையாளர்களின் தொலைபேசியும் ஒட்டு கேட்கப்பட்டது!


ஓரளவிற்கு முதலாளித்துவ ஜனநாயக கருத்துக்களை பேசிவரும் பத்திரிக்கைகளான ஏ.ஏ.பி வால் ஸ்ட்ரீட், சிஎன்என், நியூயார்க் டைம்ஸ், அல்ஜசீரா, பிரான்ஸ் 24, ரேடியோ பிரீ, யூரோப் மீடியா பார்ட், எல் பாரிஸ், அசோசியேட்டட் பிரஸ், லிவ் மிண்ட், புளூம்பெர்க், தி எக்கனாமிஸ்ட், வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, கார்டியன் போன்ற பத்திரிகைகளும் இந்த உளவு சாப்ட்வேர் மூலமாக கண்காணிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.
இந்தியாவின் முன்னணி பத்திரிகைகளான தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் பணிபுரியும் மூத்த பத்திரிக்கையாளர்களின் செல்போன்களும் உளவு பார்க்கப் பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை என்.எஸ்.ஓ நிறுவனம் மறுத்துள்ளது. பொய்யான தகவல்களை பரப்பி உள்ளதாகவும் தி கார்டியன் இதழின் மீது மான நட்ட வழக்கு தொடுக்கப் போவதாகவும் மிரட்டியுள்ளது. இந்தியாவில் இதனை புலனாய்வு செய்து செய்தி வெளியிட்ட தி வயர் இணையதளத்தின் மீது மத்திய அமைச்சர் அஸ்வின் வசை பாடியுள்ளார் அதாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முதல் நாள் இரவு இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது என்பது தற்செயலானது அல்ல என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பொங்குகிறார்.
காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா “அரசு உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது மிகவும் தீவிரமான பிரச்சனையாகவும், இது குடிமக்களின் அந்தரங்க உரிமைக்கு எதிரானது, அரசியல் சாசன உரிமைகளுக்கு எதிரான தாக்குதல் ஆகும்” என்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினேய் விசுவம் “இந்தியாவை அரசின் கண்காணிப்பு கொண்ட நாடாக பாஜக மாற்றி வருகிறது. தங்கள் சொந்த அச்சங்களில் இருந்து விடுபட பாசிஸ்டுகள் எந்த அளவுக்கும் செல்வார்கள் என்பதை பாசிசத்தின் வரலாறு கூறுகிறது” என்கிறார்.
இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள, நீதிபதிகள் போன்றவர்களின் தொலைபேசிகள் கண்காணிக்க படுவதாக 2019-லேயே குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது மோடி அரசு நாங்கள் இஸ்ரேலை சேர்ந்த என் எஸ் ஓ குரூப் (NSO group) என்ற நிறுவனத்தின் தயாரிப்பான பெகாசஸ் ஸ்பைவேர் என்ற உளவு மென்பொருளை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கவில்லை என்றும், ஆனால் வேறு பத்துக்கும் மேற்பட்ட உளவு நிறுவனங்கள் அரசின் அனுமதியுடன் கண்காணித்து வருவதாகவும் வெளிப்படுத்தினார்.
நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டு நமது கைவிரல் ரேகையையும், கண் கருவிழியையும் கொண்டு தயாரிக்கப்படும் ஆதார் அடையாள அட்டை மூலம் நம் அனைவரையும் அரசாங்கம் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆதார் தற்போது வங்கி கணக்கு முதல் மருத்துவமனை, ரயில்பதிவு, விமானப்பதிவு, பள்ளி, கல்லூரிகள் அனைத்திலும் இணைக்கப்பட்டிருப்பதால் நம் அனைவரின் நடவடிக்கைகள் தொடர்ந்து அரசாங்கத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. முதன்முதலில் ஆதார் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஆதார் ஆணையத்தின் தலைவர் நந்தன் மோகன் நிலெகனி பற்றி பரபரப்பாக பேசப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் தனி வேறிலி அடையாள எண் (AADHAR NO) வழங்குவது பற்றிய பணியை துவங்கி இந்தியர்கள் அனைவரையும் கண்காணிக்கப் போகிறார் என்றவுடன் முற்போக்கு ஜனநாயக சக்திகள் உச்சநீதிமன்றம் வரை சென்று தனிநபர் உரிமை பாதிக்கப்படுவதாக அரசை எதிர்த்து வழக்கை நடத்தினர். ஆனாலும் ஆதார் என்பது குடிமகனின் அடையாளம் என்று மாற்றப்பட்டு இன்று அனைவரின் தரவுகளும் மோடி அரசாங்கத்தின் கையில் உள்ளது. நாம் அனைவரும் திறந்த வெளி சிறைச்சாலையில் தான் வாழ்கிறோம்.

இதுபோலத்தான் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும் போது அதன் மூலம் நமது விருப்பங்கள், ஆசைகள், தேவைகள், கனவுகள், காதல், இசை ரசனை உள்ளிட்ட அனைத்தும் தரவுகளாக திரட்டப்பட்டு ரகசியமாக ஏகாதிபத்திய நிதி மூலதன நுகர்வு பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களிடம் விற்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாள் கேம்பிரிட்ஜ் அனலடிகா என்ற மிகப்பெரிய ஊழல் நடந்ததை நாம் அனைவரும் அறிவோம். என்னுடைய தனியுரிமையை பயன்படுத்த நீ யார்? உனக்கு யார்? இந்த அதிகாரம் கொடுத்தது, ஒரு அரசாங்கம் சொந்த நாட்டு மக்களை 24 மணி நேரமும் கண்காணித்து கொண்டிருப்பது என்ன வகையான ஜனநாயகம் என்ற கேள்வி தொடுக்கப்பட்ட போதும் அந்தக் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை.

A Chronological History of Social Media
அரசாங்கம் சொந்த நாட்டு மக்களை உளவு பார்க்கும் கொடூரத்தை வெறும் கண்காணிப்பு, முறைப்படுத்துதல் அல்லது தனி மனித உரிமைகளை பறிக்கும் செயல் என்று சுருக்கிப் பார்க்க முடியாது. ஏனென்றால் இது ஏகாதிபத்தியங்களின் டிஜிட்டல் தொழில்நுட்ப காலம் ஆகும். இன்று உலகளவில் டேட்டா, கிளவுட் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொருவரையும் தனது தனிப்பட்ட தரவுகளை கணினியில் சேமித்து வைக்கச் சொல்லி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிர்பந்திக்கின்றனர். அதனை ஒருவகையில் ஏற்று தனிப்பட்ட நபர்களும் தனது விவரங்களை ஒரு ஏகாதிபத்திய நிறுவனம் கண்காணிப்பதை தானே மனமுவந்து ஏற்கச் செய்து விட்டனர். ஒரு வேளை அவர்கள் தவறி விட்டாலும் ’எட்டப்பர்கள்’ அந்த திருப்பணியை செய்ய காத்திருக்கின்றனர்.
ஏகாதிபத்தியமும், பாட்டாளிவர்க்க சகாப்தம் கொண்ட இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவுஜீவிகள், பத்திரிக்கையாளர்கள், போட்டி கம்பெனிக்காரர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் அனைவரையும் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏன் எழுந்துள்ளது என்பது தான் நாம் பரிசீலிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும். ஜனநாயகம், சுதந்திரம் போன்ற முதலாளித்துவ விழுமியங்களை ஏகாதிபத்தியம் விரும்புவதில்லை. சொல்லி கொள்ளப்படும் இத்தகைய உரிமைகள் தங்களின் மீமிகு உற்பத்திக்கும், சந்தையைக் கைப்பற்றும் சதித்தனங்களுக்கும் மிகப்பெரும் தடையாக உள்ளதை கண்டு ஆத்திரம் அடைகிறார்கள் தங்களுக்கு எதிராக கருத்துக்களை பரப்பும் தனிநபர்கள், நிறுவனங்களை அன்றாடம் கண்காணிப்பதன் மூலம் அவர்களின் நடவடிக்கைகளை புரிந்துக் கொண்டு எதிர்தாக்குதல் தொடுப்பது அல்லது அவர்களை தீர்த்துக் கட்டுவது என்ற பயங்கரவாத அரசியல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இந்த தகவல்திரட்டு, உளவு, கண்காணிப்பு அரசியலை வீழ்த்தும் வல்லமை பாட்டாளி வர்க்கத்திற்கு உண்டு. ஸ்னோடன், கார்டியன், இணைய தள ஹேக்கர்கள் என தங்களின் எதிர் தரப்பையும் ஏகாதிபத்தியம் உருவாக்கி கொண்டுதான் உள்ளது என்பதே உலகின் புதிய போக்காகும். அவர்கள் அம்பலப்படுத்தும் தரவுகளை கையிலேந்தி சுழற்றுவோம். உளவு மூலம் கட்டுப்படுத்திவிடலாம் என்ற கனவை பகல் கனவாக்குவோம்.


20-07-2021

பா.மதிவதனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here