நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் சி.பி.ஐ., பிர்லா குழுமத்தின் தலைவர் குமாரமங்கலம் பிர்லா மீது சதிக் குற்றச்சாட்டைச் சுமத்தி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த பிறகு வெளிவந்த இந்தியா டுடே இதழ் (நவ.6, 2013) “பயத்தில் தத்தளிக்கும் தொழிலதிபர்கள்” எனத் தலைப்பிட்டு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டது. கே.எம்.பிர்லா, தனது பத்திரிகையை வெளியிடும் நிறுவனத்தின் மதிப்பு மிக்க பங்குதாரர்களுள் ஒருவர் என்பதற்காக மட்டும் அக்கட்டுரையை இந்தியா டுடே வெளியிடவில்லை. ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும் அல்லது சம்பந்தப்பட்டுள்ள தரகு முதலாளிகள் – அலைக்கற்றை வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள சுனில் மிட்டல், ரவி ரூயா, அசிம் கோஷ், சஞ்சய் சந்திரா மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய ரத்தன் டாடா, அனில் அம்பானி; நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நவீன் ஜிண்டால்; கர்நாடகாவில் நடந்த இரும்பு வயல் ஒதுக்கீடில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள சஜ்ஜன் ஜிண்டால்; கே.ஜி. இயற்கை எரிவாயு வயல் முறைகேடு விசாரணையை எதிர்கொள்ளும் முகேஷ் அம்பானி – அனைவருக்கும் அக்கட்டுரையைச் சமர்ப்பித்திருந்தது, இந்தியா டுடே.

“யார் மீது கை வைத்திருக்கிறா தெரியுமா?” எனச் சவால்விட்டுப் பேசும் தொனியில் எழுதப்பட்டுள்ள அக்கட்டுரை, மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.), மத்திய தணிக்கைத் துறை (சி.ஏ.ஜி.), மத்திய ஊழல் கண்காணிப்பு கமிசன் (சி.வி.சி.) ஆகிய மூன்று அமைப்புகளையும் மூன்று பூதங்களாகச் சித்தரித்தது. “தீவிரக் கண்காணிப்பு ராஜ்ஜியம் மீண்டும் தொடங்கி விட்டது; இதனால் தொழிலதிபர்கள் புதிய முதலீடுகளைச் செய்யத் தயங்குகிறார்கள்; கடந்த 18 மாதங்களில் இந்தியா 1,00,000 கோடி ரூபாய் முதலீட்டை இழந்திருக்கிறது; அனைத்திற்கும் மேலாக, கொள்கை மாற்றம் வந்து விடுமோ எனத் தொழிலதிபர்கள் சந்தேகப்படுகிறார்கள்” என்றவாறெல்லாம் அக்கட்டுரை உடுக்கை அடித்திருந்தது.

“வழக்கைச் சட்டப்படிச் சந்தித்து குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்” என ஊழலில் சிக்கிக் கொள்ளும் அரசியல்வாதிகள் எடுத்து விடும் வசனத்தைச் சொல்லுவதற்குக் கூட கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் தயாராக இல்லை. அவர்களைப் பொருத்த வரை குற்றஞ்சாட்டப்பட்ட பிர்லா நேர்மையான பிசினஸ்மேன். அவருக்கு மட்டுமல்ல, இன்று கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த அவப்பெயருக்கு, நெருக்கடிக்கு அரசின் கொள்கை தடுமாற்றம்தான் காரணம் என்பது அவர்களின் வாதம். மாட்டிக் கொண்டவுடன் கூட்டாளியின் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தைத் தவிர, வேறு புதுமை எதுவும் இந்த வாதத்தில் இல்லை.

கார்ப்பரேட் முதலாளிகளைப் புனிதர்களாக, செய்யாத குற்றத்திற்குச் சிலுவையில் அறையப்பட்டவர்களாகச் சித்திரிக்கும் இந்த வாதத்தை முதலாளித்துவ அறிஞர்களுள் ஒரு சாரர் ஏற்றுக் கொள்வதில்லை. “கார்ப்பரேட் முதலாளிகள், ஆளுங்கட்சியினர், அதிகார வர்க்கம் ஆகியோர் கூட்டுக் களவாணிகளாக இணைந்து கொண்டு பல முறைகேடுகள் நடத்துவதை” அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். தனியார்மயத்திற்கு முன்பாக லைசென்சு-பெர்மிட் ராஜ்ஜியம் நிலவிய காலத்தில் இவை போன்ற முறைகேடுகள் நடப்பது சகஜமானது. ஆனால், அதனை ஒழிக்கும் மாமருந்தாக முன்னிறுத்தப்பட்ட தனியார்மயத்தில் இந்த முறைகேடுகள் தொடர்வது தம்மைக் கலங்க வைப்பதாகக் கூறுகிறார்கள் அவர்கள்.

“தனியார்மயக் கொள்கையில் குறை காணமுடியாது. ஆனால், முதலாளிகளுக்குள்ளேயே இரண்டு வகையான பேர்வழிகள் உள்ளனர். ஒரு சாரர் அரசியல்வாதிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டு தமது செல்வத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இன்னொரு சாரர் நேர்மையானவர்கள்; அவர்கள் போட்டியை விரும்புகிறார்கள். நாம் இரண்டாவது வகை முதலாளிகளை ஊக்குவிக்க வேண்டும்; அதற்கேற்ப தொழிற்கொள்கையை வகுக்க வேண்டும். ஐக்கிய முன்னணி ஆட்சியில் இதில் குளறுபடி இருக்கிறது” என வாதிடுகிறார்கள் இவர்கள்.

இந்தப் புல்லரிக்க வைக்கும் வாதத்தை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பின்வருமாறு கூறுகிறார்: “இந்தியாவில் சமீபத்தில் கோடீசுவரர்களான பலர் நிலம், கனிம வளங்கள் போன்றவற்றை முறைகேடான வழிகளில் சுருட்டிக் கொண்டதன் வழியாகத்தான் செல்வத்தைத் திரட்டியுள்ளனர். அரசியல்வாதிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான கூட்டு தொடர்வதை நாம் அனுமதித்தால், வியாபாரப் போட்டி இல்லாமல் போகும். இது நமது ஜனநாயகத்திற்கும் கேடாக முடியும். எனவே, போட்டி, வெளிப்படைத்தன்மை, அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதிலும், நிலங்களைக் கையகப்படுத்துவதிலும் இன்னும் கூடுதலான திறந்த கொள்கை ஆகியவற்றில் நாம் கவனம் கொடுத்து வேலை செய்ய வேண்டும்.”

ஊழலே செய்யாத, தமது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அரசோடு கள்ளக் கூட்டு வைத்திராத, போட்டி போட்டு முன்னேறக் கூடிய முதலாளித்துவம் இருக்கிறது; இருக்கவும் முடியும் என்ற இந்த வாதம் நாடாளுமன்ற ஜனநாயகம் மக்களுக்கானது எனக் கூறப்படும் மோசடிக்கு நிகரானது. லைசென்சு-பெர்மிட் ராஜ்ஜியமாக இருந்தாலும் சரி அல்லது தனியார்மயப் பொருளாதாரமாக இருந்தாலும் சரி, அரசு-ஆளுங்கட்சியைச் சாராமல், அதனின் துணை, பாதுகாப்பு இல்லாமல் முதலாளித்துவம் ஜீவித்திருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால், தனியார்மயக் காலத்தில்தான் அரசோடு கூட்டு வைத்துக் கொண்டு முதலாளிகள் சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் அடித்துவரும் கொள்ளை பல்லாயிரம் மடங்கு அதிகரித்திருக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளும் ஆளுங்கட்சியோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு முறைகேடான வழிகளில் இலாபம் அடைவது, இயற்கை வளங்களைச் சுருட்டிக் கொள்வதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். அவர்கள் எந்த மாநிலத்தில் தொழிலைத் தொடங்க முன்வருகிறார்களோ, அம்மாநில அரசு அவர்களுக்குக் குறைந்த விலையில் நிலம், மலிவாக மின்சாரம், தண்ணீர், வரி விலக்கு, வரி விடுப்பு, குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் இவற்றையெல்லாம் ஏற்பாடு செய்து கொடுக்கிறது. இந்தச் சலுகைகளை யாரும் சட்ட விரோதமானது எனக் கூறிவிடக் கூடாதென்பதற்காகவே சட்டங்கள் திருத்தப்பட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இந்தியச் சட்டங்கள் செல்லுபடியாகாது என மைய அரசு அறிவிக்கவில்லையா என்ன? 2ஜி அலைக்கற்றைகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டதை ஊழலெனக் குற்றஞ்சுமத்தும் நியாயவான்களுள் ஒருவர் கூட, அரசு-தனியார் கூட்டுத் திட்டங்களில் நிலம் போன்ற இயற்கை வளங்களும், சாலைகள், விமான நிலையங்கள் போன்ற அடிக்கட்டுமான வசதிகளும் சட்டபூர்வமான முறையில் தனியாரின் கொள்ளைக்குத் தாரை வார்க்கப்படுவதைக் கேள்விக்குள்ளாக்குவதில்லை.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், அரசு-தனியார் கூட்டுத் திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல், தனியார் பெருந்தொழில் நிறுவனங்களுக்குப் பல்வேறு சலுகைகள் அளிப்பது இவையனைத்துமே அரசுக்கு வர வேண்டிய வருமானத்தைத் தனியார் முதலாளிகள் சுருட்டிக் கொள்வதற்கான ஏற்பாடுகளாகும். “லிப்டிங் மற்றும் லோடிங் காண்டிராக்ட்” என்ற முறையின் மூலம் தமிழ்நாட்டில் மணல் வியாபாரம் தனியார் மயமாக்கப்பட்டிருப்பது இந்தக் கொள்ளைக்குச் சிறந்த உதாரணம். ஆனால், இந்தக் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டிருப்பதால் ஊழல் என்று நீதிமன்றங்கள் கூட முத்திரை குத்துவதில்லை. போட்டி முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் ரகுராம் ராஜன் போன்றவர்கள் கூட அரசிடமிருந்து இப்படிபட்ட ‘சட்டபூர்வ’ சலுகைகளைப் பெறத் தேவையில்லை என வாதாடுவதில்லை.

பெரு முதலாளிகள் அரசோடு கூட்டு வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, அலைக்கற்றை விற்பனை, மணற்கொள்ளை போன்ற பெரிய பெரிய திட்டங்களில் மட்டும்தானா நடந்து வருகிறது? தெருக்களில் சாக்கடை கட்டுவது தொடங்கி நாட்டின் பாதுகாப்புக்கு ஆயுதம் வாங்குவது வரை அரசின் அனைத்துத் திட்டங்களும், உள்ளூர்க் கட்சிக்காரன், ஒப்பந்ததாரர் முதல் பெரும் முதலாளிகள் உள்ளிட்ட பலரின் இலாபத்தைக் கணக்கிட்டுத்தான் தீட்டப்படுகின்றன. இவையன்றி, முதலாளிகளின் கஜானாவை நிரப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தயாரிக்கப்படும் திட்டங்களும் உள்ளன.

கடந்த தீபாவளி சமயத்தில் நுகர்பொருள் கடன் வழங்குவதற்காகப் பொதுத்துறை வங்கிகளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாயை அரசின் கஜானாவிலிருந்து எடுத்துக் கொடுத்தார், ப.சி. இது அரசுப் பணத்தை நுகர்பொருட்களைத் தயாரிக்கும் கார்ப்பரேட் வர்க்கத்திடம் நடுத்தர வர்க்கம் வழியாக கொண்டு சேர்க்கும் தந்திரம் அன்றி வேறில்லை. கல்விக் கடன் திட்டத்தின் மூலம் கொழுத்தது யார்? கடனாளியாகி அவமானப்படுவது யார்? பூவிற்குள் நாகம் ஒளிந்திருப்பதைப் போல, அரசுப் பணத்தைத் தனியார் கல்வி முதலாளிகளின் கஜானாவில் கொட்டுவதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ள திட்டத்திற்குப் பெயர் கல்வி உரிமைச் சட்டம்.

ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் இலவச வீட்டுத் திட்டம் போன்றவை இரும்பு, சிமெண்ட் முதலாளிகளின் நலனை மறைத்துக் கொண்டுள்ளன. இத்திட்டங்களை ஒரு கறி விருந்தோடு ஒப்பிட்டால், சதைப் பகுதி முதலாளிகளுக்கு எலும்புத் துண்டு மக்களுக்கு என்பதுதான் விகிதாச்சார சூத்திரம். ஏழை நோயாளிகளின் உயிர் காக்கும் திட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஸ்டார் இன்ஷூரன்ஸ் நிறுவனம் சம்பாதித்த தொகை ஏறத்தாழ 600 கோடி ரூபாய்க்கும் அதிகம். இலவச மிதிவண்டித் திட்டம், இலவச மடிக் கணினி, இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டம் என மக்கள் நலனை முன்னிறுத்தி போடப்படுவதாகக் கூறப்படும் திட்டங்களும்கூட கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனைத்தான் அடிநாதமாகக் கொண்டுள்ளன.

சாலை போடுவது, நடைபாதை கட்டுவது, அதில் கற்களைப் பதிப்பது, மாற்றுவது என எந்தவொரு ‘பொது’த்திட்டத்தின் பின்னும் ஏதோவொரு கும்பலின் நலன்கள் இருப்பதைத் தோண்டிப் பார்த்தால் கண்டு பிடித்து விடலாம். இப்படி அரசின் கஜானாவைச் சுருட்டிக் கொள்ளும் திட்டங்களைத் தயாரித்து முன் வைக்கும் வேலையைத்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அதிகாரவர்க்கமும் கூட்டாகச் செய்து வருகின்றன. அலைக்கற்றை ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் போன்றவற்றில் அரசின் கஜானாவுக்குப் போய்ச் சேர வேண்டிய பணத்தை கார்ப்பரேட் கும்பல் முறைகேடாக எடுத்துக் கொண்டதென்றால், இவை போன்ற பொதுத் திட்டங்களில், அரசின் பணம் சட்டபூர்வமான வழிகளில் கார்ப்பரேட் கும்பலின் கரங்களுக்கு, காண்டிராக்டர்களின் கரங்களுக்கு மடைமாற்றி விடப்படுகிறது.

ஊழலற்ற, போட்டியை விரும்பும் முதலாளித்துவம், அரசைச் சாராமல் சுயேச்சையாக இயங்கும் முதலாளித்துவம் என்பதெல்லாம் இருக்க முடியாது என்பதைத்தான் இந்த உதாரணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அரசும் கார்ப்பரேட் கும்பலும் கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும் ஆயிரக்கணக்கான வழிகளில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களின் நிர்வாகிகள், அவர்களின் வழக்குரைஞர்கள் நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதோடு, இந்தக் கும்பல்தான் வல்லுநர்கள் குழு என்ற போர்வையில் அரசின் கொள்கைகளை, திட்டங்களைத் தீர்மானிப்பவையாக மாறி விட்டன.

இந்த உறவு அடிப்படையிலேயே மக்கள் விரோதமானது. ஆனால், அரசும் தனியாரும் இணைந்து பணியாற்றுவதன் மூலம்தான் நாட்டை முன்னேற்ற முடியும் என்ற வாதத்தின் மூலம் மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். தனியார்மயமே ஊழலுக்கு அடிப்படையானது என்பது மறைக்கப்பட்டு, ஊழல் என்பது திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் இடறல் என்பதாக, ஒரு சிலரின் பேராசையாகக் காட்டப்படுகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் இப்பேராசை பிடித்த கும்பலைத் தண்டித்து விட முடியும் என்ற நாடகம் நடத்தப்படுகிறது.

  • செல்வம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here