தஞ்சாவூர் உற்சவம்: தென்னக பண்பாட்டு மைய தமிழ் தீண்டாமை.


ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் 11-02-2022 முதல் 13-02-2022 வரை தஞ்சாவூர் உற்சவம் என்ற பெயரில் இயல் இசை நாடக விழா நடைபெறுகின்றது.

தஞ்சை உற்சவத்தில் சிறப்பு கலைநிகழ்வு தீண்டாமைதான்.

தென்னகப் பண்பாட்டு மையத்தில் தமிழ் இயல் இசை நாடக நிகழ்வுகள் புறக்கணிக்கப் படுகிறது. தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் அவமானப்படுத்தப் படுகிறார்கள் என்பது வழமையான செய்தி.

தமிழ் நாட்டில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்ற நடைமுறையும் சட்டமும் இருக்கும்போது வேத பாராயண நிகழ்ச்சிக்கு இடமளிக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப் பட்டது. தமிழ் அன்பர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் எதிர்வினையால் வேத பாராயணம் நீக்கப்பட்டுத் தமிழ்த்தாய் வாழ்த்து தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

“வறண்டுவரும் காவிரிக் கரையில் பார்ப்பனப் பண்பாட்டு மையம் ஒரு கேடா” என்று முழங்கிய மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் மீது குடமுருட்டி குண்டு வெடிப்பு பொய்வழக்கு போடப்பட்டது. இது கடந்தகால வரலாறு.

தென்னகப் பண்பாட்டு மையம். மறைந்த காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன் ஆலோசனையில் பார்ப்பன லாபியால் தமிழ் பல்கலைக்கழக வளாக இடத்தில் அமைக்கப்பட்டது.

தமிழக அரசிடம் சர்வமானியமாகப் பெற்ற இருபத்தைந்து ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட செயலகக் கட்டிடத்தை காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரன் திறந்து வைத்தார்.

மத்திய அரசின் பணம் வெள்ளமென பாய்ந்தோடுவதால் உறிஞ்சிக்குடிக்கப்
பார்ப்பனகளும் பார்ப்பன அடிவருடிகளும் தென்னகப் பண்பாட்டு மையத்தை வட்டமிடுவது இங்கு தன்னியல்பான ஒன்று.

தென்னகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் இன் கொள்கைகளை முழு மூச்சுடன் இந்த அமைப்பு முன்னெடுத்துச் செல்கிறது.

கல்லூரிகளில் யோகா பகவத் கீதை பிரசாரம், கோயில்களையும் பள்ளிகளையும் இணைத்து நிகழ்ச்சிகளை கட்டமைப்பது, எல்லா துறைகளிலும் பொறுப்பில் இருக்கும் பார்ப்பனர்களைக் கொண்டு பார்ப்பன மேலாண்மையை
நிறுவுவது என்பதே இந்நிறுவனத்தின் தலையாய பணி.

ஊழியர்கள் பதவி உயர்வு, பயிற்ச்சியாளர்கள் ஸ்காலர்ஷிப் வாய்ப்பு, இந்திய மற்றும் வெளிநாட்டு பிரயாண வாய்ப்புக்கள் போன்றவைகளை பார்ப்பனர்களும், பார்ப்பன அடிவருடி தரகர்களே தீர்மானித்து வருகிறார்கள். இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ஆர் எஸ் எஸின் கிளை அலுவலகம் என்று சுருங்கச் செல்லலாம். தமிழகத்தின் எல்லா கலைஞர்களையும் பார்ப்பனிய வலையத்துக்குள் கொண்டுவரும் முயற்சியில் கணிசமான வெற்றியைச் சாதித்து விட்டது தென்னகப்பண்பாட்டு மையம்.

இதனைக் கண்டும் காணாமல் செல்வது பார்பனியத்திற்குப் பல்லக்கு தூக்கவே உதவிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கண்கானிப்பதும் எதிர்வினையாற்றுவதும் அவசியப்பணியாகி உள்ளது.

தோழர் ராவணன்.
இணைப் பொதுச் செயலாளர்.
மக்கள் கலை இலக்கியக் கழகம்.

செயலகக்கட்டிடத் திறப்புவிழா நிகழ்வைக்கான

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here