அண்டமெங்கும், ஒவ்வொரு நொடியும் ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தச் சம்பவத்திற்கான சாத்தியத்தை இன்றுவரை அறிவியலாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. விடை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மத நம்பிக்கையாளராக இருக்கும் பட்சத்தில், ‘அதுதான் கடவுள்’ அல்லது ‘அதுதான் கடவுளின் மகிமை’ என்று சொல்லிவிட்டுச் சுலபமாகச் சென்றுவிடலாம். அல்லது கோஷம் போடவாவது செல்லலாம். ஆனால், இவர்கள்தான் அறிவாளிகளாச்சே! காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று அடம் பிடிப்பார்கள். கண்டுபிடிக்க முடியாததை, ‘இன்னும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஒத்துக் கொள்வார்கள். சரி, இனி விசயத்துக்கு வருவோம்.

அண்டம் ஒவ்வொரு நொடியும் விரிவடைந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அது வேகமுடுக்கத்துடன் விரிவடைவதும் உங்களுக்குத் தெரியும். கடைசிக் கணிப்பின்படி, ஒவ்வொரு மெகாபார்செக் (Megaparsec) தூரத்துக்கும், 72கிமீ/செக் வேகத்தில் அண்டம் விரிவடைகிறது. அண்டம் பெரியது என்பதால், அதை அளப்பதற்குத் தேவையான ஒரு அளவுகோல்தான் (Unit) மெகாபார்செக். ஒரு மெகாபார்செக் கிட்டத்தட்ட 3.26 மில்லியன் ஒளியாண்டு பருமனுடையது (அம்மாடியோவ்!). அண்டத்தின் விரிவடைதல் வேகத்தைப் பற்றிப் பல தடவைகள் நான் சொல்கியிருக்கிறேன். ஆனால், நீங்கள்தான் எதையும் தேடியெடுத்துப் படிப்பவர்கள் இல்லையே! சமைத்ததோடு, மனைவி அதை எடுத்து டேபிளில் வைத்தால்தான் சாப்பிடுவீர்கள். சாப்பிட்டதும், “தான் என்ன செய்ய வேண்டுமென்பதைப் பெண் என்பவள் முடிவு செய்வதே நியாயமானது” என்று அதே டேபிளில் உட்கார்ந்துகொண்டு பேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுவீர்கள். போட்டுவிட்டு, “இரவுக்கு என்ன சமையல்? இராலை உடைச்சு, பொரித்துத் தந்தால் டேஸ்ட்டுக்குச் சூப்பராயிருக்கும்” என்று கூச்சமே இல்லாமல் மனைவியிடம் சொல்வீர்கள் (நான் என்னைச் சொல்லல). உங்களிடம் எப்படி என் பழைய பதிவுகளை எடுத்துப் படியுங்கள் என்று சொல்வது? எத்தனை தடவை என்றாலும், நானேதான் திரும்பவும் எழுத வேண்டும். ‘ஜெய் ஶ்ரீராம்’. சாரி கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேன்.

ம்ம்ம்… எங்கே விட்டேன். அண்டம் விரிவடைவதில் இல்லையா? அதாவது, பூமியிலிருந்து ஒரு மெகாபார்செக் தூரத்திலிருக்கும் காலக்ஸிகள், நட்சத்திரங்கள் எல்லாம், நொடிக்கு 72 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைவிட்டு விலகிச் செல்கின்றன. பூமியிலிருந்து இரண்டு மெகாபார்செக் தூரத்திலிருப்பவை, நொடிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் விலகுகின்றன. அப்படியே ஒவ்வொரு மெகாபார்செக் தூரமும் அதிகரிக்க அதிகரிக்க, அண்டம் விரியும் வேகமும் 72 கிலோமீட்டரால் அதிகரித்துச் செல்லும். ஒரு கட்டத்தில் அவ்வேகம் ஒளியின் வேகத்தைவிட அதிகமாகிவிடும். இந்த 72 கிலோமீட்டர் வேகக் கணக்கு 2001ஆம் ஆண்டு எடுத்தது. அதில் மாற்றம் இருக்கலாம். இப்போதுதான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்வெளிக்குச் சென்றிருக்கிறதே! அது அண்டம் எவ்வளவு வேகமுடுக்கத்தில் விரிவடைகின்றது என்பதைக் கணித்துச் சொல்லும் என்று எதிர்பார்க்கிறார்கள். இப்போ, ‘ஜேம்ஸ் வெப் தொடரெங்கே?’ என்று கேட்பீர்கள். ஒன்றும் யோசிக்க வேண்டாம். ஜேம்ஸ் வெப் இப்போதுதான் முதல் நட்சத்திரத்தைப் படமெடுத்திருக்கிறது. ஒரு நட்சத்திரத்தையே பதினெட்டுப் படமாக எடுத்திருக்கிறது. உங்கள் முன்னால் நிற்கும் மனைவியை, உங்கள் இரண்டு கண்களும் இரண்டு மனைவிகளாகக் காட்டுவதுபோல (‘ஹை ஜாலி’ என்று அருகே போனால், ஒரே மனைவிதான். அதே மனைவிதான். வெறுத்துப் போய்விடும்), ஜேம்ஸ் வெப்பிலிருக்கும் 18 கண்ணாடிகளும், ஒரே நட்சத்திரத்தை 18 விதமாகப் படமெடுத்திருக்கின்றன. இனி அந்தப் 18 கண்ணாடிகளும் ஒரே படமாகத் தெரிவதுபோல அட்ஜஸ் பண்ணி காலிப்ரேசன் செய்ய வேண்டும். அதற்குச் சில நாட்கள் தேவை. அதற்குள் நான் தொடருடன் வந்துவிடுவேன்.

அதிவேகமாக விரிவடையும் அண்டத்தை, கருந்துகள்களும் (Dark matter), கருமாற்றலும் (Dark energy) நிறைத்திருக்கின்றன. கருந்துகள்களாவது, ஆங்காங்கே இடைவெளிவிட்டு இருக்கின்றன. கருமாற்றலோ, எந்த வெற்றிடமும் விடாமல், அண்டத்தை நிறைத்திருக்கிறது. சொல்லப்போனால், அண்டம் இப்படி அதிவேகமாக விரிவடைவதற்கு பிரதான காரணமே இந்தக் கருமாற்றல்தான். சரி, இதில் விஞ்ஞானிகளுக்கு என்ன பிரச்சனை? எதைக் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்?

ஒவ்வொரு நொடிக்கும் அண்டம் விரிவடைந்து, விரிவடைந்து பெரிதாகிறது இல்லையா? அப்படி உருவாகும் பெருவெளியை அந்தக் கணமே, கரும் ஆற்றல்கள் நிரப்பிவிடுகின்றன. உடனே, அருகில் இருப்பவற்றைத் தள்ளவும் தொடங்குகின்றன. பிரச்சனை என்னவென்றால், அவ்வளவு கருமாற்றல் எங்கிருந்து வருகின்றன என்பதுதான். ஒவ்வொரு நொடியும் மாபெரும் வெளியாய் விரியும் அண்டத்தை தொடர்ச்சியாய் நிரப்பிக் கொண்டிருக்கும் அந்த ஆற்றல் எங்கிருந்து, எப்படி உருவாகிறது. சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நொடியும் மொத்தமாக விரிவடையும் அண்டவெளியின் அகலம் கணிக்கவே முடியாத மாபெரும் பெருவெளியாகும். அந்த வெற்றிடத்தை உடன் நிரப்பிக்கொண்டேயிருக்கிறது கருமாற்றல். அது எங்கிருந்து தோன்றுகிறது. தானே தன்னைத் தோற்றுவித்தபடியே அண்டத்தை விரித்துக்கொண்டே போகிறதா? யாருக்கும் தெரியாத மர்மம். விந்தை. நான் மேலே சொன்னபடி, ‘அதுதான் கடவுள்’. ‘அதுதான் கடவுளின் சக்தி’ என்றெல்லாம் ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு அறிவியலாளர்களாலும், கூடவே என்னாலும் போக முடியவில்லை. ஒருவேளை, இதற்கான விடையையும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடிக்கலாம். காத்திருப்போம். ஆனால், இந்த நெடிய பதிவை நான் எதற்கு இட்டேன் தெரியுமா?

ஒருவர் இல்லாதபோது அந்த இடம் வெற்றிடமாக இருப்பதில்லை. அந்த இடத்தை இன்னுமொன்று எப்போதும் நிறைத்துக் கொள்கிறது. கருமாற்றல் வெற்றிடத்தை நிரப்புவதுபோல. நான் கடந்த பல நாட்களாக பேஸ்புக்கில் இல்லை. நான் இல்லாத அந்த இடம் வெற்றிடமாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன். ஆனால், அதுவொரு வெற்றிடமில்லை. அந்த வெற்றிடத்தை வேறு எதுவோ நிரப்பியிருக்கும். இதுதான் நியதி. யார் இல்லையென்றாலும் பூமி சுற்றாமல் நின்று விடுவதில்லை. அனைத்தும் அதனதன் இயக்கத்தில் இருந்துகொண்டே இருக்கும். எதுவும் மாறப் போவதில்லை. நிம்மி சிவா (Nimmi Siva) கவிதையில் சொன்னதுபோல, ‘சுவரில் மாலையுடன் தொங்கும் ஒரு போட்டோவைத் தவிர’ எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது.

‘வெற்றிடம் என்று எதுவுமேயில்லை. வெறுமையாவது அதை நிரப்பியிருக்கும்’

“ஆ! சொல்ல மறந்துவிட்டேன். ஜெர்மனியின் பாடசாலைகளில் சீருடை என்பதே கிடையாது”

ராஜ்சிவா(ங்க்)
அறிவியல் எழுத்தாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here