ப்ரல் 1 – ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும், சாதாரண அரிசியோடு “மினரல்” அரிசி எனப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை கலந்துதான் விநியோகிக்கப் போகிறார்கள். நாட்டின் 75 ஆவது ‘சுதந்திர’ தின  (ஆகஸ்ட் 15, 2021) உரையில் பேசிய மோடி, நாட்டு மக்களின் நலனில் அதீத ‘அக்கறை’ கொண்டு – ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் –  செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என திருவாய் மலர்ந்தார்.

இந்தியாவெங்கும் மூன்று கட்டங்களாக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் கட்டமாக திருச்சியிலும், இரண்டாம் கட்டமாக ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு    விரிவுபடுத்தப் பட்டும், ஏப்ரல் ஒன்றாம் தேதி (முட்டாள்கள் தினம்?!) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த அரிசி விநியோகம் செய்யப்பட இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பே பல மாவட்டங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வழங்க ஆரம்பித்து விட்டனர். இப்படி, ஒரு அரிசி வழங்கப்படுவது மக்களுக்கோ? ரேஷன் கடை ஊழியர்களுக்கோ? கூடத் தெரியாது என்பதுதான் கொடுமை!

செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified rice) என்பது என்ன?

நாம் உணவுக்காக பயன்படுத்தும் அரிசியை அரைத்துப் பொடியாக்கி அதனுடன் இரும்பு, போலிக் அமிலம், துத்தநாகம், வைட்டமின் போன்ற ரசாயன தாதுக்களை கலந்து, அந்தப் பவுடரை மீண்டும் எக்ஸ்ட்ரூடர் எனும் எந்திரத்தின் மூலமாக அரிசி வடிவில்  தயாரிக்கின்றனர். 100 கிலோ அரிசியில் ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து விநியோகிக்கப் போகிறார்கள். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இது முதலில் அங்கன்வாடி மற்றும் மதிய உணவில் பயன்படுத்தப்பட்டு, அடுத்த கட்டமாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இப்போது வழங்கப்பட இருக்கிறது. இதற்காக மத்திய அரசு 3000 கோடியை ஒதுக்கி உள்ளது.

மக்கள் சோதனைச் சாலை எலிகளா?

அரிசி எனும் உணவுப் பொருளில், இரசாயன தாதுக்கள் எனும் மருந்தைக் கலந்து, அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகிக்க இருக்கிறார்கள். ரேஷன் அரிசி உண்பவர்கள் அனைவரும் (இந்தியா முழுவதிலும் 50 கோடிக்கு மேல்) இந்த மருந்து கலந்த உணவை சாப்பிடப் போகிறார்கள். எனில், இதற்கான ஆய்வு முறையாக நடத்தப்பட்டு அதன் முடிவுகளிலிருந்து இவர்கள் திட்டத்தை தொடங்கியிருக்க வேண்டும்.

தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ் இது குறித்து கேட்டதற்கு, ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில் அளிக்கப்பட்ட (பிப்ரவரி 24, 2023) பதிலில், “அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளையும் இதுகுறித்து மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள கூறியுள்ளோம். ஆனால் இதுவரை அப்படியான ஆய்வு முடிவுகள் எதுவும் எங்களுக்கு வரவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக இதை நிறைவேற்ற துடிக்கிறார்கள். காரணம், இங்குதான் எளிதில் திணிக்க முடியும். அப்படி என்றால் நேரடியாக ஏழை எளிய மக்களைத்தான் சோதனைக் கூட எலிகளாக பயன்படுத்தப் போகிறார்கள். இங்கே கூட தனியாக பாக்கெட்டுகளிலோ, அல்லது விரும்பியவர்கள், தேவையுள்ளவர்களுக்கு மட்டுமோ என்றில்லாமல், அனைவருக்கும் வழங்குவது சரியானதா? என்ற கேள்வி எழுகிறது.

உண்மை கண்டறியும் குழுவினர் சொல்வது என்ன?

சென்ற ஆண்டு, மே மாதத்தில் உணவு உரிமைக்கான பிரச்சாரக் குழுவின் (Alliance) உடல் நல வல்லுனரான வந்தனா பிரசாத் தலைமையில், விவசாயிகள் உரிமைக்கான செயல்பாட்டாளர் கவிதா குருகாண்டி, சுகாதார அமைப்பான ஆஷாவைச் சேர்ந்தவர்களுடன் கிரீன் பீஸின்(Green peace) ரோஹின் குமார் ஆகியோர் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவினர் ஜார்க்கண்ட் பழங்குடியினர் மத்தியில் ஆய்வு மேற்கொண்டனர்.

செறிவூட்டப்பட்ட அரிசியை உட்கொண்ட பலரை ஆய்வு செய்ததில், தலசீமியா (Thalassemia) மற்றும் சிக்கில் செல் அனிமியா (Sickle cell Anaemia) போன்ற இரத்த சிவப்பணு கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், மிக மோசமான பக்க விளைவுகளை சந்தித்துள்ளதை கண்டறிந்தனர். இவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை எடுத்துக் கொள்ளவே கூடாது. எனவே இதை விநியோகிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் இக்குழுவினர் கூறுகையில், இந்த அரிசி, கடும் நோய்த் தொற்று, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, மலேரியா, காசநோய் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது அல்ல. குறிப்பான தேவையை கண்டறிந்து அந்த குறைபாட்டை போக்கும் வகையிலான திட்டத்தை அமல்படுத்துவதுதான் சரியாக இருக்கும். குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் இரும்பு சத்து மாத்திரைகளை வழங்கலாம் எனத் தெரிவித்தனர். இந்த பாதிப்புகள் குறித்து உணவு அமைச்சகத்திடம் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ சார்பில் கேட்டதற்கு, எந்த பதிலும் தரவில்லை. அரசு தரப்பில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து வெறும் கண்துடைப்பு ஆய்வு மட்டுமே நடத்திவிட்டு திட்டத்தை அமலாக்கத் தொடங்கி விட்டார்கள்.

உரிய ஆய்வுகளின்றி அமலாக்கினால் வரும் விளைவுகள்!

90-களில் மக்களிடம் அயோடின் குறைபாடு உள்ளதாகக் கூறி, செயற்கை இரசாயன அயோடின் கலந்த உப்பை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். அடுத்த கட்டமாக நாட்டில் அயோடின் கலக்காத உப்பின் விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. சிறு, குறு உப்பு வியாபாரிகள் அனைவரும் ஒழிக்கப்பட்டு பாக்கெட்டுகளில் மட்டுமே விற்கப்படும் நிலை உருவானது. இதன் விளைவாக தைராய்டு உள்ளிட்ட நோய்கள் மக்களிடம், குறிப்பாக பெண்கள் மத்தியில் பெருமளவில் அதிகரித்துள்ளது. செயற்கையான அயோடின், நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படுத்தும் தாறுமாறான விளைவுகளே இதற்கு காரணமாக உள்ளது.  தேவையானவர்களை மட்டும் கண்டறிந்து கொடுக்காமல், அனைவருக்கும் வழங்கியதன் ஆபத்தை இப்போது சந்தித்துக் கொண்டுள்ளோம்.

அடுத்ததாக, துரித கதியில் கண்டறியப்பட்டு, குறுகிய கால ஆய்வு செய்து, அவசர அனுமதி அளிக்கப்பட்டு, அனைவருக்கும் கட்டாயப்படுத்தி செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியின் கொடூர விளைவுகளை இன்று உலகம் எதிர்கொண்டு உள்ளது. சிறு உடல் உபாதைகள் தொடங்கி, ஒவ்வாமை, நரம்புக் கோளாறுகள், இளவயது மாரடைப்பு மரணங்கள் வரை பலவிதமான பின் விளைவுகளை நடைமுறையில் பார்க்கிறோம். பாராளுமன்றத்தில் இதுபற்றி கேட்டதற்கு, ஒன்றிய சுகாதார அமைச்சர், அதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்கிறார். அத்தகைய விளைவுகளை ஆய்வு செய்யாமலேயே ஆதாரமில்லை என மட்டையடி அடிக்கிறார்.

இதற்கு மாற்றாக, பிரிட்டனில் பணியாற்றும் பிரபல இதய மருத்துவரான அசீம் மல்ஹோத்ரா, சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோது “அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இதய ரத்த நாள பிரச்சனைகளையும், பக்கவாதம் மற்றும் மாரடைப்பையும் ஏற்படுத்துவதை ஆய்வில் கண்டறிந்தோம்” என தெரிவித்தார். மேலும் அவை mRNA வகை தடுப்பூசிகளை விடவும் ஆபத்தானதாக உள்ளன எனவும், ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் அதை தடை செய்த பிறகும் இந்தியாவில் அதை பயன்படுத்தியது ஏன்? எனவும் வினவி உள்ளார்.

ஆய்வுகளே இல்லாமல் அல்லது மிகக் குறைந்த ஆய்வு முடிவுகளை வைத்து, அனைவருக்கும் தடுப்பூசியை வலிந்து திணித்ததில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்ந்தது. அப்போது சுகாதாரத் துறையின் செயலராக பணியாற்றியவர் ராதாகிருஷ்ணன். அப்பணியை செவ்வனே நிறைவேற்றி முடித்தவுடன், அவரைக் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலராக மாற்றினர். கார்ப்பரேட் சேவையை கச்சிதமாக நிறைவேற்ற ஏற்றவர் இவர்தான் என்பதால்தான் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க இவர் இங்கு கொண்டுவரப்பட்டாரோ? என்ற ஐயம் எழுகிறது.

பக்கவிளைவுகள் ஏற்பட்டால் பொறுப்பேற்பது யார்? 

செறிவூட்டப்பட்ட அரிசி மூட்டைகளில் தலசீமியா மற்றும் சிக்கில் செல் அனீமியா போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை வாசகம் ஒட்டப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அந்த நோய் இருப்பதே தெரியாமல்! பல லட்சம் பேர் இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் இந்த அரிசியை உட்கொண்டு உயிரிழப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டால், இந்த அரிசியை உண்டதால்தான் என்பதை ஏற்றுக் கொள்வார்களா? இதனைப் பரிசோதிக்க என்ன நடைமுறையை செயல்படுத்தப் போகிறார்கள்?

இது மட்டுமின்றி, அனைத்து மக்களும் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன்தான் இருக்கிறார்களா? குறைபாடு உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மட்டும் வழங்குவதுதானே அறிவுடைய செயல். நலமுடன் இருப்பவர்கள் இந்த உணவினால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? உடலில் இரும்புச் சத்து அதிகமானால், பல உறுப்புகளும் செயலிழக்கச் செய்யும் ‘ஹீமோகுரோமோட்டோசிஸ்’ எனும் நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதே போலத்தான் போலிக் அமிலம் அதிகமானாலும் உடல் பாதிக்கப்படும். எனவே இந்த விஷயத்தை மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் கையாள வேண்டியுள்ளது.

ஊட்டச்சத்துக்கள் அடங்கிய அரிசியை ஏன் எதிர்க்க வேண்டும்?

இப்போதைக்கு அங்கன்வாடி, மதிய உணவு மற்றும் ரேசன் கடைகளில் கலக்கப்படும் இரசாயன அரிசி, அடுத்து அனைத்து அரிசியோடும் கலந்துதான் விற்கவேண்டும் என்ற நிலை வரும். இதனால் அரிசி உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும். இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பி ஆர் பாண்டியன், “அமலாக்கப் பட இருக்கும் இத்திட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரிய விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிக்கப் போகிறது. திமுக அரசு கார்ப்பரேட்டுகளுக்கு துணை போகிறது” என்று விமர்சனம் செய்கிறார்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தைச் சேர்ந்த ரவீந்திரன், “மத்திய அரசாங்கம், மாநில அரசுகளை நிர்பந்திக்கும் திட்டமாக இது உள்ளது. இயற்கையில் விளைந்தவற்றைத் தவிர செயற்கையான எதையும் உணவில் கலக்கக்கூடாது. அரிசியை பட்டை தீட்டாமல் வழங்கினாலே  நுண்சத்துக்கள்  கிடைக்கும்” என்கிறார்.

இதையும் படியுங்கள்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஈசன்,”நமது நாட்டில் சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, சாமை, திணை போன்றவை அதிகம் விளைவிக்கப் பட்டது. அவைகளுக்கு இரசாயன உரமோ, பூச்சி மருந்தோ தேவைப் படவில்லை. மேலும், இந்த ஆண்டை “உலக சிறுதானிய ஆண்டு” என ஐ.நா அறிவித்துள்ளது. எனவே ரேஷன் கடைகளில் சிறுதானியங்களை தமிழக அரசு வழங்க வேண்டும். பில்கேட்ஸ் போன்ற வணிக முதலாளிகளின் லாபத்துக்கான ஏற்பாடு தான் இது. மக்களிடம் எந்தவித கருத்து கேட்புமின்றி கட்டாயமாக திணிப்பது எதேச்சதிகாரமானது”  என்கிறார்.

மரபுவழி மருத்துவர் தங்கதுரை, “உணவிலிருந்து கிடைக்கும் சத்தைத்தான் உடல் ஏற்கும். உணவில் மருந்தைக் கலப்பது தவறு. உணவுப் பொருள் உற்பத்திக்கான லைசன்சும், மருந்துப் பொருள் உற்பத்திக்கான லைசென்சும் ( Drug Licence) வெவ்வேறாக இருக்கும்போது எப்படி உணவில் மருந்தை கலக்க முடியும்? ” எனக் கேள்வி எழுப்புகிறார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இரைப்பை, குடலியல் துறை மற்றும் ஊட்டச்சத்துப் பிரிவின் மருத்துவர் உமேஷ் கபில் “உலகின் எந்தப் பகுதியிலும் செறிவூட்டப்பட்ட உணவுகளால் ஊட்டச்சத்து குறைபாடு குறைந்துள்ளது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்கிறார். பின் எதற்காக இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு திணிக்க வேண்டும்? இதில் கார்ப்பரேட்டுகள் நலனும், தங்களுக்கு கிடைக்கும் பங்குமே பிரதானமாக இருக்க வாய்ப்புள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசியின் பின்னே உள்ள அரசியல்! ஆதாயம் அடையப்போவது யார்?

இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, ஆராய்ச்சி செய்து அமலாக்குவதில்  பில் & மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன், GAIN (Global Alliance for Improved Nutrition), கார்கில் (Cargill), BASF போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றி உள்ளன. 2021 முதல் 2030 வரையில் இதன் மூலம் பல்லாயிரம் கோடிகளை லாபமாகப் பெறுவதற்கான திட்டத்தையும் திறம்பட தீட்டி உள்ளனர். இந்தியாவில் இவர்களுக்கான முதன்மைக் கூட்டாளியாக டாடா( TATA) நிறுவனம் உள்ளது. செறிவூட்டப்பட்ட உப்பை (அயோடினை கலந்து) விற்பனைக்கு கொண்டு வந்ததும் இதே நிறுவனம்தான்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துடன் (FSSAI)  இணைந்து டாடா டிரஸ்ட் செயல்படுகிறது. FSSAI – வின் டெல்லி வளாகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வள மையத்தை டாடாவின் நிதியில் அமைத்துள்ளனர். இதன் தொடக்க நிகழ்வில் பில்கேட்ஸ் கலந்து கொண்டார். வளரும் நாடுகளாக உள்ள இந்தியா, பங்களாதேஷ் போன்றவற்றில் அரசிடம்  பேரம் பேசி (லாபி செய்து) இத்திட்டத்தை தொடங்க வைத்துள்ளனர்.

கணினி மென்பொருள் துறையில் கோலோச்சிய பில்கேட்ஸ், இப்போது மருத்துவத்துறையிலும், விவசாயத் துறையிலும் கவனம் செலுத்துகிறார். மரபணு மாற்றப்பட்ட உணவை உற்பத்தி செய்து, மக்களிடம் விநியோகித்து, நோய்வாய்ப்படும்போது அதற்கான மருந்துகளையும் விற்று இரட்டை லாபம் அடைய துடிக்கிறது இந்த கார்ப்பரேட் முதலை.

சரியான தீர்வுதான் என்ன?

நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடனும், கர்ப்பிணிகள் இரத்தசோகை பாதிப்புடனும் அதிக அளவில் உள்ளனர். எனவே அதைப் போக்குவதற்காக ஊட்டச்சத்துக்கள் அடங்கிய அரிசியை வழங்குகிறோம் என ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். இயற்கையாக உணவுப் பொருட்களின் மூலம் கிடைக்க வேண்டிய இரும்புச் சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் ரசாயன கலவை மூலம் கொடுக்கப்பட்டால், உடல் அதை நிராகரிக்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அதையும் தாண்டி ஏற்றுக்கொண்டாலும் மிகக் குறைந்த அளவே பலன் அளிக்கும் என்கின்றனர்.

எனவே இதற்கு மாற்றாக பாரம்பரிய அரிசிகளான மாப்பிள்ளைச் சம்பா, சிவப்பரிசி, கருப்பு கவுனி மற்றும் கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற சிறுதானியங்களை வழங்கலாம். அவற்றில் போதுமான இரும்புச்சத்து, வைட்டமின்கள் நார்ச்சத்து, தையமின் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நாம் சாப்பிடும் அரிசியை பட்டை தீட்டாமலாவது வழங்கலாம். அந்தந்தப் பருவத்தில் விளையும் காய்கறிகள்,பழங்கள் மற்றும் கீரைகள் ஆகியவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இவர்கள் வழங்கப் போகும் ஒரு கிலோ அரிசியில் 28 மி.கிராம் இரும்புச்சத்து இருக்கும் என்கின்றனர். ஆனால், ஒரு கிலோ முருங்கைக் கீரையில் 55 மி.கிராம் என்ற அளவில், கிட்டத்தட்ட இரு மடங்கு உள்ளது. எனவே இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும். உரிய பரிசோதனை நடத்தி, தேவையானவர்களுக்கு உணவுப்பொருள் மூலமே தீர்வை வழங்க முடியும். அதேபோல, எந்த உணவை உண்ண வேண்டும் என முடிவெடுப்பது தனிமனித உரிமை. கட்டாயப்படுத்தி அனைவருக்கும் ஒன்றைத் திணிப்பது தவறு என்பதையும் அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

ஆக்கம்: குரு.

ஆதாரங்கள்:

https://m.economictimes.com/industry/healthcare/biotech/pharmaceuticals/eminent-heart-doctor-flags-issues-with-covishield-says-worse-than-mrna-vaccines-in-terms-of-cardiovascular-effects/amp_articleshow/97702087.cms

https://www.hindustantimes.com/india-news/fortified-rice-leading-to-side-effects-among-adivasis-experts-101652631088986.html

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here