இத்தனைக்கும் கணித மேதை வசந்தா கந்தசாமி சாதாரணமான பேராசிரியர் அல்ல. ஏறக்குறைய 116 புத்தகங்களை எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி 800க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவரது கட்டுரைகள் பலவற்றையும் அமெரிக்காவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னணி நூல் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்க அம்சமாகும்.

        சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு எதிராகவும் பேராசிரியர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து நடக்கும் சாதி ஆதிக்க வெறியாட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. 2019-ல் தேசிய பட்டியலின மக்கள் ஆணையத்தின் உறுப்பினரான சுவராஜ் வித்வான், ஐஐடியில் பட்டியலின மக்களின் உரிமைகள் மீது பல்வேறு தாக்குதல்கள் நடப்பதாக வந்த புகாரை ஒட்டி நேரடியாக ஆய்வு செய்தார். அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர் “இந்தியாவில் உள்ள ஐஐடி-களிலேயே சென்னையில் உள்ள ஐஐடி மிகவும் மோசமாக சாதிரீதியான பாகுபாடுகளை கடை பிடிப்பதாகவும், பட்டியலின பிரிவு மாணவர்களை உளவியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், மாணவர்கள் சேர்க்கையின் போது அவர்களை புறக்கணிப்பதாகவும், பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டின்  அடிப்படையில் கிடைக்க வேண்டிய உரிமைகளை பறித்து புறக்கணிக்கப்பதாகவும்” கருத்து கூறினார். இவ்வாறு பார்ப்பன கும்பலின் ஆதிக்க சாதி வெறியாட்டத்தை அம்பலப்படுத்தி கருத்து கூறுவதற்கு முன்பாக சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஊழியர்களிடம் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே மேற்கண்ட அறிக்கையை அவர் வெளியிட்டார்.

பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக போராடிப் பெற்ற உரிமையான இடஒதுக்கீடு என்பது முழுமையாக அங்கு அமல்படுத்தப்படவில்லை. அவர் ஆய்வு செய்த கால கட்டத்தில் மொத்தமுள்ள 2322 இடங்களில் முதுநிலை அறிவியல் பிரிவில், வெறும் 47 SC பிரிவு மாணவர்களும், 06 ST பிரிவு மாணவர்களும் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் பகிரங்கமாக ஐஐடியில் நடக்கும் பார்ப்பன ஆதிக்க வெறியாட்டங்களை அம்பலப்படுத்தினார். அதுமட்டுமல்ல இந்தியாவில் உள்ள ஐஐடிகளில் கடந்த பத்தாண்டுகளில் 55 மாணவர்கள் மரணமடந்திருக்கின்றனர். அதில் சென்னை ஐஐடியில் மட்டும் 2007-ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை 17 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக 2018 ஆம் ஆண்டு மட்டும் 5 பேர் தற்கொலை செய்துக் கொண்டனர். அதில் ஒரு பேராசிரியரும் அடங்குவார்.

கணித மேதை வசந்தா கந்தசாமி

சென்னை ஐஐடியை பொருத்தவரை கணிதத்துறையில் பேராசிரியராக பணிபுரிந்த முனைவர்.  வசந்தா கந்தசாமி பிறப்பால் பார்ப்பனரல்லாதவர் என்ற ஒரே காரணத்தினால் 1995 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த கணித உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்விலும், 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த கணித பேராசிரியர் தேர்விலும் தகுதி இருந்த போதிலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டார். ஆனால் அவரை விட தகுதியே  இல்லாத பார்ப்பனர்களான காமத் மற்றும் அ.ரங்கன் ஆகியோருக்கு உதவிப் பேராசிரியர் பணி வழங்கப்பட்டது. இதை எதிர்த்து 1997ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முனைவர். வசந்தா கந்தசாமி வழக்கு தொடுத்தார். 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு 2013-ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாக, ஒரு நபர் நீதிபதி கொண்ட பெஞ்ச், முனைவர். வசந்தா கந்தசாமி எழுப்பிய குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக ஏற்றுக்கொண்டு 1995 முதல் 2000 வரையிலான ஐஐடி பணியிடங்களை நிரப்பியது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது

உடனே இந்த தீர்ப்பை எதிர்த்து ஐஐடி நிர்வாகம், அதாவது பார்ப்பன அதிகார வர்க்கத்தினர் டிவிஷன் பென்ச் மூலம் இடைக்கால தடையை பெற்றனர். ஆனால் முனைவர். வசந்தா கந்தசாமியின் தொடர்ச்சியான போராட்டத்தினால் நீதிபதிகள் செல்வம் மற்றும் கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முனைவர். வசந்தா கந்தசாமியின் கோரிக்கையை பரிசீலிக்கும் படி ஐஐடி நிர்வாகத்திற்கு 2018-ல் உத்தரவிட்டனர். ஐஐடியில் நடந்த இவரது தொடர் போராட்டங்களை பரிசீலித்த அன்றைய முதல்வர். கருணாநிதி இவருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவ படுத்தினார். உயர்கல்வியில் பார்ப்பனக் கும்பலின் பிடி எந்த அளவிற்கு இறுக்கமாக இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.

இத்தனைக்கும் கணித மேதை வசந்தா கந்தசாமி சாதாரணமான பேராசிரியர் அல்ல. ஏறக்குறைய 116 புத்தகங்களை எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி 800க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவரது கட்டுரைகள் பலவற்றையும் அமெரிக்காவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னணி        நூல் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்க அம்சமாகும்.

2015 ஆம் ஆண்டு அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தைப் துவங்கிய போது அம்பேத்கர், பெரியார் இருவரின் பகுத்தறிவு, சுயமரியாதை மற்றும் இந்திய சாதிய சமூகத்தின் இழிவை ஒழித்துக் கட்டும் கொள்கைகள் உள்ளிட்ட கருத்துக்களை ஐஐடி வளாகத்திற்குள், கருத்துப் பரப்பல் செய்து விடுவார்கள் என்று அஞ்சி நடுங்கிய பார்ப்பனக் கூட்டம் அந்த அமைப்பை தடை செய்து, தடுக்க முயற்சித்தது.  ஆனால் தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டங்கள்,  தமிழக எல்லையை தாண்டி கான்பூர்,  கோரக்பூர், மும்பை உள்ளிட்ட ஐஐடி-களில் நடந்த போராட்டங்கள், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் அம்பேத்கர்- பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள், ஐஐடியில் ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனக் கும்பலுக்கு ஆப்பறைந்தது. வேறுவழியின்றி பணிந்து அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் இயங்குவதற்கு அனுமதித்தது.

rsyf-protest

2017 ஆம் ஆண்டு மாட்டுக்கறி உண்பதையும், விற்பனை செய்வதையும் தடைசெய்த ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பலுக்கு எதிராக அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தைச் சார்ந்த மாணவர் சூரஜ் மாட்டுக்கறி விருந்துக்கு ஏற்பாடு செய்தார் என்ற ஒரே காரணத்திற்காக ஏபிவிபி குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். அதற்கு எதிராக அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டமும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் தொடர்ச்சியாக போராடியதன் விளைவாக ஒரு சிலர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களின் கொட்டம் அடங்கவில்லை.

2019ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து சென்னை ஐஐடி க்கு படிக்க வந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் பிறப்பால் ஒரு இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்திற்காக தொடர்ச்சியாக பேராசிரியர்களால் வன்கொடுமை செய்யப்பட்டார். மேல்நிலைக்கல்வி படிக்கும் போது மிகச் சிறந்த மதிப்பெண் பெற்று ஐஐடி படிக்க வேண்டும் என்பதையே கனவாகக் கொண்டிருந்த ஃபாத்திமா லத்தீப், உத்திரப் பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சீட்டு கிடைத்த போதும் வட இந்தியாவில் தான் இஸ்லாமியர்களுக்கு எதிராக காவி கும்பலின் அட்டூழியம் அதிகமாக இருக்கிறது தமிழகத்தில் பாதுகாப்பு இருக்கிறது என்ற காரணத்தினால் சென்னை கிண்டி ஐஐடி யில் சேர்ந்து கல்வி பயின்றார். சேர்ந்த நாளிலிருந்து பேராசிரியர்கள் கொடுக்கிற மதரீதியிலான துன்புறுத்தல்கள் குறிப்பாக ”என் பெயரை கூட வெளிப்படையாக சொல்ல முடியவில்லை! அம்மா” என்று கதறுகின்ற அளவிற்கு துன்புறுத்தல் நிகழ்ந்துள்ளது. ஆறு பக்கத்திற்கு தனது மரண சாசனத்தை எழுதி வைத்த அந்த இளம் தளிர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த கொலைக்கு காரணமான பேராசிரியர். சுதர்சன் பத்மநாபன் மீது இதுவரை கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

சென்னை ஐஐடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பாத்திமா லத்தீப் தனது தாய் தந்தையுடன்.

மேற்கண்ட தாழ்த்தப்பட்ட மக்களின் மீது சாதி ரீதியான வன்கொடுமை புரிந்தும், இஸ்லாமியர்கள் மீது மத ரீதியாக தாக்குதல் தொடுக்கும் சாதி, மத, இன, வர்க்க வேறுபாடுகளை சுமந்து நிற்கும் பார்ப்பன கோட்டையான சென்னை ஐஐடி ஒரு அக்ரகாரம் போல செயல்படுகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ’மயிலாப்பூர் கிளப்’ என்று தொடங்கி கொட்டம் அடித்த பார்ப்பன கும்பலின் கோட்டையை போல இன்று சென்னை ஐஐடி வளாகம் உள்ளது. இதனால் தான் விபின் என்ற பேராசிரியர் தான் 2018- ஆண்டு பணிக்குச் சேர்ந்த இரண்டே ஆண்டுகளில் ஐஐடி வளாகம் என்பது சாதியை பாதுகாக்கின்ற கேடுகெட்ட வன்கொடுமைகாரர்களின் கூடாரமாக திகழ்கிறது என்று காரி துப்பிவிட்டு தனது வேலையை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

பகுத்தறிவு, சுயமரியாதை, திராவிட மரபு என்று நமக்குள் பேசி புளகாங்கிதம் அடைவதற்கு ஒன்றுமில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளாக சமூகரீதியில் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு கிடக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒரு தலைமுறை படித்து முன்னேறுவதற்குள் ஆயிரக்கணக்கான அடக்குமுறைகள் அவர்களின் மீது திட்டமிட்டு தொடுக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வெமுலா, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மரணமடைந்த-தற்கொலை செய்து கொண்ட மாணவர்களும், ஐஐடியில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட ஃபாத்திமா லத்தீப்பும் இந்த சமூகத்திற்கு சொல்லும் செய்தி இதுதான். குறைந்தபட்ச சட்டப் பாதுகாப்புகள், சீர்திருத்தங்கள் கிடைப்பதைக் கண்டு அகமகிழ்ந்து நமது போராட்டத்தில் பின்தங்கி விடக்கூடாது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு படிநிலை சாதி அமைப்புகளை கொண்டு, எஃகு கோட்டை போல கட்டப்பட்டுள்ள பார்ப்பன ஆதிக்க கோட்டையை அடியோடு தகர்க்கின்ற வரையில் நாம் போர்க்குணத்துடன் போராட வேண்டியுள்ளது.

இளஞ்செழியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here