மையம் ???

யக்குநர் வெற்றிமாறனின் கூற்று ( படம் காண்க) சரியா? என்பதனை அறிய, இடது- வலது வேறுபாடு தோன்றிய வரலாற்றினை அறிந்து கொள்ள வேண்டும். இந்த இடது- வலது கொள்கை வேறுபாடு 1789ம் ஆண்டு பிரான்சில் தொடங்கியது. அரசனுக்கு முழு அதிகாரம் ( வீற்றோ அதிகாரம்) வேண்டும் எனக் கருதிய ஒரு குழுவும், அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்ற மற்றொரு குழுவும் அப்போதிருந்தன. புதிய யாப்பு உருவாக்கத்தில் முழு அதிகாரமும் அரசனிடமே இருக்க வேண்டும் எனக் கருதியோர் வலது பக்கத்திலும், பரவலாக்கப்பட வேண்டும் என்ற கருத்துடையோர் இடது பக்கத்திலும் அமர்ந்து கொண்டனர். இதுவே இடது- வலது கொள்கைகளின் தோற்றப்பாடு. இவ்வாறு தொடக்கம் இருந்தாலும், இடது- வலது வேறுபாடு பரவலாகியது என்னவோ பிரெஞ்சுப் புரட்சியின் போதே. அப்போது அரசனின் பக்கம் இருந்தோர் வலதுசாரிகள் எனவும் மக்களின் பக்கமிருந்தோர் இடதுசாரிகள் எனவும் அழைக்கப்பட, இந்த நடைமுறை பரவலாகியது. 1920 களிலேயே இந்த Right – left என்ற கோட்பாட்டு வேறுபாடு ஆங்கில மொழியில் அறிமுகமாகின்றது. பின்னர் பொதுவாக கம்யூனிச- சோசலிசக் கருத்துக்களையுடையோரை ‘இடதுசாரி’ எனவும், முதலாளித்துவக் கருத்துடையோரை ‘வலதுசாரிகள்’ எனவும் அழைக்கின்றோம். இங்கு ஒன்றினை நாம் கவனிக்க வேண்டும்; உலகில் என்றுமே ஒரு தூய முதலாளித்துவ நாடும் ( 100% முதலாளித்துவ நாடு) இருந்ததில்லை, அதே போல தூய சோசலிச நாடும் இருந்ததில்லை, எல்லாம் ஒப்பீட்டு அடிப்படையிலான வேறுபாடே ஆகும். அதுபோலவே மனிதர்களும், ஒப்பீட்டு அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படுவர். நீங்கள் மக்களுக்காக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக நின்றால்; நீங்கள் இடதுசாரி, ஒடுக்குபவர் பக்கம் நின்றால் வலதுசாரி. இதில் ‘மையம்’ என்று ஒன்றில்லை. ஒருவன் இன்னொரு வலிமை குறைந்தவனிடம் அடித்து 100 ரூபாவினைப் பிடுங்கும் போது , நாம் போய் மையத்தில் நிற்கின்றோம் எனக் கூறி, 50 ரூபாவினை திருப்பிக்கொடு, 50 ரூபாவினை நீ வைத்துக் கொள் , எனச் சொன்னால் அது எவ்வளவு மோசடியோ! அது போலவே இந்த ‘ மையம்’ என்ற நிலைப்பாடும். அதற்காக இடது பக்கம் நிற்பவர்களின் அளவு எவ்வளவு என்பதல்ல இங்கு சிக்கல்! அது வேறுபடலாம்; ஆனால் அடிப்படையில் நீங்கள் எந்த மனநிலையில் நிற்கின்றீர்கள் என்பதே இங்கு முதன்மை. அதற்காக ஒவ்வொருவரும் இடது – வலது என அடையாளப்படுத்த வேண்டும் என்பதல்ல; உங்களது செயல்களும் கருத்துகளும் உங்களை அடையாளப்படுத்தும் என்பதே எனது கருத்து.

இவ்விடத்தில் அணி சேராக் கொள்கையினை மையத்துடன் போட்டுக் குழப்பக்கூடாது. அது ஒரு வன்முறைச் சண்டையில் இரு பக்கத்தில் ஏதாவது ஒன்றில் இணைந்து இழப்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் தவிர்ப்பது / இரு பக்கங்களையும் பேச்சுக்கு கொண்டு வரும் ஒரு முயற்சி. அது இழப்புகளைத் தவிர்க்கும் ஒரு முயற்சி. அதே போன்று வள்ளுவர் கூறும் ‘நடுவுநிலைமை’ என்பது நேர்மையினையே குறிக்கும் ( நடுவுநிலைமை = நேர்மை, உட்கோட்டமின்மை, ஞாய உணர்வு). எனவே இந்த அணி சேராமை, நடுவுநிலைமை என்பன வேறு.

இடது- வலது வேறுபாடு தோன்றிய வரலாறாகப் பிரான்சினை உலகம் கூறினாலும் அதற்கு முன்னரே வலங்கை- இடங்கை முரண் தமிழரிடையே உண்டு. இராசராச சோழன் காலத்திலேயே வலங்கை- இடங்கை முரண்கள் இருந்தன, இந்த முரண்கள் ஆங்கிலேயர் ஆட்சிவரைத் தொடர்ந்துள்ளன. இதனை நாம் இந்தக் கோட்பாட்டு ( வலதுசாரி- இடதுசாரி) வரையறைக்குள் உள்ளடக்க முடியாது என்பதனால் புறந்தள்ளி விடலாம்.

சுருக்கமாக, நீங்கள் ஏழை- எளிய மக்களின் நலன்களுக்காக நின்றால் ஒரு இடதுசாரி, மாறாக அவர்களை ஒடுக்குவோரின் பக்கம் நின்றால் வலதுசாரி. இதில் மையம் என்று ஒன்றில்லை. ஒரு கொடுமை நடக்கும் போது அதனைப் பார்த்துக் கொண்டிருப்பவரும், அதற்கு மறைமுகமாகத் துணைபோபவரே, அந்த வகையில்தான் மையத்தில் நிற்போரும் வலதுசாரிகளே என இயக்குநர் கூறியுள்ளார் .

குகநாதன்.வி.இ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here