மே -5: பாட்டாளி வர்க்கத்தின் பேராசான் தோழர் காரல் மார்க்ஸ் பிறந்த தினம்!
சூரிய வெளிச்சத்திற்கு பிறகு உலகம் முழுவதும் பரவிய ஒரே அம்சம் கம்யூனிசம் மட்டுமே.

உலகம் தோன்றியது முதல் பல்வேறு மதங்கள் மக்களை அவர்களின் துன்ப துயரங்களிலிருந்து விடுவிப்பதாக கூறிக் கொள்கிறது.

ஆனால் அந்த மதங்கள் வாழ்க்கையின் நெருக்கடிகளுக்கு உண்மையான காரணத்தை பார்ப்பதற்கு கற்றுக் கொடுப்பதில்லை மாறாக உண்மையான காரணத்தை உழைப்பாளி வர்க்கம் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே மதத்தின் பெயரால் கிறக்கத்தில் வைத்திருக்கிறது.

ஆனால் உழைப்பாளி வர்க்கத்தின் வாழ்க்கைப் பிரச்சினைகளை இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்துடனும், வரலாற்றுப் பொருள்முதல்வாத கண்ணோட்டத்துடனும் பரிசீலிப்பதற்கு கற்றுக்கொடுத்த பேராசான் காரல்மார்க்ஸ் இன்று உலகம் முழுவதும் உயர்த்திப் பிடிக்க படுகிறார்.

ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் நிரந்தர முடிவுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, மனிதனை மனிதன் அடக்குவதிலிருந்தும் நாடுகள் நாடுகளை அடக்குவதிலிருந்தும் மனிதகுலத்தை விடுவித்து சுதந்திரமான படைப்பாற்றல் மிக்க மனிதர்களை உருவாக்குவதில், உன்னதமான உயர்ந்த வாழ்க்கையை சோஷலிச கம்யூனிச வாழ்க்கை முறையை உருவாக்க வழிகாட்டி நின்ற தோழர் மார்க்ஸ் இன்றும் நமக்குத் தேவைப்படுகிறார்.

அவரது வாழ்க்கை மற்றும் அரசியல் பொருளாதாரம் அனைத்திலிருந்தும் எண்ணற்ற விஷயங்களை நாம் எடுத்துச் சொல்ல முடியும் என்றாலும் “இரக்கமற்ற சுயவிமர்சனம்” என்ற கம்யூனிசத்தின் உயர்ந்த கோட்பாட்டை இன்று மீள்பதிவு செய்கிறோம்.

000

சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்

ல்ஸாக் யாருக்கும் தெரியாத அரும்படைப்பு என்று சிறு கதையை எழுதினார். அக்கதையில் ஒரு சிறந்த கலைஞன் அதியற்புதமான ஒரே ஒரு ஒவியத்தை வரைகிறான். அந்த ஒவியத்தில் வண்ணத்தின் முழு அழகையும் தீட்ட வேண்டும், இயற்கையை விஞ்சும் வகையில் இயற்கை அழகைத் தீட்ட வேண்டும் என்று விரும்புகிறான். அவன் பல வருடங்களாக அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறான். தொல்கதையில் வருகின்ற பிக்மாலியன் ஒரு சிற்பத்தைத் திருத்திக் கொண்டிருந்ததைப் போல அவன் ஒவியத்தில் ஒவ்வொன்றையும் திருத்திக் கொண்டிருக்கிறான். கடைசியில் அவன் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று நினைக்கிறான். ஆனால் பார்வையாளர்கள் அது தூரிகையின் ஒழுங்கில்லாத வீச்சுக்கள் என்றுதான் நினைக்கிறார்கள். மிகையான திறமை அந்த ஒவியத்தைச் சிதைத்து விட்டது.

மார்க்ஸ் மூலதனத்தின் முதல் தொகுதியைப் பல வருடங்களாக அரும்பாடுபட்டு எழுதிக் கொண்டிருந்தார். 1867 பிப்ரவரியில் அந்தப் பணி முடிவடைகின்ற தறுவாயில் அவர் பல்ஸாக்கின் கதையைத் திரும்பப் படித்தார்; அது கலைநுணுக்கம் நிறைந்த பரிகாசக் கதை என்று எங்கெல்சுக்கு சிபாரிசு செய்தார்.(1) மூலதனத்தை எழுதிக் கொண்டிருந்த பொழுது பரிபூரணத்தைத் தேடிய தன்னுடைய கடுமுயற்சியையும் அந்தப் பணி நிறைவு பெறுமா என்று அவர் சில சமயங்களில் கவலைப்பட்டதையும் இக்கதையின் பரிகாசத்தில் அவர் கண்டிருக்க வேண்டும்.

பல்ஸாக்கின் கதாநாயகனைப் போலன்றி மார்க்ஸ் தன்னுடன் நடத்திய போராட்டத்தில் வெற்றியடைந்தார். அவருடைய ஈவிரக்கமற்ற சுயவிமர்சனம், தலைப்புப் பொருளை இயன்ற அளவுக்கு அதிக முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும், அதை மிகச் சிறந்த முறையில் விளக்க வேண்டும் என்ற அவருடைய உள்மனத்தின் கோரிக்கைகள் அவருக்கு உதவி புரிந்தன. முதலாளித்துவச் சமூகத்தைப் பற்றி அவருடைய படப்பிடிப்பு பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கக் கூடிய அரும்படைப்பாக இருந்தது. மூலதனம் ஒரு முழுமையான கலைப் படைப்பு என்று கூறுவதற்கு மார்க்சுக்கு முழு உரிமையுண்டு. ஆனால் அதற்கு அவர் பல வருடங்கள் மிகவும் தீவிரமாகப் பாடுபட்டார். அதற்கு அவர் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும், ஏனென்றால் அவருடைய வாழ்க்கை முழுவதுமே மூலதனத்தைப் படைப்பதற்கு ஒரு தயாரிப்பாகவே இருந்தது.

உண்மையான படைப்பாளிகள் அனைவரையும் போல மார்க்ஸ் எப்பொழுதும் தன்னுடைய நூல்களைக் காட்டிலும் உயர்ந்து நின்றார், அவருடைய வளமான எழுத்துக்களில் அவருடைய ஆன்மீக உலகத்தின் செழுமை அரைகுறையாகவே பிரதிபலிக்கப்பட்டிருந்தது. ஆகவே அவருடைய ‘‘மிகச் சிறந்த” புத்தகம் எழுதப்படாமலே இருந்தது. ஆகவேதான் அவர் அதிருப்தியின் வேதனைக்குத் தொடர்ச்சியாக ஆளானார்.

சிந்தனை ஐயப்பாடு மந்த நிலைமையின், கோழைத்தனத்தின் சின்னமாக இருக்கலாம். அது வாழ்க்கை இரகசியங்களின் சிக்கலுக்கு முன்னால் நடுங்கி விவிலிய எக்லெசியாஸ்டசைப் போல அவை ஏழு முத்திரைகளால் மூடப்பட்டிருப்பதாக அறிவிக்கிறது. எக்லெசியாஸ்டஸ் “வானப் பரப்பின் கீழே நடைபெறுகின்ற எல்லாவற்றையும்” அறிவின் மூலம் ஆராய்ந்தார், “எல்லாமே பகட்டு, ஆன்மாவின் நச்சரிப்புத்தான்” என்ற முடிவுக்கு வந்தார்.

ஆனால் அதே ஐயப்பாடு தத்துவ ரீதியான துணிச்சலுக்கு, கடந்த காலத்தின் கலவரமடைந்த பொய்த் தோற்றங்கள்- அவை இன்னும் சக்தி குன்றவில்லை-மீது சிந்தனை பாரபட்சமற்ற தீர்ப்பு வழங்குகின்ற பொழுது அவசியமான ஆயுதமே.

ஹெகல் வேடிக்கையான பரிகாசத்தையும் சோகமான பரிகாசத்தையும் சந்தேகப் பரிகாசத்தையும் பற்றி எழுதினார். சந்தேகப் பரிகாசம் “எல்லாவற்றையும் ஒழிக்கின்ற பல்துறைக் கலையாக” உதவுகிறது, ஆன்மநித்திய வாதத்துக்கு இட்டுச் செல்கிறது. டிட்ரோ குறிப்பிட்டதைப் போல அப்பொழுது உணர்ச்சியற்ற பியானோ தன்னை உலகத்தில் இருக்கின்ற ஒரே பியானோ என்று நினைத்துக் கொள்கிறது. ஆனால் “ஆக்கபூர்வமான” பரிகாசமும் உண்டு. அது படைப்புக் கிளர்ச்சியைப் பக்குவப்படுத்துகின்ற பொருளாக இருக்கிறது, ஒரு புதிய கருத்தைப் பிரசவிப்பதற்கு உதவுகிறது, அதற்காகப் பாதையைச் சுத்தப்படுத்தி நம்பிக்கை என்னும் உத்வேகத்தைக் கொடுக்கிறது.

மனிதகுலம் தன்னுடைய கடந்த காலத்திடமிருந்து புன்சிரிப்புடன் விடைபெற்றுக் கொள்கிறது என்பது மூதுரை. அது தன்னுடைய தத்துவ ரீதியான கடந்த காலத்திலிருந்தும் புன்சிரிப்புடன் விடைபெற்றுக் கொள்கிறது. மறுமலர்ச்சி யுகத்தில் மதம் மற்றும் “தலையில் நடுவட்ட மழிப்புடைய அரிஸ்டாட்டிலுடைய” அதிகாரத்தைப் பற்றி பரிகாசமான அணுகு முறை சிந்தனைக் களத்தில்-புது யுகத்தின் இயற்கை விஞ்ஞானம் மற்றும் தத்துவஞானத்தில்–புரட்சியின் முன்னோடியாகும். சர் பிரென்ஸிஸ் பேக்கன் தர்க்க ரீதியான வாதங்களின் மூலம் மத்திய காலக் கோட்பாட்டுவாதிகளின் “விக்கிரகங்களை’’ அகற்றி, புதிய கருத்துக்கள் மற்றும் இலட்சியங்களால் அவற்றை மறுப்பதற்கு முன்னால் பிரான்சுவா ராப்லேயின் குதூகலமான, ஒழுக்கக்குறைவான சிரிப்பு ஒலித்தது.

சமூகம் முழுமைக்கும் எது உண்மையோ அது இந்த உதாரணத்தில் தனி மனிதருக்கு-குறிப்பாக மார்க்சைப் போன்ற ஒரு நபருக்கு-உண்மையானதே. ஒரு மேதை எப்பொழுதுமே எதிர்மறை மற்றும் பரிகாச உணர்ச்சியைக் கொண்டிருக்கிறார், ஏனென்றால் “உயர்ந்தனவற்றில்” உள்ள தற்காலிகமான, கடைகெட்ட, பரிதாபகரமானவற்றை அவரைப் போலக் கூர்மையாக வேறு எவராலுமே உணர முடியாது. “உயர்ந்தனவற்றை” சிற்பியின் கூர்மையான சிற்றுளி கொண்டு அவ்வளவு கவனமாகச் சுத்தப்படுத்த வேறு எவராலுமே முடியாது.

மார்க்சின் பரிகாச உணர்ச்சியின் ஊற்றுக்களில் முங்கியெழுவதற்கு விரும்பினால் நாம் கலைக்குத் திரும்ப வேண்டும்.

பல்ஸாக் தன்னுடைய கசப்பான, பரிகாசமிக்க கதாநாயகனைக் கலையின், அதன் இரகசியங்கள், எழுச்சிகள், கனவு மயக்கங்களின் உருவகம் என்று கூறினார். இது மிகவும் ஆழமானது; ஏனென்றால் கலை எல்லாவித வறட்டுக் கோட்பாட்டு வாதத்துக்கும் கல்லாகிப் போன கருத்துக்களுக்கும் அந்நியமாக இருக்கிறது. அது யதார்த்தத்தை ஒரு நிகழ்வுப் போக்காக, இயக்கமாக, நடவடிக்கையாகப் புரிந்து கொள்கிறது. இல்லையென்றால் அது கலையாக இருக்க முடியாது. அதன் பேருருவ வடிவத்தில் கூட அது “கெட்டிதட்டிப் போனவற்றை” மறுக்கிறது, அதில் வாழ்க்கையின் மூச்சையும் துடிப்பையும் சேர்க்க முயல்கிறது.

யதார்த்தத்தைத் தத்துவ ரீதியாகப் புரிந்து கொள்கின்ற பொழுது வரையறுப்புகளும் வகுத்தளித்தல்களும் துல்லியமாகவும் முழுமையாகவும் இருப்பது அவசியம்; ஆகவே அதன் முடிவுகள் “நிரந்தரமானவையாக”  “அசைக்க முடியாதவையாக” மாற்றமடைகின்ற சாத்தியம் ஏற்பட்டு விடுகிறது. அதற்கு மாறாக கலையில் (நிச்சயமாக மெய்யான கலையில்) உலகத்தைப் பற்றி நம்முடைய கருத்துக்கள் கல்லாகி விடுகின்ற சாத்தியம் இல்லை.

மார்க்ஸ் குழந்தைப் பருவத்திலிருந்தே கலைச் சூழலில் வளர்ந்தார். ஷீல்லர் அவருடைய உள்ளத்தில் எதேச்சாதிகாரத்துக்கும் ஏழைகள் மீது வன்முறைக்கும் எதிராக வெறுப்பைத் தூண்டிக் கொண்டிருந்த நேரத்தில் மனித உணர்ச்சிகள் மற்றும் உறவுகள் என்ற பல்வகையான உலகத்தை ஷேக்ஸ்பியர் அவருக்கு எடுத்துக்காட்டி அவருடைய இயற்கையான நகைச்சுவை உணர்ச்சிக்கு மெருகேற்றிக் கொண்டிருந்தார்… கேதே. உணர்ச்சியைச் சிந்தனையுடன், கற்பனையின் விசித்திர நாடகத்தை வாழ்க்கை மற்றும் மரணத்தின் உட்பொருளைப் பற்றி உயர்வான சிந்தனைகளுடன், மரபு ரீதியான ஒழுக்கத்தின் போலித்தனத்தைப் பற்றிய மெஃபிஸ்டோபிலியச் சிரிப்பை விஞ்ஞானம் மற்றும் அதன் சர்வவல்லமை பற்றிய வாக்னரின் ஆவேசத்துடன் இணைக்கும்படி நிர்ப்பந்தித்தார்.

நாம் பழைய பெர்லின் நகரத்தில் ஒரு அமைதியான தெருவில் ஒரு மாணவர் விடுதிக்குத் திரும்புவோம். அங்கே சுருட்டுப் புகை மேகங்களுக்கு நடுவில் கறுப்புத் தலைமுடி கொண்ட இளைஞரான கார்ல் ஹென்ரிஹ் மார்க்ஸ் – 1837இல் அந்தப் பெயருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, யாருக்கும் தெரியாது-தன் தகப்பனாருக்குக் கடிதத்தை எழுதி முடித்துக் கொண்டிருந்தார்.

நான் பலவற்றையும் மறுத்து விட்டேன்; “பரிகாசம் என்னும் ஆவேசம் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது”; என்னுடைய முயற்சிகள் ‘’வீணாகி” விட்டபடியால் நான் எழுப்பியிருக்கும் “கொந்தளிப்பான பிசாசுகளை” அமைதிப்படுத்தக் கூடிய பலம் என்னிடம் இல்லை என்று தோன்றுகிறது என்று மார்க்ஸ் தகப்பனாருக்கு எழுதிக் கொண்டிருந்தார்.

ஆனால் இது அவருடைய வாழ்க்கையின் திருப்பத்தில் தற்காலிகமான நெருக்கடியே. யதார்த்தம் மற்றும் விஞ்ஞானத்துடன் அவருடைய மோதலின் முதல், முதிர்ச்சியற்ற கட்டத்தில் அது பகுதியளவுக்கு “கடைசிப் பாடலாகவும்” எதிர்காலத்துக்கு, இதைக் காட்டிலும் முக்கியமான, அடிப்படையான மோதல்களுக்குப் பகுதியளவுக்குத் துணிவான முன்னுரையாகவும் இருந்தது.

இந்த முன்னுரையில் இங்குமங்கும்- மிகவும் தெளிவாக, நம்பிக்கையாக இல்லாவிட்டாலும்-சில குரல்கள் கேட்கின்றன. இவை பிற்காலத்தில் முழுக் கச்சேரிகளாக வளர்ச்சியுற்றன. எல்லாவற்றையும் மறுத்த, உலகத்திடமும் தன்னிடமும் இரக்கமற்ற முறையில் நடந்து கொண்ட அறிவு உழைப்பு மார்க்ஸ் நினைத்ததைப் போல வீணாகி விடவில்லை; அதன் மறுப்புகள் பயனற்றவை அல்ல, அவை புதிய கனிகளின் விதைகளை மறைத்துக் கொண்டிருந்தன. அவருடைய சிந்தனை மரபு வழிப்பட்ட, விஞ்ஞானப் போலியான பிதற்றலை, தப்பெண்ணங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டிருந்தது; உண்மையான விஞ்ஞானத்தின் முளைகள் வளர்வதற்காக மண்ணைப் பண்படுத்திக் கொண்டிருந்தது.

இது உண்மை என்பதை 1837 நவம்பர் 10இல் அவர் தகப்பனாருக்கு எழுதிய அதே கடிதத்திலிருந்து பார்க்கலாம்.

சட்டவியலின் தத்துவஞானத்தைப் பற்றி தான் செய்திருக்கும் ஆராய்ச்சிகளை விரிவாக வர்ணித்துத் தகப்பனாருக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் தன்னுடைய நூலில் உள்ள குறைபாடுகளின் காரணங்களைத் தேடுகிறார். தொடக்க முதலே, “கணிதவியல் வறட்டுக் கோட்பாட்டின் விஞ்ஞானத்துக்கு மாறான வடிவம்” உண்மையை அடைவதற்குத் தடையாக இருந்தது. தத்துவஞானத்தில் ஸ்பினேஸா காலத்திலிருந்து வளர்ச்சியடைந்திருக்கின்ற “வடிவ கணித” முறையை மார்க்ஸ் குறிப்பிடுகிறார், வடிவகணிதத்தில் முக்கோணம் வெவ்வேறு உறவுகளில் ஆராயப்பட்டு அந்தப் பகுப்பாய்வு தேற்றங்கள் அல்லது முற்கூற்றுகளிலிருந்து கறாரான, சம்பிரதாயமான முறையில் பெறப்பட்ட கருதுகோள்களில் பதிவு செய்யப்படுவதைப் போல இம்முறையில் அறியப்படும் பொருள் பல்வேறு பக்கங்களிலிருந்து கொடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. முக்கோணம் மாற்றமடைவதில்லை, “வேறு ஏதேனும் ஒன்றாக வளர்ச்சியடைவதில்லை,” வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், “ஒருவன் இப்படியும் அப்படியுமாக வாதிடுகிறார், ஆராயப்படுகின்ற பொருளைச் சுற்றிச் சுற்றி வருகிறார்; ஆனால் ஆராயப்படுகின்ற பொருள் வாழ்கின்ற, பன்முக வழியில் வளர்ச்சியடைகின்ற ஏதோ ஒன்றாக உருவமெடுப்பதில்லை’’.

“செத்த” பருப்பொருளின் வெளித் தோற்றங்களை ஆராய்கின்ற பொழுது சிறந்த பலன்களைத் தருகின்ற இந்த முறை “உயிருடனுள்ள” பருப்பொருளை, சிறப்பாக சமூகப் போக்குகளே, விளக்குவதற்கு முற்றிலும் போதுமானதாக இருக்கவில்லை. “இங்கே அறியப்படும் பொருள் அதன் வளர்ச்சியில் ஆராயப்பட வேண்டும், எந்தத் தன்னிச்சையான பிரிவினைகளையும் நுழைக்கக் கூடாது, அறியப்படுகின்ற பொருள் தன் முரண்பாடுகளில் தோய்ந்த ஒன்றாக, தனக்குள் ஒருமையை அடைகின்ற ஒன்றாக வளர்ச்சியடைய வேண்டும்.”(2)

அறியப்படும் பொருளை அதன் வளர்ச்சியில், தானாகவே உருவாகி, “பன்முக வழியில் வளர்ச்சியடைந்து, வாழ்கின்ற ஒன்றாக” ஆராய்வது-இந்த முறையியல் நிபந்தனை மூலதனத்தில் மேதாவிலாசத்துடன் நிறைவேற்றப்பட்டது.

மேலே தரப்பட்ட சூத்திரத்தில் ஹெகல் பெரிய அளவுக்கு இடம் பெற்றிருக்கிறார் என்பது உண்மையே. இங்கே அவருடைய தாக்கத்தை ஒருவர் உணர முடியும். பருப்பொருளையும் வடிவத்தையும் எதிர்நிலைப்படுத்தியதற்காக -அதன் விளைவாக, “பருப்பொருள்” நிறைத்து வைக்கப்பட்டிருக்கும் சொருகு அறைகளைக் கொண்ட மேசை போன்ற ஒன்று அவருக்குக் கிடைத்தது-மார்க்ஸ் தன்னை விமர்சித்துக் கொள்வதிலும் இந்த உண்மையைக் காண முடியும். இந்த அணுகுமுறையைப் பற்றி பரிகாசமான முறையில் எழுதிய மார்க்ஸ் “உள்ளடக்கத்தின் தொடர்ச்சியாக மட்டுமே வடிவம் இருக்க வேண்டும்’’ என்ற முடிவுக்கு வந்தார்.

மரபு வழிப்பட்ட தத்துவஞான ஆராய்ச்சியில் உள்ள சில சிக்கல்களிலிருந்து ஹெகல் மார்க்சைக் காப்பாற்றிய போதிலும் அவரைத் தழுவிக் கொள்ள மார்க்ஸ் அவசரப்படவில்லை. முதலில் ஹெகலியத் தத்துவஞானத்தின் “கோரமான, கரடுமுரடான இசையை” அவர் விரும்பவில்லை என்பதை மார்க்ஸ் ஒத்துக்கொள்கிறார். அதிகமான ஆராய்ச்சி உழைப்பின் விளைவாக மார்க்ஸ் உடல்நலமில்லாதிருந்த பொழுது ஹெகலை “தொடக்கத்திலிருந்து கடைசி வரை” படித்தார். ஆனால் அதற்குப் பிறகும் அவர் ஹெகலைப் பற்றி தொடர்ந்து எச்சரிக்கையாகவே இருந்தார். “எனக்கு வெறுப்பாக இருந்த கருத்தைச் சொன்னவரை வழிபடும் விக்ரகமாக்கிக் கொள்வதற்கு எனக்குச் சங்கடமாக இருந்தது” என்று  மார்க்ஸ் எழுதுகிறார். “கரடுமுரடான இசை” மோகினிப் பெண்ணின் பாட்டின் கவர்ச்சியைக் கொண்டிருந்திருக்க வேண்டும். அவர் மயங்கிவிட்டார்.

“டாக்டர்கள் கழகத்தில்’’ இருந்த இளம் ஹெகலியவாதிகள் ஹெகலை உற்சாகத்துடன் வழிபாடு செய்தார்கள். ஆனால் ஹெகலின் பிரகாசமான ஒளியில் மயங்கிவிடாத நபராக மார்க்ஸ் இருந்தார். அவர் ஹெகலின் வழியைப் பின்பற்றப் போகிறாரா என்ற கேள்வி இன்னும் முடிவு செய்யப்படாமல் இருந்தது. ஹெகலை விரிவாகப் படிப்பதற்கு முன்னர் மூலச்சிறப்பான ஜெர்மன் தத்துவஞானத்தின் இரண்டு மாமேதைகளின் – கான்ட் மற்றும் ஃபிஹ்டே-தாக்கத்தை மார்க்ஸ் ஏற்கெனவே உணர்ந்திருந்தார். கான்ட்டின் நூல்களிலிருந்த மேன்மையான தார்மிக இலட்சியங்களும் தத்துவஞான மற்றும் மதச்சிந்தனையின் உறுதியான ஐயுறவுவாதமும் மார்க்சைக் கவர்ச்சித்தன என்றால் பிரதானமாக ஃபிஹ்டேயின் தத்துவஞானத்தின் சுறுசுறுப்பான, ஆவேசமான, உறுதியான சித்தம் அவர் மனதில் பதிந்தது.

இளம் மார்க்ஸ் செயலில் ஈடுபடுவதற்குத் துடித்தார், விஞ்ஞானச் சிந்தனையை உலகத்தை மாற்றுகின்ற நெருப்பாகவும் வாளாகவும் செய்ய அவசரப்பட்டார். எனவே தன்னுடைய தொடக்க கால மாணவ வருடங்களில் ஃபிஹ்டேயின் தத்துவஞானம் மற்றும் கண்ணோட்டத்திலிருந்து அவர் பெற்றவை மிக அதிகமே.

அக்காலத்தில் ஃபிஹ்டேயின் ஆளுமை தீவிரவாத இளைஞர்களை மிகவும் வசீகரித்தது. அவரிடம் தத்துவச் சிந்தனை ஈடுபாட்டுடன் செயலுக்கான துடிப்பும் இணைந்திருந்தது. அவர் போராட்டக்காரராகவும் தத்துவஞானியாகவும் இருந்தார், சிந்தனையையும் செயலையும் ஒன்றுபடுத்தினார். அவரைத் தத்துவஞானத்தின் போனப்பார்ட் என்று கூறினார்கள், ஆனால் அவருடைய தத்துவப் பணியின் ஆரம்பக் கட்டத்தில் அவரைத் தத்துவஞான ஜாக் கொபின்வாதி என்று சொல்லியிருந்தால் அது பொருத்தமானதே. புரட்சிகர பிரான்சின் குடிமகன் என்று தன்னைக் குறிப்பிடுவதற்கு அவருக்கு உரிமையளிக்கப்பட்ட பொழுது அவர் அதை ஒரு கெளரவமாகக் கருதினார்.

அவர் கான்ட்டிடமிருந்து வேறுபாடானவர், எந்த வடிவத்திலும் சமரசத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. அவருடைய சிந்தனையும் நடவடிக்கைகளும் சவாலாக, ‘அவமதிப்பு’ என்கின்ற அளவுக்குத் துணிச்சலாக இருந்தன. அவருடைய எழுத்துக்களில் சுதந்திர உணர்ச்சியும் பெருந்தகைமையான கண்ணியமும் இருந்தன. அவருடைய இலக்கிய நடை தெளிவானதாக, கம்பீரமானதாக, உருக்கமானதாக இருந்தது. என்னுடைய தத்துவஞானத்தின் உதவியினால் ஒரு யுகத்தின் உணர்ச்சியையே நெறிப்படுத்த முடியும் என்று அவர் உரிமை பாராட்டுவதை ஒருவர் உணர முடியும். “தத்துவஞானம் என்பது வறண்ட ஊகமல்ல, ஓட்டைச் சூத்திரங்களை உருட்டுவதல்ல. ஆன்மாவை அதன் மூல வேர்களுடன் மாற்றியமைத்தல், புத்துயிரூட்டல், புத்தெழுச்சி-ஒரு புதிய உறுப்பைப் படைத்தல், அதிலிருந்து காலத்தில் ஒரு புதிய உலகத்தை அடைதல்-தத்துவஞானம்”(3) என்று அவர் எழுதினார்.

இயோஹன் கோட்லிப் ஃபிஹ்டே

ஃபிஹ்டே செயலற்ற சிந்தனைத்தவத்துக்குப் பதிலாக படைப்புச் செயலுக்கு, தனிமனிதனுடைய படைப்பு நடவடிக்கைக்கு இடமளித்தார். மனிதன் தன்னுடைய நடவடிக்கைகளின் மூலம் தன்னை உருவாக்கிக் கொள்கிறான் என்பது அவருடைய முக்கியமான கருத்து. மார்க்ஸ் தன்னுடைய மாணவப் பருவத்தில் நெருங்கிப் பழகிய இளம் ஹெகலியவாதிகளிடம் இக்கருத்துக்கள் அதிகமான செல்வாக்குப் பெற்றிருந்தன.

ஃபிஹ்டேயின் “நடவடிக்கைத் தத்துவஞானம்” என்பது உலகத்தைப் பற்றிய கருத்து முதல்வாதக் கண்ணோட்டமே, அவருடைய நடைமுறை வெறும் ஆன்மாவின் நடை முறையே, ஃபிஹ்டேயின் (மற்றும் இதர சிந்தனையாளர்களின்) கருத்துக்களின் “அறிவுக் கரு” நடைமுறையைப் பற்றிய இயக்கவியல்-பொருள் முதல்வாதப் போதனையாக, உலகத்தை மாற்றுவதற்கு உண்மையான கருவியாகப் பயன்பட்ட விஞ்ஞான தத்துவத்தைப் படைப்பதற்கு மார்க்ஸ் தன்னுடைய ஆன்மீக வளர்ச்சியில் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருந்தது.

கான்ட், ஃபிஹ்டே இருவருமே மனிதாபிமானிகளே, ஆனால் சுதந்திரம் மற்றும் தனி மனிதனுடைய முழுமையான வளர்ச்சி என்ற கருத்தை கான்ட் நெடுந்தொலைவிலுள்ள எதிர்காலத்துக்குத் தள்ளி வைத்தார், ஃபிஹ்டே அதற்குக் கற்பனாவாதக் கூறுகளைக் கொடுத்தார். ஜெர்மானியக் கருத்துமுதல்வாதத்தின் மூலச்சிறப்பான தத்துவஞானம் இளைஞரான மார்க்சுக்கு ஏன் திருப்தியைத் தரவில்லை என்பதை 1837இல் அவர் எழுதிய ஒரு பரிகாசக் கவிதையில் காணலாம்:

கான்ட்டும் ஃபிஹ்டேயும் தொலைதூரத்திலுள்ள உலகத்தைத் தேடி வானில் பறக்கிறார்கள்; நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன் அதைத் தெருவில் கண்டெடுக்கிறேன்.(4)

கான்ட்டையும் ஃபிஹ்டேயையும் பற்றி அவர் எழுதியிருப்பது ஹெகலுக்கும் பொருந்தும் என்பது உண்மையே. ‘ஆன்மாவின்’ முந்நிலைத் தன்மையை மட்டுமின்றி, “தெருவில்”, உண்மையான வாழ்க்கையில் நடைபெறுவதையும் தத்துவ ரீதியில் புரிந்து கொள்வதற்கு மார்க்ஸ் துடிக்கிறார்.

முந்திய வருட முழுவதும் அவர் செய்த சிந்தனைகள் பின்வரும் முடிவில் தொகுத்துரைக்கப்படுகின்றன: “என்னுடைய கருத்து முதல்வாதத்திலிருந்து-அதை நான் கான்ட் மற்றும் ஃபிஹ்டேயின் கருத்துமுதல்வாதத்துடன் ஒப்பிட்டுச் செழுமைப்படுத்தியிருக்கிறேன் – யதார்த்தத்தில் கருத்தைத் தேடுகின்ற நிலைக்கு நான் முன்னேறினேன். முன்பு கடவுள்கள் பூமிக்கு மேலே வசித்தார்கள் என்றால் இப்பொழுது அதன் மையமானார்கள்.”(5)அவர் பொருள்முதல்வாதத்துக்கு மாறுவது இன்னும் தொலைவில்தான் இருக்கிறது. “கடவுள்கள்’’ தூக்கியெறியப்படவில்லை, அவர்கள் அந்த உலகத்திலிருந்து இந்த உலகத்துக்கு, “தன்னிலைப் பொருளிலிருந்து’’ “நமக்குரிய பொருளாக” மாற்றப்படுகிறார்கள். ஏனென்றால் யதார்த்தம் தெய்வீகக் கருத்து குடிகொண்டிருக்கும் ஆலயமென்று அறிவிக்கப்படுகிறது.

மார்க்ஸ் இந்த ஆலயத்துக்குள் நிரந்தரமான கைதியாக நுழையவில்லை; ஹெகலியத் தத்துவஞானத்தில் விரித்துரைக்கப்படுகின்ற பரம கருத்துக்கு முன்னால் தாள் பணிந்து வணங்குபவராக நுழையவில்லை. இந்தக் கடவுள் அந்த அளவுக்கு “வல்லமையானவரா” , தன்னுடைய விமர்சனத்தின் தீவிரமான தாக்குதல்களை அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று அவர் சோதித்துப் பார்க்க விரும்பினார்.

குறிப்புகள் :

(1) Marx, Engels, Werke, Bd. 31, Berlin, 1965, S. 278.
(2) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 12.
(3) J. G. Fichte, Werke, Bd. 6, S. 415-16.
(4) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 577.
(5) Ibid., p. 18.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here