தமிழன் இந்து அல்ல அல்லவே அல்ல !

இந்து மதம் என்பதும் இந்து மத சம்பந்தமான சாஸ்திரங்கள், கடவுள்கள், கதைகள், நடத்தைகள் போன்றவை எல்லாம் தமிழனுக்கோ, தமிழ் நாட்டுக்கோ தொடர்புடையது அல்ல. சிறிதளவும் தொடர்புடையது அல்ல. அவை அனைத்தும் எந்தத் தமிழனாலும் ஏற்பட்டவையும் அல்ல, அவற்றுள் எவையும் எதுவும் தமிழ் மொழியில், தமிழ்நாட்டில் செய்யப்பட்டவையும் அல்ல

இவை அனைத்தும் அன்னிய மொழியாகிய வட மொழியிலும், தமிழன் – தமிழ் நாட்டினன் அல்லாதவனான அன்னியன் மொழியாகிய ஆரிய மொழியிலும், வடநாட்டானான ஆரியனாலுமே ஏற்படுத்தப்பட்டவை; செய்யப்பட்டவையே ஆகும்.

அதுபோலவேதான் சாதி என்பதும். சாதிமுறை என்பதும், சாதி அமைப்பு என்பதும்- தமிழ்நாட்டுக்கு தமிழர் சமுதாயத்திற்கு, தமிழர் வாழ்விற்கு ஏற்றவையும் அல்ல. எனெனில், இவை அனைத்தும் தமிழ் மொழியில் அல்ல என்பதுடன் தமிழர் சமுதாயத்தில் இருந்தவையும் அல்ல; தமிழால் உண்டாக்கப்பட்டவையும் அல்ல.

சாதியானது, எப்படி வெள்ளைக்காரன் நம் நாட்டுக்கு வந்து ‘துரை’ ஆனானோ. இசுலாமியர் எப்படி தம் நாட்டுக்கு வந்து ‘சாயுயு’ ஆனானோ, அது போல், ஆரியன் நம் நாட்டுக்கு வந்து ‘அய்யர்’ஆனான்; ‘`பிராமணன்’ ஆனான்; ‘பிராமணாள்’ ஆளான்.

பார்ப்பானுக்கு குறிப்புப் பெயர் வேதியன் என்பதாகும். வேதியன் என்றால், வேதத்திற்கு உடையவன். என்பதுதான் பொருள். அந்த வேதம் எந்த வகையிலும் தமிழர்களுக்குத் தொடர்புடையது அல்ல; தமிழர்களுக்கு உரியதுமல்ல; தமிழரால் ஆக்கப்பட்டதுமல்ல.

எப்படி ஆரியன் கடவுள், தமிழன் தொட்டால் தீட்டு ஆகிவிடும், கெட்டுப் போகும் என்று சொல்லப் படுகின்றதோ – அதுபோலவே வேதமும் தமிழன் தொட்டாலும், அதைப் படித்தாலும், காதால் கேட்டாலும் அது கெட்டுவிடும். இதையேதான் சற்றேறக் குறைய பார்ப்பன ஆதாரங்களாகிய சாஸ்திர – தர்மசாஸ்திர – புராணங்களுக்குமே பார்ப்பனர் நிபந்தனை விதித்திருக்கின்றனர். இவைதான் இந்து மத தர்மம் ஆகவும், இந்து மதக் கொள்கையாகவும். இன்றும் தமிழ் நாட்டில் இருந்து வருகின்றது. இவை தான் இந்து மத தர்மமும் ஆகும்.

இவற்றிற்குக் கட்டுப்பட்டவன்தான். இந்த நிபந் தனையை ஏற்பவன்தான் இந்து ஆவான். தமிழ் நாட்டாரே! தமிழ்ச் சமுதாயத்தாரே! தமிழர்களே!

இப்பொழுது சிந்தியுங்கள் நாம் இந்துக்களா? இந்து மதத்தவர்களா? இந்து மதத்திற்குரிய கடவுள், மத, வேத, சாஸ்திர, புராண, இதிகாச தர்மங்கள், சாதிமுறை அமைப்புகள் – இவை தொடர்பான கோவில், குளம், அவற்றின் கதைகள், நடப்புகள் நமக்குத் தொடர்புடைவைகளா என்று சித்தித்துப் பாருங்கள்.

இந்து மதம் நமது மதமாயிருந்தால், அதில் நம்மை ஈன சாதி, இழிபிறவி, நாலாம் சாதி, சூத்திரர், பார்ப்பானின் அடிமை, பார்ப்பானின் தாசி மக்கள்,  நமது பெண்கள் பார்ப்பானுக்குத் தாசிகளாக இருக்கத்தக்கவர்கள் என்று எழுதிவைத்துக் கொண்டிருக்க முடியுமா?

இந்து என்றோ, இந்து மதம் என்றோ, இந்தியா என்றோ ஆரியர்களின் எந்த ஆதாரத்திலும் ஒரு இடத்திலாவது – ஒரு சொல்லாவது இல்லவே இல்லை. மேலும், ‘இந்தியா’ என்ற சொல் ‘இந்து’ என்ற சொல் – சிந்து என்னும் ஒரு நதியின் காரணமாக, அதன் கரையில் வாழ்ந்தவர்களுக்கு ஏற்பட்ட பெயர் என்றும், வட மொழியில் ‘சி’ என்பதும் ‘ஹி’ என்பதும் ஒரே ஒலியாக மாற இடமுண்டு என்கிற காரணத்தால் ‘இந்து’, ‘ஹிந்து’ என்றாயிற்று என்றும் கூறுகின்றனர்.

இந்து என்ற சொல்லுக்கு ‘ஆரியர்கள்’ என்ற பொருள் மேனாட்டு அகராதிகளில் காணப்படுகின்றது. மேலும், இந்துக்கள் என்ற சொல்லுக்கு கிறித்தவர். முகமதியர், அல்லாத மக்கள் என்று ஆங்கில அகராதிகள் கூறுகின்றன. The Concise oxford Dictionary of Current English (1968ஆம் ஆண்டு பதிப்பு, பக்கம் 516இல் Hindu என்பதற்கு Aryan of N. India who(also anyone who) Professes Hinduism’  என்று போட்டிருப்பதுடன், இதற்கு சமஸ்கிருத மூலம் என்று குறிப்பிட்டு ‘Sindu River’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து என்ற சொல்லையும் இந்துக்கள் என்ற குழுவினரையும் மேனாட்டவர்களும், இசுலாமியர்களும் மிக மிக இழிவாகவே கருதுகின்றனர். அதாவது, அஞ்ஞானிகள் என்றும் அறிவற்ற முட்டாள்கள் என்றும் கருதுகின்றனர். அவர்களது ஆதாரங்களிலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.

இந்து வேத, சாஸ்திர தர்மங்கள், நமக்குத் தொடர்புடையவை அல்ல. இந்து மதக் கடவுள்கள், அக்கடவுள்களின் நடப்புகள், அவற்றின் கதைகளான – புராண இதிகாசக் கூற்றுகள் நமக்கு எவ்வகையிலும் தொடர்புடையவை அல்ல என்பதைச் சிந்தித்துத் தெளிவடையுங்கள்.


6-7-1971 ‘விடுதலை’யில் எழுதிய தலையங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here