“டாடா மற்றும் எஸ்ஸார் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் உள்ள தாதுப் பொருட்களை எடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டிருக்கின்றன.
மலை இருக்கிறது, காடு இருக்கிறது, மலைக்கு கீழே, காட்டு நிலத்துக்கு அடியில், சந்தையில் பெரும் லாபம் ஈட்ட உதவும் தாதுக்கள் இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகளை சரிக்கட்டி, சட்டங்களை மாற்றி, உரிமங்களை விலைக்கு வாங்கி விட்டால், தாதுக்களை அகழ்ந்து, உலகச் சந்தையில் விற்று லாபம் பார்க்கலாம். இந்த சமன்பாட்டுக்கு இடைஞ்சலாக, குறுக்கீடாக அந்தப் பகுதியில் பழங்குடி மக்களும் இருக்கிறார்கள்” என்று சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் பழங்குடி மக்களுக்கு அரணாக நின்று போராடுவதை பற்றி பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக 2014 ஆம் ஆண்டு முதன்முறையாக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 2013 ஆம் ஆண்டில் எமது இணையதளத்தில் எழுதி இருந்தோம்.
இந்தியாவில் காடுகள், மலைகள், சுரங்கங்கள் மற்றும் கடல் பரப்புகள், பரந்து விரிந்த நிலப்பகுதி ஆகியவற்றில் கொட்டிக் கிடக்கின்ற கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் சூறையாடுவதற்கு அமெரிக்க மேல்நிலை வல்லரசின் தலைமையிலான ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் பகாசுர கார்ப்பரேட்டுகளின் தடையற்ற கொள்ளைக்கு அக்மார்க் உத்தரவாதம் கொடுத்த பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
இந்தியாவின் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு பதிலாக அதனை அந்நிய கார்ப்பரேட்டுகளுக்கு காட்டிக் கொடுத்து அதன் மூலம் கிடைக்கின்ற வருவாய் மற்றும் அற்ப சொற்ப வேலை வாய்ப்புகளையே ’இந்தியாவின் வளர்ச்சி’ என்று தனது அரசியல், பொருளாதாரக் கொள்கையாக முன்வைத்து செயல்படும் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் இதற்கு எதிராக போராடும் கம்யூனிஸ்டுகள் குறிப்பாக நக்சல்பாரி கம்யூனிஸ்டுகளை தனது அரசியல் எதிரியாக பகிரங்கமாக அறிவித்தது.
கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு எதிராக போராடுகிறவர்கள் அனைவரையும் நக்சல் தீவிரவாதிகள், நகர்புற நக்சல்கள், மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று முத்திரை குத்தி நிலவுகின்ற சட்ட ரீதியான வாய்ப்புகளை பயன்படுத்தி ஒடுக்குவதிலும், நீண்ட காலமாக சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதிலும் பாஜக அரசு முன்னிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மேற்குவங்க மாநிலத்தில் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நக்சல்பாரி கிராமத்திற்கு சென்ற அமித்ஷா, ”இந்தியாவில் செயல்படக்கூடிய இடதுசாரிகள் அவர்கள் ஆயுதமேந்தி செயல்பட்டாலும் சரி< ஆயுதம் இல்லாமல் செயல்பட்டாலும் சரி அவர்களை துடைத்தெறிவது தான் தங்களது கொள்கை” என்பதை பகிரங்கமாகவே அறிவித்தார்.
படிக்க: ♦ மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் கொலைகளை எதிர்த்துப் போராடுவோம்!
இடதுசாரி இயக்கங்களுக்கு எதிராக ஒரே நாளில் இத்தகைய நடைமுறையை மேற்கொண்டால் நாடு தழுவிய அளவில் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதாலும் அது சொல்லிக் கொள்ளப்படும் அரசியல் சட்டம் மற்றும் சட்டம் வழங்கியுள்ள போராடும் உரிமைகளுக்கு எதிரானது என்ற காரணத்தினாலும் முதல் கட்டமாக மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தனது நடவடிக்கையை துரிதப்படுத்தியது ஆர்எஸ்எஸ் பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு.
2026 மார்ச் மாதத்திற்குள் மாவோயிசத்தை முற்றாகத் துடைத்து அழிக்கப் போவதாக இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பலமுறை பேட்டி அளித்துள்ளார். அதற்காகவே நாடு முழுவதும் உள்ள சிறப்பு அதிரடி படைகள், துணை இராணுவக் குழுக்கள் மற்றும் அதிஉயர் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் உள்ளடக்கிய குழுவினரை மாவோயிஸ்ட்களின் தளம் என்று கூறிக் கொள்ளப்படும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மற்றும் தண்டோவாடா பகுதிகளில் குவித்து 2023 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து கடுமையான தேடுதல் வேட்டையை நடத்தி வந்தது.
ஏற்கனவே பழங்குடி மக்கள் மத்தியில் சல்வா ஜுடும் போன்ற கருங்காலி கூட்டமும், பல்வேறு ஏகாதிபத்திய தொண்டூழிய தன்னார்வ குழுக்களும், போலீசு-ராணுவ உளவாளிகளும் செயல்பாடுகளை மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தனது ஆள்காட்டி நடவடிக்கைகளை அதிகரிக்க துவங்கியதால் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் குறித்து துல்லியமான தகவல்களை பெற்று அவர்களின் மீதான தாக்குதல்களை தொடுத்தது இந்திய ஒன்றிய அரசு.
படிக்க: ♦ போலி மோதல் கொலைகளில் பலியாகின்ற மாவோயிஸ்ட் அமைப்பினர்!
சத்தீஸ்கர் மாநிலத்தின் காவல்துறை மற்றும் சிறப்பு படை (BSF), அதிரடிப்படை (CISF) உள்ளிட்ட நக்சல் ஒழிப்பு பிரிவை பயன்படுத்தி ’ஆபரேஷன் ககர்’ என்ற பெயரில் தேடுதல் மற்றும் அழித்தொழித்தல் நடவடிக்கையை அதிகரித்ததன் விளைவாக 2024 ஆம் ஆண்டில் மட்டும் 220 மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். 800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த அடக்குமுறைகளை எதிர்கொள்ள முடியாமல் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சரணடைந்துள்ளனர்.
இத்தகைய ஒருங்கிணைந்த தாக்குதலை எதிர்கொள்வதற்கு பொருத்தமான அரசியல் மற்றும் ராணுவ தந்திரோபாயங்கள் ஏதுமற்ற நிலையில் மாவோயிஸ்டுகள் தனது உயர்மட்ட குழு, முதல் மாவட்ட,, வட்ட குழுவில் உள்ள தலைவர்கள் மற்றும் மக்கள் விடுதலைப் படை உறுப்பினர்கள் அனைவரையும் பின்வாங்க செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த சூழலில், ”சத்தீஸ்கர்-ஒடிசா எல்லையில் கரியாபண்ட் மாவட்டத்தில் திங்கள் & செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20, 21, 2025) நடத்தப்பட்ட மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கையில் குறைந்தது 20 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் மாவோயிஸ்டுகளின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான மத்திய குழுவின் மூத்த உறுப்பினர் சலபதி என்ற ஜெயராம் அடங்குவார்”, என்று ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது மாவோயிசத்திற்கு “மற்றொரு வலிமையான அடி” என்று வர்ணித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய ஒன்றிய அரசின் நடவடிக்கை தொடரும் என்று கொக்கரித்துள்ளார்.
Another mighty blow to Naxalism. Our security forces achieved major success towards building a Naxal-free Bharat. The CRPF, SoG Odisha, and Chhattisgarh Police neutralised 14 Naxalites in a joint operation along the Odisha-Chhattisgarh border. With our resolve for a Naxal-free…
— Amit Shah (@AmitShah) January 21, 2025
இந்தியாவில் புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் மாவோயிச கம்யூனிச அமைப்பிற்கும், புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளுக்கும் வேறுபட்ட வழிமுறைகள் உள்ளது என்ற போதிலும், சட்டவிரோதமான வழிமுறைகளை கையாண்டு கொடூரமான கொலைகளை நடத்திவிட்டு, அதனை தேடுதல் வேட்டையின் போது நடந்த என்கவுன்டர்கள் என்று பெயரிட்டு அழைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
”இந்தியாவில் நிலவும் இத்தகைய யதார்த்தங்களையும், அவற்றுக்குரிய தனிச் சிறப்பான கூறுகளையும் கண்டறிந்து, வரையறுத்துக் கொள்வதற்கு பதிலாக, மாவோவின் மக்கள் யுத்தப் பாதை என்ற பெயரில் சீனத்தின் லின் பியாவோ கொச்சையாகத் தொகுத்துரைத்த கொரில்லாப் போர் முறையை எந்திரமுறையில் பிரயோகித்தனர், சாரு மஜூம்தார் தலைமையிலான இந்திய இடது சந்தர்ப்பவாதிகள், கிராமப்புறங்களில் உள்ள கொடிய நிலப்பிரபுக்களையே, முற்று முழுதான அரசு அதிகாரங்களாகக் கற்பிதம் செய்து கொண்டு, விவசாயிகளின் கொரில்லாக் குழுக்களைக் கட்டி அவர்களை அழித்தொழிப்பதன் மூலம் அதிகார வெற்றிடம் ஏற்படும்: அரசியல் அதிகாரங்களை விவசாயிகள் கைப்பற்றி, மாற்று அதிகார மையங்களை கிராமப்புறங்களில் நிறுவிட முடியும் என்றனர்.

சீனத்தின் தனிச்சிறப்பான சாதகமான நிலைமைகள் காரணமாக மாவோ வகுத்துக் கொண்ட மக்கள் யுத்தப் பாதை என்ற இராணுவப் போர்த்தந்திரம் – இராணுவ செயல்தந்திரங்களோடு அரசியல் போர்த்தந்திரம் அரசியல் செயல்தந்திரங்கள் நீங்காமல் ஒன்றிணைந்திருந்தன. அரசு மற்றும் அரசியல் அதிகாரம் பற்றி மட்டுமல்ல, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தலைமை முறையின் அறிவியலான போர்த்தந்திரம் செயல்தந்திரங்கள் பற்றிய அறியாமை, பாமரத்தனம் காரணமாக மாவோவின் மக்கள் யுத்தப் பாதையை வெறும் கொரில்லாவாதம் என்பதாகக் கொச்சைப்படுத்தப்பட்டது.
படிக்க: ♦ மாவோயிஸ்டுகளின் போராட்டங்கள் பொருத்தமானவை தானா?
அரசின் கொடூரமான அடக்குமுறையை எதிர் கொண்டு, பின்னடைவை அடைந்த பிறகும் இதே கொரில்லாவாதம், தற்காப்புத் தந்திரங்களோடும், இரகசிய கொரில்லா நுட்பங்களோடும் புதுப்பிக்கப்பட்டு, தென் அமெரிக்க “சேகுவாரேயின் ஃபுக்கோயிசக் கொரில்லா முறை” யைப் பிரதியெடுத்தாற் போன்று வளர்க்கப்பட்டது. இதில் மாவோயிச கம்யூனிச மையம் முன்னோடியாக விளங்கியது.
தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த மக்கள் யுத்தக் குழு, மாவோயிச கம்யூனிச மையத்துடன் ஐக்கியப்பட்டு மாவோயிசக் கம்யூனிசக் கட்சியை நிறுவிய பிறகு, இரண்டு அமைப்புகளின் கொரில்லாக் குழுக்களை இணைத்து, மக்கள் விடுதலை கொரில்லா இராணுவத்தை நிறுவினர். கொரில்லா இராணுவம், கொரில்லா இராணுவ நகரும் போர், கொரில்லா மண்டலத் தயாரிப்புக் கட்டம் என்று புதிய இடைநிலைகளை உருவாக்கிக் கொண்டு, மக்கள் யுத்தப் பாதையிலான மாவோவின் வரையறைகளுக்குப் புதுப்புது வியாக்கியானங்கள் கொடுத்தாலும் இது சாரு, சேகுவரா ஆகியோரின் அரசிலற்ற கொரில்லாவாதத்தின் பரிணாம வளர்ச்சிதான்.” என்று மாவோயிஸ்டுகளின் மீது எமது அமைப்பு முன் வைத்த விமர்சனங்களுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. அவர்களது செயல்பாட்டில் மாற்றமும் இல்லை.
143 கோடி மக்கள் தொகை கொண்ட உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள மிகப்பெரிய துணை கண்டமான இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், ஏற்றத்தாழ்வான வளர்ச்சி போக்குகள் கொண்ட சூழலில் அதற்கு பொருத்தமான அரசியல் மற்றும் இராணுவப் பாதையை முன்வைத்து மக்களை திரட்டுவதும், இந்திய ஒன்றிய அதிகாரத்தை கைப்பற்றியுள்ள ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு எதிராக; அவர்கள் முன்னிறுத்தும் கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக போராடுகின்ற, அரசியல், இராணுவ செயல்தந்திர வழிமுறை மட்டும்தான் அவர்களை வீழ்த்துமே தவிர மாவோயிஸ்டுகளின் வழிமுறையான அரசியலை ஏற்றுக் கொண்டு வந்தவர்களை வைத்து குழு அமைத்து அதன் மூலமாக ஆயுதப் போராட்டத்தை துவங்கி விட்டோம் என்று அறிவித்துக் கொள்வதும், குழு சாகச நடவடிக்கைகளையே தனது நடைமுறையாக கொண்டு மக்களை திரட்டுகின்ற வழிமுறையாக கடைபிடிப்பதும் ஒட்டுமொத்த இந்தியப் புரட்சிக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.
- சண்முகம்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி